பிரான்சிஸ் கிருபா விஷயம் தொடர்பாக சில விளக்கங்கள்

பிரான்சிஸ் கிருபா விஷயம் தொடர்பாக சில விளக்கங்கள்

இந்த விளக்கம் கவின்மலர் போன்ற நிரந்தர வெறுப்பின் தரப்பை ஒருங்கிணைத்து பாடுபொருள் தேடும் நபர்களுக்கு அல்ல.தமிழ் சூழலின் பொது வெறுப்பின் சூழலுக்கு அவர் ஒரு குறியீடு போன்றவர்.என் தொடர்பான எல்லா விஷயங்களிலும் எதிர்நிலைப்பாடு எடுத்து ஒருங்கிணைக்கும் கருத்து நிலைப்பாட்டின் குறியீடு அவரைப் போன்றவர்கள்.எவ்விதமான விளக்கங்களும் பொருள் தராத ஒரு அரியாசனம் அவர்கள் அமர்ந்திருக்கும் மேடை.அவர்கள் மீது எவ்விதமான மதிப்பும் எனக்கு இல்லை.அவர்களின் செயல்பாடுகள் அனுபவத்தில் பொருட்படுத்தும் படியானதாகவும் பெரும்பாலும் இருப்பதில்லை.என்னுடைய விளக்கம் பிரான்சிஸ் கிருபா என்னும் அரிய தமிழ் கவிஞனின் படைப்புகளை கற்று ,நடைபெற்ற சம்பவங்களில் ஆழ்ந்த துயருற்ற வாசகனுக்கானது ...

ஊட்டியில் குரு நித்யா - ஆய்வரங்கில் பங்கேற்று காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு சென்று நானும் நண்பர் சூர்யாவும் திரும்பு வழியில் 5 -ம் தேதி,நண்பர் பால்முகிலிடமிருந்து அழைப்பு வந்தது .அவர் எனக்கும் நண்பர்,பிரான்சிஸுக்கும் நண்பர்.நண்பர் என்றால் வெறும் வார்த்தைக்கு மட்டும் சொல்லத் தகுந்த நண்பர் அல்ல அவர்.இலக்கியத்தின் பால் உள்ள அன்பின் காரணமாக பிரான்ஸிசால் ஏற்படுகிற அனைத்து இடர்பாடுகளையும் கடந்து அவருக்கு அடைக்கலமாக நீண்ட நாட்களாக இருப்பவர்.அவர் சென்னையில் ஒரு சிறிய கடை வைத்து நடத்துகிறார்.வைத்திருப்பது சிறிய கடைதான் என்றாலும் பிரான்சிஸ் என்றில்லை,அவரைப் போன்ற வேறு சில நண்பர்களுக்கும் அடைக்கலமாக பல காலமாக இருந்து வருபவர்.நாகர்கோயிலைச் சார்ந்தவர்.சில மாதங்களுக்கு முன்னர் எழுபது வயதிற்கும் மேற்பட்ட ஒரு முதியவரை எத்தகைய காரணங்களும் இல்லாமல் அவருடைய கடையில் இருந்து தெருவழியாக பிரான்சிஸ் துரத்திச் சென்று அடித்து துன்புறுத்தியதையும் இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு மீண்டும் அடைக்கலமாக இருப்பவர்.

இந்த துயரச் சம்பவத்திலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நடந்தது என்ன என்பதையே நினைவிற்கு கொண்டு வர இயலாமல் இருந்த பிரான்சிஸ் ; என்ன நடந்தது என்பதே தனக்கு தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த பிரான்சிஸ் .. உதவிக்காக யாரை உங்கள் சார்பாக அழைக்கலாம் என்ற போலீஸ் கேள்விக்கு அளித்த ஒரேயொரு தெளிவான பதில் "பால் முகில்" என்கிற நண்பரின் பெயர் மட்டுமே.போலீசார் அவரை அழைத்த போது பால் முகில் நாகர்கோயிலில் இருக்கிறார்.

பால் முகில் என்னை அழைத்து போலீசார் கொலை என்கிறார்கள்,குடிபோதையில் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்ன செய்வது என்று தெரியவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டார்.கொலையாக இருப்பின் இது பெரும் அபத்த நிகழ்வு.சம்பந்தப்பட்டவன் ஏதேனும் பிரயாணமாக வந்திருக்கலாம் ,அவனை வீட்டில் குழந்தைகள் தேடிக் கொண்டிருக்கலாம்.உறவற்றவனாக இருப்பினும் கூட அவனுடைய மனைவி அவனை எதிர்பார்த்திருக்கலாம் இவ்வாறே எனது மனதிற்கு முதலில் எண்ணம் உண்டானது.கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்,பொதுமக்கள் கண்டு போலீசில் இவரை ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் போலீசார் சொல்லி பால் முகில் என்னிடம் தெரிவித்தவைதான்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் கருணையின் வடிவமாகவே திகள்பவராயினும் கூட நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் ? என்பதை உங்களை நோக்கி ஒருமுறை கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள்.உங்கள் இனிய நண்பர் கொலை செய்திருக்கிறார் என்கிற செய்தி வருகிறது உங்கள் இடத்தில் இருந்து நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் ? அதன் பின்னரும் நானும் பால்முகிலும் தொடர்ந்து பிரான்சிஸ் விஷயத்தில் முடிந்தவாறு செயல்பட்டுக் கொண்டுதானிருந்தோம்.கடைசிவரையில் நின்று பால் முகில் நண்பனைக் காப்பாற்றினார்.

மூன்று விஷயங்களை பால் முகிலிடம் முதன்மையானவையாக நான் சொன்னேன்.உடனடியாக நாகர்கோயிலிலிருந்து கிளம்பி சென்னை சென்று காவல் நிலையத்தில் அவரை சந்திப்பது.ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொள்வது,இவற்றிற்கெல்லாம் மேலாக பிரான்சிஸ் இவ்விஷயத்தில் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டறிவது.காலையில் பால் முகில் அங்கே சென்று சேர்ந்து விட்டார்.ஆனால் பதினோரு மணிவரையில் பிரான்சிஸ் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று சொல்கிறார் என்றே பதில் வருகிறது.

5 ம் தேதி மதியம்  முதற் கொண்டு 6 ம் தேதி காலை பதினோரு மணிவரையில் நானும் பால் முகிலும் மட்டுமே இந்த இடரில் சம்பந்தப்பட்டிருக்கிறோம்,இதனை எவ்வாறு நிலை செய்வது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.இது கொலையல்ல என்றும் எங்களால் நிச்சயிக்க முடியவில்லை.இப்போது பால்வாடிகள் கருதிக் கொள்வது கவிஞன் கொலை செய்ய மாட்டான் என்ற கற்பிதங்கள் எனக்கில்லை.நவீன கவிகளால் கொலை நிகழ்வதற்கான பல்வேறு சூழ்நிலைகளை கடந்த பதினைந்து வருடங்களில் கடந்து கடந்து வந்திருப்பவன் நான்.தங்கள் அதிருப்திகளை குடியின் மூர்க்கத்தில் கடும் வன்முறைகளாக நிகழ்த்தாத கவிகள் ஒரு சிலரைத் தவிர கிடையாது.நானோ,பிரான்சிசோ இதற்கு விதி விலக்கில்லை.இந்த அதிருப்தி பொருள் ஒரு கருப்பொருள் போல தமிழ் கவிகளை பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சாதனம்.பிரான்சிஸ் ,கைலாஷ் ,யவனிகா,ஷங்கர்  என்று   அனைவரின் வன்முறையும் எனக்கும் மிகவும் நெருக்கமாகத் தெரியும்.என்னுடைய வன்முறை என்ன என்பதையும் அவர்கள் அறிவர்.

கொலையாக இது இருக்கும் பட்சத்தில் இவ்விஷயத்தில் எனக்கு மிகப் பெரிய அருவருப்புணர்ச்சி இருக்கிறது எனவே நான்கு வரிகள் எழுதிவிடுகிறேன்,சென்னையில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி விடுவார்கள் என பால் முகிலிடம் நேற்று பத்தரை வாக்கில் தெரிவித்தேன். இது இவ்வாறே பால் முகிலிடம் தெரிவித்த விஷயம்.கொலையா இல்லையா என்பதை நிச்சயிக்க முடியாத காரணத்தால் காலை 11  இருக்குமென நினைக்கிறேன்.இந்த செய்தியை பொதுவில் தெரிவித்தேன்.பிறர் செய்தி அறிகிறார்கள்.எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தன.முதல் தகவல் அறிக்கை மாற்றப்பட்டு ஒருவர் வழக்கில் விடுவிப்பு செய்யப்படுவது என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சாதாரணமான காரியம் அல்ல.தினமலர்,தினகரன்,மற்றும் சில இணைய இதழ்கள் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மன நோயாளிகள்  இருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று செய்தி வெளியிட்டிருந்தன.போலீஸ் வழங்கும் செய்திகளின் அடிப்படையிலேயே இத்தகைய குற்றச் செய்திகள் இதழ்களில் வெளியாகின்றன.இது தமிழ்நாட்டில் ஒருவருக்குத் தெரியாது எனில் அவரை மீண்டும் பால்வாடிகளுக்கு அனுப்ப வேண்டியதுதான்.இந்த வழக்கில் அதிகபட்ச இன்புளுவன்ஸ் இதழ்களின் பின்புலத்திலிருந்தும் சில தனிநபர்களின் பின்புலத்திலிருந்தும் எடுக்கப்பட்டதே அவர் விடுவிக்கப்பட்டதற்கு காரணம்.இவ்வளவு முயற்சிக்குப் பின்னர்தான் இது கொலை அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.கைது செய்யப்பட்ட முந்தின தினத்தில் இருந்து மறுநாள் காலை வரையில் பிரான்ஸிசாலும் என்னநடந்தது என்பதைச் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.எழுத்தாளர்,கவிஞர் என்பதொன்றும் தமிழ்நாட்டு காவல் நிலையங்களுக்கு சிறிய பொருட்டு கூட கிடையாது.அவர்களுக்குத் தெரியாது,எழுத்தாளர் என்றால் எந்த துறையில் எழுத்தாளர்  என்றுதான் அவர்கள் கேட்பார்கள்.அவை உயரிய அதிகாரங்களை மட்டுமே கீழ்ப்படியும் தன்மை கொண்டவை.மற்றபடி ஜி.நாகராஜன் உட்பட பலர் தமிழ்நாட்டின் காவல் வழக்குகளில் மனநோயாளிகள் என கருதியே விடுவிக்கப்பட்டார்கள்.குற்றாலம்,கோயில்பட்டி என நடைபெற்ற எழுத்தாளர் கலவரங்களில் இவ்வாறே அடையாளம் காணப்பட்டார்கள்.இதில் ஒரு புதுமையும் கிடையாது.இது ஒருவேளை கொலையாக இருந்திருக்குமெனில் அப்போது அவர் கவிஞர் என்பது உதவி செய்திருக்காது.மன சிகிழ்ச்சை பெற்றவர் என்பதொன்றே உதவியிருக்கும்,சந்தேகமே வேண்டாம்.

தமிழ் சூழலின் நிரந்தர வெறுப்பு கும்பல்களிடம் இருந்து வருகிற தாக்குதல்களை இடது கையால் எடுத்து இரண்டு அடி தாண்டி ஒதுக்குபுறமாக போட்டு விட்டுப் போவதே எனது வழக்கம்.பிரான்சிஸுக்காகவும் நானிந்த விளக்கத்தை எழுதவில்லை.அவருக்கு என்னிடமிருந்து எந்த விளக்கமும் தேவைப்படாது என்பது எனக்குத் தெரியும்.பிரான்சிஸ் விஷயத்தில் இவர்கள் ஒரு நன்மை செய்திருக்கிறார்கள் நன்றிதான் சொல்ல வேண்டும்.இவர்கள்தான் இவ்விஷயத்தில் செய்யமுடியும் என்கிற விழிப்போடு பந்தை அவர்கள் பக்கமாக தள்ளிவிட்டேன் என்பது,எதிர்காலத்தில் கூட அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பும் கோயம்பேட்டில் படுத்து பிரான்சிஸ் துயில்கிறார்  என்பதை அறிந்து சிலர் நண்பர்கள் இணைந்து அவருக்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அமர்த்தினோம்.சில காலங்களிலேயே அந்த அறை அவரைப் பின்வலித்து விட்டது.தொடர முடியவில்லை.அவரை ஒரு அறையில் இருத்துவது சிரமம் என்பது இப்போது புரிகிறது.நாங்கள் நடத்திய பல நிகழ்வுகளில் அவரைப் பங்கேற்க வைத்திருக்கிறோம்.உரு கண்டெல்லாம் எவர் நினைப்பது போலும் கூசியதில்லை.2017 -லில் கவிஞர்கள் பாலை நிலவனுக்கும் பிரான்சிஸுக்கும் நிழற்தாங்கல் சார்பில் பரிவட்டம் கட்டி சிறப்பு செய்திருக்கிறோம்.நிழற்தாங்கலில் வந்து தங்கி செல்பபவராக  தொடர்ந்து இருந்திருக்கிறார்.சில சந்தர்ப்பங்களில் சகிக்க இயலாமல் விலகியும் சென்றிருக்கிறேன்.   இப்போதேனும் கலைஞன் என்று கண்டு கொண்டவர்கள்,உங்கள் நிகழ்வுகளில் எல்லாம் அவரை இடம்பெறச் செய்யலாமே இல்லையா ? 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"