கவிதை கேளுங்கள்

கவிதை கேளுங்கள் 

ஒன்று -1

எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு 
சும்மா வருவதில்லை நான்

மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில் 
நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன் 
நேற்று உங்களிடம்

மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம் 
எனக்கில்லை 
வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை
மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை

கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள் 
நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில்

சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே 
ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள் 
யுவதிகளுக்கோ பகலில் தருவேன் 
இரவின் நட்சத்திரங்கள்

எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில் 
வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள் 
துரதிர்ஷ்டவசமானவர்கள்
கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக்
கடல் காட்டுவேன்

இரண்டு - 2

பாமா இல்லத்தில் 
யார் வாயிலில் நின்றாலும் 
பாமாவே தோன்றுகிறாள்

முன்பக்க கேட் நான்கடியகலம்
ஒரு பக்கம் சற்றே திறந்திருக்க வேண்டும்
திறந்த ஒருபக்க கேட் மேல் நுனி பிடித்து 
நிற்கவேண்டும் பாமா

ஒரு காலுயர்த்தி படியில் நிற்க 
ஒரு நளின 
புறப்படும் வில்லின் வளைவு

மேற்கு பார்த்த தெருவில் பாமா 
மேற்கில் உடல் திரும்பி 
கிழக்கில் முகம் பார்க்கிறாள்

இப்படி பாமா இல்லத்தில் 
பாமாதான் நிற்கவேண்டும் என்பதில்லை 
யார் வேண்டுமாயினும் நிற்கலாம் 
நிற்க வேண்டும் 
நின்றால் அவள்தான் 
பாமா

பாமா நின்று நோக்கும் வீட்டில் 
பாமா நோக்காத திசையிலிருந்து வந்து கொண்டிருப்பவன்தான் 
கண்ணன் என்பது
பாமா அறியாததா என்ன ?

மூன்று - 3

அப்பா இறந்து போய்விட்டாரென
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன 
யாருடைய அப்பா ?

அப்பா இறந்து போனாரென பேசிக் கொள்கிறார்கள்.
எல்லோருடைய அப்பாக்களும் ஒரேநாளில் எப்படி 
இறந்து போக முடியும் ?

யாரைக் கேட்டாலும் அப்பா இறந்து போய்விட்டார் 
என்று சொல்கிறார்கள்
அப்பா எப்படி இறக்க முடியும் 
நடுவயதுதானே ஆகிறது அவருக்கு ?
அம்மாவைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம் 
அவ்வளவுதானே விஷயம்

அப்பா அவ்வளவு எளிதில் இறந்து போய்விடுவாரா 
என்னா
நடுவயதிற்குப் பிறகு வயதே ஆகாத 
அப்பா

நீ பெரியவனாயிருந்தால் இனியவர் உனக்குள் நுழைய போகிறார் 
நீ தாத்தாவாயிருந்தால் உனக்குள் இருந்து சற்றைக்கு முன் அவர் வெளியேறினார் 
நீ குழந்தையாயிருந்தால் உனக்குள் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார்

நீ சத்ருவாக மாறினால் தொடர்ந்து அவர் 
கொலைமுயற்சியில் ஈடுபடுகிறார்

நான்கு - 4

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் யோக்கியரே 
ஆனால் அதற்கும் அப்பால் ஒரு பூஜ்யம் உண்டு

உங்கள் அர்த்தம் மட்டும்தானே நினைவென்று நினைக்கிறீர்கள் ?
நினைவிற்கு நூற்றைம்பது கால்கள் உண்டும் யோக்கியரே

மொத்தத்தில் நீங்கள் யோக்கியர் என்பதுதானே 
உங்கள் நிரூபணம் ?
உங்களில் வழுக்கி விழுந்த விலங்கை 
எடுத்து நகர்கிறது பாருங்கள் அந்த எட்டுக்கால் பூச்சி

நீங்கள் ஒரு பூஜ்யத்தையும் 
எட்டுக்கால் பூச்சியையும்
தவற விட்டதால்  
யோக்கியரானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா 
எல்லாமேயான யோக்கியரே ?

ஐந்து - 5

கீழுதட்டின் ஓரத்துக் கீறலில் 
ஒட்ட மறுக்குதடி உன் சாயம் என 
சிணுங்குகிறது நிலைக்கண்ணாடி 

ஒட்ட மறுத்த இடம்தான் என்னுடையது என்கிறாள் அவள்
அதனை மறுபடியும் நீ பாரேன் பாரேன் என்று குதிக்கிறாள் 
கண்ணாடியிடம்

கருப்பு மசி வரையும் புருவக்கோடுகளில் நீங்காத நிழல்கள்
இது கண்ணாடி 
அதுதானே என் உருவம் கூர்ந்து நோக்கு... என்கிறாள் அவள்

எப்படி மினுக்கினாலும் உனக்கு அவள் போல் வரவில்லையே முகம் !
வரவில்லையே அதுதான் என் சுய வரலாறு

இத்தனையும் கண்டுபிடித்தாயே 
நீ பார்த்ததெல்லாம் தாண்டிச் செல்கிறேன் பார் என்றவள் 
சிரிக்க 
புண்ணாகி பால் திரியும் நிலைக்கண்ணாடி

அந்த புதுக்தேவடியாள் 
யாரென்றுதானே கேட்கிறீர்கள் ?
அவளும் நானும் வேறு வேறு அல்லர்

ஆறு - 6

நீங்கள் வருவதற்கு தைரியப்படாத இடத்தில் இருந்து கொண்டிருக்கிறேன் 
நீங்கள் தைரியப்பட்டால் இயலக்கூடிய இடம்தான் இது

தைரியப்பட்டதால்தான் இங்கு வந்து சேர்ந்தேன் 
என்றும் சொல்வதற்கில்லை 
கழுகின் கழுத்து வசீகரத்தில் குருடனாக ஏறி அமர்ந்து 
வந்திங்கு சேர்ந்தேன்

இங்கே கொஞ்சம் சித்து கிட்டும் 
ஜோதிடம் அகப்படும் 
தரிசனம் தோன்றும் 
வாக்கு பலிதமாகும்

ஐந்து கடல் ஏழுமலை 
ஆயிரம் பூதங்கள் தாண்டியும் வரலாம் 
நேரடியாகவும் வரலாம்
வழிப்பாதை தெரியவேண்டும் 

ஆமை முட்டைகள் பொரித்து கடலுள் நகரும் பாதையில் தொடங்கி 
யானைத்தடம் கடந்து 
மலை மேல் பவனித்து
காற்று வரும் திசையில் வந்து சேரவேண்டும்

கடினமேதுமில்லை 
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வழிப்பாதைதான் இது 
என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?
வந்து சேருங்கள் மேனியெல்லாம் 
வண்ணத்தின் பிசுபிசுப்பு காண்பீர்

ஏழு - 7

வழிநெடுக பூக்களை சிதறி விட்டுப் போயிருக்கிறான் 
இன்று சுடுகாட்டுக்குச் சென்றவன்
அதில் அவன் பார்த்த பூக்களும் உண்டு 
பார்க்காத பூக்களும் உண்டு

எல்லோரும் திரும்பி களைத்த பின்னர் 
வீதியில் கிடந்தது நசிந்து அழும் இந்த பூக்களை 
மிதிக்காமல் செல்ல முயல்கின்றன என் கால்கள்

எல்லோருடைய கால்களும் இப்படித்தான் முயற்சித்திருக்கக் கூடும் 
என்றாலும் நசுங்கி விடுகின்றன இந்த பூக்கள்

இதற்கு முன்னர் போனவனுக்கு இப்படித்தான் 
இனி புறப்பட போகிறவனுக்கும் இப்படித்தான்
நேர்கொண்டு நாளை உனது சூரியோதயத்தை 
அவசியம் 
கண்டு விடு.

எட்டு - 8

போவோர் வருவோருக்கு பயணத்தில் 
பார்க்கக் கொடுக்கும் அந்த பெருமரம் 
தனது அடிபாகத்தைப் பாறையென வைத்திருக்கும் 
இருளில் யானை எழும்பி நிற்பதை ஒப்பம் நெளிவு

கரடியென உயர்ந்து மலை போலும் கிளைகள் 
கிளைகள் முச்சூடும் தளிர்கள் 
நீலம் சிறு நீலம் சுருண்ட மலர்கள்

நீலம் சுருண்ட மலர்கள் தாமே என பயணம் திரும்புவதற்குள் 
ஒவ்வொரு நீலத்திலும் கிளைகளில் உட்கார்ந்து அமர்ந்திருக்கும் காக்கைகள்

காக்கை பூத்த மரமள்ளி கடக்கத்தான் 
வந்தேனோ இனியிந்த சிற்றூருக்கே
கிளையெல்லாம் காக்கைகள் தொங்கும் சிற்றூரில் 
கிளியின் வாய்ச்சொல் 
என் கவிதை 
வெறும் 
கீ கீ கீ ...

ஒன்பது - 9

ஏரியுடல்

வற்றிக் கொண்டிருக்கும் ஏரிதான்
வற்றிக் கொண்டிருப்பதை தெரியப்படுத்த விரும்பாத கொக்குகள் 
அதன் ஈரம் கொத்துகின்றன

அக்கரையிலிருந்து புறப்பட்டு வரும் வாத்துகள் 
நீர்வளையங்களில் நெளிகிறது ஏரியின் சுடு முதுகு 

கரைக்குத் திரும்பியவை மீண்டும் நீர்வளையங்களில் நீந்துகின்றன

யோனியை வானுக்குயர்த்தும் தாமரைகள் 
நீ எவ்வளவு வற்றினாலும் எனது வேர் உனது 
ஊற்றில்தான் இருக்கிறது பாரேன் என்கிறது

முக்காலத்திற்குள் இந்த காட்சியை அழைத்துச் சென்றதொரு 
பழம்பாடல் 
ஒலிப்பெட்டிக்கு சொந்தக்காரக் குறவன் 
வானம் பார்த்தபடி கரையில் 
படுத்திருக்கிறான்

அவன் உனக்கு குறவனைப் போலே
தோற்றங்காட்டுகிறான்
ஏகன் அனேகன் இந்த நிமிடத்தில் அவன் தானென்று 
எனக்கு சொல்லித்தந்ததோ 
ஏரிக்கரை அரசமரம்

உடன்தானே 
அரசின் இலைகளிலெல்லாம் 
அனேகனின் தளிர் வசந்தம்
நான் ஏரியின் நீர்வளையங்களை 
எடுத்துத் திரும்பினேன்

எனது வளை இடுப்பிலிருந்து
எதனை அப்படி எடுத்தாய் ? என்று கேட்டாயே 
உனக்குத்தான் இந்த பதில்

பத்து  - 10

விடுதலைக்கான என்னுடைய முதல் அடியில்
எப்போதும் ஒரு சிறைச் சாலைக்குள்தான் வந்து விழுகிறேன்
அதன் பின்னர் அங்கிருந்து சிகிரெட் புகைக்கக் தொடங்குகிறேன்

முட்புதரில் இறங்கி ஆற்றைக் கடக்கவேண்டும் 
முட்புதரில் இறங்குதல் என் வேலை 

பின்னர் ஆறு தன் வசம் என்னை அடித்துச் செல்லத் தொடங்குகிறது
என்மேலே உருண்டு விழுகிற சரளைக்கற்கள் 
நாங்களும் இப்படித்தான் முட்புதரில் இறங்கினோம் 
என்று ரகசியம் பேசுகின்றன

நாங்கள் ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்குள் செல்வதற்குள் 
ஆகாசம் கண்டோம் 
ஒரு இரவைக் கடப்பதற்குள் 
உயிர்கள் ஜனிப்பதை பார்த்தோம்

ஒரு யுகத்திற்குள்ளிருந்து மறுயுகத்திற்குள் நுழையும் போது
நம்புவீர்களா தெரியவில்லை 
நாங்கள் ஏன் முட்புதரில் இறங்கினோம் 
என்பது 
தெளிவாயிற்று

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...