கமல் ஹாசனின் பேஸ் வாய்ஸ் அரசியல்

கமல் ஹாசனின் பேஸ் வாய்ஸ் அரசியல்

கமல் ஹாசன் தமிழில் எனக்குப் பிடித்த நடிகர்.அவர் நடித்த படங்கள் எவ்வளவு கோளாறாக இருந்தாலும் கூட எனக்கு பார்க்கப் பிடிக்கும்.திரும்பப் பார்க்கவும் பிடிக்கும் .நிறைய நுட்பமான அவதானிப்புகளை உடலில் வெளிப்படுத்தத் தெரிந்தவர்.மலையாளம் போன்ற மொழிகளில் இத்தகைய பண்பிற்கு உதாரணம் சொல்ல நிறைய நடிகர்கள் உண்டு.தமிழில் கமல் ஒரு அபூர்வம்.குரலிலும் நடிக்கத் தெரிந்தவர் கமல்.நான் அவருடைய ரசிகரும் கூட.கமல் சினிமாக்களில் கதாபாத்திரங்களை மெருகேற்றக் கூடிய அவருடைய குரலும் அவரது பேஸ் வாய்ஸும் ; அவருடைய அரசியல் பேச்சில் குளறுகிறது.உளறுகிறது.ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கும் ,சம்பந்தமற்ற மற்றொரு துறையில் கருத்து சொல்வதற்கும் தொடர்பேதும் இல்லை என்பதற்கு கமலும் ஒரு உதாரணம்.இதனையே ஒரு சாமானியன் சொன்னால் அது ஒரு தேநீர்க் கடை பேச்சு போலத்தான் இருக்கும்.அவரே குறிப்பிடுவதை போல தமுக்கு அடிப்பவரைப் பொறுத்து மேளச் சத்தம் ஒலிக்கிறது ,அதுவே வேறுபாடு.
எல்லோருக்குமே அரசியல் ஆர்வமும் முதலமைச்சர் ஆசைகளும் நாட்டில் ஏற்படுவது நல்லதுதான்.தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் ஒரு நாளேனும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட முடியும் என்று மக்கள் எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை புதிதாக ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லா இளைஞர்களுக்குமே ஒரு நடிகனாகி விட வேண்டும் என்கிற கனவு இருக்கும்.ஏதேனும் மூலையிலேனும் அது அமர்ந்திருக்கும் .அது போல தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற அனைத்துத் துறை முதியோர்களுக்கும் திடீர் அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.சினிமா என்றில்லை ,ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் , தெண்டூழியம் செய்து ஓய்வு பெற்றிருக்கும் பேராசிரியர்கள்,அரசியல் கட்சிகளிலேயே ஓய்வை எட்டிவிட்ட பெரியோர்கள் ,வெளிநாடு சென்று முதுமையில் ஊருக்குத் திரும்பியிருப்போர் ,முதுமையில் செய்வதற்குப் பணியொன்றும் இல்லாதார் ,கவிதை கைவராத தமிழ் அரசியல் கவிகள் என பலருக்கும் முதலமைச்சர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.இந்த ஆர்வத்தை தவறென்றும் சொல்வதற்கில்லை.நல்லதொரு பதவிதான் அது .போஷாக்கு அதிகம் நிரம்பிய பதவியும் கூட.
என்றாலும் ஒரு சாமானியனுக்குள் இந்த ஆசையின் உந்துதல் ஏற்படுவதற்கும் பிரபலங்களுக்கு ஏற்படுவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.சாதாரண மனிதனுக்கு இந்த உந்துதல் ஏற்பட்டு இந்த பதவிக்கு வந்து சேரத் துடித்தால் அதனை ஒரு நல்ல உந்துதல் ,ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது என்று எடுத்துக் கொள்ளலாம்.பிரபலங்கள் இந்த ஆசைகளை மொய்த்து அப்பிராயங்கள் சொல்லும் போது கான்வென்ட் குழந்தைகள் இனிப்பு தின்று எச்சில் ஒழுகுவது போல அது உள்ளது.இது கமல் ஹாசனின் அரசியல் அபிப்ராயங்களுக்கும் விதிவிலக்கு அல்ல.
இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறேன்.காந்தி ,திலகர் ,நேதாஜி ,சாவர்கர் எல்லோரையும் சம நேர்கோட்டில் புரிந்து வைத்திருக்கிற ஒரு மூளை முதலில் அரசியலுக்கு ஏற்புடையதல்ல.அரசியல் அறியாதது அது.கமல் சொல்லும் இந்த நேர்கோடு சிக்கலானது.அவரது ஆசான் சுஜாதா இதனை அவருக்கு சரியாக விளங்கச் சொல்லித் தரவில்லை போலிருக்கிறது.எத்தகைய அடிப்படை  அரசியல் புரிதலும் அற்ற கான்வென்ட் கேர்ள்ஸ்  புரிதலில் இருந்து அரசியல் பேசுவதற்கு Funny அரசியல் என்று பெயர் .இந்த Funny அரசியலுக்கு இங்கே ஏற்கனவேயுள்ள பெரிய உதாரணம் விஜய்காந்தின் அரசியல் என்பதறிக !
இரண்டாவதாக அரசியல் அதிருப்தியை வெளியிட்டு விட்டு , தான் விரும்புகிற தரப்பினர் மட்டுமே அரசியலுக்குப் பொருத்தமானவர்கள் என்பது போல பேசுபவர்கள் மிகவும் சிக்கலானவர்கள்.இவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதே தனக்கு அல்லது விரும்பியவர்க்கு அதிகாரம் வந்தடைய வேண்டும் என்ற காரணத்தினால்தான்.அதிருப்தி மட்டுமே ஒரு அரசியல் தகுதி ஆகாது விஞ்ஞானிகளே ...
இங்கே எல்லாமே தவறாக இருக்கிறது என்பது அளவற்ற அதிகார தாகத்தின் மாயை .அதிருப்தி யதார்த்தமாவதில்லை. நாம் ஏற்றெடுத்து விரும்பி கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றமடைந்து வரும் பாதைதான் நாம் காண்பதெல்லாம் என்பதே உண்மை.
இருபெரும் கட்சிகள்: தங்களின் தேக்கத்தில் வந்து நிற்கும் இன்றைய சூழ்நிலையில் கடந்த கால ,நிகழ் கால சமூகவியல் ,சமூக உளவியல் காரணங்களைப் புறந்தள்ளி விட்டு கமல் ஹாசன் வகையறா உண்மைபேசிகள் உண்மையில் பொய்பேசிகள் என்பதறிக நீலகண்டா !

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...