" இடைவெளி " எண்பதுகளை நினைவூட்டும் சிற்றிதழ்

" இடைவெளி " எண்பதுகளை நினைவூட்டும் சிற்றிதழ்    

சம்பத்தின் பிரபலமான நாவல் தலைப்புடன் "இடைவெளி " சிற்றிதழ் முதல் இதழ் வெளிவந்திருக்கிறது.மரணம் பற்றிய விசாரணைகளால் நிரம்பிய இந்த நாவலை சம்பத் புத்தகமாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.அந்த நாவல் அடைந்த பிரமிப்பு தமிழ் சூழலில் என்ன என்பதும் அவருக்குத் தெரியாது.அந்த காலத்தில் இடைவெளி நாவலை பிடித்த நாவல்கள் வரிசையில் சொல்வதென்பது ஒரு அறிவுஜீவிக் குறியீடாக இருந்தது.அது ஒரு நல்ல காலமும் கூட .அதுவொரு இறந்த காலம் என்பதால் மட்டும் அதனை ஒரு நல்ல காலம் என்று நான் சொல்லவில்லை.நவீன காலம்தான் ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப தாக்கம் அப்போது கிடையாது.அது இலக்கியத்திற்கு நிறைய அவகாசத்தைக் கொண்டிருந்தது.வெற்றுப்  பேப்பரில் கையெழுத்திடுவது போல எழுதித் தள்ளினால் யாரும் சீந்தவே மாட்டார்கள்.ஒரு கதை எழுதினால் கூட அது குறுகத் தறித்ததாக இருக்க வேண்டும்.இப்போதைய பெரும்புகழ்க்காரர்கள் பலருக்கு அப்போது நாதியிருந்ததில்லை.பெரியவர்கள் ஒரு கவிதையையோ கதையையோ பாராட்டிக் கேட்க அப்படியினிக்கும் .எளிதில் அது நிகழாது.பாராட்டும் ,மதிப்பும் வெற்றுச் சம்பிரதாயமாக மாறியிராத காலம் அது .

இடைவெளி இதழை பார்த்ததும் அந்த காலத்தின் தொடுவுணர்ச்சி மீண்டும் மேனியில் விழுவது போன்றிருந்தது.இது போன்ற இதழ்கள் தொடர்ந்து வருமாயின் நன்று.இது போன்ற இதழ்களில்  எழுதுவதில் ஒரு சுகம் உண்டு  

சபரிநாதனின் விரிவான நேர்காணல் இந்த இதழில் வெளிவந்திருக்கிறது.சபரிநாதன் மிகவும் விழிப்புணர்ச்சி கொண்டதொரு கவிஞன்.பின் வந்த தலைமுறையில் சபரிநாதன் மீது எனக்கு கவர்ச்சி அதிகம் . சபரியின் வால் கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்த கவிதை நூல்களில் தலைசிறந்தது.இந்த நேர்காணலில் ஏதோவொன்று பிசிறுகிறது.நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று இல்லை என்பது போல.உண்மையில் இந்த நேர்காணலில் பல புதிய விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்.அவருக்கேயுரிய சில கண்டுபிடிப்புகள் இந்த நேர்காணலில் நிச்சயமாக இருக்கிறது.பிறர் கண்ணின் படாத சில விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.அப்படியானால் நேர்காணல் சிறந்தது என்றுதானே சொல்ல வேண்டும் ? ஆனால் அப்படி சொல்ல முடியாதபடி ஒரு பிசிறு ,துரு நெடியடிக்கிறது.மீண்டுமொருமுறை வாசித்துப் பார்க்க வேண்டுமென நினைத்திருக்கிறேன்.

நான் சொல்ல வரும் விஷயம் இதுவல்ல.பெருந்தேவியின் நான்கு கவிதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளன.அதில் மூன்று கவிதைகள் சொக்கத் தங்கம்.நான் யார் ? ,நினைவுப் பழக்கம்,ஆள் மாறாட்டம் ஆகிய கவிதைகள் அவை.ஆள் மாறாட்டம் கவிதை கொஞ்சம் வசப்படாமல் போயிருந்தாலும் கூட செய்தியின் இடத்திற்குத் தரையிறங்கியிருக்கும்.கவிஞனின் நெடியே அதற்கு உயிர் கொடுக்கிறது.அழகியலால் ஒரு கவிதை சரிந்து விழுவதற்கும் ,ஒரு செய்தியேயாயினும் கூட கவிப்பொருளாக ஒரு கவிதை எப்படி உருவேறுகிறது என்பதற்கும் விளக்கம் சொல்லக்கூட உபயோகப்படக் கூடியதிந்த கவிதை.

கவிதையை எழுதிப்பார்த்தலும் ,கவியாக இருத்தலும் வேறுவேறான காரியங்கள்.பல்லாயிரக்கணக்கானவர்கள் எழுதிப்பார்க்கும் மொழியின் தொழிநுட்பம் கவிதை.இந்த பல்லாயிரக்கணக்கிலிருந்து ஓரிருவர்தான் கவியாக பரிணமிக்கிறார்கள்.கவி தொடுவதெல்லாம் கவிதையாக வேண்டும் .அவன் துருவி தெருவில் விட்டெறிந்த வெற்றுச் சிரட்டையைத் தொட்டாலும் கவிதையாகி விட வேண்டும்.அது எப்படியென்றால் தெரியாது .ஆக வேண்டும் என்பது மட்டும் தெரியும்.பெருந்தேவி இந்த கவிதைகளில் அந்த இடத்தில் வந்து நிற்கிறார் கவியாக .எழுதியெழுதி பின் கவியாக எழுச்சி கொள்கிறவர்களும் உண்டு.கண்டராதித்தனுக்கு இது வந்து கூடியது திருச்சாழல் கவிதைத் தொகுப்பில்.இதற்கு நேர்மாறாக நேற்று வந்த பொடியன் சூர்யா என்று பெயர்,  ஒரு நீள்  கவிதையிலேயே இந்த இடத்திற்குள் வந்து விழுவதுவும் நடக்கிறது.இவையெல்லாம்  கணித்து வரையறை செய்ய இயலக் கூடிய காரியங்கள் இல்லை.சபரி இதனை எட்டியது வால் கவிதைத் தொகுப்பில்.

ஆனால் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல முடியும் .எழுதியெழுதி திறமை ,நுட்பம் எல்லாவற்றிலும் ஜொலித்து அலுத்து ,இவையெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா ! என்று கவி மனம் முடிவெடுக்கிறது பாருங்கள் அந்த இடமே பிறப்பிடம்.திறமை ,நுட்பம்,அழகுணர்ச்சி  ,ரசனை என்று எதிலும் பிடிகிட்டாமலிருக்கும் கவிதை அவற்றையெல்லாம் உதறி லெகுவானதும் ,புளுக்கத்திற்கு வெளியே சுகமான காற்று வந்து தொடுவதைப் போல மேனியில் வந்து ஒட்டிக் கொள்கிறது.அதனால் அவன் கடந்து வந்தவற்றிற்குப் பொருளில்லை என்று சொல்ல முடியாது.அதன் வழியாகவும் வந்துதான் இந்த சம்பவம் நிகழ்ந்தேறுகிறது.கடைசியில்தான் அவன் காற்றுப் போல மேனியில் வந்து தொடுகிறான் எல்லாவற்றையும் உதறியெழுந்த பிற்பாடு.அவன் அத்தனையையும் உதறினாலும் உதறித் தட்டினாலும் கூட உதறியதன் தடயம் இந்த காற்றில் இருக்கும்.கவிதை எழுதிப்பார்க்கும் இடத்திலிருந்து கவியாகும் சூக்குமம்.அதன் பிறகு அவனொரு சூக்குமப் பொருள்.

இந்த இதழில் வெளிவந்துள்ள  பெருந்தேவியின் " நான் யார் நான் யார் நீ யார் " மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு விவாதப் பொருள் என்றே தோன்றும்.அது விவாதப் பொருளும் தான் .ஆனால் அது கவிதையாகியிருக்கிறது.இதனைத் தான் கவிதா வினோதம் என்கிறேன்.ரசனையை வண்டி வண்டியாக வந்து கொண்டு  இறக்கினால் கவிதையாகி விடும் என நினைப்பது ,கவிதையின் தொழில் நுட்பத்தில் உட்புகுந்த ஒரு மூட நம்பிக்கை.

கவிதையின் நான் என்பது வேறே .அது பொருளை நோக்கிக் குவிய வேண்டும்.நமது சொந்தப் பக்கறையை நோக்கிப் பொருள் குவிந்ததால் கவிதை விலகி ஓடிவிடும்.கவிப்பொருளின் "நான்" ஒரு திரவியம் .அது திரவியமாக உருமாற வேண்டுமெனில் கவிப்பொருளில் நான் கரைந்து காணாமல்   போய்விட வேண்டும்.புரிந்தோர் புரிந்திடுங்கோ ,புரியாதோர் போயிடுங்கோ  மக்கா .வேண்டுமானால்  உண்டி குறைத்து உருகிப்பாருங்கள்.என்னைக் குறைசொல்லி ஒருபயனும் இல்லை காண்பீர்  .பெருந்தேவியின் கவிதை ,காதல் வசப்பட்டேன் பெருந்தேவி

நான் யார் நான் யார் நீ யார்

என் கவிதையில் வருகிற
நானை நானென்று
நினைத்து விட்டீர்கள் பாவம்
அது சும்மா
நான் ஒரு கவித்துவ வசதி
அல்லது உயர் சித்தப்பிரமை
உண்மையில்
நான்
காற்று தள்ளி விட்ட
ஒரு சுரைக்காய்க் குடுவை
இல்லையில்லை
சுரைக்காய்க் குடுவையின்
தொன்ம ஆச்சார
மதிப்பெல்லாம் எனக்கில்லை
இப்போது சரியாகச் சொல்கிறேன்
கேளுங்கள்
நான்
ஒரு வழிப்போக்கன் விசிறியடித்த
காலி கோகோகோலா டின்
ஆமாம் டின்
இப்படியே உருண்டோடுவேன்
சொச்ச நாளும்
மிச்ச மீதியாய்
ஆமாம் நீங்கள் ?
காலி பெப்சி டின் என்றால்
தள்ளிப் போங்கள்
முட்புதர் நோக்கிச் சரிந்து
மண்ணில் மட்காமல்
புதையுண்டு கிடப்பதிலும்
போட்டிக்கு வந்து விடாதீர்கள்
  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"