உங்களுக்கு அவமானமாக இல்லையா ?

உங்களுக்கு அவமானமாக இல்லையா ?  இந்திய பீனல் கோட் எத்தனையாவது பிரிவில் வருகிறது ! கனம் கோர்ட்டார்  அவர்களே !

இந்தியாவில் நீதிபதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் தொடங்கினார்கள்.முதலில் இவர்கள் பேசத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தோம் .இனியொரு புதிய விடியல் தொடங்கப் போகிறது என்பது போல .போலீஸ் பீவர் சினிமாக்களில் வெளிப்படுவது போல ,இந்த அதிகார பீவர் ஏற்படுத்திய ஒரு வகையான புதிய விடியல் மனோபாவம் இந்தியாவில் பரவலாக, வைரலாக  மூக்கு சிந்த தொடங்கி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என நினைக்கிறேன்.தேர்தல் கமிஷனர்கள் பேசத் தொடங்கியதில் மயக்கமடைந்து நீதிபதிகளும் ஊதுபத்தி கொளுத்தினார்கள்.நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்துக்களை ,ஊதுபத்தி அபிப்ராயங்களை பேசிக்கூடாது என்பதல்ல. தனிப்பட்ட அவர்களின் உதிபத்திக் கருத்துக்களுக்கும் ,நீதிக்கும் ,சட்ட திட்டங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு தெரிந்து பேசவேண்டும்.நீதிமன்றம் என்பது இவர்கள் ஊதுபத்தி விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்ட இடம் அல்ல.நீதிபதிகள் அரசின் தரப்பாக உருமாற்றமடைந்து வரும் இதே காலகட்டங்களில்தான் அநேகமாக அவர்கள் குற்றவுணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள ஏராளமான அபிப்ராயங்களை நீதியின் போர்வையில் முன்வைக்கிறார்கள்.தனிமனிதர்களோ அல்லது அரசாங்கமோ நீதிபதிகள் என்ன விதமான தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் ,அவர்கள் குடும்ப நலன் பற்றி கொண்டுள்ள அபிப்ராயம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவா நீதிமன்றத்தை நாடுகிறார்கள் ?

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மருத்துவப்படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வை எதிர்த்து சட்டம் தாக்கல் செய்திருக்கிறது.அதில் நீட் தேர்விற்கான பாட   திட்டமும்   ,தமிழ்நாட்டில் மாணவர்கள் பயிலும் பாட திட்டமும் வேறுபடுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பாட திட்டம் மட்டும்தான் தகுதியானது என ஒரு நீதிபதி தனிப்பட்ட முறையில் கருதுவாரெனில் அவருடைய பேரக்குழந்தைகளை சி.பி.எஸ்.சி யில் சேர்த்து விடலாம்.அப்படி செய்யும் பலர் இருக்கிறார்கள்.தமிழ்நாடு  அரசு சட்ட மன்றத்தில் நீட்டுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாவில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை தெளிவுபட சொல்லியிருக்கிறார்கள்.தமிழ்நாடு சட்ட மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டிருக்கும்  சட்ட மசோதா  இதுவரையில்  நாம் காக்க விரும்புகிற  சமூக நீதியுடன் தொடர்புடையது .

சமூக நீதியென்பதே அவமானகரமானது என்று நீதியரசருக்கு  ஒரு அபிப்ராயம் இருக்குமெனில் இங்கே  சட்ட புத்தகத்தை  எழுதிய அம்பேத்கார் தொடங்கி சமூக நீதிக்காகப் போராடிய அத்தனை பேரிடமும் கேட்கவேண்டும் . உங்களுக்கு அவமானமாக இல்லையா ? ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள் ? நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள் உங்களுக்கு அவமானமாக இல்லையா ?

கையில் பிடித்துக் கொண்டு போவது மத்திய அரசாங்கத்திற்கான குடை .இதில் நீதியரசர்கள் என்னும் பெயர் இன்னும் ஏன் காலத்தில் நிலைக்கிறது ? அரசர்கள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்களா என்ன ? எனக்கொரு சந்தேகம் குடைபிடிக்கும் ,பல்லக்கு தூக்கும் உங்களுக்கு அவமானமாகவே இருப்பதில்லையா ? ஏன் ஒட்டுமொத்தமாக விலை போகிறீர்கள் ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்