கவிதைகளுடன் "கக்கூஸ்" ஆவணப்பட விவாதம்

கவிதைகளுடன் "கக்கூஸ்" ஆவணப்பட விவாதம்
நிழற்தாங்கல் படிப்பிற்கான வெளியில் நாங்கள் விரும்பியபடி ஏற்பாடு செய்திருந்த "கக்கூஸ் " ஆவணப்படத்தை திரையிட இயலவில்லை.அரசாங்கத்தின் நெருக்கடிகள் காரணமாக திரையிடலை நேற்று தவிர்க்க வேண்டியதாயிற்று.முறைபிரகாரம் பின்னர் திரையிடுவோம் . ஆனால் கூட்டம் வழக்கம் போல நடைபெற்றது.பலருக்கும் தகவல்கள் சொல்லி திரையிடல் இல்லை என்பதை தெரிவித்த பின்னரும் எங்களுடன் வந்திருந்தவர்களுக்கு நன்றி.நேற்றைய கூட்டத்தில் நான் என்னுடைய கவிதைகள் சிலவற்றைப் படித்தேன் .அதில் ஒரு கவிதை அனைவருக்கும் பிடித்திருந்தது.ரோஸ் ஆன்றா ,சூர்யா ஆகியோரும் தங்கள் கவிதைகளை படித்தார்கள் .
நேற்றைய அமர்வில் அனைவருக்கும் பிடித்திருந்த அந்த கவிதை இது.
"அந்தச் சிறுவன்
நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்
கடந்து கனரக லாரியில்
இங்கு வந்து கொட்டப்பட்டவன்
துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.
கொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு
நீர் தெளிகிறான்
பாம்பு கொத்தியது போலே துடித்து
"தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?"
எனக் கேட்டு அவன்
அம்மையைத் திட்டுகிறீர்கள்
சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென
அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள்
சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள்
அத்தனைபேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்
நீங்கள் உண்ட சோறு
அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு
நன்றி கூற
உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது
துரத்தப்பட்ட அவனது இரவு."
தொடர்ந்து கக்கூஸ் ஆவணப்படம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.கக்கூஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் திவ்யாவின் சிறப்புரை எழுச்சி மிக்கதாக இருந்தது.இவ்வளவு தெளிவுடனும் தீர்க்கத்துடனும் ,பற்றுறுதி கொண்டும் ஒரு உரை அமைவதைக் கேட்பது என்பது மிகவும் அரிது.ஏராளமான கேள்விகளை கேட்டோர் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாக ஏற்படுத்திய உரை அது.ஒரு சிறந்த இளைஞர் என்று முன்னுதாரணம் காட்ட வேண்டுமெனில் இவரை ஒத்தவர்களையே குறிப்பிட இயலும்.தலைமைப்பண்பு நிரம்பிய ஆளுமை திவ்யா .அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
கக்கூஸ் ஆவணப்படம் எடுப்பதற்கான தூண்டுதலையும் ,சிறுவயதிலிருந்தே தனக்கு அரசியல் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த விஷயங்களையும் மிக தெளிவாகவும் , நெகிழ்ச்சியாகவும் முன்வைத்தார்.அவர் உரை அறியாத பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது.நாம் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை , மக்களிடமிருந்து அறிவதற்குத்தான் பல விஷயங்கள் உள்ளன என்று கூறுகிற அரசியல்வாதிகள் நம்மில் குறைவு.அப்படியே கூறினாலும் கூட அவர்கள் உளப்பூர்வமாக நம்பி அதனைக் கூறுவதில்லை.திவ்யாவிற்கு இதில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
மதுரையில் நடந்த மலக்குழி மரணத்தில் யாருமே அந்த உடலை தொடுவதற்கே

தயங்கிய போது அவருடைய மனைவி உடலில் தலைவைத்துக் கதறியழுததுதான் இப்பிரச்சனைக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தனக்கு ஏற்படுத்திற்று என்று சொன்னார்.மலக்குழி சாவுகள் எங்கெங்கெல்லாம் நடைபெறுகின்றன,இவ்வளவு மூடி மறக்கபடுகின்றன,அந்த சாவுகள் பற்றி நாம் மனதில் கொள்கிற கற்பிதங்கள் சரியானதுதானா ? இவ்விஷயத்தில் அரசாங்கம் மூடி மறைக்கிற உண்மைகள் என்னென்ன ? என்பதெல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் கக்கூஸ் ஆவணப்படம் என்று சொன்னார் திவ்யா.திவ்யாவை போன்றோரை பொது அரசியல் சூழல்களில் ஏற்கும் மனோபாவம் மக்களுக்கு ஏற்பட்டால் தான் உண்மையில் நம்மிடம் நிறைந்திருக்கும் அரசியல் சாக்கடைகளை அகற்ற முடியுமே அன்றி வேறு சாத்தியங்கள் கிடையாது.எதிர்காலத்தில் அவர் சிறந்து விளங்குவார் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.அவர் நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளிக்கு வந்தமைக்கு எனது நன்றிகள்.அன்பு
பங்கு கொண்டோர் அனைவருக்கும் என்னுடைய தாழ்மையான வணக்கம்.கோணங்கி , அஜயன் பாலா ,பால் முகில் ,அய்யப்பன் பல சிரமங்களுக்கிடையில் வந்து சேர்ந்திருந்தார்கள் .அவர்களை வணங்குகிறேன்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"