கக்கூஸைக் கண்டு இந்த அரசாங்கம் ஏன் அச்சப்படுகிறது ?

கக்கூஸைக் கண்டு இந்த அரசாங்கம் ஏன் அச்சப்படுகிறது ?

இந்தியா முழுவதும் என்று கணக்கில் கொண்டால் தினமும் தோராயமாக 200  குறும்பட ,ஆவணப்பட முயற்சிகள் நடைபெறுகின்றன என்று சொல்லலாம்.இதில் தமிழ்நாட்டில் நடைபெறுபவை மட்டும் இருபதுக்கும் அதிகம் இருக்கும்.இவை எதற்குமே தணிக்கையோ ,வரைமுறைகளோ கிடையாது.அல்லது இதுவரையில் அப்படியான வரையறைகள் இல்லை.தொலைக்காட்சிகளில் இடம் பெறுபவை ,போட்டிகளில் வெல்பவை திரையிடப்படுபவை எல்லாமே இதில் அடக்கம்.  அறுபது வருடங்களுக்கு முன்னர் செய்திநிறுவன ,அரசாங்க விளம்பரப் படங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தணிக்கை விதிமுறைகள் மட்டுமே இந்தியாவில்  உள்ளன.அதில் படத்திற்கான திரைக்கதையைக் கொடுத்து முதலில் அனுமதி பெற வேண்டும்.திரையரங்குகளில் வெளியிடப்படும்  அரசு விளம்பர  படங்களுக்கான இந்த  விதிமுறைகள் ,கடந்த பதினைந்தாண்டுகளில் உருவாகியிருக்கும் குறும்படங்களுக்கோ , அல்லது ஆவணப்படங்களுக்கோ பொருந்தக் கூடியவை அல்ல.  இவை வெள்ளைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டு அப்படியே பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகள்.அந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படாத புதியவகை குறும்படங்களோ ,ஆவணப்படங்களோ இல்லை.பின்னர் எந்தவகையில் அரசாங்கம் அரிதான இவ்வகைப்படங்களைத் தடை செய்ய முயல்கிறது ?

ஒவ்வொரு நாளும் அரங்குகளில் ,பொது இடங்களில் காட்டப்படுகிற எல்லா குறும்படங்களையும்  அல்லது ஆவணப்படங்களை   அரசாங்கம் தடை செய்ய முயற்சிக்கிறதா ? இல்லை.அது இன்று சாத்தியமும் இல்லை.பலசமயங்களில் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கோ ,ஊடகங்களுக்கோ சென்று விடுகிற இவ்வகைப்படங்களுக்கு தணிக்கையையோ,சட்டம் ஒழுங்கையோ அரசாங்கம் காரணம் காட்டி ஒன்றுமே செய்ய இயலாது.தணிக்கைக்கு பின்னர்தான் இவ்வகைப்படங்கள் அனைத்தும் பொது வெளிக்கு வரவேண்டும் என்று சொன்னால் ,இதுவரையில் வெளிவந்திருக்கும் இவ்வகைப்படங்கள் எத்தனை என்பதற்கான சரியான புள்ளிவிபரம் அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவோ இவ்வகைப் படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை எடுக்கப்பட்டிருக்கும் ? என கேட்டுப் பாருங்கள்  அவர்கள் வெறும் காய டப்பாவோடு உங்களை எதிர்கொள்வார்கள்.இந்த வகைபடங்கள் அடிப்படையான மனித உரிமைகளோடும் ,பண்பாட்டு வெளிப்படுத்துதல் உரிமையோடும் தொடர்பு கொண்டவை.திரையரங்குகளில் திரையிடப்படும்  திரைப்படங்களுக்கான விதிமுறைகள் இவற்றுக்குப் பொருந்தாது.எனில் இவ்வகைப்படங்களுக்கான புதிய வரையறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் .அதனை சண்டைக்காரன் வந்தால் தாக்குவதற்கு என்று மட்டுமே பயன்படுத்தக் கூடாது.இந்த ஆண்டில் இவ்வகைப்படங்கள்   எத்தனை வந்திருக்கின்றன   என்று கேட்டால் பதில் சொல்லும் திராணியில் அரசு இருக்க வேண்டும்.எல்லோருக்கும் சமமாக அந்த சட்டத்தைப் பாவிக்க வேண்டும்.

நாங்கள் நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியில் "கக்கூஸ் "ஆவணப்படத்தை திரையிட தணிக்கையை காரணம் காட்டி மறுத்த அரசாங்கம் அதே நாகர்கோவிலிலேயே பிறிதொரு தரப்பினரால் மறுநாளே  ஏற்பாடு செய்யப்பட்டு  பொதுமண்டபத்தில் நடைபெற்ற ஆவணப்பட திரையிடலை தடுத்து நிறுத்தவில்லை.இதுதான் சிக்கலே .இத்தனைக்கும் நாங்கள் கக்கூஸ் ஆவணப்படத்தை நண்பர்களுடன் இணைந்து பார்க்க பொது இடத்தைத் தேர்வு செய்யவில்லை.எங்கள் இல்லத்தில் திரையிட்டு விவாதிக்கவே விரும்பினோம்.  அப்படியானால் ஒரே சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் தாய்க்குப் பிறந்தவர்களாகவும் ,நாங்கள் கூத்தியாள்களுக்குப் பிறந்தவர்களாக எப்படி மாற்றப்பட்டோம் ?

தணிக்கைக்குச் செல்லாத எந்த குறும்பட ,ஆவணப்படங்களுக்கும் அனுமதியில்லை என்று இந்தியா முழுமைக்கும் ஒரேவிதமாக இந்த அரசாங்கத்தால் அறிவிக்க இயலுமா ? அடுத்த மாதம் மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.குறும்பட ,ஆவணப்பட விழா ஏற்பாடு செய்திருக்கிறது .அதில் வெளியிடப்படும் அனைத்து படங்களும் 1952  இந்திய  தணிக்கை விதிமுறைப்படி தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டவைத்தான் என்று இந்த அரசாங்கத்தால் பதில் சொல்ல இயலுமா ? சொல்லுமா ? இல்லையெனில் இந்த தணிக்கை விதிக்கு உட்படுத்தப்படாத படங்களுக்குத் தடை விதிக்குமா ?

பிரச்சனை இங்கே தணிக்கை தொடர்பானதோ அல்லது சட்டம் ஒழுங்கு தொடர்பானதோ இல்லை.ஒரு புத்தகத்தைப் படித்து பகிர்வது ,இது போன்ற ஒரு ஆவணப்படத்தைப் பார்த்து விவாதிப்பது எல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளா என்ன ?

அரசாங்கம் உருவாக்குகிற பொய்யான தரவுகள் ,புள்ளிவிபரங்கள் போன்றவற்றை உடைத்து உண்மையை வெளிக்கொணர்கிற இது போன்ற முயற்சிகளில் அரசு  அச்சம் கொள்கிறது.காலாவதியான சட்டங்களை பயன்படுத்தியேனும் இவற்றை தடுத்து விடமுடியுமா என முயற்சிக்கிறது.இதுதான் விஷயம்.பொய் கொண்டு வடிவமைக்கப்படுகிற அரசுக்கு  உண்மையின் பேரிலான அச்சம் இது.அரசு தனது அமைப்பின் மூலம் பொய்யை தீவிரமாக கடைபிடிக்க முயற்சிக்கிறது.கக்கூஸ் போன்ற முயற்சிகள் அதற்கு இடையூறாக இருக்கின்றன என்பதே உண்மை

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய நினைவுக்கு வருவது அஸீஸ் நந்தியின் ஒரு வாக்கியம்."எதனை நீங்கள் பூரணமாக வெறுத்து அழிக்க முற்படுகிறீர்களோ ,அப்போதே அது பிறிதொரு இடத்தில் முன்னைக்காட்டிலும் அழகாக செழித்து வளரத் தொடங்குகிறது" என்கிற அவருடைய புகழ் பெற்ற வாக்கியம் இது  .கக்கூஸ் ஆவணப்படத்திற்கு நடந்திருப்பதும் இதுதான்.கக்கூஸை  அரசு தடுக்க முயன்றது .அதுவோ இப்போது செல்லக் குழந்தை போல  கூடுதல் வேகத்துடன் மக்களின் மடியில் எறியமர்ந்திருக்கிறது.

அதிகாரத்திற்கு  மூன்று குறுக்குவழிகள்
 எனில் மக்களுக்கிருப்பதோ முந்நூறு பாதைகள்.

1 comment:

  1. தடைகள் பல கடந்து, கக்கூஸ் படம் வெளியிட பட வேண்டும். கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கையோடு காத்திருப்போம். அய்யா.

    ReplyDelete

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...