விளிம்புக்கு மற்றொரு பெயர் செம்மரக் கடத்தல்

விளிம்புக்கு மற்றொரு பெயர் செம்மரக் கடத்தல்

மனிதவதை ஒரு தனித்த உயிரி.மனித அகத்தில் வளரும் தேவதை அது.மனிதனின் ஒரு மாய உறுப்பு அது.ஆண்குறியைப்  போலவும் அல்லது பெண்குறியை போலவும் அதற்கு அழகுண்டு.தவிர்க்க இயலா ஏழாம் பாகம் .அது குரூரமானது என்கிற பிரகடனத்தின் உள்பாகத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்வது.மனித நாகரிகம் வளருவதாக நம்பும் ஒவ்வொரு கணத்திலும் அதுவும் புதிய அழகுணர்ச்சிகளுடன் வளைந்து கொண்டே இருக்கிறது.இல்லையென்பாரிடம் முதுகில் எவ்வாறு இனிப்புடன் ஏறியமர்ந்து கூடுகட்டிக் கொள்வது என்பது அதற்குத் தெரியும் .பழைய காலங்களில் கரடு முரடாக இருந்ததைக் காட்டிலும் நவீன அமைப்புகளில் அதற்கு நேர்த்தி அதிகம்.அதனை பொய்யின் பேராலும் அனுமதித்தோமெனில் மிகவும் உற்சாகம் கொண்டு விடும்.இது எதிரிக்கானது என்பது போல அது முதலில் பாசாங்கு செய்யும்.அது சுயவதை என்பதை கண்ணுக்குப் புலப்படச் செய்யாதவரையில்தான் அது தனது சாமர்த்தியத்தை காக்க முடியும்.அதனை பொய்யின் பேராலும் அனுமதிக்கத் தொடங்கும் போது அது மனதின் பிற நுட்பமான உறுப்புகள் அத்தனையையும் கொன்று விடும்.அதன் சாமர்த்தியம் அதுவே .

செம்மரக் கடத்தல் என்னும் பொய்யில் அது இப்போது வாசம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது .வெற்றிமாறனின் விசாரணை சினிமாவையெல்லாம் விஞ்சும் வகையில் யதார்த்தத்திற்கும் அப்பால் ஒரு குறியீட்டு உரு உள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வாழ பணிக்கப்படுவதை " செம்மரக் கடத்தல் " என்னும் குறியீடு உருவம் செய்யலாம்  .கேரளாவில் தமிழர்கள்,தமிழ்நாட்டில் நேபாளிகள் ,பீகாரிகள் ,கர்நாடகாவில் தமிழர்கள் என்று எல்லோருக்கும்   இந்த செம்மரக்கடத்தல் வதை என்னும் குறியீடு உருவம் தர முயல்கிறது எனலாம்.செம்மரக் கடத்தல் என்னும் இந்த குறியீட்டின் பெயர்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடக் கூடியவை.தமிழ்நாட்டில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் பேரில்  பீகாரிகள் மோதல் கொலை.கேரளாவில் திருட்டுப் பட்டம்.

இடம்பெயர்ந்து வாழ்கிற பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் வாழ்கிறவர்களுக்கு இந்த குறியீட்டுருவம் பொருந்தாது இப்போது.கடைநிலை வாழ்வில் பணிக்கப்படுபவனின் மேல் அது ஏறி அமர்ந்து ஆடும்   அழகுணர்ச்சி நிரம்பிய  ஊஞ்சலாட்டும்.அமைப்பின் அனைத்து பீதியையும் அதன் முதுகில் சுமத்தி வதை செய்யும் ஒப்புதலை நாமெல்லோரும் சேர்ந்து சிறுகச் சிறுக வழங்கியிருக்கிறோம்.இது எப்படி நடந்தேறியது என்பது நீண்ட விவாதத்திற்குரியது.நமது வீட்டில் தொங்குகின்ற பூட்டின் பாதுகாப்பின்மையிலிருந்து நாம் இணைந்து இக்காரியத்தை செய்யத் தொடங்கினோம்.நீ பாதுகாப்பாக இருக்க வேண்டுமேயானால் நான் இக்காரியத்தை செய்துதான் தீர வேண்டும் கண்டு கொள்ளாதே வளர்ந்து விட்ட அந்த உயிரி நமக்கு இப்போது பதில் பேசிற்று.இது நமக்கு நடக்கவில்லை என்பதால் இது உனக்கு நடக்காது என்றோரு உத்திரவாதத்தை அது நமக்கு ஊட்டுவது பாசாங்கில் கவித்துவத்தின் மெருகு.

தமிழ்நாட்டில் ராம்குமார் கொலையில் இதே உயிரிதாம் விஸ்வரூபம் காட்டியது.இலங்கை கடற்படைதான் ஜோவை சுட்டுக் கொன்றதா ? என்ற சந்தேகம் எழுகிறதே இந்த உயிரி எழும்பி நடமாடத் தொடங்கியிருத்தலின் தடயம்தான் இது.குழந்தை என்பதை கூட்டு மனச்சாட்சி எனக் கொள்வோமேயானால் ,குழந்தைக்கு வேடிக்கை காட்ட துப்பாக்கி சத்தத்திற்கு அச்சப்படாதீர்கள் என்பது இதன் அடிப்படைத் தர்க்கம்.

குழந்தை எப்போதும் வேடிக்கை காட்டப்பட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நாம் எல்லோருமே விரும்புகிறோம் ?

இந்த "செம்மரக் கடத்தல் " என்னும் மனித வதையின் குறியீட்டுருவம் இரண்டு விதமான எச்சரிக்கையுணர்வை ,பீதியை ஏற்படுத்துவதாகச் சொல்லலாம்.கடைநிலை வாழ்வின் நிமித்தம் பிற மாநிலங்களுக்கு வெளியேறுதலும் இடம்பெயர்தலும் அமைப்பின் அத்தனை வதைகளையும் ஏற்க முயல்கின்ற துணிவு என்பதாக அர்த்தம் தருகிறது.அமைப்பின் கண்ணிகள் அனைத்தும் அவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.மாநில அமைப்புகள் பிற மாநில கடைநிலை வாழ்விலிருந்து சுய வாழ்விற்கு அர்த்தமுட்ட விரும்புகிற காரியம் இது.பலகீனமான அந்நியன் காவுகொள்ளப்படுவதற்கு மிக அருகாமையில் வசிக்கிறான்.

இரண்டாவதாக நாம் அகன்று விரிவதாகச் சொல்லித் தரப்படும் பொய்களுக்கு மாறாக சிக்கலாகச் சுருங்க தொடங்கியிருக்கிறோம்.இரண்டுமே ஆபத்து .ஆனால் இரண்டுமே நமது விருப்பத்தில் வாழ்கின்றன.விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிற ஆவேசத்தில் மனிதவதைக் கருவிக்கு நூதன கொம்புகள் .என்னே அழகு ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"