இஸ்லாமியர்கள் அனைவரையும் கரித்துக் கொட்டாதீர்கள்

ஒரு கொலையை முன்வைத்து இஸ்லாமியர்கள் அனைவரையும்
கரித்துக் கொட்டாதீர்கள்

ஒரு தீய சம்பவத்தை முன்வைத்து ,அதற்கு காரணமானவரின் மொத்த சமூகத்தையும் பொறுப்பேற்கக் கோருவதை போன்ற மடத்தனம் வேறில்லை. உங்கள் மகனோ,மகளோ ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த குடும்பமுமே காரணம் என்று முடிவிற்கு வருவீர்களா ? இந்து மதத்தவருடனும் , பிறருடனும் இன்னும் திறந்த மனதுடன் இணக்கத்தை இஸ்லாமியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.அதேசமயத்தில் இப்போது நடைபெற்றிருக்கும் கொலையைக் காரணம் காட்டி மொத்த இஸ்லாமியர்களையும் குற்றம் சாட்டுவோரிடம் எச்சரிக்கை அவசியம்.இணக்கத்திற்கு எதிராகக் காத்திருப்போரை விட்டு அகலுங்கள்.அவர்கள் எல்லோருமே இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழக்கமிடுகிறார்கள்.அது உண்மையல்ல.அவர்கள் நமது சகோதரர்கள்.அவர்கள் அந்நியர்கள் இல்லை .நமது சொந்தங்கள்.அடுத்த தெருவில் வசிக்கிறார்கள் , அவ்வளவுதான் விஷயம்.

ஒரு திருடன் பிடிபடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் .அவனை திருடனாகக் காண்பது ஒரு வகை .திருட்டைச் செய்தவனின் இனமே ,சாதி முழுதுமே ,மதத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே திருடர்கள் என வாதிடுவது இரண்டாவது வகை .இந்த இரண்டாவது வகையில் நின்று வாதிடுபவர் எவர் ஒருவராக இருந்தாலும் அவர்தான் இனவாதி,சாதியவாதி ,மதவாதி என்பதை அடையாளம் காணுங்கள்.ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டுமெனில் இங்கே ஒரு சமூகம் கூட மிஞ்சாது.

அடிப்படைவாதிகளின் கைகள் எந்த மதத்தில் ஓங்கினாலும் சரி ,நாம் உடனடியாக சரி செய்ய வேண்டியது இணக்கத்தைத்தான்.இந்துக்கள் இஸ்லாமியர் இல்லங்களில் நடைபெறுகிற நிகழ்வுகளுக்கு அதிகமாகச் செல்லுங்கள்.அதுபோல இஸ்லாமியர்கள் எந்த நிகழ்வென்றாலும் இந்து நண்பர்களை அழைப்பதை கடமையாக வைத்திருங்கள். அடிப்படைவாதிகளைப் புறக்கணிக்க இது ஒன்றே ஆகச் சிறந்த வழி .இந்த முற்போக்கர்கள் புரோக்கர்கள். இருதரப்பும் இணையாமலிருந்தால்தான் அவர்களுக்கு பிழைப்பு ஓடும் .யார் இணைவது கடினம் என்று முற்போக்காளர்கள் கருதுகிறார்களோ அந்த இருதரப்பும் நேரடியாக இணையவேண்டும்.

நான் உங்களை அழைக்கிறேன்.உரிமையுடன் வந்து நில்லுங்கள்.உங்கள் அழைப்பில் நான் வந்து நிற்பேன் எனது சொக்காரனின் வீடு போல

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"