குடியில் இருந்து வெளியேற முடியும்.

குடியில் இருந்து வெளியேற முடியும்.

உள்ளே நுழைந்து விட்டோம் வெளியேறும் வழி தெரியவில்லை என்னும் மனநிலையில் இருப்போருக்கு இந்த செய்தி முக்கியமானது.

குடிநோய்  முதலில் பழக்கமாக வந்து தொற்றக் கூடியது.ஒவ்வொரு பழக்கமும் வந்து சேருவதற்கு பல வாசல்கள் இருப்பது போலத்தான் குடிக்கும் .ஏதேனுமொரு விருந்தில் தொடங்கியிருப்பார்கள்.சாகசம் கருதி தொடங்கப் பட்டிருக்கலாம்.கவர்ச்சி  காரணமாக இருந்திருக்கக் கூடும்.செல்லமான வற்புறுத்தல்கள் சிலருக்கு குடியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும்.பணியிடம் ,மனச் சோர்வு என வேறு பல காரணிகள் சரிவர பொருந்திப் போயிருக்கலாம்.இவையல்லாத பிற  காரணங்களும் இருக்கக் கூடும்.எப்படியிருந்தாலும் முதலில் பழக்கமாகத் தொற்றிக் கொள்ளும் குடி நாளடைவில் நோயாக மாறுகிறது.குடிநோய் என்பது மனம் சம்பத்தப்பட்ட உடல் சம்பந்தப்பட்ட இரண்டும் இணைந்த ஒரு வியாதி.ஒருவர் நான் ஏன் குடிக்கிறேன் என்பதற்கான காரணத்தை சொல்லத் தொடக்கி விட்டாரெனில் குடிநோய் அவருள் இறுகி விட்டதென்று அர்த்தம்.குடி பழக்கத்திலிருந்து நோயாக மாற்றமடைந்த பின்னர் குடிதான் காரணமேயன்றி சொல்லும் பிற காரணங்கள் பொய்யானவை.

நான் குடிக்கத் தொடங்கியது கல்லூரி இறுதியாண்டில்.பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது ஒரு கோப்பை மது எனது கைகளை வந்து அடைந்தது.பின்னர் அந்த ஒரு கோப்பை மது என்னிடம் அடைந்த விஸ்வரூபங்களை இப்போது எவர் கூறினாலும் நம்ப மாட்டீர்கள்.சுமார் இருபத்தைந்து வருட காலங்கள் அது என்னுடனேயே வசித்தது.எனது படைப்புகளில் அதன் தடயங்களும் நடமாட்டமும் அதிகம்.காலத்தை எனது கையிலிருந்து பிடுங்கி அது தன் வசத்தில் வைத்திருந்தது.என்னுடன் உடன் சேர்ந்து குடித்தவர்களில் இருபத்தி ஐந்திற்கும் அதிகமானவர்கள் குடியால் இறந்தார்கள்.இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.குடிநோயின் கடைசி புகலிடமாக இப்போது காணப்படுவது விநோதமானதொரு வலிப்பு நோய்.கடைசி எச்சரிக்கை மணியோசை அதுதான்.கழிந்த மாதத்தில் ஒருவர் இறந்தார்.அவர் என்னுடைய சகலையும் கூட.கால்நடை மருத்துவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரவிலேயே மருத்துவமனையிலிருந்து தப்பித்து விட்டார் .இறைவன் அவ்வளவு வலுக்கட்டாயமாக அவரைத் தேடி அழைத்திருக்கிறான் போலும் .விடியற்காலையில் ஏற்பட்ட வலிப்பில் அவர் விடைபெற்றுக் கொண்டார் .

குடிநோய் என்பது குடிப்பவரை மட்டும் குறிப்பதில்லை.மனைவி ,குழந்தைகள் அனைவரையும் துணை நோயாளிகளாகக் குறிக்கக் கூடியது.ஒரு பத்து நிமிட கோபத்தில் மனைவியைக் கொன்று விட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் காலம் தள்ளியவரை இந்த வளாகத்தில் சந்தித்திருக்கிறேன்.சொந்த மகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொழுத்த முயன்று உறவினர்களால் ஒரு கோவிலில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவன் வலிப்பு நோயால் மறுநாளே உயிர்விட்டான்.அவன் என்னுடைய ஒரு குடி நண்பன்.ஒருவன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டான்.ஒன்றாக உடனிருந்து குடித்தவன்தான் அவனும்.இப்படி பட்டியல் நீளமானது.

குடிநோய்க்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் எப்படி வெளியேறுவது என்று விடைதெரியாமல் அதனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்தாம்.நமது உடலில் உறுப்புகள் அனைத்துமே வாய்ப்பும் சமயமும் கிடைத்து ஓய்வும் தரப்பட்டால் எவ்வளவு கேடு கெட்டுப்  போயிருந்தாலும் தளிர்த்து விடும் தன்மை கொண்டவை என்று உடற்கூறு தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.இதில் மூளை மட்டுமே விதிவிலக்கு .மூளையின் அணுக்கள் இறக்குமாயின் அது பின்னர் உருவாவதில்லை.குடியால் இறக்கும் மூளை அணுக்கள் அமர்ந்திருந்த இடங்களை குடி பதிலீடு செய்யத் தொடங்குதலே குடிநோயின் தீவிர நிலை.அதன் பின்னர் அவரிடமிருந்து கோப்பையை கைபற்றியெடுப்பது என்பது அவ்வளவு எளிதில்லை.

எனக்குத் தெரிய ஆயிரக்கணக்கான குடும்பங்களை குடிநோயிலிருந்து கரையேற்றியவர்கள் நாகர்கோயில் ஏசுசபை போதை மீட்புப் பணிக்குழுவினர்.பெயரில் ஏசு சபை என்றிருக்கிறதே தவிர இது கிறிஸ்தவ நிறுவனம் அல்ல.இதனால் பலனடைந்த பலர் பிற சமயங்களைச் சார்ந்தவர்கள். ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பு இது .ஆல்கஹால் அனானிமஸ் குடிநோய் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் உலகளாவிய அமைப்பு.அந்த அமைப்பின் கிளைதான் இந்த பெயரில் நாகர்கோவிலில் பணிபுரிகிறது.நாகர்கோயில் கார்மல் பள்ளி வளாகத்தில் வைத்து இது நடைபெறுகிறது.இருபத்தியொரு நாட்கள் இங்கே தங்கியிருக்க வேண்டும்.உடலுக்கும் மனதுக்கும் வளம் சேர்க்கும் ஒரு பயிற்சி இது.இது போன்ற திறன் கொண்ட மனிதவள பயிற்சி மையங்கள் தமிழ் நாட்டில் இரண்டே இடங்களில் மட்டுமே உள்ளன.கொடைக்கானலில் உள்ள குடி   நோய்க்கான மையமும் சிறப்பானது என கேள்விபட்டிருக்கிறேன்.

இந்த பயிற்சி மையத்தை நாகர்கோவிலில் தொடங்கியவர் தற்போது லயோலா கல்லூரி அதிபராகப் பணியாற்றும்
செ.ஜெயபதி.பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் அவர் பணிபுரிந்த போது ஒரு திட்டத்தில் நானும் அவருடன் பணி புரிந்திருக்கிறேன்.அப்போது அவர் கண்டால் பயப்படும் ஒரேயொரு குடிகாரன் நான் மட்டுமே.எனக்கு பார்த்தாலே ஓடிவிடத் தோன்றும் குடிகாரர் அவர் மட்டுமே.அவருடன் சேர்ந்து குடித்தால் கொலைப்பழியேற்க நேர்ந்து விடும் என்று அஞ்சியிருக்கிறேன்.நாங்கள் இருவருமே மொத்த தமிழ்நாடும் அறிந்த விளைந்த குடிகாரர்களும் கூட.எங்கள் இருவரையும் கண்டால் ஊரே தலைமறைவாகி ஓடி விடும். நாங்கள் அதிலிருந்து வெளியில் வந்திருக்கிறோம்.

ஒருமுறை குடிநோய் காரணமாக சுந்தர ராமசாமி என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.நான் உள்ளே செல்கிறேன்,ஜெயபதி வெளியே வருகிறார்.இப்போது நினைத்தால் இந்த நிகழ்வு அபத்தமாக தோன்றுகிறது."நீயும் நான்  போகுமிடமெங்கும் வருகிறாயே ! எனக் கூறி நகர்ந்தார் ஜெயபதி.ஒரு மாதத்திற்காளாகவே முழுமையான போதையில் மீண்டும் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.ஆனால் ஜெயபதி செய்த காரியம் அளப்பெரியது .ஆயிரம் குடும்பத்தினரை அவர் இப்போது மீட்டிருக்கிறார்.மன நல உதவிகளும் கூட எங்களுக்கு செல்லுபடியாகவில்லை என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.

வெளிவரத் தெரியவில்லை என்னும் எண்ணம் மட்டும் உங்களிடம் இருக்குமேயாயின் வெளியில் வர முடியும்.அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்.  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"