நான் யார் ?

நான் யார் ?

சில வருடங்கள் இருக்கும் .என்னை தொடர்பு கொண்ட ஒருவர் சிலேட் இதழுக்கு சந்தா செலுத்த வேண்டும்.நீங்கள் யார் ? என்று கேட்டார்.எனக்கு விளங்கவில்லை.நான் யாராக இருக்கக்கூடும் ? கொஞ்சம் அறிமுகம் உள்ளவர் எனில் நான் ஒரு பக்கிரியாக்கும் என்று சொல்லியிருப்பேன்.இதில் உள்ள ரி -யை எடுத்து விட்டு பக்கி என்றால் அதுவும் கூட சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லியிருப்பேன்.எனக்கு தெரியவில்லையே ! அதனால்தான் கவிதைகள் ,கதைகள் என்று எழுதி பார்க்கிறேன்.எப்படியேனும் தொடர்பு கொண்டு உங்களிடம் தெரிவித்து விடமுடியாதா என்கிற ஏக்கத்தில் .

அவருக்கு திருப்தி ஏற்படவில்லை .சில மாதிரிகளை தந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்றார்.நல்லது ஆனால் இது போன்ற பல அரசாங்கத் தேர்வுகளில் வெற்றிபெற இயலாமையிலும் சேர்ந்துதானே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? இப்படியான ஒரு தேர்விலேனும் வெற்றிபெற இயன்றிருந்தால் இந்த இடத்தில் இருந்திருப்பேனா தெரியவில்லை.ஒருவேளை கடவுள் எல்லா தேர்வுகளிலும் தோல்பித்ததே இந்த முட்டுச் சந்திற்குள் வந்து சேருவதற்காகத்தானோ என்னவோ ? பள்ளி கல்லூரி படிப்புகளை பொறுத்தவரையில் ஒன்றில் கீழே கீழே இறங்கிப் போய்விட வேண்டும்.இல்லையெனில் மேலுயர்ந்து போய்விட வேண்டும்.இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டால் பிழைப்பு பலவந்தம் ஆகிவிடும்.எனக்கு கல்லூரியில் தமிழ் படிக்கும்  ஆசையிருந்தது.ஆனால் விதியேற்படுத்திய வாய்ப்புகள் சித்த மருத்துவப் படிப்பு அல்லது கணிப்பொறி விஞ்ஞானம் என்று இருந்தது.சித்த மருத்துவத்தைக் கைவிட்டு விட்டு கணிப்பொறியை தேர்வு செய்தேன்.கடைசி செமஸ்டர் தேர்விற்கு முன்னர் ஏழு பாடங்களில் தோல்வியுற்ற பளு இருந்தது.கடைசியில் முடித்துக் கொள்ளலாம் என்கிற திமிரின் மீது ஆண்டவன் ஓங்கியுதைத்தான்.அந்த வலி இடுப்பிற்கு கீழே பட்ட வலி போல இப்போதும் கூட இடையிடையே வலித்துக் கொண்டிருப்பது.கணித பாட தேர்விற்கும் முந்தைய நாளில் குடல் வால் அறுவை சிகிழ்ச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.இல்லையெனில் பழுப்பு இரத்தத்தில் கலந்து பிராணன் போய்விடும் என்றார்கள்.அப்படித்தான் இருந்தது நிலைமை.அப்போது இப்படியெல்லாம் காரணமில்லாமல் பயமுறுத்துகிற மருத்துவர்கள் கிடையாது அல்லது குறைவு.இப்போதுபோல ஊசியால் பழுப்பை அகற்றுகிற முறை அப்போது கிடையாது .வெட்டி கீறி குடல் வாலை அகற்ற வேண்டும் .இப்போதும் கூட கீறி பிள்ளை பெத்தவளுக்கு இருப்பதை ஒத்த அடிவயிற்றுத் தளும்பு வலது பாகத்தின் அடியில் உண்டு.என்னதான் இருந்தாலும் தமிழ்ப்படிக்கும் ஆவலைக் கடவுள் கண்டித்தது நல்ல காரியம் .அடிமுட்டாளாகப் போயிருப்பேன்.தமிழ் படைப்பாளிகளில் தமிழை விருப்ப பாடமாக எடுத்துக் படித்தவர்கள் மிகமிக சொற்பம்.பின்னர் மொத்தமாக தோல்வியுற்ற பாடங்களாக நிலுவையில் நின்றவை பனிரெண்டு பாடங்கள்.அதில் இதை பின்னர் முடித்தேன்.மீதமுள்ள பாடங்களை பார்த்து எழுதுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டபோது இனி தேர்வு எழுத வேண்டியதில்லை என்று முடிவெடுத்து மும்பைக்குச் சென்றேன்.இப்போது உள்ள மனநிலையில் எனில் சம்மதித்து எழுதியெடுத்திருப்பேன்.இளம்பிராயத்தில் இருக்கிற தேவையற்ற வைராக்கியங்கள் விதியோடு இணைப்பு பெற்றவை.

மாதிரிகளை தந்து தேர்விற்கு அழைத்தவர் நீங்கள் ஒரு இடதுசாரியா ? என்றார் .பின்னர் வலதுசாரியா ? என்றார். பின்னர் இதுபோல பற்பல சோதனைகள் .இவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டு ஒருவர் சிலேட் இதழுக்கு சந்தாதாரர் ஆக வேண்டுமா ? என்று கூட தோன்றியது.அவர் ஆரியரா திராவிடரா ? டம்பளரா என்று ஏனோ கேட்கவில்லை .கால் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலம் எனில் இதே நபர் அப்படியும் என்னிடம் கேட்டிருக்கக் கூடும்.

இங்கிருக்கிற பெரிய அக நோய் நீங்கள் யார் என்பதை நீங்களே சொல்லியாக வேண்டும்.அப்படியானால்தானே பணி எளிதாகும்.நான் ஒரு பின்நவீனத்துவவாதி ,நான் ஒரு கம்யூனிஸ்ட் .நான் ஒரு புடலங்காய் வியாபாரி இப்படி எதுவாக இருந்தாலும். இன்று நெடுங்காலத்திற்குப் பிறகு ஒருவர் வந்து என்னிடம் இப்படியொரு ராணுவ சோதனை நடத்திவிட்டுச் சென்றார்.இப்படி அப்பாவியாகவும் ஊரில் இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.என்னிடம் சே படம் போட்ட பழைய பனியன் ஒன்றிருந்தது .அதனை எடுத்து அவரிடம் காட்டினேன்.புதிதாக வாங்கியது இப்படி ரெத்தம் கக்கி வண்ணங்கள் அனைத்தையும் இழந்து போயிருக்கிறது பாருங்கள் என்று அவருக்கு காட்டினேன்.வாடிப்போயிருந்த அந்த சட்டையில் சே - யின் படம் பிடலின் வயோதிகத்தில் இருந்தது.எப்படியிருந்தாலும் நீங்கள் உள்ளத்தில் ஒரு இடதுசாரிதான் என்று என்னை நோக்கி அவர் பல்லைக் காட்டியபோது அவ்வளவு பூரிப்பு  முகத்தில்  அவருக்கு.

என்னை நானே இடதுசாரியென்றோ வலது சாரியென்றோ ,பின்நவீனத்துவ வாதியென்றோ ,இல்லை எனக்கிருப்பது ஏதேனும் தீர்க்க இயலாத வியாதியென்றோ வாய் திறந்து சொன்னால் நம்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களே ஆனால் உங்களை கருணாநிதி போற்றவர்களோ அல்லது ஜெயலலிதா போன்றோர்களோ  : மோடியும் சோனியாவும் வந்து ஆளாமல் புதுமைப்பித்தனா வந்து ஆளுவார் ? ஏன் பேராசை பிடித்தலைகிறீர்கள் ?

ஒருவேளை இவர்களால்தான் மழை பெய்கிறதோ என்னவோ ! ஒருவேளை இவர்களால்தான் இந்த வருட மழைநீர் பொய்த்தும் போயிற்றோ என்னவோ ! இரண்டுமே சரியாக இருக்க வாய்ப்புண்டு.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"