நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ?

நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ? 

நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ? என்பதனை கவனிப்பேன்.நீங்கள் பேசுகிற விஷயங்களோடு வாழ்க்கையும் வாழ்வனுபவமும் அது சார்ந்த தரிசனங்களும் பொருத்தப்பாடு கொண்டிருக்குமெனில் இமைய மலையைச் சரிப்பது பற்றி பேசினாலும் சம்மதமே .இல்லையெனில் புறக்கணித்து விடுவேன்.படைப்பு வாழ்க்கையின் சலனம் , தரிசனம் இரண்டும் ஒன்று குவிந்த இடம்

தமிழில் பொதுவாக அறிவுத்தளங்களில்  வாழ்க்கையோடு சம்பந்தமே, தொடர்பே இல்லாத பாசாங்கான ஒரு மொழியை தொடர்ந்து பின்பற்றுகிறோம்.நமது அத்தனை விதமான அடிப்படைச் சிக்கல்களும் இங்கிருந்தே தொடங்குகின்றன.பொது மக்களிடம் இந்த பாசாங்கு இல்லை.நமது போலி அறிவுத் தளங்கள் இதன் மீதே பெரும்பாலும் சவாரி மேற்கொள்கின்றன.நாம் பின்பற்றாதவற்றை பொதுவில் பேசுவதில் சிறிய கூச்சமும் நம்மிடமில்லை

ஒவ்வொரு காலகட்டத்திலும் இதற்காக சக்கைகள் நம்மிடம் வந்து குவிகின்றன.உடைப்பது ,நொறுக்குவது ,தந்தையரைக் கொல்வது இதுபோல இன்னும் ஏராளம்.இதில் எதனையேனும் உடைத்தவன் ஒருவன் பேசுகிறான் எனில் எனக்கு அதில் கேட்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது.அவன் எப்படியுடைத்தான் இந்த விதியை என்பதை அறிய விரும்புவேன்.உடைக்கும் போது அவனுக்கு என்னென்ன நேர்ந்தது ,வலி இருந்ததா ? எல்லாம் கடினங்கள் இருந்தாலும் அவனுக்கு விடுதலை உண்டானதா ? சுகம் கிடைத்ததா ? இதையெல்லாம் உடைத்தவன் எனக்கு பாடங்களாக சொல்லித் தர முடியும்.தந்தையரை நான் கொன்ற போது எனக்கு நடந்த விஷயங்கள் அவனுக்கும் நடக்கிறதா ? இல்லை பானைகளை உடைப்பது போன்றது உடைப்பது என்னும் கற்பனையில் நிற்பவனா அவன் என்னும் கேள்விகள் முளைத்து விடும் .பானையை உடைத்தாலும் கூட பரிகாரங்கள் தேவைப்படும்

இரண்டாயிரத்தில் நான் எழுதிய நாவல் ஒன்றின் முதல் வாக்கியம் "அப்பாவைக் கொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது" என்று தொடங்கும்.2005  வெளியான எனது கவிதைத் தொகுப்பொன்றின் தலைப்பு "அப்பாவைப் புனிதப்படுத்துதல்.அப்பாவைக் கொலை செய்ய வேண்டும் என்பதிலிருந்து ,"அப்பாவைப் புனிதப்படுத்துதல்" வரையிலான ஐந்து வருடங்களில் எனக்கென்று ஒரு வாழ்க்கை மையமாக அமர்ந்திருக்கிறது .

இரண்டு திருக்குறளை மறுத்து எழுத விரும்பியிருக்கிறேன்.அதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்பதனை எழுதப்பட்ட இரண்டு கவிதைகளும் நன்கறியும்.வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்த பின்னரே அவை மொழிக்குள் வசப்பட்டன.பின்னர் என்ன நடந்தது ? திருவள்ளுவரை உடைத்த பின்னர் "நீ எவ்வளவு பெரிய மகான் என்று அவனிடம் சரணடைய வேண்டியிருந்தது.திருவள்ளுவரை உடைத்த பின்னர் நான் மாணிக்கவாசகரிடம் தஞ்சமடைந்து மேலேறி வந்தேன்.ஒவ்வொன்றுக்கும் வாழ்க்கையில் ஒரு மகத்தான விலை உண்டு.கொலை செய்வது தொடங்கி,பிறன்  மனைவியைக் கவர முயல்வது வரையில் சும்மா தோன்றாது. பிறன் மனைவியை கவருவதனை ,  அதற்கு முயல்வதனை  சிவனே மன்னிப்பதில்லை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.சிவனே மன்னிக்காத ஒன்றினை செய்யலாமா ? செய்யலாம் தான் ஆனால் அதற்குரிய அத்தனை விலையையும் கொடுக்காமல் முடியுமா என்ன ? உடைத்து விடவேண்டுமென்றால் ஒன்றையேனும் உடைத்து விட்டு வந்து பேசவேண்டும் .உடைத்ததில் ஏற்பட்ட தழும்புகள் உனதுடலில் இருக்க வேண்டும்.படைப்பில்  நீ அதனை எனக்கு காட்ட வேண்டும்.ஏதேனும் தகர டப்பாவை உடைத்ததில் பெருமைபட்டுக் கொண்டிருக்கக் கூடாது .மூலத்தை உடைத்துக் காட்ட வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் குடித்தால் நான் என்ன செய்வேன் ? என்பது குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு எனக்குத் தெரியாது.மருத்துவத்தில் அதற்கு ஒரு பெயர் இருக்கிறது.மறுநாள் பல்வேறு உபத்திரவங்கள் ஏற்படும்.செய்தவற்றால் உண்டான எதிர்வினைகள் என்றால் பரவாயில்லை . மனத்தால் ஏற்படும் குழப்பங்கள் நெருக்கடியானவை.ஒரு கிறிஸ்தவ சாமி என்னிடம் ஒரு விஷயம் கேட்டார்.உங்களால் குடியை நிறுத்த முடியும் என்று தோன்றுகிறதா ? இல்லையென்று பதில் சொன்னேன்.அப்படியானால் மறுநாள் தூங்கி எழும்பியதும் என்ன செய்தீர்கள் என்பதனைப் பற்றி யோசிப்பதை நிறுத்தி விடுங்கள் நீங்கள் தவறாக ஏதேனும் செய்திருந்தால் ,அது தானாகவே உங்கள் வீட்டு நடை தேடி வந்து விடும்.நீங்கள் அது பற்றி யோசிக்க ஆரம்பித்தால் ,நீங்கள் செய்யாத தீமைகளிடமும் வலிய சென்று மாட்டிக் கொள்வீர்கள் .பின்னர் யோசிக்க நிறுத்தியத்திலிருந்து குடித்த பின்னர் செய்யும் தகாத செயல்களும் நின்று விட்டன.எந்த குகைக்குள் எது இருக்கும் என்பதெல்லாம் மிகவும் சூக்குமமானவை.

ஊழ்வினை வரும்.ஒவ்வொன்றிலும் வினை திரும்பி வரும்.திரும்பி வராத வினைகள் என்று ஒன்றுமே கிடையாது. சிலப்பதிகாரத்தில் மாதவியும் கோவலனும் பிரியும் தருணம் மிக முக்கியமானது.காலகாலமும் அது நீந்திக் கடக்கும் துயரம் .பிரிவை அவர்கள் எட்டும் இடமிருக்கிறதே அபாரம்.பின்னர் மீட்க இயலாத இடம் அது.ஒரு கவிஞனின் உச்சபட்ச சாத்தியம் .அவன் உடைத்தவன் .உடைத்தவனிடமிருந்து பெருகிய காவியம் அது.அவன் உறுதியாகச் சொல்லிச் சென்றிருக்கிறான் ஊழ் வினை பற்றி உறுதியாக .


உடைத்து பாருங்கள் விளங்கும் .வெற்றுக் கூச்சல் வான வேடிக்கை

தீமைகளிடம் சரணடைந்திருந்த ஒருவனின் வாழ்க்கை என்னுடையது .அவை என்னைத் திருப்பிக் கொண்டு வந்து இன்று ஒப்படைத்திருக்கும் இடம் கோயில் வாசல்.

Comments

  1. //இரண்டாயிரத்தில் நான் எழுதிய நாவல் ஒன்றின் முதல் வாக்கியம் "அப்பாவைக் கொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது" என்று தொடங்கும்.//

    இது என்ன நாவல்?

    ReplyDelete
  2. ஹரன் பிரசன்னா -

    இதுதான் லஷ்மி மணிவண்ணன் எழுதிய நாவல்.

    அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப் புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் - அகரம் வெளியீடு.

    இதன் பிறகு வேறு எந்த நாவலையும் அவர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை எழுதிக் கொண்டிருக்கக் கூடும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்