பிராமணன்

பிராமணன்


எவனொருவன் சமகாலத்தில் குறைவுபடாத விதத்தில் தன்னுடைய ஞானத்தைப் போற்றி பாதுகாத்து வைத்திருக்கிறானோ ; அவனே பிராமணன் . இந்த இடத்தில் ஞானத்தை அறிவு என நான் சொல்லமாட்டேன்.ஞானத்தை அறிவு என குறிப்பிடும் போது அதில் பல அம்சங்கள் குறைவு பட்டு விடுகின்றன.
ஞானம் என்பது அறிவு மட்டுமல்ல.அனுபவத்தில் இருந்து பல விஷயங்களை தெளிந்து வைத்திருப்பது.கற்றவற்றின் பொருளில் தெளிந்திருப்பது.தெளிவு குருவின் திருமேனி.
தெளிவின்மையில் தத்தளித்து தத்தளித்து வந்து சேர முடிகிற இடம் அது .அலட்சியத்தைக் கைவிடுவதில் தொடங்கி உருவாகிற பாதை.பிராமணர்கள் என்னும் சாதியில் தொடர்ந்து ஞானத்தின் பேரில் அலட்சியம் இல்லாத தன்மை ஓரளவுக்கேனும் இருப்பதால் சாதியில் பிறந்த பிராமணர்களில் பிராமணர்கள் அதிகம் .
பிராமணர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.சாதியில் பிறந்த பிராமணர்களிடம் இருந்து கற்பதற்கும் ஏராளமான விஷயங்கள் உண்டு.
தமிழர்களுக்கு பொதுவாகவே ஞானத்தின் மீது வெறுப்பு இருக்கிறது.அச்சமும் இருக்கிறது.ஞானம் அனைத்தையும் அழித்துவிடுமோ என பயப்படுகிறார்கள்.அப்படி இல்லை என்பது அவர்களுக்கு விளங்குவதே இல்லை.நம்மிடம் உள்ள பிராமண எதிர்ப்பிற்கான சாராம்சங்களில் ஒன்று இது.
ஒரு பிராமணன் தெருவிலேயே கிடந்து அவன் கர்மா வினைகளாலோ ,பாவப்பதிவுகளின் நிமித்தமோ உழல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.அவன் தன்னுடைய ஞானத்தில் குறைவுபடாதவனாக இருந்து கொண்டே இருக்கவேண்டும்.தெய்வபக்தி ஞானத்திற்கு ஒரு வழி.பகவத்கீதையில் தெய்வபக்தி சான்றோனின்,பிராமணனின் அடிப்படையான குணம் என சொல்லப்பட்டிருக்கிறது.
கர்மயோகிகள் தவிர்த்து தெய்வபக்தியற்றவர்கள் வடிவமாதல் கடினம்.சஞ்சித கர்மமாக தெய்வபக்தியின் கீற்றிழை தங்களை சேரப்பெற்றவர்கள் தாக்குப் பிடிப்பார்கள்.தாயும் தந்தையும் உருகியுருகி கசிந்து உருவான பிள்ளைகள் நாத்திகம் பேசினாலும் சில காலம் தாங்குவார்கள்.
அறிந்து செய்யப்படுகிற தவறுகளைக் காட்டிலும் அறியாமல் செய்யப்படுகிற பாவங்கள் மிகவும் பொல்லாதவை என்றே பல சாஸ்திரங்களும் போதிக்கின்றன.அறிவதற்கு தெய்வபக்தி ஒரு வழி.அகந்தை என்னும் மிருக ஆடையை கழற்றியெறிய தெய்வபக்தி பல விதங்களிலும் கற்றுத் தரும்.அதனைக் கற்க வேண்டுமா ? என்று கேட்கலாம்.அகந்தை அகலாத வரையில் கற்பதற்கான கதவுகள் உங்கள் முன்னே அடைத்தே கிடைக்கும்.நல்ல குருவிற்கு இது தெரியும்.நல்ல குரு எடுத்த எடுப்பிலேயே உங்கள் அகந்தையில் கை வைப்பான்.உடைத்து எறிவான்.பின்னர்தான் பாடம்.
பிராமணன் பிராமண சாதியில்தான் பிறக்க வேண்டும் என்கிற நியதி ஒன்றும் கிடையாது.அப்படியானால் இத்தனையாழ்வார்கள் எங்கிருந்து தோன்றியிருக்க முடியும்.அதுபோலவே பிராமணன் தனது சொந்த சாதியில் இருந்தும் தோன்ற முடியும்.தோன்றியிருக்கிறார்கள்.பிறசாதிகளில் இருந்தும் தோன்றியிருக்கிறார்கள்.தங்களில் ஞானத்தை உணராத குலங்கள் தாழ்வானவை.தாழ்ந்த குலங்களில் இருந்து வந்தாலும் கூட ஒருவன் பெருமாளை உணர்ந்தவன் எனில் ஏற்றுக் கொள்ள மறுக்காதீர்கள் அது பாவம் நிறைந்த செயல் என்கிறார் ஒரு ஆழ்வார்.இந்த இடத்தில் பெருமாளுக்கு பதிலாக கர்த்தர் என்றோ , அல்லா என்றோ போட்டுக் கொள்ளலாம் தவறில்லை.எல்லாம் ஒன்றுதான்.ஆனால் அந்த பொருளை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்பது விதி.
எந்த சமூகம் பிராமணனோடு இசைவு பட்டு நிற்கிறதோ அந்த சமூகமே தங்களின் அடுத்த கட்டத்திற்குள் செல்கிறது என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களுக்கு பிராமண விரோதம் ஒருபோதும் நல்லதல்ல.சமூகவியல் ரீதியிலாகவே கவனித்துப் பாருங்கள் நான் சொல்வதில் உள்ள உண்மை விளங்கும்.
ஒரு சைவ சித்தாந்தி அல்லது மார்க்சிய பின்புலம் கொண்ட சொந்த சாதி பிராமணன் ,ஒரு செரியன் பிராமண விரோதம் கொண்டிருக்கலாம் .அவர்கள் கொண்டிருக்கும் விரோதத்தை அவர்கள் பல குதர்க்கங்கள் வழியே நமக்கு அதனைக் கடத்தவும் செய்யலாம்.நம்மைப் போன்றோர் தான் இவ்விஷயத்தில் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.பிராமண விரோதம் நமக்கு ஆகவே ஆகாது.அது போல பிராமணன் ஆகும் பிரயாசையில் இருந்து நாம் ஒருபோதும் கீழிறங்கவே கூடாது. நான் அந்த தகுதி பெற்று விட்டேனா என்று எனக்குத் தெரியாது.ஆனால் எனக்கு உறுதியாகச் சொல்ல முடியும் .விக்ரமாதித்யன் பிராமணன்தான்.ஜெயகாந்தன் பிராமணன்தான்.ஜெயமோகனும் பிராமணன்தான் . ஆதிகேசவனைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கிற ஒருவனை பிராமணன் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் ? ஆதிகேசவனைக் காட்டிலும் அதிகமாக ஒருவன் சிந்திக்க வேண்டுமா என்பது வேறு விஷயம்.அப்படி நம் கண்முன்பாகவே நின்றுக் கொண்டிருக்கும் ஒருவனை என்ன செய்ய முடியும் ? டி.ஆர்.நாகராஜும்,சித்தலிங்கையாவும் பிராமணர்களே .சொந்த சாதியிலேயே பிறக்காத பிராமணர்களே சிறந்த பிராமணர்கள்.
எந்த சமூகம் பிராமணர்களை மதித்து பின்பற்றப் படிக்கிறதோ அது வளர்கிறது,செழிக்கிறது.எது கைவிடுகிறதோ அது கீழிறங்கி வீழ்கிறது.செழித்த பின் கைவிட்டாலும் நிலைமை இதுவே .இதனை மடத்தனம் என கருதுவோராக நீங்கள் தற்போது இருக்கலாம்.அதற்கே வாய்ப்பு அதிகம்.ஆனால் இதனை ஒரு துண்டுச் சீட்டில் நீங்கள் எழுதி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.இந்த வாக்கியத்தின் வலிமையை வாழ்க்கை உங்களுக்கு ஒரு நாளில் கற்றுத் தரக் கூடும்.
ஞானத்தில் சமகாலத்தன்மை பெற்றிருத்தலும்,பிராமணத் தன்மை பெற்றிருத்தலும் என்ன செய்யும் என்று கேட்கலாம்.செய்யவே இயலாதததை செய்யும்.அதுவே அதன் சிறப்பு.எல்லாருடைய வாழ்க்கையுமே ஏற்ற இறக்கங்கள் கொண்டவைதான்.இறங்கு முகம் என்று ஒன்றுண்டால் ஏறுமுகம் என்றும் ஒன்று உண்டு.ஞானத்தைக் காப்பாற்றிப் போற்றி தவறான காலங்களை தாண்டியவன் மிகவும் உன்னதமான உயரங்களுக்கு சென்று விடுகிறான்.அதுவே அதன் சூக்குமம்.
பிராமண விரோதம் கூட்டுத் தற்கொலை . செய்யாதீர்கள்.அய்யா வைகுண்டசாமி சொல்வதைப் போல புரிந்தோர் புரிந்திடுங்கோ ...
என்னிடம் ஒரு பிராமணன் விரோதம் காட்டினால் என்னவாவான் ? பிராமண நிலையில் இருந்து அவன் தாழ்ந்து பிராமண விரோதத்திற்கு ஆளாகிறான்.மேற்படி விஷயங்களை உங்களுக்கு புரிந்து கொள்ள முடியுமேயானால் இதுவும் உங்களுக்கு எளிதாகவே விளங்கி விடும்.உணர்ந்தோர் வழியறிந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"