நண்பர் ,திரைப்பட இயக்குனர் அய்யப்பன் தவறினார்

நண்பர் ,திரைப்பட இயக்குனர் அய்யப்பன் தவறினார்


அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
சமீப காலங்களில் பழகி என்னுடன் மிகவும் நெருக்கமாகவும்,அன்பாகவும் ,மதிப்புடனும் இருந்த நண்பர் அவர்.பார்ப்பதற்காக அடிக்கடி வந்து கொண்டேயிருந்தார்.குடிக்காதீர்கள் என்று பலமுறை அவரிடம் உரிமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஏதேனும் காரணங்கள் சொல்வார்.அவர் சொல்லும் காரணங்கள் ஏற்கனவே நானும் சொல்லித் திரிந்த காரணங்களாகவே இருந்தன.ஒருவேளை ஒரு பெண் துணை அவருக்கு இருக்குமாயின் இதில் விடுதலை பெறுவாரோ என்கிற எண்ணமும் எனக்கிருந்தது.அதற்காக தெரிந்த இலக்கிய வட்டத்தில் அவருக்கு பெண் பார்த்தோம் .சிலர் வேண்டாம் என்றார்கள்,ஒத்துக் கொண்டவர்களை இவர் மறுதலித்து விட்டார்.ஏற்பவர்களை மறுப்பது தாழ்வுணர்ச்சியின் நோய்.நமது சமூக நோய்களில் ஒன்று இது.நிராகரிப்பவர்களை காதலிக்கும் நோய் .
அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "நிலம் நீர் காற்று " படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னேன்.மதுபானக்கடை படம் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
தமிழ்நாட்டில் எண்பதுகளில் இருந்து : குடிக்கு ஆதரவான கருத்தாக்கங்களை மார்க்சிய ,இடதுசாரி தரப்புகளில் இருந்து முன்வைத்துக் கொண்டேயிருந்தார்கள்.அதனை அடித்தட்டுப் பண்பாடு என்பதாக நிறுவ முயன்றார்கள். அதனால் உயிரிழந்தோர் பலர்.இந்த கருத்தாக்கத்தை நம்பியவர்களில் பலர் செயல்பட இயலாத நிலைக்குச் சென்றார்கள்.இந்த கருத்தாக்கத்தின் மீதான மயக்கம் எனது வாழ்வில் ஏறக்குறைய பதினைந்து வருடங்களை சூறையாடியது.ஒருவருடைய வாழ்வில் மிகவும் பிரதானமான காலத்தில் பதினைந்து வருடங்களை சூறையாடுதல் என்பது அவரை கொலை செய்வதற்கு நிகரானதுதான்.எவ்வளவோ வேறு வேறு மார்க்கங்களை பயன்படுத்தி அதிலிருந்து வெளியேறினேன்.இப்போதும் "குடிக்காவிட்டால் கவிதை வராதே" என பல்லிளிக்கிற கூமுட்டைகளின் கூட்டம் தமிழ்நாடு முழுதிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொட்டு குக்கிராமங்கள் வரையில் நிறைந்திருக்கிறார்கள்.அந்த அளவிற்கு இந்த கருத்தாக்கத்தின் தாக்கம் அதிகம்.இந்த கருத்தாக்கத்திற்கு ஒத்துழைத்தோர் அனைவருக்குமே இத்தகைய மரணங்களில் பங்கும் பொறுப்பும் உண்டு.
எனது இப்போதைய கவலையெல்லாம் பிரான்சிஸ் கிருபாவைப் பற்றியது.அய்யப்பனும் ,பிரான்சிஸும் ஒத்த குணமுடையவர்கள்.ஒரேவிதமான அகந்தையில் நிற்பவர்கள். ஒரே அறைவாசிகளும் கூட.பிரான்சிஸ் இவரை காட்டிலும் குரோனிக் . வலிப்பு நோய் வரையில் வந்து விட்டார்.
மரணம் சூக்குமம் இல்லையென்று சொல்லவில்லை.அது எப்போது எதனால் யாருக்கு என்பதெல்லாம் சொல்லயியலாதவை.அதற்கு குடி காரணமாவதில் இருந்து ஒருவரை நிச்சயம் விடுதலை செய்ய முடியும்.அய்யப்பனை இழந்து விட்டோம் குடியில் இருந்து பிரான்சிஸை மீட்போம்
மரணம் எல்லோருக்கும் பொதுவானது.அதனை குடியால் சென்று சேருவது பரிதாபகரமானது.வாழ்வும் அதற்கான நம்முடைய செயல்களும் மிகப் பெரிய ,உயரிய பரிசுப் பொருட்கள் . குடியால் அது உருவாக்கும் நோய்களால் அவற்றைத் தவற விடாதிருங்கள்.😢😢😢

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"