ஹெல்மட் சீட்பெல்ட் காண்டம்

ஹெல்மட்  சீட்பெல்ட் காண்டம்

தமிழ்நாட்டில் திடீரென ஹெல்மட் போடச் சொல்கிறார்கள்.திடீரென தளர்த்துகிறார்கள் .விபத்தைக் குறைக்க ஹெல்மட் அவசியம் என்கிற கருத்து இதன் பின்னால் நேர்மையுடன் அமர்ந்திருப்பதாகவே எடுத்துக் கொள்வோம்.அப்படியானால் மக்கள் எதற்காக இதனை அசௌகரியமாகக் கருத வேண்டும் ? அவர்கள் டாஸ்மாக் வருமானம் பற்றாக்குறையாக இருப்பதால் இப்படி நீதிமன்றங்கள் மூலமாக இத்தகைய வழிப்பறி ஆணைகளை கொண்டுவருகிறார்கள் என கருத வேண்டும் ?

தமிழ்நாட்டில் ஒரு பெண்மணியை நடுரோட்டில் இந்த வழக்கை வைத்து போலீசார் கொலை செய்ததைத் தொடர்ந்து ஓய்விற்கு அனுப்பப்பட்டிருந்த இந்த சட்டத்தை மீண்டும் துடைத்து மேலும் பொலிவாக்கி உடன்பயணிப்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும்  என்று நீதியரசர்கள் புதுப்பித்திருக்கிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இந்த சட்டத்தால்  மண்டை உடைந்தவர்கள் தோராயமாக ஐம்பதுக்கும் அதிகமானோர்.அப்படி மண்டை உடைந்தவர்களில் சிலர் இப்போது  இப்பூவுலகில் இல்லாமலும் போயிருக்கலாம்.குலசேகரம் பகுதியில் போலீசார் துரத்தித் துரத்தி மனிதர்களை வேட்டையாடினார்கள்.நகரங்களில் அனைவரும் அணிய தொடங்கிய பிறகு கிராமங்களுக்குள் நுழைந்த போலீசார் திருடர்களை போல நின்று மனிதர்களை அமுக்கிப் பிடித்தார்கள்.பின்னர் தெருக்கள் வாசல் முற்றங்கள் என்று வந்து பிடித்தார்கள்.வீட்டிலிருந்து  நான்கு கிலோமீட்டர் அளவிற்குள் ஹெல்மட் வழக்கிற்காக யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று சட்டத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.ஆனால் நடைமுறையில் எதுவுமே பின்பற்றப்படவில்லை என்றால் இதற்கு என்ன அர்த்தம் ? இந்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக போலீசார் லத்தியை எறிந்து வீசுகிறார்கள்.ஓடும் வாகனங்களின் சக்கரங்களுக்குள் லத்தியை அப்ளை செய்கிறார்கள்.ஏன் ?

எனக்கு இது தொடர்பாக சில எளிய கேள்விகள் இருக்கின்றன.

1  .ஹெல்மட் அணியாததால் தான் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றால் வருடத்திற்கு தமிழ்நாட்டில் நடக்கும் விபத்துகள் எத்தனை ? அதில் ஹெல்மட் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எத்தனை ? என்கிற கணக்கு நீதி மன்றங்களுக்கு தெரியுமா ? அப்படியானால் ஹெல்மட் தவிர்த்த பிற காரணங்களுக்கு என்ன உத்தரவை பிறப்பிப்பீர்கள் ?

2 . குடியாலும்  ,ஓட்டுநர்களுக்கான அதிக ஓய்வற்ற பணியாலுமே அதிக விபத்துக்கள் நடப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.குடியால் ஒரு விபத்து ஏற்படுகிற போது அரசாங்கத்தின் மீது வழக்கு பதியப்பட வேண்டுமா இல்லையா ?

3  .பெரும்பாலான விபத்துகள் நள்ளிரவு இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குள் நடைபெறுகின்றன.இதில் யாரை குற்றவாளியாகக் கருதுவது ?

4  .பெரும்பாலான விபத்துகள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றனவா அல்லது குக்கிராமங்களில் சிறுநகரங்களில் நடைபெறுகின்றனனவா ? இந்த உத்தரவை எந்த சாலையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பரிசீலனை ஏதேனும் செய்திருக்கிறீர்களா ?

5  . பிற நாடுகளை போலவே பல விஷயங்களை இங்கே நடைமுறைப் படுத்துகிறோம் என சொல்வீராயின் ,காண்டம் அணியாத உடலுறவு குற்றம் என்னும் உத்தரவை எப்போது கொண்டுவர போகிறீர்கள் ?

6  .ஹெல்மட் அணியாதவர்களிடன் லைசன்ஸை பிடுங்குவது,தொகைகளை பிடுங்குவது ,வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற காரியங்கள் வெளிநாடுகளில் நடைபெறுகின்றனவா ? காலால் உதைத்தல் ,கொலை செய்தல் போன்றவற்றைப் பற்றி உங்கள் உத்தரவில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது.

7 . குற்றம் பற்றிய உங்கள் வரையறை என்ன ?

கொலை நடந்தால்தான் கொலை என்று கருதி ஒருவரை குற்றஞ்சுமத்த முடியும்.விபத்து நடப்பதற்கு முன்னரே ஹெல்மட் அணியாதவரை எப்படி உத்தரவு மூலம் தண்டிக்க முடியும் ?

8  . இல்லை சார் பைசா தான் பிரச்சனை என்றால் ஏன் அரசாங்கத்திடம் ஊருக்கு ஊர் உண்டியல் வைக்கச் சொல்லி பரிந்துரை செய்யக் கூடாது ?

9  .இப்படி அதிரடி உத்தரவுகளை அடிக்கடி பிறப்பிக்கிறீர்களே நீங்களெல்லாம் யார் ? எந்த ஸ்கூல் ஆப் தாட் ?

10  .நீங்கள் உள்ளூரா வெளியூரா ?

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"