எவ்வளவு செலவு ?

கேட்கவே மாட்டான் கவிதைகள் - 18

1

என்னைப் போலிருப்பவனை
பிடிக்கமாட்டேன் என்கிறது
பயந்து
முகம் திருப்பி
விடைபெற்று விரைகிறேன்
என்னைப் போலிருப்பவனிடம்
இருந்து

என்னைப் போலிருப்பவனிடமிருந்து
எவ்வளவு தூரம் கடந்து
வந்திருக்கிறேன்
அவ்வளவு இடைவெளி இருக்கிறது
பராபரமே
இருவருக்கும்

என்னைப் போலிருப்பவன்
என்னைப் போலவே இருக்கிறான்

இன்னும் எவ்வளவு தூரம்
கடந்து
கல்லும் முள்ளும் சவுட்டி
என்னிடம் வந்து சேர வேண்டும்
இந்த
என்னைப் போலிருப்பவன் ?

2

என்னையே எவ்வளவு நேரம்
உள்ளேயிருந்து
பார்த்துக் கொண்டிருப்பது ?
அதனால்தான்
வெளியே வந்து ஒருமுறை
வானத்தைப் பார்த்தேன்
ஆச்சரியம்
வானம் நான் ஆனது
இப்போது

3

ஒரு ரயில் நிலையம் ஒரு போதும்
ஒரு
ரயில் நிலையமாக இருப்பதில்லை
அதற்கு
ஆயிரம் முகங்கள்
அதில் ஒன்று
அனாதை பையனுடையது

4

கண்டு வெறுக்கும் தன்மையில்
இங்கே தெருவில் நடக்கிறார்கள் பாருங்கள்
சாலையில் திரிகிறார்கள் பாருங்கள்
கண்டு வியக்கும் அத்தனைபேரும்
இப்படித்தான்
இருந்தார்கள்

5

பேராசை அவனுக்கில்லை
இரண்டு பிடி சோறு
தேவை
ஒன்றை எடுத்து அவனுக்கு கொடு
பேராசையும் பெருந்துயரும்
உன்னிடமே
இருக்கட்டும்
கேட்கவே மாட்டான்

--------------------------------

இசைதல்

1

யாரை எதிர்த்து கொண்டிருக்கிறேன்
என்றே தெரியவில்லை
இருந்தாலும்
எதிர்த்துக் கொண்டுதான் இருப்பேன் போலிருக்கிறது
இறுதிவரையில்

2

வாழ்க்கை விட்டுச் செல்கிறது
என்று சதா
கரகரக்கும் கிழவி
பேரக் குழந்தையிடம் மட்டும் எப்படியோ
இனிக்கிறாள்

3

ஒருபோதும் ஏதும் விட்டுப் போவதில்லை
என்பதை அறிந்தவனின்
கைக்கருகில்
நிற்கிறது
கள்ளம் கபடம் அற்ற
வாழ்க்கை

4

பயந்தவனை துரத்தியோடுகிற
ஊழின் நாய்
பயப்படாதவனின் படகில் ஏறியமர்ந்து
கரையைக்
கடக்கிறது
இருவரும் கரை சேருகிறார்கள்

5

பசியின் அளவிற்கு சரியாக
தட்டில் சோறு எடுக்கத் தெரிந்தவன்
பலபேர் தன்னைக் காதலிப்பதாக
பொய் பேசித் திரிவதில்லை

6

கரகரக்கும் கிழவி
மொண்டு வரும்
பால் சொம்பு முழுதும்
வயோதிகச் சளி
இன்மையை எப்போதும் கையில்
ஏந்தி வரும் மீனாட்சி
அதை அடுப்பில் பற்ற வைத்து
மீண்டும்
பாலாக்குகிறாள்

7

சாகத் தயார் சாகத் தயார்
என சொல்லிக் கொண்டிருப்பவன்
ஒருபோதும் தயாராக மாட்டான்
என்பதை அறிந்த
சாவு
வலிந்து சென்று
அவனிடம்
சாவியைப்
பிடுங்கிக் கொள்கிறது

8

எத்தனை கம்பளம் விரித்தாலும்
அதற்குள்
வெற்றுடல் கொண்டுதான்
தூங்க முடியும்

9

நாய்க்கு கிடைப்பதுதான்
நமக்கும் கிடைக்கிறது
வேறு ஒரு பாத்திரத்தில்

10

நாலுபேரை சம்பாதிக்கத் தெரியாதவன்
நாய்க்குட்டி
மேய்க்கிறான்

விலங்கு அனுதாபி
மனித விரோதி

---------------------------------

எவ்வளவு செலவு

1

இன்றைய நாளைத் தொலைத்தவனுக்கு
ஏராளம்
கவலைகள்

2

என்னைத் தவிர பிறர்
எல்லோரும் அதி மேதாவிகள்
என நினைத்து நெடுங்காலம்
ஏமாந்து போய் விட்டேன்

என்னைப் போன்றே
எல்லோரும்
அடி முட்டாள்கள்
என்பதை இப்போது
தெரிந்து கொண்டேன்

இதற்கு எவ்வளவு செலவு

3

நாராயணன்
உன்னைக் காப்பாற்றி விடுவானா
என்று கேட்கும் குரலில்
ஒரு நிமிடம்
வந்து தோன்றுகிறான்
காலந்தோறும்
ஹிரணியன்

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1