அதற்காகத்தான் இத்தனை நடனமா ?
விபத்திற்குப் பின்னர் ஓடுகிற கார்
ஊருக்குப் புறத்தே சாலையோரத்தில்
நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது
விபத்தில் பழுதடைந்த கார்
சுற்றி செடிகொடிகள் முளைத்து ...
ஓட்டுனரின் ஜன்னல் வழியே பிரண்டைக் கொடி
தளிர் நீட்டி வெயில் பார்க்கிறது
பின்னிருக்கையில் பால அரசு
பாலாம்பிகை கோலம்
நீங்கள் தூரத்திலிருந்து பார்த்து விட்டு
கடந்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள்
காட்டுக்குள் நின்று கொண்டிருப்பது போல
நினைவுகள் மூடிக் காத்திருக்கிறது அது
நீங்கள் ஊர் பைத்தியம் என நினைத்து ஒருவனை
விரட்டியனுப்பினீர்களே
அவன்தான் இத்தனை தாவரங்களையும்
அழைத்துக் கொண்டு
தினமும் அந்த வண்டியை
விபத்திற்குப் பிறகு
ஓட்டிக் கொண்டிருக்கிறான்
பின்னிருக்கையிலிருந்து பயணம் செய்கிறார்கள்
விபத்தில் இறந்தவர்கள்
அதுவொன்றும் சும்மா நின்று கொண்டிருக்க
வில்லை
நினைப்பது போல
2
"பத்மா டீச்சர்"
எப்படி இங்கு வந்து சேர்ந்தார் ?
வீட்டிலிருந்து இந்த வெட்டவெளியை
வந்தடைய
எவ்வளவு தூர பிரயாணம்
தேவைப்பட்டிருக்கும் ?
வெளியூர் பேருந்து நிலையத்தின்
ஓரத்தில்
மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில்
படுக்கை அமைத்திருக்கிறார்
நான்கைந்து சேலைகள் தலையணை
அருகில் தண்ணீர் பாட்டில்
காலையில் ஆங்கில வகுப்பு
வழக்கம் போல தொடங்குகிறது
"இப்பவுள்ள குட்டிகளுக்கு பாடத்தில்
கவனமே இல்லை
எப்படித்தான்
வர போகுதுகளோ "
அதே கணீரென்ற குரல்
குரல் தவிர்த்து பழைய அடையாளங்கள்
அத்தனையும்
கைவிட்டு போய்விட்டன
மதியத்தில் தனது பைரவரிடம்
எப்படி என் பின்மதிய
முற்றம்
எத்தனை பேருந்துகள்
ஓடுகின்றன பார்த்தாயா ?
என பெருமை பேசுகிறார்
மாலையில் வந்து இணைகிறார்
ராமன் குட்டி
பேருந்து நிலைய நாய்க்குட்டிகள்
அத்தனைக்கும்
தந்தை அவர்
மாராப்பை சீராக்கி
பாண்ட்ஸ் பௌடர் பூசிய
முகத்துடன்
"உமக்கு எப்போதுமே
சந்தேகம்தான்
நேற்று அதைச் சொன்னேனே செய்தீரா ?
அறிவு எப்போது உமக்கு வரும் ?
வாய்க்கு வந்தபடி தாக்கி
முரண்படுகிறார்
வயதை
வெல்ல முடியாத
பத்மா டீச்சர்
சிறுமி உள்ளத்திலிருந்து குதிக்க
தலைகுனிந்து ராமன் குட்டி இத்தனை வயதில்
எப்போதாவது நிம்மதியாக இருக்க விட்டிருக்காயா ?
எனக் கேட்டுத் தேம்பி தேம்பி
அழுது கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு நாளின் மாலையிலும்
இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்களோ ?
என கேட்கிறான்
உடன் வந்த நண்பன் .
அப்படியில்லையாயினும்
அப்படித்தானே இருக்கவேண்டும் ?
என பதில் கூறி
நான்
மாயை விட்டகன்று
வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்
3
கழுத்தில் புழுக்கள் நெளியும்
பெரிய புண்ணுடன்
சாவை எடுத்துக் கொண்டு
ஒரு நாய்
இந்த சந்தியில்
வளைய வளைய வருகிறது
நெருங்கி வரும் வாகனங்கள்
மோதாமல்
வழிவிட்டு
ஒதுங்கிச் செல்கின்றன
அது வளைய வருகிறது தலையை
கவிழ்த்திய வண்ணம்
தலையை மேலும் கீழுமாக அசைக்கிறது
எல்லோருடைய நினைவுகளிலும்
அது இருளை நிரப்புகிறது
மொத்த வலியையும்
அது முச்சந்திக்குக் கடத்துகிறது
அது வருவதற்கு முன்பிருந்த சந்தி
வரும் போது இருக்கும் சந்தி
சென்ற பின் உதிக்கும் அந்தி
என சந்தி
பலவாறு ஆயிற்று
மறுநாளில் அந்த நாய் அங்கிருக்குமோ
என நினைத்து சந்தியைக் கடக்கையில்
எனது தேகமெங்கும் வெண் புழுக்கள்
ஊர்வது போலும் பிரேமை
அந்த நாய் அப்போது அங்கில்லை
அது
எனக்குள்ளிருந்தது
புழுக்கள் நெளிய
எங்கே இறக்கி வைப்பதென்று
இன்னும்
விளங்கவில்லை
4
உங்கள் மனக்கோளாறுகளை நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்
அவை அனைத்தும் உங்களுக்குரியவை
அவற்றிற்குள்ளாகத்தான்
புதிதாய்ப் பிறந்த குழந்தையின்
பாத கமலத்தில்
வைப்பதற்கான
ஒரு மலரும் இருக்கிறது
எடுத்து பாத கமலத்தில்
வைத்துப் பாருங்கள்
மனக்கோளாறுக்கு ஒரு வாய்ப்பு
மணம்
வீசுதற்கு
எல்லா மலர்களும்
உங்களுக்கு ஒரு வாய்ப்பை
கொண்டிருக்கின்றன
அது உங்களில் மலர்வதற்கானதொரு
வாய்ப்பை
வாய்ப்பு தரப்படவில்லையெனில்
அவை நோவதில்லை
மறுபடியும் புத்துணர்ச்சியுடன்
அடுத்த வாய்ப்புடன்
வந்து நிற்கின்றன
பிரச்சனை
நீங்கள் எப்போது பாத கமலத்தில்
மலரைக் கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்
என்பதே
5
சந்தையில் வந்து சத்தமிட்டு
பின்னர் திரும்புவது அங்கு தான்
படுக்கையிலேறி புணர்ந்து விட்டு
திரும்புவதும் அங்கு தான்
ஊருக்குள் நுழைந்து சண்டையிட்டு
ஒதுங்கிக் கொள்வதும் அங்கு தான்
பேருந்தேறி யாத்திரை முடித்து
வந்து சேருவதும் அங்கேயே தான்
நாழிக்கிணற்றின் ஆழம்
அங்கே நினைப்பது போல
விஷ ஜந்துகள் ஏதுமில்லை
என்னைத் தவிர
எனக்குள் அது இருக்கிறது
அதற்குள்
நான் இருக்கிறேன்
தாமரை பூ இதழ்கள் விரித்து
அங்கே படுத்துக் கொள்வேன்
சட்டைகள் அணிந்து வெளியில்
பொதுவில் பேசிக் கொண்டிருப்பதெல்லாம்
நடிப்பு
பெரு நடிப்பு
தேர்வீதித் திருவிழா
வெற்றலங்காரம்
6
நீ கேப்டனாக இல்லாதவிடத்தே
கேப்டன் போலும் பாவனை செய்தால்
போலிச் சிப்பாய்களிடம்
மாட்டிச் சரிவாய்
சிப்பாய்களுக்கெல்லாம் தீனி நீ
அவை உனக்கு கொள்ளி வைத்து மீளும்
நீ தளபதியாயிருக்குமிடத்தே
தீனி போட மறுத்தால்
அரண்மனை உன்னை வெளியேறச் சொல்லும்
சிப்பாய்கள் உன்னைச் சீயென ...
நகைக்கும்
நீ சில இடங்களில் கேப்டன்
சில இடங்களில் சிப்பாய்
முந்தாதே
முந்தினால் நீ தளபதியாயிருந்தாலும்
சிப்பாய்கள் கூட்டத்தில்
சேர்த்துவிடுவார்கள்
நீ அனைத்து சிப்பாய்களுக்கும்
குண்டி கழுவ
நேர்ந்து விடும்
சிப்பாயா
தளபதியா
கண்டுபிடி
சிப்பாயினிடத்தே சிப்பாயாக
தளபதியினிடத்தே தளபதியாக
7
கயிறென்று தெளிந்த பாம்பு
திரிந்து தோன்றும்
நெடுஞ்சாலை
மாயை தெளிவதற்குள்
அசந்தர்ப்பத்தில்
கடக்கும் நாய்க்குட்டி மீது
ஏறி இறங்குகிறது
வாகனம்
தூய அன்பு வெதுவெதுப்பில் இரத்தம் கசிய
எப்படியேனும் இதனைத் தவிர்த்திருக்க முடியுமா
என மனம் கொந்தளிக்கையில்
உடன் வந்த நண்பன்
வேறொரு பேச்சைத் தொடங்குகிறான்
நானும் வேறொரு பேச்சைத் தொடங்குகிறேன்
கொந்தளிப்பு விலகிற்று
விலக எத்தனித்தே
வேறொரு பேச்சு உருவாயிற்று
ஏறியிறங்கிய
நாய்க்குட்டிக்கருகில்
ஏறி இறங்கிய மனம் மட்டும்
அமர்ந்திருக்கிறது
வெகுநேரமாக
தூய அன்பென்ற
துயருடன்
8
நெடுஞ்சாலையின் இந்த பக்கத்திலிருந்து அந்தப் பக்கமாக
ஆயிரங்கால் அட்டைப் பூச்சி
கடந்து செல்கிறது
அதற்கு அது
யுக யாத்திரை
சீறிப் பாய்ந்து நெருங்கி
அகலும்
அதிவிரைவு டிப்பர் லாரிகள்
ஓம்னி பேருந்துகள்
சரக் என அணிப்பிள்ளைகளை
அடித்து நகரும்
மகிழ்வுந்துகள்
சுனாமி எச்சரிக்கை எதும் விடப்படாமலேயே
தனது யுகப்பயணத்தில் இருக்கிறது
அட்டைப் புழு
மலை சரிந்து விழுவது போலும்
தலைக்கருகில் கடக்கும்
நேஷனல் பெர்மிட் லாரியின்
டயரில் ஒரு கணம் துடித்து
அந்தப் பக்கமாக சென்று
கொண்டிருக்கிறது
எந்த புகாருமின்றி
கடைசியில் இருசக்கரவாகனத்தில் வந்தவன்
கணநேரத்தில்
அட்டைப் புழுவைக் கண்டு திகைத்து
வளைந்து நெளிந்து
பிரேக் போட்டு நிறுத்துகிறான்
இருவரும்
நேருக்கு நேராக
பார்த்துக் கொள்ளும்
அக்கணத்தில்
இருவருக்கும்
கூடுகிறது இறைக்கலவி
மீண்டும் அட்டைப் புழு
இந்தப் பக்கம் திரும்பி
யாத்திரையைத்
தொடங்குகிறது
இனிய
பனிக்காலைப் பொழுது
9
இறந்த நண்பனின் தொலைபேசி எண்ணை
என்ன செய்வது என்று
தெரியவில்லை
தேடுதலின் போது
நின்று பார்த்து கடந்து செல்கிறான்
ஏதோ சொல்ல வருகிறான் போல
பனையேறி முக்குப்பீறி பாட்டா
வீட்டுக்குச் செல்லும் வழியில்
குழந்தையாய் கடந்த
நாழிக்கிணறு
நீருக்குள் நடுங்கும் விழிகள்
அதனைக் கொண்டே
இன்று வரையில்
எல்லா கிணறுகளையும்
அளந்து கொண்டிருக்கிறேன்
எது உள்ளே எட்டிப் பார்த்து
விழுந்ததோ
எந்த விதையையும்
எடுத்து
வெளியே
போடமுடியவில்லை
அதனதன் திக்கில்
அவையவை வளருகின்றன
பால்யத்தில் முதன் முதலில்
நெளிந்து கைகாட்டி
கைப்பந்து மைதானத்திற்குள் நுழைந்தாளே ஒருத்தி
அவள் வளர்ந்து
பெரியவளாகிக் கொண்டேயிருக்கிறாள்
எனது
வயதையும் கடந்து
யார் வந்தாலும் போனாலும்
அவர்களில்
அவள் இருக்கிறாளோ
என்றே
பார்க்கிறேன்
இருந்தால் தேன்
இல்லையென்றால்
தேன் கூடு
10
நீ காயா பழமா என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியாது
எவ்வளவு சுற்றளவு
அறிய மாட்டேன்
விட்டம் தெரியாது
அறிந்தது கொஞ்சம்
தெரிந்தது சொற்பம்
உன்னைக் கேட்டுப் பார்
உனக்குத்தான்
துல்லியமாகத் தெரியும்
உன்னைப் பற்றி
நீ யார் என்பது பற்றி
நான் தெரிந்து வைத்திருப்பதெல்லாம்
நீ அணிந்து நடக்கும் ரெடிமேட்
ஆடைகளின்
வண்ணங்கள்தான்
உன்னிடமே கேள்
அவனுக்குதான் தெரியும்
உன்னைப் பற்றிய
அத்தனையும்
நீ கேட்டுப் பார்க்கவில்லை என்றால்
அவனும்
சொல்லித் தரமாட்டான்
கவனம்
11
சந்திப்பின் முதல் பார்வையிலேயே
நீ யார் என்பது எனக்கும்
நான் யார் என்பது உனக்கும்
நன்றாக
விளங்கிவிட்டது
நமது விரோதத்திற்கு
வேறு ஒரு காரணங்களும் இல்லை
முதல் சொல்லில்
உன்னைத் தந்து
என்னை எடுத்துக் கொண்டாய்
அந்த அன்பிற்கும்
வேறு ஒரு
காரணங்களும் இல்லை
12
அதற்காகத்தான் இத்தனை நடனமா ?
என் பேரில் ஒருவன் என்னென்னவோ
செய்து கொண்டிருக்கிறான் பாருங்கள்
அதுவெல்லாம் அவனாகச் செய்கிறானா
வேறு யாரேனும்
உள்ளிருந்து
செய்கிறார்களா ?
சில நேரம் சந்தேகமாயிருக்கிறது .
அப்படியானால்
இவனுக்கு
என்ன பொருள் ?
அவற்றால் இவனுக்கென்ன ?
மழைச்சாரல்
முருங்கையில் தூவி
முதலில் தன் கைவைத்தெடுத்து
முதிய இலைகளையெல்லாம்
கீழே
ஒவ்வொன்றாய்
போடுகிறது
மஞ்சள் ஒளியாக கீழிறங்குகின்றன
மஞ்சள் இலைகள் .
எடுத்துப் போட்டவற்றை
மீண்டும் சாரல் கை கொண்டெடுத்து
பூமியில்
மூடுகிறது
மழையின் வேலையா இது
இப்படி எத்தனை எத்தனை வேலைகள் மழைக்கு
அப்படியானால்
மழையின்
உண்மைப் பொருள்தான் என்ன ?
மழை தானா அது ?
காலையில் பூவிட்டுத் தளிர்க்கும்
முருங்கையின் பிரகாசம்
யார் விட்டுச் சென்ற பொருள் ?
13
விதவையான தாய்
தனது இரண்டு மகள்களுக்கும்
விதவைக் கணவனை
பங்கு வைத்துக் கொடுத்தாள்
பிறகும் பற்றாது என
ஒவ்வொரு கைச் சோறாக
வாரிவாரிக் கொடுத்தாள்
கசந்தெடுத்து உண்டு
பெரியவர்கள் ஆனார்கள்
அவர்களில் அப்பன்
சமாதியாகி
அழுத்தம் இருவர் முகத்திலும்
வாள் கொண்டுக் கீறி காய்ந்த வடுவாகத்
தெரிந்தான்
உயிர் மகனுக்குள் ஒடுங்கியது
மகனுக்குள்ளிருந்து
"இந்த சாப்பாட்டை சரியாகச் செய்யக் கூடாதா ?
எந்நேரமும் சொல்லணுமா ? "
என்று நித்தம் கிடந்து அரற்றுகிறான்
அவன்
"இங்கன எங்கேயோதான்
மனுசன் குரல் கேக்கு ..."
என தேடி கொண்டிருக்கிறாள்
அவள்
பத்து வருடமாச்சு காரியம் முடிந்து
14
மலையைச் சென்று பார்த்தேன்
மழை சுரப்பு மேனி நிறைய
சூரிய பதற்றத்தில்
வெளிர் பச்சை நிழல்கள்
அழகாகத்தான் இருக்கிறாய் ஆனால் என் உணர்வுக்கு இடம் எங்கிருக்கிறது
உன்னிடம் ?
என்று
கேட்டேன்
அருகிலுள்ள
சந்தனக்காட்டை கை காட்டியது மலை
அது மணக்கும்
அதனுடைய இடம்
என்னுடைத்து எங்கே?
நீட்டி முறுவலித்துத் திரும்பி
மார் சீராக்கி
நிமிர்ந்து பார்த்தது மலை
நான் என் தேவதையை அடையாளம் கண்டு
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
நீ மலையாயிருப்பதும் சிறப்பே
நீ தேவதையாதல் அதனினும்
சிறப்பு
15
உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ?
ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம்
பின்னர் சொட்டுச் சொட்டாக
வெதும்புதல் மற்றொரு தளம்
உணர் நரம்புகளின் அனைத்து பாதையையும்
நனைக்கும் தூறல்
அத்தனையும் வசப்படா சொற்கள்
சிறைக்குள்ளிருந்து
மழை பார்ப்பது போலிருக்கிறது
எனது உடலுக்குள்
நானிப்போது
வசிப்பது
இத்தனை சொற்களில் எத்தனை
சினையுறும் ?
கதவடைத்து கால்விரித்து
பயந்து நிற்கிறாள்
மழையில்
ஓர் அம்மன்
மனமெங்கும்
உணர்வுச் சகதி
16
காலத்தில் இல்லாதவள்
அலங்காரமிட்டுக் காத்திருக்கிறாள்
ஒருவரும் அழைக்கவில்லை
ஒருவரும் புன்னகைக்கவில்லை
ஒருவரும் காதலிக்கவில்லை
அவளிருப்பை ஒருவரும் அறியவே இல்லை
பின்னரும் அலங்கரிக்கிறாள்
கண்களில் இருபக்கமும் மையிட்டுக் கொம்பு வரைகிறாள்
உதட்டில் ஒரு ரத்தப் புள்ளி
யாரோவிட்ட முத்தம் என
தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள்
ஒருநாளில்
அலங்காரம் அப்படியே நிலைத்து நின்றது
இனி நீ செய்து கொள்ள வேண்டியதில்லை
அப்படியே இருக்குமென
நிலைக் கண்ணாடி அவளிடம்
பேசிற்று
முதலில் ஒரு தெய்வம்
தெய்வத்தின் பின்னே
நிழல் பேயின் ஸ்வரூபம்
தோன்ற
திகைத்து நோக்கியவளின்
முகமெங்கும்
தேய்த்து அகற்ற இயலாத
சாமிக் களிம்பு
17
நீள் நெடுங்காலமாக உன்னை நான் அறிவேன்
உனதிருப்பின் இடம் நோக்கியிருக்கிறது எனது திசை
நீ பார்க்கும் போது
மழை நின்றபின்
ஊறும் ஊற்றாகிறது உள்ளுடல்
உடல் ஊற்றாகும் போது
நீதான் வந்திருக்கிறாய் என்பது
அவ்வளவு
வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது
அதுவே நீ ஏற்படுத்தும் சமிக்சை
பிறரால் ஏற்படுத்த ஒண்ணா அடையாளம்
வேறு எதனாலும் ஊற மறுக்கும் இவ்வுடல்
ஊறிய நீரில் மிதக்க தொடங்குகிறது
நீயும் எவ்வளவு பெயர்களில்
அழைக்கப்பட்டிருக்கிறாய் ?
நானும் எவ்வளவு பேர்களாய்
இருந்திருக்கிறேன் ?
நாம் எப்போதும் ஊற்றின் இரண்டு கரைகளில்
நின்று கொண்டிருக்கிறோம்
மூடிக் கொள்வதும் திறப்பதுவும் என
சதா முனகி காத்திருக்கிறது
இறவா மிருகம்
Comments
Post a Comment