தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று

தன்வந்திரி பகவான் ஜெயந்தி நாள் இன்று

" ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணுவே நம "

தீராத நோய்களில் உழல்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.குணமாகும்.மந்திரங்களை எப்படி முறையோடு உச்சரிக்க வேண்டுமோ அப்படி,விரதம் மேற்கொண்டு உச்சரித்தால் பலன் அதிகம்.சில விஷயங்களை காரணம் கேட்காமல் கடைப்பிடித்து பலன் தெரிந்து கொள்வதே நல்லது.கடைபிடிப்போருக்கு காரணங்கள் கொஞ்சம்
கொஞ்சமாக ;  மெல்ல மெல்ல விளங்கி விடும்.

தன்வந்திரியை மறந்தால் தன்வந்திரியும் உங்களை மறந்து விடுவார்.தன்வந்திரி என்றில்லை யாரானாலும் இப்படித்தான்.நினைக்க மறப்பதை அடையவும் முடியாது.தன்வந்திரி மஹா விஷ்ணுவின் அவதாரம்.அவருடைய அம்சம்.எதுவெல்லாம் உயரியதாக உள்ளதோ,அருங்காரியமாக அமைகிறதோ அவையெல்லாமே மஹா விஷ்ணுவின் அம்சங்களே.நம்மிடமும் மஹா விஷ்ணுவின் அம்சம் உண்டு.சதானந்தமே அது.சதானந்தத்தில் இருந்து கீழிறங்கும் போது நோய்கள் மிக எளிதில் தாக்குகின்றன.

எவர் ஒருவருக்கும் வேண்டாத நோய்கள் ஏற்படுவதில்லை.நம்முடைய வேண்டுதல்கள் ஒவ்வொன்றிலும் தீராத பல நோய்களும் அடங்கியிருக்கின்றன.எனக்கு பாயாசம் மட்டும் போதும் அதனோடு ஒட்டியிருக்கும் நோய் வேண்டாம் என்றால் நடவாது.அழுத்தம் கொண்ட பெண்களை உறவிற்கு தேர்வு செய்வேன்,அதன் எதிர்விளைவுகள் வேண்டாம் என்றால் நடவாது.அழுத்தம் நிறைந்த பெண் எளிது என்று எண்ணி தேர்வு செய்வீர்களேயானால் அவள் உங்கள் மகிழ்ச்சி அத்தனையையும் சுரண்டி அவளுடைய நோய் மண்டலத்திற்கு உங்களை தரையிறக்கி விடுவாள்.

ஒரு காரியம் எளிமையானதா இல்லை கடுமையானதா என்பது புறத் தோற்றத்திலோ , அணுக எளிமையானது என்பதிலோ நிச்சயமாக இல்லை.அதன் எதிர்மறை விளைவுகளிலேயே அதன் தன்மை அடங்கி இருக்கிறது.வேண்டுதல் ஒவ்வொன்றுமே பிசாசினையும் நிரப்பி வைத்திருக்கிறது.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல" என்று நம்முடைய மூத்த புலவன் ஒருவன் சொல்லியிருக்கிறான் அதனை நீங்கள் இரண்டு விதமாக வாசிக்கலாம்.வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன் ;அவன் காலடியில் சேர்ந்தார்க்குத் துன்பமில்லை.எனவும் வாசிக்கலாம் இது ஒரு சாதாரண வாசிப்பு.வேண்டும் வேண்டாம் என்கிற இரு நிலைகளும் இல்லாமல் அவனடி சேர்ந்தார்க்கு ஒரு துன்பமும் இல்லை என்றும் வாசிக்கலாம்.இந்த இரண்டாவது வாசிப்பு மிகவும் கடுமை நிறைந்த தவம்.

பல்வேறு நோய்கள் நாம் வருத்தி வேண்டி பெற்றுக் கொள்ளுவதே ஆகும்.ஒருவர் தன்னை மிகவும் சிக்கலானவர் என கற்பனை செய்து கொண்டே இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள் ; சிக்கலானவை சார்ந்த நோய்கள் அனைத்தும் இவரை நோக்கி வேகமெடுத்து வந்து கொண்டிருக்கும்.நமக்கு ஒரு உடல் கிடைத்து விட்டது என்று வேகமெடுத்து இவரை நோக்கி விரைவுப் பயணம் மேற்கொள்ளும்.

தன்னிரக்கம் கொண்டு நடப்போரை கொள்வதற்கு கொல்வதற்கு ஏராளம் வியாதிகள் இருக்கின்றன.சுய நரகத்தை ஸ்தாபிப்பவர்கள் அவர்கள்.அதில் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தங்களை சார்ந்தவர்களுக்கும் சுய நரகத்தை ஸ்தாபித்து விடுகிறார்கள் என்பதுதான்.இவர்கள் பல நோய்களின் கொள்முதல்காரர்கள்.

நோய் கொண்டிருப்பதில் உங்களுக்கு நிறைய பெருமிதங்கள் இருக்குமேயாயின் சந்தேகமே வேண்டாம் நீங்கள் கேட்கும் நோய்கள் அத்தனையும் உங்களுக்கு கிடைத்து விடும்.ஒரு மோட்டார் சைக்கிள் கேட்டால் எப்படி அது கிடைக்கிறதோ அப்படித்தான் நீங்கள் பைபோலார் டிஸ்ஆடர் கேட்டாலும் கிடைப்பது.ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு மனோபாவம்.விஷ்ணுவுக்கு எதிரான மனோபாவம்.

இவையெல்லாம் இருக்கட்டும் .இவை இருக்கும் . இருந்தாலும் இறைவுணர்வால் இது குறையவும் கூடும்.ஆனால் இறைவுணர்விற்கே எதிரான சில பொது குணங்கள் இருக்கின்றன.நீங்கள் எத்தனை சாமிகளை கும்பிட்டாலும் இறையருள் கிடைக்காத பாப குணங்கள் இவை

பொறாமை ,நீதியுணர்வின்மை ,அவதூறு,கோள் மூட்டுதல் ,பழிவாங்குதல் இந்த ஐவகை குணங்களும் இறையருளிலிருந்து விலக்கி வைக்கின்றன. பிறரை கண்காணிப்பவர்களாக அன்பற்றவர்களாக உங்களை மாற்றுகின்றன.அனைத்து நோய்களையும் பரிசளிக்கின்றன.

பொறாமை என்பது பிறர் தங்களுடைய அருங்காரியங்களால் அல்லது தங்களுடைய உழைப்பால் அல்லது தங்களுக்கு உரியவற்றை செய்ததிலிலிருந்து பெற்ற பெருமைகள் ,புகழ் , செல்வங்கள் ,மேன்மைகள் ஆகியவற்றை செயலின்மையில் இருந்து அவதானித்து ; அவற்றை பெறவோ,அழிக்கவோ விளையும் மனோ எண்ணத்தைக் குறிப்பது...பொறாமை. ஒவ்வொரு உண்மையான செயலுக்குப் பின்னரும் நிறைவானதொரு பெருமை இருக்கிறது.செயலில் தொடர்பு இல்லாமல் பெருமையை மட்டும் கவரும் எண்ணமே அது.

அறியாமையிலிருந்து ,இப்படிச் செய்கிறேன்,இப்படியிருக்கிறேன் ,ஏன் இப்படியென்று விளங்கவில்லை என்று சொல்பவராக இருந்தால் அவருடைய பெயரே பாவி . நோய்களின் தோற்றுவாய் பாபம்

நீதியுணர்வின்மையும் ,அவதூறும் கொண்டவர்கள் பாவிகள்.நீதியுணர்வின்மை என்பது அதிகாரத்தின் பக்கமாக அல்லது தனக்கு சாதகமானது என கருதுகிற தரப்பில் நின்ற வண்ணம்,பிற தரப்பை அணுகுதலைக் குறிப்பது.அவதூறு என்பது நீதியின்மை பெற்றடுத்த குழந்தையை மடியில் எடுத்துக் போட்டு கொஞ்சுவது.

இந்த ஐவகை குணங்களிலும் மன்னிப்பே இல்லாதவை என்பது நீதியுணர்வின்மையும் , அவதூறும் ஆகும்.இறைவுணர்வால் ஏற்கவே இயலாத பாபங்கள் இவையிரண்டும்.சிலர் யோசிப்பார்கள் நாமும் கோவில் குளங்கள் அனைத்திற்கும் செல்கிறோம் ஒன்றும் நடைபெறுவதில்லை.ஆனால் அவனுக்கு கொடுக்கிறான்,இவனுக்கு வாரி வழங்குகிறான் என்றெல்லாம் சொல்வார்கள்.அடிப்படையில் இவ்விரு குணங்களையும் கொண்டிருப்பார்கள்.இந்த இரண்டு பாப குணங்களும் இல்லாமல் பிற எல்லாவித அசுத்தங்களையும் வைத்திருந்தாலும் கூட இறைவன் அவனை மன்னிப்பதற்கு தயாராகவே இருப்பான்.இருக்கிறான்.இவ்விரண்டிற்கும் மீட்சியே இல்லை

தன்வந்திரியை வணக்கம் செய்ய வேண்டும் எனில் உண்மையில் மனத்தின் கண் மாசிலாதவனாக இருந்தாலே போதும்.அவர் கடைந்தெடுத்த அமுது அத்தனையும் உங்களுக்கே சொந்தமாகும்.நன்று💖


DHANVANTRI

[ Thanjavur painting, guilded and gemset, Gouache on board, 15" X 18", 2012 ,படம் -artist   balaji  srinivasan சேகரிப்பிலிருந்து ...]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"