கோணங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக... இக்கவிதை

ஊன்றுகோல் குக்கரின் ஓசையும் கலந்து பருகிய தேநீரில் ஏழு எண்ணங்கள் காட்சிகளாயின முதல் எண்ணத்தில் படிந்திருந்த தூசியைத்தட்டி வெளியேற்றினேன் ஒடுங்க மறுத்த சுய மரணத்தை உள்ளே தள்ளி கொலையின் எண்ணத்தைக் கையிலெடுத்துப் பார்த்தேன் பளபளப்புடன் மினுங்கியது அது எல்லா புறங்களிலும் சவரக்கத்தியின் கூர்மையில் இருந்ததை உருளையாக்கிக் கைத்தடியாக்கிக் கொண்டேன் குருதியும் பழியும் பாவமும் ஊன்றுகோலானது எடுத்து நடக்கத் தொடங்கியதும் வந்து வழி மறித்தது கொலையுண்டிறந்தவனின் ஒரு கவிதை * கொலையுண்டிறந்தவனின் தாயை நீங்கள் பார்க்காமலிருக்கக் கடவது முகமெல்லாம் ஆயுதமாக கொலையைக் கண்களில் வைத்திருக்கிறாள் மகனை நீங்கள் நோகாமலிருக்கக் கடவது அவன் எல்லா பொழுதுகளிலும் சவத்தைச் சுமக்கிறான் பிரேத அறையின் முடுக்கம் அவனில் நிறைந்திருக்கிறது . மனைவியொரு பழந்தெய்வம் அவளிப்போது வைரமாயிருக்கிறாள் மகளை நீங்கள் சலிக்காமலிருக்கக் கடவது அவள்தான் இப்போது அன்னையாயிருக்கிறாள் [ கோணங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்தாக... கல்குதிரையில் முன்பு வெளிவந்த இக்கவிதை ]