எழுதுகிறவனின் பொறுப்பு.

எழுதுகிறவனின் பொறுப்பு.
எங்கள் ஊரில் மண் வெட்டுபவனுக்குச் சம்பளம் ரூ 700 . காலையில் 9 மணிக்கு வந்தால் மதியம் இரண்டுமணிக்குக் கரையேறுவார்கள்.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் எனக்கு மண்வெட்டுக்குக் கூலியாக 600 வரையில் கிடைத்திருக்கிறது.மதியம் 2 மணிக்கு மேல் கரையேறிவிடலாம் என்பதே இந்த கூலி வேலையில் உள்ள சௌகரியம்.உடலுழைப்பு சார்ந்த பிற வேலைகளுக்கு கையாளாகச் செல்லும்போது மாலையில் ஆறுமணிக்குத் தான் கரையேற முடியும்.அதிலும் நிர்வாகி மறுநாள் வேலைக்கான பொருட்களை சேகரிக்கவோ , வேறு ஏதேனும் பணிக்கோ பின்னர் அழைத்தால் தட்டமுடியாது.வீடு வந்து சேர உடல் உண்டதும் உறக்கத்திற்கு அழைக்கும்.
ஒரு பனை ஏறி இறங்கச் சம்பளம் இப்போது நூற்றியைம்பது ரூபாய்.பத்து பனை ஏறி இறங்கத் தெரிந்தவன் நாளொன்றுக்கு ரூ 1500 பார்ப்பான்.அதில் 500 செலவென்றாலும் கூட ஆயிரம் மிஞ்சும்.பனையேற்றை கற்றுக் கொள்ளாமல் விட்டது தவறு.தென்னை ஏறத் தெரிந்தவன் ஆயிரத்திற்கு குறையாமல் சம்பாதிக்கிறான்.ஐயாயிரம் ரூபாய்க்கு மீன் வாங்கி விற்கத் தெரிந்த சாமர்த்தியத்திற்கு மதியத்திற்குள் 1500 பார்த்து விட முடியும்.கழிவறைத் துப்புரவு வேலைக்கும் சென்றிருக்கிறேன்.சில வேளைகளில் ஒரு மணி நேரத்திலும் வேலை முடியும்.சில சமயம் மூன்று மணிநேரமும் ஆகும்.கணிக்க முடியாது என்றாலும் கையில் 900 ரூபாய் வந்து விடும்.மாலைப்பொழுது நம் கைவசத்தில் இருக்கும் .
குடியை நிப்பாட்டுவதற்கும் முன்னர் தரகிலும் இருந்தேன்.அறிவிக்கப்பட்ட தரகர் வேலை இல்லை இது.காலையில் யாராவது எங்கேனும் அழைப்பார்கள்.கொலையாளிகளுக்கு வக்காலத்து ஏற்பாடு செய்து கொடுப்பது தொடங்கி ,குழந்தைகளுக்கு சாதிக் சான்றிதழ் பெற்றுத் தருவது வரையில் செல்ல வேண்டியிருக்கும்.பென்சன் வராதவர்களுக்காக அரசுக்கு கருவூலம் செல்ல வேண்டி இருக்கும்.ஜாமீன் தேவைப்படுபவர்களுக்கு சாட்சிகளை , பிணையத்தை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.எவரையேனும் ஒருவரை காவல் நிலையத்தில் இருந்து மீட்க வேண்டியிருக்கும்.ஒரு நோயாளியை அரசு மருத்துவமனையில,பிற இடங்களிலோ அனுமதிக்க வேண்டியது வரலாம்.தோலைதூரம் அவர்களோடு உடன் செல்ல நேரலாம்.கையில் கிடைப்பதை பெற்றுக் கொள்ள வேண்டிய வேலை இது.குறைவென்றோ கூடுதல் என்றோ கோஷமிட முடியாது.இன்று என்ன வேலை என்றெல்லாம் தீர்மானிக்க முடியாது.தினமும் ஏதேனும் வேலை வந்து கொண்டுமிருக்கும் . சில சமயம் எதுவுமே வராது.எப்படி இருந்தாலும் காலையில் எனக்குத் தூக்க முழிப்பு வருவதைப் பொறுத்துத்தான் எந்த காரியமானானும்.
பெரும்பாலான பாவகாரியங்களை செய்து இரவைக்குடித்து எச்சரித்து விட்டு தூங்கி எழும்ப எப்போது என்றெல்லாம் சொல்லமுடியாது.பொருள் மதிப்பு நிச்சயமில்லாதது.சில சமயங்களில் நம் கையிலுள்ள பொருளும் கூட சென்று விடும்.குடிக்கு மட்டும் குறைவிருக்காது.இவையெல்லாம் வெறும் விர்த்திகெட்ட வேலைகள்தான். வட்டத்தை சுற்றியுள்ள அத்தனை குற்றவாளிகளோடும் சரி,கோமான்களோடும் சரி,பிரமுகர்களோடும் சரி தொடர்பிலிருக்க வேண்டிய வேலை. .மனம் குழம்பிய நபர்களோடு செல்லுகிற பிரயாணம் இது.அவர்களோடு உரையாடுதல் பெருந்துன்பம்.பாப காரியங்களுக்கு உடன் செல்லும்போது கிடைக்கும் காசு சின்னதாக இருப்பினும் சரி , பெரிதாக இருப்பினும் சரி மேனியில் தங்காது. ஒட்டாது.சுடுகாட்டில் கூட வேலை செய்யலாம் . செய்திருக்கிறேன்.அது தங்கும் .பாப காரியங்களுக்கு உடன் சென்றால் தங்காது என்பது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் தீமைகளே நடைபெற்றுக் கொண்டிருக்கும்.காரணமறியா தீமைகள் நமது பாப காரியங்களிலிருந்து தொற்றிப் படருபவைதான்.நீங்கள் விரும்பிப் போகவில்லையே அம்மையே என்று துர்க்கையிடம் மன்றாடினாலும் அவளால் ஓரளவிற்குத் தான் தற்காக்க முடியும்.பாவத்தில் சம்பாதிக்கும் பணம் மனநோயில் கரைவதையெல்லாம் அனுபவத்தில் நிறைய பார்த்து விட்டேன்.
இந்த வேலையொன்றும் அவ்வளவு எளிதானதில்லை.ஏன் உங்களை அழைக்கிறார்கள் , காத்திருக்கிறார்கள் என்பதற்கெல்லாம் நிறைய காரணங்கள் உண்டு.அவற்றை சொன்னால் அது கிளை கிளையாக விரிந்து செல்லக் கூடியது.இந்த வேலையில் சமூகத்தின் அத்தனை முகங்களோடும் உள்ள தொடர்பு உங்களில் பிசைந்து கிடைக்கும். எல்லாமே ஒன்றுதான் சந்தர்ப்பங்கள்தான் மனிதனை வேறுவேறாக மாற்றி வைத்திருக்கின்றன என்பதை விளங்கும் ஒரு திருத்தலம் இது.
சுடுகாட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாலும் கூட காரியம் செய்பவனை பல மடங்கு உற்சாகப்படுத்தி விடுவேன். இணைந்து எரித்தலைக் கலையாக்கி விடுவோம் .காரியம் செய்பவர் அந்த உற்சாகத்திற்காகத் தான் என்னை அழைக்கிறார்.அவருக்கு வேறு ஆட்கள் இல்லாமல் இல்லை.ஒருமுறை ஒரு ரெட்டை கொலையாளி "சரியாகத்தாண்ணே செய்தோம் .இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று என்னை நோக்கிக் குற்றஉணர்ச்சியேதுமின்றிக் கேட்டான்". அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. வக்கலாத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டுத் திரும்பினேன்.எனக்கு ஆர்வமற்ற வேலைகளில் எனக்கு மிஞ்சுவது மனச்சோர்வுதான் . இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் தமிழ் சமூகம் எழுத்தாளனுக்கு,கவிஞனுக்குப் பொறுப்பதிகம் என்று கருதுவது போல படுகிறது.கூலியற்ற பொறுப்பு அது என்று நம்புகிறது .
பொருள் மதிப்பை முன்வைத்து மட்டுமே அனைத்தையும் அளவிட்டுப் பார்க்கும் ஒரு சமூகம் ,பொருளையே அவன் கையில் தராத நிலையில் இந்த கன பரிமாணப் பொறுப்பை அவனிடம் எதிர்பார்ப்பது விந்தைதான்.அவன் சரியாக இருக்கவேண்டும் என்கிற மன்றாட்டம் வேறு அதற்கு இருக்கிறது.
எங்களுக்கென்று தனியே கடவுள் விஷேச வயிறையொன்றும் படைக்கவில்லை.நீங்கள் உண்ணும் அதே அரிசிதான் எங்களுக்கும்.பேருந்துக்கு கட்டணத்தில் எங்களுக்கென்று மானியங்கள் ஏதுமில்லை.உங்கள் குழந்தைகளுக்கு கல்விக்கு இந்த சந்தடியில் எவ்வளவு செலவாகிறது அதேதான் எங்களுக்கும் செலவாகிறது .எழுதுகிறவன் உடலுக்கு பிரச்சனைகள் என்று வந்தால் எடுத்துக் கொள்ள சகாயவிலையில் மருந்துகள் எதுவும் விற்பனை செய்யப்படவும் இல்லை. உங்களுக்கிருக்கும் அதே லௌகீகம் தான் நாங்களும் பராமரித்துக் கொண்டிருப்பதும்.எங்கள் வாழ்க்கை மானியங்கள் அற்றது.எங்கள் உழைப்பிற்கு உரிய கூலி கிடையாது ஆனால் கடமைகளும் பொறுப்புகளும் அதிகம் என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள் அன்பர்களே?
நான் இதழ்களுக்கோ ,பிரசுரத்திற்கோ எழுதுபவற்றுக்கு ஒரு பிரசுரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்கிறேன் என வைத்துக் கொள்ளுங்கள் .ஐந்து நாட்கள் அதில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.கொத்தன் எடுத்துச் செல்லும் கைக்கரண்டியின் தின வாடகை ஐந்து ரூபாய்தான்.எனது கைக்கருவிகளான நூற்களின் விலையோ தங்கத்தின் ஏறுமுகம்.ஐநூறு ரூபாய் தருகிறீர்கள் .உலக உன்னத லட்சியங்களை எல்லாம் இந்த ரூபாயில் எப்படி காப்பாற்றுவது ? ஒரு கிலோ ஆட்டுக்கறியை எடுத்து வந்த விருந்தினனுக்கு எப்போது சமைத்துப் போடுவது?.மினுங்கும் துணியை எப்போது உடுத்துவது?அதுவும் தீபாவளிக்குக் கேட்டு நீங்கள் பிரசுரிக்கிற கவிதைகளுக்கு கிறிஸ்மஸில் அந்த ஐநூறு வந்து சேர்கிறது.அது எப்போது வந்து சேரும் என்பதற்கும் உறுதிப்பாடு கிடையாது.தமிழ் நாட்டில் எழுதுகிறவனுக்கும் ஒரு வயிறு உண்டு எனக்கருதுகிற ஒரு பத்திரிகை கூட தமிழில் கிடையாது.இதழ் ஆசிரியர்களே நீங்கள் லட்சத்தில் வாங்குகிற சம்பளத்தில் இது எத்தனை சதமானம்?

ஆனால் எழுதுகிறவன் சரியாக இருக்கவேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்ப்பது போல உள்ளது. ஓசிப் பொறுப்பு .ஒரு ரூபாய் சம்பளத்தில் முதலமைச்சர் பதவி.ஒரு பஸ் கண்டக்ட்டர் பயணச்சீட்டை கிழித்துக் கொண்டே எழுதுவது போன்ற அவகாசம்தான் எனக்கெல்லாம் கிடைப்பது.பண மதிப்பு மட்டுமே கொண்ட சமூகம் தானே நீங்கள்?முதலில் கூலியை ஒழுங்காகத் தரப்பாருங்கள்.பொறுப்பையும்,பருப்பையும் பின்னர் விவாதிக்கலாம்.தான் உருவாக்குகிற பண்டத்திற்கு தானே விலையை நிர்ணயிக்க முடியாத ஒரே தொழில் இன்று எழுதுவது மட்டும்தான் .பாலியல் தொழில் கூட நவீனமடைந்து விட்டது.பலமடங்கு மேம்பட்டிருக்கிறது.எழுதுகிறவன் ஆகச் சிறுபான்மை விளிம்பு.இங்கு வந்து நான் என்ன செய்யவேண்டும் என்பதற்கு விளக்கமளித்துக் கொண்டிராதீர்கள். ஆலோசனைகளில் உருண்டு கொண்டிராதீர்கள்.நான் கொலையாளியுடன் உடன் செல்வதா ?,வெடிகுண்டு வைப்பவனோடு செல்வதா ? அல்லது தீமைகளை பின் தொடர்வதா என்பது பற்றி நான் முடிவெடுத்துக் கொள்கிறேன்.நீங்கள் எப்போதும் போல சற்று ஓய்வில் இருங்கள்.

No comments:

Post a Comment

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...