கபாலி

தமிழ் வெகுஜன மனப்பரப்பில் நிகழ்ந்திருக்கும் மாயாஜாலம்
கபாலி
தமிழ் பொது மனப்பரப்பின் ஆழ்நிலைக்குள் புதிய புனைவு வடிவை , ஆழ்மனதை படைத்துக் கொள்ள உதவி செய்திருக்கும் சினிமா கபாலி. வழக்கமான கொள்ளைக்கூட்ட சினிமாக்களுக்கிருந்த நாயக பிம்பஆற்றலின் : சிறிய வரையறைகளை உடைத்து தமிழ் மனப்பரப்பில் அழகியல் ரீதியிலான மாயாஜாலத்தை கபாலி சினிமா ஏற்படுத்தியிருக்கிறது.தமிழின் பொதுமனப்பரப்பில் கபாலி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் : புனைவு மாற்றம் ,உடலியல் மாற்றம் மிகவும் விசேஷமானது மட்டுமல்ல.தமிழ் மனப்பரப்பில் நிதானமும் நுட்பமும் கூடிய புதிய உருவாக்கம் இது .தனது இயங்குதளத்தை இங்கிருந்து விலக்கி மலேஷியாவில் நிகழ வைத்திருப்பதிலிருந்தே புனைரூபம் பொறுப்புணர்ச்சி மிக்கதாகவும் , கண்ணியமானதாகவும் உருமாற்றமடைந்து விடுகிறது.சமூகவியலை அது மறுபேச்சு செய்ய விரும்பவில்லை . மனதின் உறைநிலைப் பகுதிக்குள் நேரடியாக வந்து விடுகிறது.
தேர்ந்த வண்ணங்கள்,உடல்மொழி வெளிப்பாடு என மனப்பரப்பின் ஆழத்தில் இறங்கி அங்கே பதுங்கியிருந்த ஆழ்மனதின் எதிர்மறையான ரேகைகளை தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்த சினிமா.அரசியல் ரீதியாகவும் ,பிரச்சாரங்கள் மூலமாகவும் செய்ய இயலாத காரியத்தை தனது புனைவின் ஆற்றலாலும் அழகியலாலும் செய்திருக்கும் பா.ரஞ்சித் வியப்பிற்குரியவர்.பாராட்டிற்குரியவர் .
மிகவும் திறமையான ,ஆற்றல் மிகுந்த ,அழகியல்தன்மை கொண்ட , பிரச்சார தொனியற்ற ஊடுருவும் உருவக சினிமா கபாலி.யதார்த்தக் குடுவைகளுக்கு இது ஆற்றியிருக்கும் புனைவுத்தாக்கத்தின் வலிமை உணரப்பட இன்னும் வெகுகாலம் ஆகலாம்.சமகால வெகுஜன அழகியலில் இது போன்றதொரு பொது மனச்செயல்பாடு சமீபகாலங்களில் ஏற்படவில்லை.
சில கண்டுபிடிப்புகளை அடைந்த திரைப்படங்கள் விசாரணை போல வந்திருக்கின்றன.பொதுமனப்பரப்பை ஊடுருவி அதனில் தலைகீழ்மாற்றத்தை சாத்தியப்படுத்தியிருப்பது கபாலி . சமுகவியலிலும் ,உளவியலிலும் மெருகேறியிருந்த பழமையை நீக்கம் செய்திருப்பதில் கபாலி அடைந்திருக்கும் பாய்ச்சல் கடுமையானது.புத்துணர்ச்சியூட்டுவது . இந்த சினிமா பற்றி பொதுப்பரப்பில் நடைபெறும் உரையாடல்கள் வெறும் பிறழ்வுகள் மட்டுமே.மனப்பரப்பின் இறுக்கம் ஆழ்மனதில் கலைவழியாக உடைவதன் சத்தத்திலிருந்து தோன்றுகிற பிறழ்வுகள்
இவை .
ரஞ்சித் தனது உளவியலில் கண்ட மெய்யியலை பொதுமனப்பரப்பிற்கு புனைவாகவும்,படைப்பாகவும் நுட்பமாகக் கடத்தியதில் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.ஆழ்மனதின் பழைய உருவகத்தை , அதன் இறுக்கத்தை ,அதன் ஆழ்மனத்தாக்கம் செயல்படும் இடத்திலேயே நகர்ந்து உடைப்பதென்பது , நொறுக்குவதென்பது கடுமையான பணி.கபாலி வழியாக இந்த ஆழ்மன காரியம் நடந்திருக்கிறது.
கொள்ளைக்கூட்ட நாயகபிம்ப உருவாக்க சினிமாக்கள் உலகிலும் சரி , தமிழிலும் சரி ரஜினி சினிமாக்களிலும் சரி ,கமல் சினிமாவிலும் சரி அதிகம்.கபாலிக்கு அது ஒரு வடிவம் மட்டுமே . அதிலிருந்து கபாலியென்னும் புனைவின் வெளி சென்றடையும் ஆழம் வேறு.
வழக்கமான கொள்ளைக்குழு மோதல் என்பது உள்ளிறட்சியாக பொதுமனப்பரப்பின் உள்ளீட்டைக் குறிப்பது.வழக்கமாக இத்தகைய சினிமாக்கள் வெகுஜனத் தன்னிலையில் தற்காலிக ஊக்கசக்தியை ,தந்து நிறைவு செய்பவை .இரண்டொரு நாட்கள் விரைவாக பைக் ஓட்ட உதவக் கூடியவை.ஒரு புணர்ச்சி வேகத்தை அவை ஏற்படுத்தும்.அவ்வளவுதான். ஊக்கம் பெற்றவன் இரண்டொரு நாட்களுக்கு தன்னிலையில் இந்த ஊட்டத்தைப் பெற்றிருப்பான்.தனிமனித தன்னிலையை நிறைவு செய்வதும்,அவற்றில் சில ஆழ்மன குறியீடுகளை அவற்றுள் புகுத்துவதுமே இவற்றின் வேலையாக இருக்கும் .உள்ளீடற்ற தன்னிலையில் சில தற்காலிக ஊட்டங்களை இவை வழக்கமான Gangs ter சினிமாக்களில் பொதுமனத்துக்குத் தருவதுண்டு.அதன் கிளர்ச்சியை மையமாகக் கொள்வது குழுமோதல் திரைப்படங்களில் பிரதான வேலை. குழுமோதல் சினிமாக்களின் வணிகமும் இதுதான்.கபாலி இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது . கபாலி வடிவரீதியாக இந்த திரைவடிவத்தை கொண்டு பாவனை செய்தாலும்கூட அது ஆற்றியிருக்கும் பணியில் படைப்புச் செயல்பாட்டை நிகழ்த்துகிறது.
கபாலி தமிழின் ஆழ்மனதில் ஏற்கனவே பழகி வந்த ஒரு உருவகத்தை நீக்கம் செய்து விட்டு அதற்கு ஈடாக புதிய உருவகம் ஒன்றை ஆழ்மனதிற்கு வழங்குகிறது , பதிலீடு செய்கிறது . அதற்குரிய வண்ணங்களையும் ,உடலையும் வழங்குகிறது. இதனை இத்தகைய சினிமாக்களில் ஈட்டுவது என்பது அசாதாரணமான வேலை.அதனை கச்சிதமாக கபாலியில் செய்திருக்கிறார் ரஞ்சித்.ஆழ்மனதை பதிலீடு செய்கிற ,புதிய கனவுப்பிரதேசத்தை ஆழ்மனதிற்கு வழங்குகிற படைப்பு வேலை இது.மிகப் பெரிய கலைஞர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.அகிரா குரோசாவா போன்ற படைப்பாளிகள் இந்த ஆழ்மனவேற்றத்தை தங்கள் படைப்புகளில் செய்திருக்கிறார்கள்.
Gangs ter சினிமாவில் தீமையை முன்வைப்பதில் கவனம் இல்லையெனில் அது சுவாரஸ்யக் குறையை தரும்.அந்த ஒரு பலகீனம் ரஞ்சித்தின் கபாலியில் சொல்லமுடிந்த சரிவு.தீமையில் சார்புநிலை இதில் வெளிப்படையாக இருப்பது இந்த சினிமாவின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமற்ற ஒன்று.இதை கவனத்தில் கொண்டிருந்தால் பழைய எம்.ஜி.ஆர்.சினிமா தன்மை கபாலியில் விடைபெற்று , நீங்கி முழுமையாக கபாலி நவீனமடைந்திருக்கும். தீமையில் இயக்குனர் பொறுப்பைக் கைவிட்டிருந்தாலோ இந்த சினிமா ராம் கோபால் வர்மா போன்ற கலைஞர்களின் ஓட்டத்திற்கு நகர்ந்திருக்கும்.தீமையில் கலைஞன் ஒருதரப்புப் பொறுப்பை வைக்கும்போது உள்ளடக்கம் : அது நீதிபோதனையாக , புனிதமூட்டலாக மாறிவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.கபாலியில் குணரிதியாக சில இடங்களில் தீமையில் பொறுப்பேற்கும் தன்மை சோர்வூட்டக் கூடியது.
கபாலியில் பல தளங்கள் உள்ளன.பலவிதமான வாசிப்பிற்கான இடங்கள் உள்ளன.மௌனங்கள் உள்ளன.பல காட்சிகளில் மெருகேறியிருக்கும் கனவுத்தன்மை மிகுந்த ஆர்வமூட்டியாக இந்த இந்த சினிமாவில் அமைந்திருப்பது வெறுமனே தற்சயலானவை போன்று தோன்றவில்லை.உரத்த சப்தம் மட்டுமே Gangs ter சினிமாவிற்குரியது.Gangs ter சினிமாவில் ரஞ்சித் அபாரமான படைப்புச் செயல்பாட்டை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ரஜினியின் மகள் நீரில் மிதக்கும் பறவைத் தோற்றம் மிகச் சிறந்த படிமம்.யதார்த்தத்தளங்களில் காட்சிவிரயங்கள் எதனையும் செய்யாமல் , விவரணையிலிருந்து விலகி நேரடியாகவே கபாலி மைய உருவகத்திற்குள் நிகழும் சினிமா. மரபான சமூக விவரணையை நேரடியாக வேண்டாத புனைவின் உள்ளடக்கம் கபாலி .விவரணைகள் தேவைப்படுமாயின் இதற்கு முன்னரும் பின்னரும் உள்ள சமூகக்காரணிகளில் ,அரசியல் காரணிகளில் படித்துக் கொள்ளலாம்.
கபாலியை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் வழியாகத்தான் அதன் விந்தையை பார்வையாளன் அடைய முடியும்.இது இந்த சினிமா நமக்கு ஏற்படுத்தியிருக்கும் சவால் முதல் பார்வையிலேயே அனைத்தையும் அறிந்து கொள்வது இயலாது.எனினும் Gangs ter சத்தத்திற்காக காந்தியையும் ,அம்பேத்காரையும் எதிரெதிராக காணும் போக்கு சரியானதல்ல.அப்படி நிறுத்துவது பொதுபுத்தியிலிருந்தும் ,அரசியல்அதிகாரத்திலிருந்தும் வெளிப்படுவது.
கபாலி திரையில் முன்வைக்கும் வண்ணங்களில் அழகியல் மிகவும் நூதனமானது.வண்ணங்களில் ஒரு புதிய உணர்வை தன்வயப்படுத்தியதில் ரஞ்சித்தின் கூருணர்ச்சி அபாரம் .அதனைப் போன்றே உடல்மொழியைக் கையாள்வதில் அவர் அடைந்திருக்கும் தேர்ச்சியும் .ரஜினிகாந்தின் மகளிடம் வந்து சேருகிற துப்பாக்கியும் உடல்மொழியும் பாரம்பரியமான கட்டுமானங்களை உடைத்து சிதைக்கக் கூடியவை. அவளது துப்பாக்கியும் ,உடல்மொழியும் சாதிய மனவோட்டத்தை தகர்க்கக் கூடியவை.அவை வெடித்து சிதறுவது அந்த மனப்பாங்கின் உள்ளே என்பதை பார்வையாளனால் உணர இயலும்.
தமிழ் சினிமாவின் வெகுஜன பார்வையாளன் சினிமாவை எதிர்கொள்ளும் விதம் அப்படியே சினிமாவின் நேரடியான உள்ளடக்கத்தை எடுத்துக் கொள்வதல்ல.அப்படி அவன் எடுத்துக் கொள்வதில்லை.சண்டைக்காட்சிகளும்,பாலியல் காட்சிகளும் அவனுக்கு கேளிக்கைப் பொருட்கள்தான் அன்றி உண்மைகள் அல்ல.சமூகத்தை சினிமா பிரதிபலிப்பதாக அவன் எடுத்துக் கொள்வதில்லை.அதிலிருந்து சில அதிகாரம் சார்ந்த குறியீடுகளை,அழகியல் சமிக்ஞய்களை அவன் பெறுவான்.சமகாலத்துடனான தனது இருப்பு பற்றிய தொடர்பை அவன் பெறவிளைவான்.அதில் ஒரு ஆற்றல் அவனுக்கு வந்து சேரவேண்டும்.ஆற்றல் கிடைக்கும் பட்சத்தில் அவனது கேளிக்கை நிறைவு பெறுகிறது.ஆனால் இதற்கு மாறாக கபாலி இரண்டு விதமான சர்ச்சைகளில் விவாதிக்கப்படுவதற்கு அது பொதுவில் ஏற்படுத்தியிருக்கிற படைப்புத் தாக்கமே காரணம் என்று நினைக்கிறேன்.தங்கள் இருப்பையே கபாலி இல்லாமலாக்கிவிட்டது போல சமூக ஊடகங்களில் கதறி அழுகிற குரல்கள் முன்வைக்கும் பராதுகள் கபாலி சினிமாவில் மிக சிறிய புகைமூட்டங்களை மட்டுமே முன்வைத்திருக்கின்றன.ஆனால் பண்டைய மதிப்பீடுகளே தங்கள் இருப்பிற்கான அடையாளங்கள் எனக்கருதும் தன்னிலைகள் தங்கள் இருப்பிற்கான போதாமையை அகத்தில் கண்டுணரும் வாய்ப்பை இந்த சினிமா பார்வையாளனுக்கு வழங்கியிருக்கிறது என நினைக்கிறேன்.சமூக ஊடகங்களில் நிகழும் இருதரப்பு அதிகார யுத்தத்திற்கான வாய்ப்பிற்கு இந்த சினிமாவில் நிரந்தரமான உத்திரவாதங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

கபாலி ஆழ்மனதில் நிகழ்ந்திருக்கும் தீவிரமாற்றம்.அதிபுனைவு. அபாரம்.

1 comment:

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...