நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால்

நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால்
என்னைப் பற்றிய கதைகள் எத்தனை என்று கணக்குப் பார்த்தால் ஒரு மனிதனாக வாழுவதற்குப் போதுமானவையாகவே அவை உள்ளன.பெரும்பாலானவை ஸ்வாரஸ்யத் தன்மை குன்றாதவை.சக மனிதன் கொள்ளவேண்டிய கற்பனைக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லையெனில் அப்படியொரு வாழ்க்கை வாழ அவசியமா என்ன ?
பரிதாபகரமான எளிய கற்பனைகளை நான் பொருட்படுத்தவில்லை.ஒருவர் என்னை ஐயர் என்று எழுதுகிறார்.ஐயங்கார் என்றேனும் சொல்லக் கூடாதா ? மற்றொருவர் சைவப் பிள்ளைமார் என்கிறார் .நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்றேனும் கணக்கிடக் கூடாதா? இந்து நாடார் என்று கண்டு பிடிப்பதற்கெல்லாம் ஏதேனும் புத்திசாலித்தனம் தேவையா என்ன ? சாதித் சான்றிதழ் மட்டும் போதுமே ! பற நாய் என்று சதா என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு அம்மையாரும் இருக்கிறார்.நல்லது.சாதிக் கற்பனைகள் அலுப்பூட்டுபவை.கற்பனையின் சாத்தியப்பாடுகளே அற்றவை.
என்னுடைய ஆண்குறியின் நீள அகலத்தை சதா கணக்கிட்டுக் கொண்டேயிருக்கும் பழைய நண்பர் ஒருவர் உண்டும்.ஆர்வத்திற்குப் பஞ்சமற்றவர் அவர்.என்னிடம் பழக்கம் கொண்ட எதிர்பால் நண்பர்கள் அனைவருக்கும் என்னோடு தொடுப்பு என்னும் கற்பனைக் கணக்கை திளைப்பூட்டும் ,ஆர்வமூட்டும் சிறப்பு மூளை அவருடையது.அவரது துணைவியார்,காதலிகள் உட்பட பலரும் எனக்கு நண்பர்கள்.சில சமயங்களில் சகபால் மீதும் சந்தேகம் உண்டு அவருக்கு.பிராணிகளை மட்டுமே அவர் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்.அவை என்ன பாவம் அவருக்கு செய்தன என்று தெரியவில்லை.பிராணிகளுக்கு அந்த வல்லமை கிடையாது என்று அவர் நினைக்கிறாரா தெரியவில்லை.
சதிகாரன் ,கிரிமினல் ,கொலையாளி இப்படி நீளும் கற்பனைகளும் உண்டு.அவற்றில் சில ஸ்வாரஸ்யங்கள் உண்டு.புனிதர் என்கிற கற்பனை பிடரியில் ஓங்கியடிப்பது.இப்படி நீளுகிற சகலவிதமான கற்பனைகளையும் ஒரு உருளியில் இட்டு நிரப்பி கலக்கி கூழாக்கி எடுத்தால் அதிலிருந்து நான் கிளம்பி எழுந்து வந்துவிடுவேன் என்பதும் உண்மைதான். உங்களைப் பற்றிய கதைகளையும் இவ்வாறு கூழாக்கினால் நீங்கள் தோன்றிவிடுவீர்கள் என்பதும் உண்மைதானே?
அரசியல்வாதிகள் விநோதமானவர்கள்.உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் என்னை இந்துத்வா என்கிறார்கள்.இந்துத்வாக்களோ மாவோயிஸ்ட் என்கிறார்கள்.புலிகள் பார்வையில் நானொரு செயல்பாடற்ற வெற்றுக் கம்யூனிஸ்ட் .அ.தி.மு.கவினருக்கு நானொரு தி.மு.க.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆம் ஆத்மியா ,அண்ணா தி.மு.கவா என்பதில் குழப்பம் .காங்கிரஸ்காரர்கள் இவ்விஷயத்தில் பரவாயில்லை.இவன் நிச்சயமாக காங்கிரஸ் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.காந்தியவாதிகள் இவன் காந்தியின் பெயரை சொல்லிக் கொண்டலைகிற தேச துரோகி என்கிறார்கள்.
ஒருமுறை பத்திரிக்கைக்கு சந்தா செலுத்த விரும்பி தொலைபேசியில் அழைத்த அன்பர் ஒருவர் "நீங்கள் யாரென்று கேட்டார்".தெரியாது என்று சொன்னேன்.இல்லை பொய் சொல்லாதீர்கள் "நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியாமலிருக்குமா என்ன ?" என தொடர்வினா ? தெரியாததால் தானே தெரியவில்லை என்கிறேன்.
ஆனால் "நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால் எனக்கு மறுக்க எதுவுமே இருக்காது .அப்படியே ஒத்துக் கொள்வேன்.
நகுலனைச் சந்திக்க ஒருசமயம் ஒரு வறட்டு கம்யூனிஸ்ட் என்னுடன் உடன் வந்திருந்தார்.வந்தவர் போதையில்லாமல் அவரால் எதிர்தரப்பு என அவர் கருதுகிற தரப்புகளுடன் பேசவே இயலாத அளவிற்கு தாழ்வுணர்ச்சி நிரம்பியவர் .அவருக்கென்றும் ஒரு தரப்பும் கிடையாது.இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்.சில விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றாலும் கூட இருப்பது போல நம்பிக் கொண்டிருந்தால் ; அதன் உரிமையாளரே நீங்கள்தான் என்னும் எண்ணத்தை அது கொடுத்துவிடும்.மார்க்சியத்தின் உள்ளூர் உரிமையாளரே அவர்தான் என்னும் எண்ணம் அவருக்கு உண்டு.
நகுலனிடம் உரையாட சம்சாரித்தனத்திற்கு வெளியே சிந்திக்கக் கூடிய ஒரு சிறுமூளை அவசியம்.வந்திருந்த சம்சாரியோ மார்க்சிஸ்ட்.பேசிக் கொண்டிருக்கும் போது ஒருசமயம் குறுக்கிட்டு நகுலனை நோக்கி "நீங்கள் ஒரு அத்வைதி என்பது எனக்குத் தெரியும் "என்றார்.பரவாயில்லையே கண்டுபிடிச்சிட்டேளே ! " என்ற நகுலன் "எனக்கும் இப்பதான் தெரியும்"
என்று கூறி ஓங்கிச் சிரித்தார்.
நகுலன் ஒத்துக் கொண்டுவிட்டாரென வந்திருந்த தோழருக்கு ஆன்ம சந்தோசம்.
ஓவியம் - பாலாஜி ஸ்ரீநிவாசன்

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...