கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
மருமக்கள் வழி மான்மியம் ,கவிமணி கவிதைகள் ஆகியவை சிறுவயதில் பள்ளிப்படிப்பு காலங்களில் மீண்டும் மீண்டும் படிப்பது என்பது ஒரு பழக்கமாக இருந்தது.தனக்கு ஏற்பட்ட சிரங்கை பற்றி அவர் எழுதிய சுய பகடிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. எனது பள்ளிக்காலத்தின் போது மறக்கவே இயலாத இரண்டு தமிழாசிரியர்கள் எனக்கு அமைந்தார்கள்.இருவருமே கவிமணி பேரில் பற்று கொண்டிருந்தவர்கள் .
ஒருவர் ஆறு முதல் எட்டு வரையில் எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த ஆறுமுகம் பிள்ளை.பழந்தமிழ் மரபிலக்கியத்தில் வித்தகர் .கற்பிப்பதில் நிபுணர்.அதுபோல தமிழ்ப்பாடங்களை சொல்லித்தர இப்போது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை.அவர் என்மேல் ஒரு சாறு ஏற்றினார் என்று சொல்லலாம்.தமிழ் வகுப்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தமைக்கு அவரே காரணம்.மூல குரு.பின்னர் வேலாயுதம்பிள்ளை தமிழாசிரியர்.வேலாயுதம்பிள்ளை இலக்கணத்தை மணிமணியாக நடத்துவார்.மறக்கவே மறக்காது.எனினும் எனது மரமண்டைக்கு இப்போது மறந்து போனது.ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு அணியிலக்கணத்திற்கு தேர்வுத் தாள்களில் திருக்குறளை உதாரணம் செய்ததில்லை.வெண்பாக்களை கேட்கப்படும் அணியிலக்கணத்திற்கேற்ப இயற்றிக் கொள்வேன்.வேலாயுதம் பிள்ளைதான் அதற்கு காரணம்.வேலாயுதம்பிள்ளை கம்பராமாயணத்தில் , சிலப்பதிகாரத்திலும் கைதேர்ந்தவர்.அவர் மாணவர்களுக்கு கற்பிக்கிறோம் என்கிற எண்ணத்தில் வகுப்புகளை நடத்துவதில்லை.பெருஞ்சபையில் சமமான பலரோடு உரையாடுகிற தொனியில் கம்பனையும் ,இளங்கோவையும் நடத்துவார்.பாடத்திட்டத்தில் உள்ளவை பற்றிய அக்கறைகள் கிடையாது .ஒன்றிரண்டு பாடல்கள்தான் பாடத்திட்டத்தில் இருக்கும் .அதனை முன்னிட்டு மொத்தத்தையும் முழுமையூட்டுவார் .அத்தகைய ஆசிரியர்கள் அமைய பெறுதல் வரம்.அவர்கள்தான் உள்ளிருந்து நமக்கும் மறைமுகமாகத் தொடர்பவர்கள்.கவிமணியை பின்பற்றியோ ,பாரதியைப் பின்பற்றியோ ,ஜீவாவைப் பின்பற்றியோ அந்த வயதில் நான் எழுதிக் காட்டும் பாடல்களை படித்து திருத்தமும் ஊக்கமும் செய்திருக்கிறார்."அவர் ஒரு சமயம் நீ கவிமணி போல வருவாய் " ஆசி கூறியிருக்கிறார்.வகுப்பில் எனது பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார்.பன்னிரண்டாம் வகுப்பில்தான் தமிழாசிரியர் கிருஷ்ணன் அணியிலக்கண உதாரணத்திற்கு திருக்குறளை தேர்வுத்தாள்களில் நான் எழுதுவதில்லை எனக் கண்டுபிடித்து அப்பாவிற்கு பராது முன்வைத்தார்.
ஆறுமுகம் பிள்ளைக்கும் ,வேலாயுதம் பிள்ளைக்கும் வெற்றிலைப் பழக்கம் உண்டு.வெற்றிலைக்கு முன்னர் மது அருந்தியிருப்பார்கள்.அவர்கள் மீது கொண்ட கவர்ச்சியால் பள்ளிக்காலத்திற்குப் பின்னர் சிலகாலம் வெற்றிலைப் பழக்கம் என்னிடம் வந்து தங்கியிருந்தது.எனது குடிப்பழக்கத்தின் ஓட்டத்தின் திசை வேறுவிதமானது.அதற்கும் வேலாயுதம் பிள்ளைக்கும் சம்பந்தமில்லை.ஆனால் குடிக்காத தமிழாசிரியனுக்கு தமிழ் சரியாகத் தெரியாது , வராது என்று எனக்கு ஒரு அபிப்பிராயம் இருந்தமைக்கும் , வலுவேறியமைக்கும் வேலாயுதம் பிள்ளையின் அழகுத் தமிழே காரணம்.சாராயம் அமுது போல அவர் தமிழில் இறங்கி நிற்கும்.மணக்கும். திருக்குற்றாலக் குறவஞ்சி,முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களில் எனக்கு போதத்தைத் திருப்பியவரும் அவரே.ஆனால் இதற்கும் முந்தைய ஒருசில தலைமுறைகள் மிகச் சிறந்த ஒழுக்கவாதிகள்.இந்த கோடு எங்கே பிரிகிறது என்பது சூட்சுமமானது.
ஒரு நூற்றாண்டிற்கும் முன்னர் தமிழ் பேரில் பெருங்காதலோடு செயல்பட்ட இரண்டு மூன்று தலைமுறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறார்கள்.இப்போதுள்ளவை அவற்றின் பழைய நினைவுகளின் எச்சங்கள்தாம் .கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. தெங்கம்புதூர் சாஸ்தாங்குட்டி பிள்ளை , சதாவதானி செய்குதம்பி பாவலர் என பெரும்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சாஸ்தாங்குட்டி பிள்ளை ஒரு சிந்தனைப்பள்ளி போலவே செயல்பட்டிருக்கிறார்.அவர் கவிமணிக்கு முன்னவரா பின்னவரா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. தமிழில் ஆர்வம் கொண்டிருந்த அடுத்த தலைமுறையினர் பலரும் சாஸ்தாங்குட்டி பிள்ளையிடம் முறைசாரா மாணவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.எ.என்.பெருமாள் போன்றோரிடமிருந்து இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.தமிழைக் கற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் எவரும் சாதி பேதம் பார்த்தவர்கள் இல்லை.


யோசித்துப் பார்க்கும் போது எனது மனமொழியை கண்டுபிடித்துக் கொள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ,அய்யா வைகுண்டசாமிகள்,அரிகோபாலன் சீடர் ஆகியோர் சிறுவயதிலேயே துணை புரிந்திருக்கிறார்கள் என்கிற போதம் எனக்கிருக்கிறது.அது உண்மையும் கூட .எங்கள் அப்பம்மை வழிக் குடும்பம் அய்யா வைகுண்டசாமியோடு தொடர்பு கொண்டது என்பதாலும் ,குடும்பக்கோவிலே அய்யா வைகுண்டசாமியின் நிழற்தாங்கலாக இருந்ததாலும் குழந்தை பருவத்திலேயே ஏடு படிக்கும் பழக்கம் உருவாகிவிட்டது.அகிலதிரட்டமானையைப் படிப்பது :அர்த்தம் விளங்காது எனினும் ஒரு பழக்கம்.பள்ளியில் தமிழை எடுத்துச் சென்றவர்கள்.பாரதி,கவிமணி,ஜீவா .ஜீவாவின் பாடல்கள் தளர்பாடம்.கண்ணதாசன் வந்து சேர்ந்தது பின்னர்தான்.

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1