ஜோக்கர்

ஜோக்கர் தமிழில் திரைவடிவம் கண்டிருக்கும் வீதிநாடகம்
வீதி நாடக குணம் கொண்ட தமிழ் திரை வடிவம் ஜோக்கர் சினிமா.தமிழ் சினிமா இன்று கொள்ளும் புதிய கோலங்களில் , சின்னஞ்சிறு மாற்றங்களில் இத்தகைய நாடகத்தன்மையும் கணக்கில் கொள்ளப்படவேண்டியதே.வீதி நாடகம் என்கிற வடிவம் பாதல் சர்க்கார் போன்ற உயரிய கலைஞர்களிடமிருந்து தோன்றி வங்காளத்திலிருந்து இங்கு வந்தது.முற்போக்கு முகாம்களிடம் சரிந்து பின் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரம் வரையில் முகமாற்றம் பெற்று பின் மறைந்து போன தமிழின் கலைவடிவம்.பாதல் சர்க்காரின் நாடகங்களை நேரடியாக கண்ணால் கண்டவர்களுக்கு அது எவ்வளவு சிறந்த கலைவடிவம் என்பது தெரிந்திருக்கும்.ஒரு கலைவடிவம் மறையும் போது அதற்கு மறுமலர்ச்சி வேறுவிதமாக தேவை. அந்த வகையில் நண்பர் ராஜு முருகனுக்கும் அவர்தம் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.வீதிநாடகத்தின் புதிய இடம்பெயர்வு இந்த சினிமாவில் சாத்தியமாகியிருக்கிறது.
பவா.அருள் எழிலன் ஆகியோரை தேர்ந்த நடிகர்களாக திரையில் கண்டது மகிழ்ச்சியைத் தந்தது.பவா.செல்லத்துரை இலக்கியத்தின் பக்கம் இருந்து நடிப்புத்துறைக்கு சென்றவர்களில் ,கவிஞர் ஜெயபாலனைப் போல சிறந்து விளங்குவார் என்று தோன்றுகிறது.மிகையற்ற தேர்ச்சி மிக்க நடிப்பாற்றல் பவாவிடம் வெளிப்பட்டிருக்கிறது.அருள் எழிலனும் அவர் பங்குக்கு குறைவைக்கவில்லை.
ஜோக்கரில் குறிப்பிடத்தகுந்த விஷயம் நமது எதிர்ப்பரசியலின் பண்புகளும் கூறுகளும் அடைந்திருக்கும் பிறழ்வு நிலையை சரியாகவும் தெளிவாகவும் கண்டுபிடிப்பு செய்ததில் அடங்கியிருக்கிறது.உயரிய பகடியுடன் அது வெளிப்பட்டிருக்கிறது. ஏன் அவை பழுதடைந்து பிறழ்வுற்றன என்கிற விசாரணையை நோக்கி ஜோக்கர் செல்லவில்லை.பிறழ்வை முன்வைத்திருக்கிறது. அதில் முற்றும் பெறுகிறது.சசி பெருமாள்,டிராபிக் ராமசாமி போன்ற கதாபாத்திரங்களின் பிறழ்வைக் கண்டுபிடித்து அடையாளம் காட்டியதில் ஜோக்கர் ஒரு கலைத்தன்மை பெறுகிற கூர்மை .இந்த சினிமாவில் நடந்த பங்களிப்பு இது.ஆனால் அந்த பிறழ்வை விசாரணை செய்ய இயலாதலில் இந்த சினிமாவின் கண்ணோட்டம் பழுதும் அடைகிறது.இது மேலும் விசாலமாகி வேறுதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கும் சினிமா . இயக்குனர் தனக்கு ஒரு மூடப்பட்ட சார்புநிலையை தேர்வு செய்ததால் ஏற்பட்ட இடர்பாட்டால் விசாலத்தின் வாசல்கள் மூடப்பட்டுவிடுகின்றன. கதாபாத்திரங்களின் முற்போக்குப் பிறழ்வை அவரால் விசாலப்படுத்த இயலவில்லை.பிறழ்வடைந்திருப்பதன் தத்துவார்த்த கண்ணோட்டம் விடுபட்டுப் போனதன் காரணமாக கதாபாத்திரங்களின் தட்டையான யதார்த்த நிலைகளுக்குள் தஞ்சம் பெறுகிறார் ராஜு முருகன்.பிறழ்வின் சமூகவியல்,உளவியல் , அரசியல் காரணிகளை , நடைமுறைகளை அவரால் ஆராய இயலவில்லை.நாயக பாத்திரத்திலும்,போராட்ட வழிமுறைகளிலும் அந்த பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவரின் வெளிப்பாடு மிகவும் சிறப்பு.துல்லியம்.
கழிப்பறை என்பதை எதார்த்தத்தில் கையாளாமல் புனைவின் ரகசியத்தில் வைத்து சொப்பனத்தன்மையுடன் கையாள முயன்றிருந்தால் இந்த சினிமாவின் வெற்றிடம் பிறழ்வுடன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும்.பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் குடை இந்த சினிமாவில் முக்கியமானதொரு குறியீட்டுத்தன்மை பெறுகிற அரிய உருவாக்கம்.பிறழ்வை கண்டுபிடிக்க அது சிறுகதைகளில் உதவுவதுபோல புனைவின் தயக்கத்துடன் பணியாற்றியிருக்கிறது.அதுபோல கழிவறைக்கு ஒரு புனைவுக் கூறும் மாயத்தன்மையும் அவசியம்.கழிப்பறை ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு இன்னும் ஒரு அரிய கனவாக இருப்பதை யதார்த்ததால் உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை.பதினாறு வயதினிலே சினிமாவில் பாரதி ராஜா ஸ்ரீதேவியை நகரம் நோக்கி அவள் மனம் திரும்பியிருப்பதை சித்தரித்தவிதத்தில் ஒரு மாயத்தன்மையைக் கட்டி எழுப்பியிருப்பார்.அதுமட்டும்தான் அந்த சினிமாவின் பிரதான கண்டுபிடிப்பு.இந்த சினிமாவில் கழிப்பறை மீதான சொப்பனம்,தவிப்பு,அழகுணர்ச்சி ஆகியவை யதார்த்தத்தில் சரிகின்றன .உள்ளக்கிடக்கையும் .அரூபமும் யதார்த்தத்தில் பல சமயங்களில் ஈடுசெய்ய இயலாதவை.அவற்றிற்கு ஒரு மந்திர மூட்டம் தேவை. யதார்த்தத்திற்கும் ,புனைவிற்கும் இடையில் ராஜு முருகன் கொள்கிற தள்ளாட்டமும் ,ஊசலாட்டமும் இந்த சினிமாவிற்கு தடையாக அமைந்துவிட்ட பண்புகள்.ராமசாமியின் இறுதி வசனங்கள் இந்த சினிமா உருவாக்கிய பிறழ்வுத்தன்மைக்குப் பொருந்தாத விழிப்பு நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் ஊர் மேடை நாடகங்களை நினைவூட்டுகின்றன.செங்கொடியை நினைவூட்டும் இளம்பெண்ணைப் பற்றிய விசாரணையும் போதுமானதில்லை.அவள் யார் என்பதன் அடையாளங்களும் கோடுகளும் பாரவையாளனின் கற்பனைக்கு விடப்பட்டிருக்கின்றன.
அடுத்தடுத்து ராஜு முருகன் கொள்ளவிருக்கும் பயணத்தில் இவையெல்லாம் சாத்தியமாகலாம்.சாத்தியமாகவேண்டும். நல்லது.புதிய முயற்சி. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...