பலாத்காரப் பொம்மைகள்

பலாத்காரப் பொம்மைகள்
பிள்ளையார் ஊர்வலங்களை எங்கள் ஊரில் என்னுடைய கல்லூரி காலங்களில் தொடங்கிப் பார்த்து வருகிறேன்.ஆரம்ப காலங்களில் எங்கள் பகுதி வழியே கடந்து சங்குதுறைக் கடற்கரையில் சென்று முடியும் ஒரேயொரு ஊர்வலம் மட்டுமே உண்டு.இப்போது மூன்றுவிதமாக இந்த ஊர்வலம் பிரிந்து மூன்று கடற்கரைகளில் சென்றடைவதாகச் சொல்கிறார்கள்.நாட்களும் இவற்றிற்கு தனித்தனியே விதிக்கப் பட்டிருக்கின்றன.பொது மக்களுக்கு
ஒருநாள் , மிதவாதிகளுக்கொரு நாள் ,தீவிரவாதிகளுக்கொரு நாள் என்று பிரிக்கப் பட்டிருக்கிறது.தீவிரவாதிகளுக்குரிய நாள் மிகவும் ஆபாசமானது. மதத் தீவிரவாதக் குழுக்கள் இடம்பெறும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் இந்த பிள்ளையார் ஊர்வலங்களில் பதற்றம் கொள்வது போல வேறு எந்த சமய ஊர்வலங்களிலும் சிந்திப்பதில்லை.அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை என்றாலும் கூட மாவட்ட நிர்வாகத்திற்கு அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்கிற சிறப்பு சிரத்தை உண்டு.பிள்ளையார் ஊர்வலங்களில் காட்டப்படும் அகங்காரத்தின் காட்டமும் ,விரசமும் இதற்கு பிரதான காரணம்.ஒரு சமய ஊர்வலம் கேடுவிளைவித்து விடக் கூடாது என்று சிந்திக்க வேண்டியிருப்பதிலேயே அதன் கேடும் உள்ளடங்கியே இருக்கிறது.
தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் இருந்த காலத்தில் இந்த ஊர்வலம் கடக்கும் பாதையில் நண்பர் ஒருவர் மதுக்கடையை ஏலம் பிடித்து நடத்தி வந்தார். இந்து தீவிரவாதிகளின் ஊர்வலம் வருகிற நாளில் ,ஊர்வலம் கடந்து செல்லும் போது கடை நிறைந்துவிடும்.இந்து அடிப்படைவாதிகளுக்கென்று ஊர்வலம் ஒருநாள் ஒதுக்கப்படுகிறது.அமைதியாகவும் ஒருநாள் ஊர்வலம் செல்கிறது.அமைதியாகச் செல்வோர் அவர்கள் ஊரிலிருந்தே தியானித்து பிள்ளையாரை நற்சிந்தையுடன் எடுத்து வருபவர்கள். இந்து அடிப்படைவாதிகளின் ஊர்வல நாளில் கடந்து செல்லுகிறவர்கள் அவசரத்தில் வந்து குடித்து விட்டுச் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.குடித்து வீட்டுக் கடந்து விட்டார்கள் எனில் பின்னர் அவர்களைத் தொடரமுடியாது. கடையை ஏலம் எடுத்தவன் அவர்களுக்கு ஊற்றிக் குடுத்து விட்டு தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.அதற்கென சில சிறப்புப் பணியாளர்கள் அந்த தினத்தில் நியமிக்கப்படுவதுண்டு.இல்லாமல் சமாளிக்க இயலாது.வெறி கொண்டு அந்த ஒரு நாளில் கத்திக் கொண்டே கடப்பதற்கு செயற்கை சக்தி அவர்களுக்கு நிச்சயமாக அவசியம்.வழிநெடுக பெண்குழந்தைகளிடம் சீட்டியடித்துக் கொண்டே நகர்கிற பல இளைஞர்களும் வாகனங்களில் இருந்த வண்ணம் கத்திக் கொண்டிருப்பார்கள்.பிள்ளையாருக்கு நிச்சயமாக இதில் பொறுப்பொன்றும் கிடையாது என்பதே எனது துணிபு.அவர் ஒரு பாவம் என்ன செய்வார் ? நமது தெய்வ உருவகங்கள் பலாத்காரத்திற்கும் ,தன்னகங்காரச் சேட்டைகளுக்கும் பயன்படுத்தப் படும்போது அவற்றின் ஆன்மீகச் செல்வாக்கு சரிந்து அவர்கள் வெற்றுப் பொம்மைகளாகிவிடுகிறார்கள்.
இந்து சமயத்தில் என்றில்லை.பொதுவாகவே நாம் பராமரிக்கிற பல சமய பழக்கங்களில் பாதிக்கு மேற்பட்டவை ஆன்மீகத்தோடு தொடர்புடையவை அல்ல.அடுத்தவனை பலவந்தப்படுத்தத் துணியும் சமூக அதிகாரத்திற்கு ; சமயத்தை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொல்வதே சரியானது.குடும்பக் கொடையென்றால் அடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவனை அச்சுறுத்தும் அளவிற்கு பலவந்தம் காட்டுவதிலிருந்து தொடங்குவது இந்த பண்பு.ஊர் கொடையென்றால் அடுத்த ஊர்க்காரன் மிரளவேண்டும் என நினைப்பது.சமூக , குழு அதிகாரங்களை பிரகடனம் செய்வது.இவையெல்லாம் ஆன்மீகத்திற்கு முற்றிலும் எதிரானவை.சமயவிழாக்களில் இவை முற்றிலுமாக அகன்றுவிடும் என்று சொல்வதற்கோ ,நம்புவதற்கோ வாய்ப்பில்லை.என்றாலும் வரைமுறைகள் இருக்கவேண்டும்.பிறரை அச்சுறுத்தும் இந்த விரசப் பண்பிற்கு இந்து ,கிறித்தவர்கள் ,இஸ்லாமியர்கள் என்கிற வேறுபாடெல்லாம் ஒன்றுமில்லை.
மத ஆலயங்களில் நின்று வெறி கொண்டு கத்துகிற ஆன்மீகத்திற்கே தொடர்பற்ற சொற்பொழிவாளர்கள் இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.சகல மதங்களிலும் இவர்கள் செல்வாக்கில் இருக்கிறார்கள். பள்ளிகளின் முன்பாகவும் இத்தகைய இஸ்லாமிய சொற்பொழிவாளர்கள் கத்தும் போது அருகில் பேருந்து நிறுத்தங்களில் கூட நிற்க இயலுவதில்லை. இங்கு பல கோவில் ஸ்தலங்களில் விழாக்களின் சொற்பொழிவாளர்கள் மனித வெடிகுண்டுகள் போல கத்துகிறார்கள்.இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது கிறிஸ்தவர்கள்.மஹா உள்குசும்பர்கள் அவர்கள்.எந்த சமயமாக இருந்தாலும் கட்சிகளில் தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் இருப்பதை போல மதங்களிலும் இந்த மட்டமான சொற்பொழிவாளர்கள் செல்வாக்கு பெறுவதை சமயத் தலைமைகள் ஊக்குவிக்கக் கூடாது.சமய பிளவுகளில் இருந்து ஊட்டம் பெற்று வாழும் அற்பமான வாழ்க்கைமுறையை திறம்பட கற்று வைத்திருப்பவர்கள் இவர்கள்.ஊர் ரெண்டு பட்டால் வகையறாக்கள் இவர்கள். பிற சமயத்தைப் பழிப்பவனுக்கு ஆன்மிகம் கிடையாது.தெரியாது என்பதே உண்மை அவன் வெற்றுத் தன்னகங்காரம் பெருத்த விரசம் அவ்வளவுதான்.
இந்த அடிப்படைவாதிகள் வெவ்வேறு பெயர்களில் வேறுவேறு மதங்களில் இருந்தாலும் கூட பொதுவான குணாம்சத்தில் ஒருவர்தான்.ஒருபோல சிந்திப்பவர்கள்தான்.இவர்கள் பொதுவாக பிற மதங்களில் உள்ள அடிப்படைவாதிகளின் செயல்களையே தங்களின் பலாத்கார மனோபாவத்திற்கு காரணமாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.இவர்கள் ஒருவரை ஒருவர் பதிலீடு செய்து கொண்டே இருப்பவர்கள்.ஒரு இந்து தீவிரவாதி ஒரு இஸ்லாமிய தீவிரவாதிக்குத் தீனி போடுகிறான் எனில் ஒதுங்கியிருந்து இவற்றைத் தூண்டுபவன் கிறிஸ்தவ அடிப்படைவாதியாக இருக்கிறான்.மூவருமே வேறுவேறு நபர்களில்லை ஒருவர்தான்.ஒருவன் பிழைப்பிற்கு மற்றவன் துணை செய்கிறான் அவ்வளவே .சமூகப் பிளவிலேயே இவர்களின் இருப்பு சாத்தியமாகிறது. இவர்களுக்கு மதங்களில் செல்வாக்கு பெருகுவது என்பது எந்த மதமாக இருந்தாலும் அவற்றின் ஆன்மீகப் பண்புகளை கொன்றுவிடக் கூடியது.
சமூகப் பிளவுகளை பாதுகாப்பின்மையில் மூட்டங்காட்டும் இத்தகைய விழாக்களில் பிற சமயத்தினரின் பங்கேற்பையும் கட்டாயமாக்க மதத் தலைமைகள் முயற்சியெடுக்க வேண்டும்.ஒரு இந்து பண்டிகையை ஒரு இஸ்லாமியரோ,கிறிஸ்தவரா தொடங்கி வைக்கும் விதமாக சில ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.இஸ்லாமியர்களின் இது போன்ற விழாக்களில் இந்துக்கள் பங்கேற்க வேண்டும்.பிற சமயத்தவர்களின் அனுசரணையோடு இது போன்ற விழாக்களும் ஊர்வலங்களும் சொரூப மாற்றம் கொள்ளுமாயின் நமது மனதின் பலவந்தம் கழன்று இவை அழகு பெறும்.இல்லையெனில் இந்த வெற்று விரசங்கள் திகட்டுவதைத் தவிர்க்க இயலாது.
நாம் எல்லோரும் இங்கே இருப்பது இணைந்து வாழ்வதற்குத்தானே அல்லாமல் தனித்து ஜெயக்கோடி நாட்டுவதற்கல்ல.அப்படி ஒரு ஜெயக் கொடியிருக்குமாயின் அது ஆன்மாவின் அழுக்கன்றி வேறில்லை.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...