அப்ரூவர் வந்திருக்கிறேன்

அப்ரூவர் வந்திருக்கிறேன்
அப்ரூவர் வந்திருக்கிறேன்
பழைய அப்ரூவரைப் பார்க்க புதிய அப்ரூவர்
இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்ரூவர் நீங்கள் எனில்
வந்திருப்பது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த அப்ரூவர்
குற்றம் நடந்ததிலும்
நடந்து கொண்டிருப்பதிலும் மாற்றமில்லை
சாமிகள் சாதாரண வழக்குகளில் அப்ரூவராவதில்லை
அல்லது சாமிகள் அப்ரூவர்களாவது
சாதாரண வழக்குகளில்லை.
குற்றத்தின் பளபளப்பான
குருதி சொட்டும் கத்தியைத்
துடைத்தகற்றியத்தில் என்பங்குண்டு
காவல் தரப்பின் சாட்சியாக
அழுகி வடியும் விலை உயர்ந்த விலை உயர்ந்த ஆப்பிளின்
இருதயம் என்னுடையது
அப்ரூவர் வந்திருக்கிறேன்
சாட்சிகள் எல்லோரிடமும்
காவல் விசாரணை முடிந்துவிட்டது
என்னிடம் பேசுவதற்கான மொழியென்று
ஏதுமில்லை
எல்லாம் எழுதி முடித்து
புதிய கணிப்பொறிகளால்
தட்டச்சு செய்து தரப்படுபவை.
உங்களுக்கு முன்பு நேர்ந்த அதே கதி
இப்போது எனக்கு
எல்லா மகா வாக்கியங்களும் என்னுடையவை என்று
பாவனை செய்ய வேண்டியது மட்டுமே
எனது வேலை
கதவைத் திறங்கள்
காற்று வராவிட்டாலும் பரவாயில்லை
வெக்கையை மின்விசிறிகள் வெட்டித் துயிலும்
அறைகளும்
குளிர்பதன அறைகளும் ஜனங்களுக்கு
லெகுவாகவே பழக்கமாகி விட்டன
சீருடை அணிந்த குழந்தைகளைப் போன்று
பக்குவம் கைவந்து விட்டது
கதவைத் திறங்கள்
காற்று வராவிட்டாலும் பரவாயில்லை
ஆட்கள் வரட்டும்
"என்னுடைய நீண்ட ஒரு கை
அழைப்பு மணியை பலமாக அழுத்துகிறது .
குள்ளமான கை
கைகெட்டி நிற்கிறது .
அழைப்பு மணியோசை
திசையெங்கும் படபடத்து
தகவல் சொல்கின்றது
"அப்ரூவர் வந்திருக்கிறான் "
களைப்படைந்த தாவரங்களின்
செவித்துளைகள் வெடித்துத் திறக்கின்றன
"திறக்கப்படாத கதவு
உள்ளே பலமாக இழுத்து அடைக்கப்படும்
மௌன ஓசையின் நிசப்தத்தில்
அலங்காரச்செடிகள் அச்சம் கொள்கின்றன "
பிச்சையெடுத்து நீண்டு வலுவேறிய கரத்தால்
கதவுகளை உடைத்தெறிவது
நீங்கள் நினைப்பதைவிடவும் எளிமையானது
உள்தாழிட்டு மாட்டிக் கொண்டிருக்கும் உங்களுடைய
வெளித்தாழ்பாள்களைத் தாழிட்டுச் செல்வேனெனில்
மூச்சு திணறிச் சாகவேண்டியதுதான்
ஒரு நிகழ்தகவு கூட இப்போது உங்கள் பக்கமாக இல்லை .
உங்களுக்குத் தருவதற்காக உருவாக்கப்பட்ட
என்னிடமிருந்து மட்டுமே உங்களுக்குக் கிடைக்கக் கூடிய
பெண்கள் விரும்பும் வண்ணங்கள் கொண்ட
மலர்ச் செண்டும் கொண்டு வந்திருக்கிறேன்.
எனது பணியினைக் கடுமையாக்க வேண்டாம்
குற்றவாளி வேடம்
தற்போதைய எனது மனநிலைக்கு உகந்ததல்ல
அதனை ஏதேனும் தெய்வங்களுக்கு
நேர்ச்சைக்கடன் செய்து விடுகிறேன்
அப்ரூவர் வேடத்தைப் பற்றி வேண்டுமெனில்
சொல்லுங்கள் ; மேலும் சிறப்பாக அலங்கரிக்கிறேன்
முதலில் கதவைத் திறங்கள்.
"கையழுத்தத்தின் அவசியமற்று
அழைப்புமணி தன்னைத்தானே பலமுறை அழுத்தி
எல்லாவிதமான உள்தாழ்பாள்களையும்
மேலும் இறுகச் செய்கின்றது.
புதிய விருந்தினர்கள் உண்பதற்காக
அவசரமாக வளர்க்கப்படும் பிராய்லர் நாய்க்குரைப்புகளின்
பதில்கள் வந்து சேருகின்றன .
"வன மிருகங்களுக்கு அவை கைப்பிடி அவல்"
மதுவருந்தியிருப்பது உண்மைதான்
அதன் நறுமணத்தை உங்கள் மேஜை விரிப்புகளில்
ஒரு பூவை நகர்த்தி வைப்பதுபோல நகர்த்தவே
வண்ணமலர் பூச்செண்டைக் கையோடு
கொண்டுவந்திருக்கிறேன்.
நீங்கள் உதிர்த்துச் சென்ற யானைக்கால் ஒன்று
தெருக்களில் அலைந்து திரிகிறது.
உங்கள் உடமைகள் சேதமடையாமலிருக்க நான் உத்திரவாதி
கதவைத் திறங்கள்
வயலின் இசை நிரம்ப சில அழகிய செய்திகளை
உங்களிடம் அன்பு ததும்பச் சொல்லிச் செல்லவேண்டும்.
"காவல் நிலையத்துக்குத்
தொடர்பு கொள்ள ரிசீவரைத்
தொடுகிறீர்கள்.
நீங்கள் அமர்ந்திருக்கும் கண்ணாடிக்கூண்டு
உள்ளே நடைபெறும் அனைத்தையும் வெளியே வாந்தியெடுக்கிறது
தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு
நெடுநாட்கள் ஆகிவிட்டன ஐயா
எங்களுடைய மொழி உங்களுக்குப் புரியாமலாகி விட்டதா?
நீங்கள் பேசிக் காட்டிய மொழிதான் இது
அப்ரூவராயிருந்து ; தலை துண்டிக்கப்படும்
தண்டனையிலிருந்து
தப்பித்து ; அரசு உயரதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று
பல தலைகள் துண்டிக்கப்பட்டதை
செவித்துளை வழியே பார்த்து
( நல்ல வேளை சாட்சியாக நீங்கள் அவற்றைப்
பார்க்க விரும்பாதது )
தற்போது ஓய்விலிருக்கிறீர்கள்
அவற்றை நினைவுகூர நான் வரவில்லை
கைகளிலிருப்பவை மலர்ச்செண்டைப் போல
உங்களுக்கு அனுசரணையானவைதான்
உங்கள் வீட்டிலிருந்த குழந்தைகள்
போன்சாய்களாகி விட்டார்கள்.
பழைய நண்பர்களின் புகைப்படங்கள்
நினைவுகள் தாங்காமல்
குப்பைத் தொட்டிகளில் கிடக்கின்றன
உங்கள் கண்ணாடிக் கூண்டுகளை
அச்சு எந்திரங்கள் நிரப்பிவிட்டன.
இட நெருக்கடியாலும்,துரிதப்பணிகளாலும்
உங்களுடைய ஓய்வு நேரங்கள் வீணாகின்றன .
விருந்தினர்கள் தங்கும் அறை அச்சுக்கழிவேற்றப்பட்டு
குப்பைமேடாகி வருகிறது.
குழந்தைகள் குழந்தைகளாக இருந்த போது
வாங்கித் தந்த பொம்மைகளுக்கு
பல் துலக்கவும்,சரியான சமயத்தில் மலங்கழிக்கவும்
முறையாகச் சாப்பிடுவதற்கும் சிறப்பாகக்
கற்றுத் தந்திருக்கிறீர்கள்
( அவற்றைப் பாடசாலைகளுக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை
அந்த வகையில் நீங்கள் பாராட்டுக்குரியவர் )
செம்மையாக வளர்ந்து அவை கண்ணாடிக் கூண்டைவிட்டு
வெளியேறவும் நீங்களே வகை செய்யவேண்டும்.
உங்கள் அருகாமை அவற்றுக்குப்
பாதுகாப்பானதல்ல
இனி கதவு திறக்காது
சென்று விடுகிறேன்.
அலங்காரச் செடிகளே ...
புதிய அப்ரூவர் நறுமணங்களோடு வந்திருந்தான்
என்கிற செய்தியை
சீமான் கூண்டைவிட்டு வெளியே வரும்போது
நீங்கள்தான் சொல்லவேண்டும்
சாட்சிகள் நீங்கள்தான்
களைப்புற்ற தாவரங்களே ...
உங்களிடமும் ஒரு பொறுப்பை
விட்டுச் செல்கிறேன்
சீமானுக்குப் பிடித்தமானது கால்பந்து
விளையாட்டு
அவருடைய தடித்த புத்தகங்களை
கால்பந்தாட்டதிற்குப் பயன்படுத்தச் சொல்லுங்கள்
ஓய்வுகால மகிழ்ச்சிக்கு அது உதவும்
( தேவைப்பட்டால் முன்கூட்டி அவர்
மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ளலாம் )
ரகசியமான ஒரு செய்தி
காந்தியை உயிர்த்தெழச் செய்து
மறுபடியும் கொலை நிகழ்த்தும் யோசனையிலிருக்கிறேன்
சீமானும் நிகழ்வில் பங்கெடுபாரெனில்
அவரது மகனிடம் துப்பாக்கியை
ஒப்படைத்து விடலாம்
அவன் குற்றவாளியாகவும்
நாங்கள் தொடர்ந்து அப்ரூவர்களாகவும்
காலம் களிக்க.
[ "அப்பாவைப் புனிதப்படுத்துதல்" கவிதைத் தொகுப்பிலிருந்து - 2009 ]

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...