பாதரச சிம்னி

பாதரச சிம்னி
சுற்றுபுறத்தம்மன்களுக்கெல்லாம் தாலி செய்து கொடுத்த
தங்கப் பட்டறை மீதேறி அமர்ந்திருக்கின்றன டாப் பப் கார்டுகள்
AIR TEL ,BSNL ,IDEA
4G NET WORK
வெங்கலச் சிற்பி கோலப்ப ஆசாரி
கருப்பு வெள்ளை சட்டகத்திற்குள்ளமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறார்.
குறுங்கட்டி மேஜையில் சாமிகளுக்குத் தடவிய
தங்கமெழுகு மீதிகள்
டிராயரின் உள்பக்கம் மூடப்பட்டிருக்கும் கருவிகள்
பாதரச சிம்னி
புல் டாக் டைம் விசாரணையை
"தங்கம் இன்றென்ன விலை ஆசாரியாரே "
என எதிர்கொண்டு உற்றுப் பார்க்கும் உமைதாணு பேரன்
தேவதச்சன்
ஜனனீ ஜென்ம சௌக்கியனாம்
வர்தனீ குலசம்பத்தாம்
பாலசுப்பிரமணியன் புண்ணிய புத்திரன்
முகம் பார்க்க மறுக்கும்
கட்டி லென்ஸ் கண்ணாடி அணிந்திருக்கிறார்.
கட்டிய தாலியில் களிம்பு ஏறுகிறதே
என்று உள்ளிருந்து கதறும் மண்டகப்படி அம்மனிடம்
"சித்த நீ சும்மா இருக்கியா?"
"வியாபாரத்தைக் கெடுக்கவென்றே இவளொருத்தி" ...
"பிள்ளையை இவ இருந்து பிழைக்க விடமாட்டா போலிருக்கே ?"
என முனகும் உமைதாணு

உமைதாணு பேரன்
முப்பாட்டன் வெங்கலச் சிற்பி கோலப்ப ஆசாரிக்கு
ஊதுபத்திக் கொளுத்தி வெகுகாலமாச்சு
ஆனாலும் குறுங்கட்டியில் நாளெல்லாம் அமர்ந்துறங்கும்
அம்மனை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்திய பின்னர்தான்
பட்டறை ஷட்டரை சந்தியில் வினோத சத்தத்துடன்
அடைத்துப் பூட்டுகிறார்
பின்வந்து வழிமறிக்கும் டாஸ்மாக்கில்
அவர் தள்ளாடித் திரும்ப
கைத்தாங்கலாக அழைத்துச் செல்பவளும் நீயேதானே
என் அம்மையே .

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...