சாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

சாகித்ய அகாதமி சர்ச்சைகள் ஒருபோதும் தீராத சர்ச்சைகளை தொடர்வதில் சாகித்ய அகாதமி முதலிடத்தைப் பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது. தான் வாழும் காலத்தில் சாகித்ய அகாதமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு பராதுகளை மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மை குறித்தது; மற்றொன்று, இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை குறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார். படைப்பில் மோசம் என்பது அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை சிறப்பிற்குரியதாகும். இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில...