கமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

கமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு.

கமலை விலகுதல்  தொடர்பாக கௌதமி எழுதியிருக்கும் செய்தியை படித்துப் பார்த்தேன்.மனித மாண்பை  ,உறவுகளை அலட்சியம் செய்யாத , நேர்மையான , உறுதிமிக்க ஒரு பெண்ணிடம் இருந்து வருகிற செய்தி  இது. அடிப்படையில் நானொரு கமல் ரசிகன்.அதுபோல கௌதமிக்கும் ரசிகன்.பல நடிகைகளை எனக்குப் பிடிக்கும்.பல்வேறு நுட்பமான வெளிப்பாடுகள் கௌதமியிடம் உண்டு.கௌதமியின் இந்த செய்தி அவர் மீதான என்னுடைய மனித மதிப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.உறவுகளின் பிரிவின் போது இவ்வண்ணம் நடந்து கொள்ளும் குணம் நிச்சயமாக தேவதைத்தன்மை நிரம்பியது.கௌதமி சிறந்த முன்னுதாரணமாகவும் தனித்து வெளிப்பட்டுள்ளார்.

பொதுவாக பிரிதலின்  போது உறவுகளின் தன்மையை முற்றிலுமாக இழிவுபடுத்திவிடுவதே நாசம் செய்வதே  மரபு .நட்பை பிரியும் போதும் சரி , காதலில் விடைபெறும்போதும் சரி ,பந்தங்களில் விலகும் போதும் சரி அதனை கசப்பாக்குபவர்களே  அதிகமானோர்.முதிர்ச்சியுடன் அணுக முடிந்தோர் மிகவும் சொற்பம். அதன் மீது மொத்த காயங்களையும் எடுத்து வீசுபவர்கள் , உறவின் தன்மைகளை கொஞ்சமும் உணர்ந்தவர்கள்  இல்லை.மதித்தவர்களும் இல்லை.

விலகும் போது தெரியும் விஷயங்கள் ; இருக்கும் போதும் உணரப்பட்டு இருத்தலே உயர்வானது.பிரிவில் உறவின் அத்தனை சாதகமான விஷயங்களையும் கொலை செய்து விட்டு கடப்போருக்கு மத்தியில்  விதிவிலக்காக கௌதமின் விலகல்  செய்தி மாண்புமிக்க ஒரு பெண்ணை அடையாளம் காட்டுகிறது.உறவில் அவருக்குப் புகார்களில்லை.உறவின் நிமித்தம் ஏற்படுகிற மன சஞ்சலங்களில் இருந்து , நிம்மதியின்மையில் இருந்து விடைபெற அவர் முடிவு செய்கிறார்.இப்படியானதொரு  தேவதைத்தன்மை  கமலையும்   மேலும் இவ்விஷயத்தில்  அழகுபடுத்தக் கூடியதாக உள்ளது.

"ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே .அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக ,நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

"என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன்.எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ளவேண்டும்.அப்படியிருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவவேண்டும்.  அந்த அமைதியைப் பெறுவதற்காகவே இந்த முடிவு."

கௌதமியின் செய்தியில் உள்ள வாக்கியங்கள் இவை.அவர் ஒரு கலைஞர் என்பதால் மட்டுமே இவ்வாறு தெரிவிக்கவில்லை.மனித உறவின் மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான புரிதலின் வெளிப்பாடு இது. அவர் மனிதத்தன்மையின் உன்னதத்தை உணர்ந்து கொண்ட நிலையிலிருந்து இதனை வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரை எனது மனமார போற்றுகிறேன்.

சமூக ஊடகங்களும் ,இங்குள்ள ஊடகங்களும் இவ்விஷயம் குறித்து விவாதிக்கும் விதம் மிகுந்த   குரூரம் நிரம்பியதாகவும்,அருவருப்பூட்டும் விதமாகவும் இருக்கின்றன.மனிதத்தன்மைக்கே புறம்பானவை அவை.குரூரத்தின் சதை தின்பவை.

இவர்கள் இருவரின் ரசிகராக மட்டும் நானிதைச் சொல்லவில்லை.ஒரு கவியாகவும்தான் சொல்கிறேன்.

கௌதமி,கமல் இருவரும் மேலும் மேலும் சிறந்து தன் ,தன் போக்கில் பெருவாழ்வு வாழ இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 

1 comment:

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...