எனது கதைகள்

எனது கதைகள்

எனது கதைகள் அதிகம் வாசிப்பிற்குள்ளாகவில்லை என்கிற மனக்குறை எனக்கு உண்டு .அதற்கு அந்த கதைகளின் தன்மையை காரணமாகி சொல்ல முடியாது.எல்லாமே பெரும்பாலும் எளிய கதைகள்தான்.எனது மனக்குறையை பெரும்பாலும் பொதுவில் சொல்ல இதுவரையில் முயன்றதில்லை.தமிழில் எனக்கு முந்தைய ,அதற்கும் முந்தைய தலைமுறையைச் சார்ந்த  பல மேதைகளின் எளிய கதைகள் கூட அதிகம் வாசிப்பிற்குள்ளானதில்லை என்பதும் காரணம்.அவர்களோடு ஒப்பிடும்போது எனது கதைகள் கவலை கொள்வதற்கு ஏதுமில்லை. நெருங்கிய நண்பர்கள் அல்லது வாசிப்பிலிருந்து தொடங்கி நண்பராகக் கூடியவர்கள் இவர்களே பொதுவாக வாசகர்களாக இருக்கிறார்கள்.கவிதைகளை சக கவிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

என்னுடன் பேசவோ உரையாடவோ தொடங்குகிற ஒருவன் எனது படைப்புலகத்திற்குள்ளிருந்து வரும்போது எனக்கு எளிதாக இருக்கிறது.நான் என்ன சொல்கிறேன் அல்லது சொல்ல வருகிறேன் என்பதை அவன் தோராயமாகக் கண்டுணர்ந்து விடுகிறான்.எழுப்புகிற பேச்சின் சாரம் அவனுக்கு விளங்குகிறது.எனது படைப்புலகத்துடன் தொடர்பற்ற எதை பற்றியுமே நான் உரையாடுவதில்லை என்பதை புரிந்து கொள்வதில் அவனுக்கு ஒரு சிரமமும் இருப்பதில்லை.பிற படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும்.அவன் அல்லது அவள் வெளிப்படுத்தும் எல்லா வாக்கியங்களுமே அவர்களின் படைப்புகளுடன் தொடர்பு கொண்டவைதான்.ஜெயமோகன் , கோணங்கி உட்பட அவர்கள் கூறுகிற பேச்சுகளுடன் அவர்கள் படைப்புகள் தொடர்பு கொண்டிருக்கின்றன.பேச்சின் அடையாளம் படைப்புகளே . படைப்பாளி எவ்வளவு உளறிக் கொட்டினாலும் அதனைச் சகித்துக் கொள்ளலாம் .காரணம் அவற்றின் புதையாழம் அவன் படைப்பில் இருக்கிறது.ஒரு படைப்பாளியின் பேச்சின் அர்த்தம் அறிய அவன் படைப்பின் தொடர்பு தேவை.படைப்பு விளங்கவில்லையெனில் அவனுடைய பேச்சிலிருந்து படைப்புக்குள் குதிப்பது எப்படி என்று யோசிக்க வேண்டும்.நேர் பேச்சில் பிரான்சிஸ் கிருபா அளவிற்கு உளறுபவர்கள் மிகக் குறைவு.அவரளவுக்கு உளறும் மற்றொருவரை சகித்துக் கொள்வதற்கு ஒரு காரணங்களும் இருக்காது. அவரது படைப்புலகில் அடிநாதம் பெற்றவர்களுக்கு அது உளறலாகத் தோன்றாது. அண்ணாச்சி விக்ரமாதித்யன் எவ்வளவு அடாவடித்தனங்கள் செய்தாலும் அவர் பின்னிருப்பது படைப்பு.ஷோபாசக்தியின்  பலத்த எதிர்வினைகளை அவரது படைப்புகள் வழியாகத் தான் விளங்கமுடியும்.

இருபது சொச்சம் கதைகளைத் தான் எழுதியிருக்கிறேன்.ஒன்றுபோல் பிறிதும் அமையக்கூடாது .அப்படி அமைத்தால் அது நல்லதல்ல ,அதனை எழுத்தின் இயக்கமாகவும் சொல்லமுடியாது என்னும் எண்ணம் எனக்கிருப்பதை வாசகர்களுக்கு உணர்த்துபவை எனது கதைகள்.ஒருகதையை மனம் விட்டு நகரும்போதும் மனதின் அடுத்த தளம் கதையில் உருவாகவேண்டும்.அதுவரையில் காத்திருக்க வேண்டும்.ஒரேயொரு கதையை வாழ்நாள் முழுவதும் தூவிக்  கொண்டிருப்பது எழுதுகிறவனின் வேலையல்ல.

வாசகர்களிடம் கதைகள் போய் சேராத போது அடுத்தடுத்து கதைகளை எழுதுவதில் கடுமையான மனமுசிவு ஏற்படுகிறது.யாருக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பு அது.என்னுடைய கதைகள் எழுதப்பட்டு பல வருடங்கள் கழித்து ஒரு வாசகன் அதனை நினைவுபடுத்தும்போது  அந்த கதை எனது மனதில் இருப்பதில்லை.அவன் அதனை முன்னிட்டு என்ன சொல்கிறான் என்பது கூட பதிவதில்லை.ஒருமுறை ஒரு கதையைப் படித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து அழைத்து தனக்கு எப்படி விபத்து நிகழ்ந்தது என்பதனை கதையிலிருந்து கண்டடைந்ததாக ஒரு வாசகர் சொன்னார்.அது அந்த கதையை முன்னிட்டு சிறந்த வாசிப்பு என்பதில் சந்தேகமில்லை.ஆனால் அவர் கூறிய தருணத்தில் அந்தக் கதையின் அத்தனை சுவாரஸ்யங்களும் என்னிடம் அணைந்து போயிருந்தது.வாசகனுக்கு இப்படி தொடர்பு இருக்கக் கூடாதா என்றால் இருக்கலாம் தான் அதில் ஒரு பிரச்சனையும் இல்லை.எழுகிறவனாக எனக்கிருக்கும் சிலாகிப்பு முடிந்த பின்னர் அவன் தொடங்குகிறான் என்பதை எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன் அவ்வளவுதான் விஷயம் .

கதைகளில் சிறிது காலம் இன்னும் செலவாகுமெனின் மகிழ்ச்சியுடனிருப்பேன் .கதைகள் எனது கவியுலகை விஸ்தரிக்கக் கூடியவை .எனது மகிழ்ச்சியும் சோர்வும் படைப்பதில் அன்றி வேறொன்றிலும் கிடையாது.

இப்போது எனது கதைகள் தொகுக்கப்பட்டு மொத்தமாக வருகிறது.வாசகர்களால் வாசிக்கப்பட்டால் நான் இயங்கி கொண்டிப்பது எதன் நிமித்தமாக என்பது முன்முடிவுகளுக்கும் பராதுகளுக்கும் வதந்திகளுக்கும் அப்பாற்பட்டு சிறிதளவேனும்  விளங்கும்

லக்ஷ்மி மணிவண்ணன்
நாகர்கோவில்
27 -11 -2016

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...