கார்த்திகை விரதம் அய்யப்பனின் விந்தைகார்த்திகை விரதம் அய்யப்பனின் விந்தை

கணப்பொழுது கடவுளைக் காப்பாற்றலாம் அவ்வளவுதான் விஷயம் . கணப்பொழுது கடவுளைக் காப்பாற்றுதல் என்பது அவ்வப்போது சில தருணங்களில் கடவுளாக இருப்பது. நாத்திகனாக இருந்தாலும் இதனைக் காப்பாற்றலாம் ,ஆத்திகனாயினும் காப்பாற்றலாம்.கணப்பொழுதின் கடவுளைக் காப்பாற்ற எந்த அடையாளங்களும் அவசியமில்லை.மகான்களாலும் இயலாத கடவுள் தன்மையற்ற பல மணிநேரங்கள் உண்டு.
சடங்குகளும் வழிமுறைகளும் கொஞ்சம் கணப்பொழுது கடவுளை நோக்கி அழைத்துச் செல்ல சுருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தும் .பக்தி ,தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டும் வாய்க்காமல் போகலாம்.தியானம் ,பக்தி எல்லாமே பாவனைகள்தான்.பாவிக்க பாவிக்க அது நம்மைக் கொண்டு நடத்திப் பொருளிடம் சேர்ப்பிக்கிறது.

மகிழ்ச்சியுடன் ஆற்றும் அத்தனையிலும் கடவுள் உடனிருக்கிறான்.மகிழ்வுடன் ஆற்றாத எந்த செயலிலும் கடவுள் இல்லை.மகிழ்வுடன் ஆற்றும்  காரியத்திற்கு இதுதான் அதுதான் என்கிற வேற்றுமையெல்லாம் ஒன்றுமில்லை.அது ஒரு குழந்தை உங்களுக்கு விட்டுத் தந்த புன்னகையைப் போன்றோ ,தப்பிச் செல்ல முயல்பவனுக்கு ரகசியமாக விட்டுத் தந்த சிறு வழியாகவோ இருக்கலாம். ஒரு ஏழைக்கு ஒருவேளை சோறு மகிழ்வுடன் அருகிருந்து ஊட்ட வாய்க்குமெனின் ,அதில் மகிழ்ச்சியை மனம் எட்டுமெனில் அதுதான் விஷயம்.பத்மநாபசாமி சரண் பாதம் பிடித்தல் அதுதான். மகிழ்ச்சியைத் தரும் செயலை மட்டுமே ஆற்றத் தெரிந்தவனுக்கு வேறு கூரை அவசியமில்லை.கொடுஞ்செயல் என்று ஒருவர் கருதுகிற சமாச்சாரத்தை மகிழ்வுடன் ஒருவனால் செய்ய முடியுமெனில் அக்கணத்தில் அவனே தேவன்.ஆற்றும் காரியம் மனத்தைக் கரகாரப்பாக்கிவிடுமெனில் அது அவனுக்கு ஆகாத காரியம்.கூடாதது விரோதம் தான்.ஆனந்தம்  ஊட்டும் காரியங்களில் ,உணரும் சிறு தருணங்களில் நீங்களே கடவுள்.அப்படியில்லாத போதுள்ளதை கடவுள் எனக் கொள்ளுதல் பிராந்து.

சிந்தையை ஒருபோதுமே அடக்கமுடியாது.முதிர்ந்த நிலையென்று ஒன்றில்லை. சும்மா இருக்கமுடியவில்லையே சிவனே ! என்றால் முடியாது.சிந்தை நமது கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள காரியமில்லை.சிந்தை ஒருபோதும் நமது கட்டுப்பாட்டில் உள்ள காரியமாக ஆகாது.அது தனி போக்கு .அறிந்தவற்றையும்,அறியாதவற்றையும் கொண்டு சதா இயங்கி கொண்டிருப்பது சிந்தை. சிந்தை சிடுக்கிக் கொள்வதற்கும் தெளிவு கிடையாது,பிரவாகம் கொண்டு ஆனந்திப்பதற்கும் காரணம் தெளிவற்றது.அதனை அவரவரும்தாம் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும். யாருடைய கடவுளையும் யாருமே கண்டுபிடித்துத் தர முடியாது.இப்படி முயன்று பார் என்று மட்டுமே சொல்லமுடியும் .இதுதான் அது என்று ஏக பரம்பொருளை வரையறுக்க முடியாது.இப்படியாக சென்றேன் அதில் எனக்கு லேசாக சிலது பிடிபட்டது.நீயும் முயன்று பார்க்கலாம்.இதைத்தான் சொல்லலாம்.நான் சென்றபாதையில் அல்லாது தரிசனமே இல்லை என்பது பொய்.

சதா பிறரை வஞ்சிக்கும் ,சபிக்கும் மனமே நம்முடையது.எதிர்படுவோரைத் திட்டாத மனமே இல்லை.உள்நின்று சபிக்காத தொடர்ந்து சபிக்காத மனம் இல்லை . சாலையில் செல்வோரை சதா பிறரை திட்டுக் கொண்டேதான் செல்கிறோம்.சாலை மனித மனப்பரப்பிற்கு ஒரு நல்ல உதாரணம்.கொஞ்சம் நேரத்திற்கு முன்னர் நீங்கள் செய்த இதே காரியத்திற்குத்தான் மற்றொருவன் திட்டிச் சென்றிருப்பான் .நீங்கள் இப்போது அதே காரணத்திற்கு மற்றொருவனைத் திட்டியிருப்பீர்கள்.நாமும் பிறரும் பல சமயங்களில் ஒருவர்தான் ஒரே நபர்தான்.சாலை மனதை கூடுதல் கரகரப்பாக்கிக் கொண்டே இருக்கும் .

அகந்தையை சாலை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.இருப்பதை விரிவுபடுத்திக் காட்டுகிறது. பொது அகந்தை வெளிப்படுகிறது.போக்குவரத்து பொது மனதின் பேருடல்.அதற்காக போக்குவரத்தில் பங்கு கொள்ளமாட்டேன் என்று சொல்ல முடியாது.போக்குவரத்தில் இல்லாமல் மனம் கரையாமலிருக்க , குரைக்காமலிருக்க பிரேதத்திற்கும் வாய்க்குமே ? போக்குவரத்தில் இறந்தவண்ணமே குரைப்பதைக் குறைக்க முயலவேண்டும். மனம் சதி செய்வதைக் கண்டுணர்ந்து   நிறுத்தவேண்டும்.சதியில் விலக வேண்டும்.சதியை சேகரித்து சேகரித்து சேர்த்து வைக்கத்தான் மனம் கோரும்.   பிறவிப் பெருங்கடல் நீந்துவார் ,நீந்தார் இறைவனடி சேராதார்.மனம் எவ்வளவு படுமோசமாகக் கரைகிறது ? அவ்வளவு குப்பையாக இருக்கிறது ? தன்  அகந்தையை மட்டுமே முட்டுக் கொடுத்துத் தாங்குகிறது என்பதை ஊடகமாகக் காட்டும் கண்ணாடி சாலைதான்.சாலையில் செல்லாத வைகுண்டவாசிகளை பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது ? போக்குவரத்தில் இருந்த வண்ணம் கண்ணாடியை கவனித்துக் கொண்டிருந்தால் போதுமானது.பிறிதொருவனை திட்டி முடித்ததும் ; நீ உன்னைத்தானே திட்டினாய் என்பதை கண்ணாடி காட்டித் தந்து விடும்.சதா உள்ளே குரைத்துக் கொண்டே இருக்கும் மனம் அடங்க கடவுளின் கணங்கள் எவருக்கும் பெருகத் தொடங்கி விடும்.

கார்த்திகையில் அய்யப்பனுக்கு மாலை இட்டதும் அதுவரையில் பழகிய மனம் உள்திரும்பி உற்று நோக்கி கடவுளின் கணங்களில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது.அது எப்படியென்று விவரிப்பது கடினம்.அய்யப்பன் ஏறி மனம் மீது உடனடியாக உட்கார்ந்து விடுகிறான். மனதை உள்முகமாகத் திருப்பிக் காட்டுகிறான். கொலை களவு சூது வாது எப்படியலைந்த மனமாக இருந்தாலும் அய்யப்பன் எறியமர அடங்குகிறது.கடலும் மழையும் நதியும் காட்சிகளும் கள் வெறி கொள்ளுகின்றன.பிரபஞ்சத்தின் இருப்பே போதையூட்டுகிறது.அதில் நாமும் ஒரு உருப்படியாக இருப்பது கிளர்ச்சி.  மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது என்று பைபிளும் சொல்வது இதைத்தான்.

கடவுளின் கணங்கள் உங்களிடம் இருக்கும் போது நீங்கள்தான் கடவுள் .ஆனந்தத்தின் கணங்கள் அவை.ஆனந்தித்து நீங்கள் காணும் காட்சிகள் கடவுள் தன்மை நிரம்பியவை.

அய்யன் அய்யப்பன் நமக்குள் இருப்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.விந்தை வசப்பட உதவுகிறான் என் இரத்தின குரு
சபரிமலை வாசன்
அன்னதான பிரபு 

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...