சபரிமலை அய்யன் அய்யப்பன்

சபரிமலை அய்யன்  அய்யப்பன்

முதல்முறையாக 1996 சபரிமலை சென்றேன்.வயது அப்போது  இருபத்து ஏழு . எங்கள் குடும்பத்தில் இருந்து சபரிமலை அய்யப்பனை நாடி சென்ற முதல் நபர் நான் மட்டுமே.எங்கள் குடும்பத்தில் பிற வழிபாடுகளுக்கு இன்றுவரையில் இடம் கிடையாது.கடுமையான குடும்ப எதிர்ப்புக்கு மத்தியில் முதல் முறையில் அய்யப்பனைக் காணச் சென்றேன்.எங்கள் குடும்பம் தீவிரமான அய்யாவழிக் குடும்பம்.அய்யாவழிக் குடும்பம் என்றால் அய்யா வைகுண்ட சாமியின் வழிபாட்டு முறைகளை பின்பற்றுகிற குடும்பம் என்று பொருள் . என்னுடைய சிறு பிராயத்தில் அய்யாவழிக் குடும்பங்களில் பிற வழிபாடுகளுக்கு இடமே கிடையாது.பிற கோவில் பிரசாதங்களை ஏற்பதில்லை.பிற அடையாளங்களை பூசிக் கொள்ள முடியாது.இன்றும் அய்யாவழியில் அப்படியிருப்பவர்கள் இருக்கிறார்கள்.பின்னாட்களில் எத்தனை முறை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வந்திருப்பேன் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.மாதம் விட்டு மாதம் என்றெல்லாம் கூட சென்று வந்திருக்கிறேன். எனது மகனும் மகளும் என்னுடன் இணைந்து சபரிமலைக்கு வந்திருக்கிறார்கள்.மகள் ஒருமுறையும் மகன் பல தடவையும் வந்திருக்கிறார்கள். நான் இன்று உயிரோடு இருக்கிறேனென்றால் அதற்கு சபரிமலை அய்யப்பனே காரணம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.அய்யப்பனை தினமும் தியானிக்காமல் இருப்பதில்லை.உயிரோடு இருப்பது மாத்திரமல்ல உயிரென்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்திய குருவும் அய்யன் அய்யப்பன்தான்.

கடும் தவசு இருந்துதான் அய்யப்பனைக் காணச் செல்லவேண்டும்.அதுதான் நல்லது.கடுமையான தவசும் தியானமும் இல்லாமற்  சென்றால் என்னாகும் ?என்று ஏதேனும் மேதாவிகள் கேட்பார்களேயாயின் அய்யப்பனை காண இயலாது அவ்வளவுதான்.பதினெட்டு படிகளும் ஏறி முழு விக்ரகத்தை மட்டுமே கண்டுவிட்டால் அது அய்யப்பனைக் கண்டதாகி விடாது .பின்வாசல் வழியேறி ஒரு சுற்றுலா பயணியாக செல்லும் ஒருவனுடன் உயிர் எழும்பிப் பேச அய்யப்பனுக்கு எதுவுமே இருக்காது.ஜோதி தரிசனம் என்றால் உன் உள்ளில் எரிகிற சுடரை கடும் தவசிற்குப் பிறகு சென்று காணவேண்டும்.தவம் என்பது தொடர்ச்சியான தியானம் .ஒரு முறை அய்யப்ப தரிசனம் கூடிவிட்டால் இந்த உடல் உள்ளவரையில் அது விட்டு அகலாது.தியானம் இல்லாமல் குருவைக் காணச் செல்லக் கூடாது.தியானத்தில் செல்பவனுக்கு வழியில் ஏற்படுகிற இடையூறுகள் எல்லாம் சாதாரணமாக இருக்கும் .மனம் மூட்டத்தில் வெறுப்பில் இருக்காது.மனம் அய்யப்பனைக் காணச் செல்லும் போது மூலப்பொருளை விட்டு நீங்கி இருக்கக்கூடாது.பிற விதிகள் சாதாரணமானவை .நீங்கியிருந்தால் என்ன ? எனக் கேட்டு தர்க்கித்தால் நீ அய்யப்பனைக் காணச் செல்லவில்லை என்று அர்த்தம்.ஏற்கனவே உன் மனதில் கூடுகட்டியிருக்கிற அறிவை நீ செல்லும் இடமெல்லாம் கொண்டு நடப்பதற்கு எதற்கு அய்யப்ப தரிசனம் ? நீ யாரைக் காண்பதற்காக ,எந்த பொருளைக்   காண்பதற்காக இவ்வ்ளவு கடினம் கடந்து வந்தாயோ ,அந்த அய்யன் அய்யப்பன் அந்த அபூர்வப்பொருள் உன்னிடம்தான் இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக அடைவதற்காகத் தான் சபரிமலை அய்யப்பனைக் காணச் செல்வது.அதற்காகத் தான் இந்த பாதை.அந்த அனுபவம் ஒவ்வொரு முறையுமே ஒவ்வொரு விதம் .ஏற்கனவே கொண்ட அறிவிற்கு எட்டாதது அது.எல்லாமே தெரிந்தவனுக்கு சபரிமலையில் வேலையில்லை.

ஒன்றுக்குமே அடங்காத நண்பர்கள் பலர் எனக்குண்டு.ஒன்றிலுமே நம்பிக்கையற்ற விட்டேத்திகள் உண்டு. பிற ஒருசொல்லும் கேளாதோர் , கீழ்ப்படியாதோர் எல்லாம் உண்டு.பணிய விரும்பாதோர் , சுட்டு கையெரிந்த பின்னர் மட்டுமே கற்றுக் கொள்கிற பலர் .எரிந்தாலும் கேட்பார்கள் என்று உறுதி கூற முடியாது.ஆனால் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர்கள் அய்யப்பன் விஷயத்தில் விபரமாகவும் சிரத்தையோடும்தான் இருப்பார்கள்.அதற்காக அய்யன் தண்டித்து விடுவான் என்று இல்லை.நீங்களே உங்களை தண்டிக்கும் நிலையது.அனுபவப்பட்டவர்களுக்கு விளங்கும்.சில காரியங்களை உண்மையாகவே செய்ய முடியாது.ஆயிரம் தர்க்கம் உபயோகிக்கலாம்.யாருக்குத் தெரியாது தர்க்கங்களை உபயோகிக்க ? சில காரியங்களை சில வழிமுறைகள்  அல்லாமல் செய்யவே முடியாது.அறிவைத் தூக்கிக் கொண்டலைவது அகந்தையை தூக்கிக் கொண்டலைவது.அகந்தையை கைவிடாமல் அய்யப்ப தரிசனம் இல்லை.நீலிமலையேற்றம் கடந்து செல்லும் போதேனும் "அய்யப்பா சரணம் " என்கிற சரணகோஷம் உயிரிலிருந்து வெளிப்படவேண்டும்.வெளிப்படும்.

நம்பிக்கையற்றோர் கண்டு களிக்க அய்யன் சபரிமலையில் மலையாளத்து திரைப்பட கொட்டகை வைத்து நடத்தவில்லை.ஒருமுறை பகுத்தறிவு முற்றி அகந்தையாகப் பெருத்த ஒருவர் என்னிடம் "நீங்கள் சபரிமலைக்குச் செல்வதைக் காண கவர்ச்சியாகத் தான் இருக்கிறது.விரதமெல்லாம் இருக்க நம்மால் முடியாது.அழைத்துச் செல்வீர்களா ? " என்று கேட்டார் . நான் அதற்கு நீங்கள் செல்ல நினைக்கும் பாதை வேறு .நான் செல்லும் பாதையில் காண்பவற்றை நீங்கள் காண முடியாது .நீங்கள் அய்யப்பனை ஒரு சுற்றுலாவாசியாகச் சென்று பார்க்க விரும்புகிறீர்கள்.நானோ அவனையே அகமாக எடுத்து தியானித்து அவனிடத்தில் கொண்டு போய் ஒப்படைக்கச் செல்கிறேன்".உங்கள் பாதையில் நீங்கள் செல்வதே உங்களுக்கு நல்லது என்று சொன்னேன்.

இந்து மத வழிபாட்டுப் பிரச்சனைகள் ,சீர்திருத்த தேவைகள் பற்றிய போதம் நம்பிக்கை கொண்ட மக்களிடத்திலிருந்து வரவேண்டும். ஆனால் இங்கே நம்பிக்கையற்றோரும் , பிற மதத்தோரும்  அதிகம் இந்துமத சீர்திருத்தங்கள் பற்றி கவலை கொள்கிறார்கள்.அய்யா நாராயண குருவுக்கும் ,அய்யா வைகுண்டசாமிக்கும் இல்லாத இந்து மத அக்கறைகள்தான் போலும் இவர்களுக்கு. தங்கள் சமயத்தின் சகதிகளைப் பற்றிய சிந்தனைகளே அவர்களுக்கு இருப்பதில்லை.இந்துமதம் குறித்து மட்டும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள்.அதுவும் நல்லதுதான்.தியான காலங்களைத் தவிர பிற சமயங்களில் பக்தர்கள் அய்யனை மறந்து விடுகிறோம் ,ஆனால் நம்பிக்கையற்றவர்களோ சதா அய்யனை தியானித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் மூலமாக அய்யன் மாற்றத்தை விரும்புகிறார். ஆனால் அவர்கள் ஒரு காரியத்தை தெரிந்து வைத்திருப்பது நல்லது.சகல   மதத்தவரும் எந்த விதமான பாகுபாடுகளும் இன்றி துணித்திருக்கும் இடமே சபரிமலை.இங்கே நீ சாமியாவதற்கும் தரிசனம் காண்பதற்கும் நீ யார் ? என்கிற கேள்வி அய்யப்பனிடம் கிடையாது.

பெண்குழந்தைகள் ,பெண்கள் செல்வதற்கு இப்போது சபரிமலையில் இடையூறு இருப்பதாக எனக்கு எண்ணமில்லை.அய்யனின் அருகில் இருப்பவள் மஞ்சள் மாதா.கன்னி அய்யப்பன் வராத நாளில் அய்யனின் பிரம்மச்சரிய விரதத்தை முடிக்கக் காத்திருப்பவள் அவள்.எதிரில் இருப்பவரோ வாவர் நடை.ஒரு இந்து சந்நிதியில் இஸ்லாமிய பழக்கங்களும் கடைபிடிக்கப்படுகிற புனித ஸ்தலம் சபரிமலை.இஸ்லாமிய பாடல்கள் இசைக்கப்பட்டு பாரம்பரியமாக இஸ்லாமியர்கள் இணைந்து சபரிமலையில் இருக்கிறார்கள். பம்பையில் இருந்து நிறைய பாதுகாப்பு வசதிகள் வந்துவிட்டன.இது உரிமை மட்டும் சார்ந்த விஷமில்லை.கேரளாவில் பெண்கள் மட்டுமே சென்று வழிபடக்கூடிய வழிபாட்டு முறைகளைக் கொண்ட கோவில்களும் உண்டு.இவையெல்லாம் ஏற்ற தாழ்வை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டவை என்று பார்க்கும் அவசியமற்றவை.நம்பிக்கையும் சித்தமும் இணைந்த காரியங்கள்.பெண்களை மட்டுமே அனுமதிக்கும் வழிபாட்டு முறைகளில் ஏன் ஆண்களை விடமாட்டீர்களா ? என்று கேள்வியெழுப்ப இயலாது.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட பெண்களும் அய்யப்பனைக் காணச் செல்வோம் என்று குரல் எழுப்பும் போது அதற்குத் தடையாக ஒழுகிவருகிற மரபை காரணமாக முன்வைக்கக் கூடாது.நம்பிக்கை அடிப்படையில் செல்லும் எவருக்கும் தெய்வ சந்நிதிகளில் தடை இருக்க வேண்டியதில்லை.அதற்கு ஏற்றதாழ்வுதான் ஒரே காரணம் என்கிற தோற்றம் ஏற்படுமேயானால் அந்த தோற்றம் ஒருபோதும் நீடிக்கக் கூடாது.ஏற்றத்தாழ்வு அதற்கு காரணமில்லையே ! என ஒருவர் வாதிடலாம்.நான் சொல்வது ; அப்படியான எண்ணம் ஏற்பட்டு விட்டாலே அது அகற்றப்பட்டு விடவேண்டும் என்பதுதான்.பழக்கத்திற்கு வேறு எத்தைகைய காரணங்கள் வேண்டுமாயினும் இருக்கலாம்.ஏற்றத்தாழ்வையோ , வேறுபாட்டையோ காரணமாக முன்வைக்க முடியாது.அது மனித நாகரிகத்திற்கு ஒவ்வாது . அப்படியொரு சந்தேகம் அய்யன் அய்யப்பனின் சந்நிதியை நோக்கி உண்டாகுமேயானால் அதன் நிமித்தம் மாற்றம் வந்தே தீரவேண்டும்.

ஆணும் பெண்ணும் வேறுவேறில்லை.ஆண் செல்ல முடியுமென்றால் பெண்ணும் செல்லலாம். தரிசனம் என்பது நம்பிக்கை கொண்டோருக்கு பொதுவானது.அய்யனைத் தேடித் செல்வோர் அத்தனைபேரும் அய்யன் அய்யப்பன்தான்.ஆணும் அய்யப்பன்தான் பெண்ணென்றாலும் அய்யப்பன்தான்.சரண கோஷமின்றி தரிசனமில்லை என்கிற உணர்வும் செம்மையும் அமைந்தால் போதும்.

No comments:

Post a Comment

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...