லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 

#

நீ ஏற்படுத்திக் கொள்கிற தூரத்தையே 
நமக்கிடையிலான தூரமாக அமைத்து கொள்கிறேன்.

அது சில சமயம் ஒரு நீண்ட பாலத்தின் தூரமாகிறது.
வெளியூரில் நெருங்கிய தூரமாயிருப்பது சில நேரம்.

கப்பல் பயண தூரம் ?
அருகிலிருந்தும் மூன்றுநாள் சரக்கு ரயிலின் தூரமாயிற்று
சில நேரம் .

சரக்கு ரயிலின் தூரம்தான் பெருந்துயரம் 
களைத்து உட்கார்ந்து கரிப்பிடித்து 
அழுது வடிகிறது அது. 

கடக்கவே இயலாத தேவதச்சனின் அணில் 
பூமி துளைத்து சென்றடைந்த தூரம் ஒன்றும் உண்டு.

இப்போது தூரத்தை தூரம்... தூரம்... என்று கத்துகிறாய் 
எல்லா தூரமும் நீ 
தான் விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தூரம்தானே
செங்கொடியே ?

முதலில் அவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய் 
பின்பு இவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய் 
இடையில் உன் தாழ்வுணர்ச்சியொரு நெடுந்தூரம் அமைத்தது
நீ பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் உன் தூரம்தானே அன்றி 
என் தூரம் இல்லையே 
நற்செள்ளையே ?

பயப்படாதே 
உன் தூரம்தான் 
உன் தூரம்தான் 
அது 
உன் தூரம்தான்
நீ சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய 
உயரம்தான் 
இப்போது 
முகம் மறைக்கும் அளவிற்கு வளர்ந்து 
பெரிதாகியிருக்கிறது 
நீருற்றி கரைக்க இயலாத அளவிற்கு

#
அந்தச் சிறுவன் 
நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்
கடந்து கனரக லாரியில் 
இங்கு வந்து கொட்டப்பட்டவன் 

துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.
கொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு 
நீர் தெளிகிறான் 

பாம்பு கொத்தியது போலே துடித்து 
"தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?"
எனக் கேட்டு அவன் 
அம்மையைத் திட்டுகிறீர்கள்

சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென 
அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள்

சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள் 
அத்தனைபேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்
நீங்கள் உண்ட சோறு 
அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு 
நன்றி கூற
உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது 
துரத்தப்பட்ட அவனது இரவு.

#
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

முன்பு ஒருநாள் உங்களிடம் தவறுதலாக 
நடந்து கொண்டேன் 
அப்படியா ?
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

வேலையைக் கெடுத்தேன் 
வயிற்றில் அடித்தேன் 
சோற்றை மறைத்தேன் 
பெருஞ்சபையில் அவமானப்படுத்தினேன் 
கோள் மூட்டினேன் ,வஞ்சகம் வைத்தேன் 
அப்படியா ?
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

பிணைக்கைப் பெரிதாக்கிப் பெரிதாக்கி
விலகிப் போய்விழுந்தேன் 
கொலை செய்ய முயன்றேன் 
முத்தத்தில் விஷம் வைத்தேன் 
அப்படியா ?
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

மன்னிப்புக் கடிதம் எழுதினேன் 
காதல் கடிதம் எழுதினேன்
தெய்வடியா மகனே என்றோரு குறுஞ்செய்தியும் 
அனுப்பினேன் 
அப்படியா ?
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

நீங்கள் ஒரு மகான் 
அப்படியா ?
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

நீங்கள் ஒரு மனநலப் பிறழ்வு 
அப்படியா ? 
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

நீங்கள் அரும்பெரும் நண்பர் 
நீங்கள் அயோக்கியன் துரோகி
நீங்கள் ஒரு சொம்பு
நீங்கள் ஒரு பன்னாடை 
அரவணைத்துக் கொண்டீர்கள் 
கைவிட்டும் விட்டீர்கள் 
நன்றி காட்டி நன்றி கொன்றீர்கள் 
எங்கு தொட்டீர்கள் ? எங்கு விட்டீர்கள் ?
விளங்கவே இல்லை 
மாணிக்கம் 
ஆனால் மனிதரில் சேர்க்க முடியாது

அப்படியா ? அப்படியா ?
அதனால் எந்த பிரச்சனையுமில்லை

#
என்னையொரு திருடன் என்கிறீர்கள் 
நானொரு திருடனாய் இருக்க வேண்டும் என்பது உங்கள் ஆசை

என்னையொரு பொறுக்கியென்கிறீர்கள் 
அப்படித்தானேயிருக்க வேண்டும் என்பது உங்கள் கணிப்பு

பிச்சைக்காரன் என்கிறீர்கள் 
இல்லாமல் எப்படி வாழ்கிறான் ?
கொலைகாரன் ,பாலியல் பிறழ்வு ,முதிர்ச்சியின்மை 
ஓகே

என்னையொரு தெருநாய் என்கிறீர்கள்
சீர்கேடு 
அபத்தம் 
பொல்லாப்பு 
நக்கிப் பிழைப்பு 
நாய்ப்பிழைப்பு

உங்கள் குற்றச்சாட்டுகள் அத்தனையும் 
ஆமோதிக்கிறேன் 
ஒத்துக்கொள்கிறேன்
தண்டனைகள் உண்டா ? ஏற்றுக் கொள்கிறேன் 
ஒன்றும் பிரச்சனையில்லை

இவையெல்லாம் உண்மைதான் 
ஆனால் இவைமட்டுமே உண்மையல்ல சான்றோரே
மஹா ஜனங்களே

மற்றது என்ன ?
உங்களுக்கோ புரியாது 
எனக்கோ தெரியாது.

#

முதலில் வெறும் அட்டைப்பெட்டி.
கட்டத் தொடங்கினேன்
ஆனது ஆகாதது எல்லாமே உள்வந்து எப்படி 
படுத்துக் கொண்டன ?

குலசாமி துடிகொண்டாட எப்போதும் தயாராக ,
உள் வந்து படுத்து துயிலில் இருந்தார்

ஒரு ஓர்மைகுன்றாத பௌர்ணமிக்கும் 
அட்டைப் பெட்டிக்குள் ஓரிடம் இருந்தது

கைவிடப்பட்ட குழந்தைதான் அட்டைப்பெட்டிக்குள் 
கதாநாயகன் 
சாமியோ ஆசாமியோ உள்ளே வந்தால் 
அவனிடம் தான் கேட்டுக் கொள்ளவேண்டும்.

இளமையின் நதியொன்று அட்டைப் பெட்டிக்குள் 
பாய்ந்து கொண்டிருந்தது

ஒரு சொப்பனம் அட்டைப்பெட்டியின் 
வெளிமூடியையெல்லாம் கழற்ற முதலில் விகாரம் .
அப்புறம் அகோரம் 
அப்புறம் அப்புறம் 
விவகாரம் 
பின்னரே விகாசமாயிற்று

அட்டைப்பெட்டி இல்லை 
சொப்பனம் அகற்றிய பிற்பாடு அட்டைப்பெட்டி இல்லை.
நதியின் காடு .
அம்மாவின் பௌர்ணமி தான் அது 
அட்டைபெட்டியற்ற அகத்தின் 
பிரதானத்தில் ஜொலித்துக் கொண்டிருப்பது .

மற்றபடி பெரியவர் சொன்னது சரிதான் 
சுத்த வெங்காயமென்று

#

உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் போது 
வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்
இங்கே நீங்கள் பகவான் நான் சம்சாரி .

சட்டையில் கொட்டி நீரருந்த மகாபலி சக்ரவர்த்தி கனவில்
வரவேண்டும் 
முருகன் காதில் பேச வேண்டும் 
குழந்தை ஏசு கைபிடித்திழுத்து 
விண்ணுலகு காட்டவேண்டும்

அதன் பின்னர் உங்களுக்கு ஒரு பூச்சி விளையாட்டை 
அறிமுகம் செய்து வைப்பேன்.
ரயிலில் சுற்றியலையும் வண்ணத்துப் பூச்சியை 
ரயிலில் இருந்து கீழே தள்ளி விடும் விளையாட்டு 
இதனை ரயில் இருந்தால் மட்டும்தான் விளையாடமுடியும் 
என்றில்லாதிருப்பதே 
இதன் சிறப்பு

நீங்கள் தடுமாறாமல் நடக்குமிடத்தில் அங்கேயே இருந்து தங்கிவிடுங்கள் .
அப்போது நீங்கள் சம்சாரி 
நான் பகவான்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"