காளான் புற்று - சிறுகதை

காளான் புற்று

ஷீலாவின் ஞாபகமாய் இருந்தது அவனுக்கு. அவள் உடல் மணத்தையும் அடிக்கடி உணர முடிந்தது. அது இரண்டு மூன்று கணங்கள் வரை மறைந்து நின்று கொண்டிருந்தது. அந்த மணம் அவனுக்குள் இலகுவான மனநிலையை ஏற்படுத்துவதையும் அந்த மணத்தில் பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் நாற்றம் வருத்தமூட்டும் எரிச்சலை ஏற்படுத்துவதையும் உணர்ந்தான். தன் உடம்பிலோ, சுற்றுப்புறத்திலோ ஷீலாவின் மணம் தங்கிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றியது. பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். ராத்திரி பிரயாணங்களில் ஜன்னல் வழியாய் வந்து சீறும் குளிர்ந்த காற்றில் உள்ள எரிச்சலுண்டாக்கும் வெப்பப் பிசுபிசுப்புத் தன்மையில்லாமல் அன்று காற்று மென்மையாக இருந்ததை லேசாக உணர முடிந்ததே தவிர பெரும்பாலும் அவனுக்கு உணர முடியவில்லை. பேருந்துக்குள் உள்ள வெளிச்சம் எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாலோ அல்லது ஷீலாவின் ஞாபகத்தை அழுத்தமாக அனுபவிக்கும் எண்ணத்தோடோ கண்களை மூடிக்கொண்டும் திறந்து கொண்டுமிருந்தான். கண்களை மூடித் திறக்கும்போது சுகமான உறுத்தலை அவனுக்கு உணர முடிந்தது. கண்களை மூடிக்கொண்டிருந்தபோது ஷீலாவின் ஞாபகம் அழுத்தமாய் இருந்தது. கண்களை அவன் திறக்கும் சமயங்களில் பார்வையில் ஏதும் படவில்லை என்று சொல்லலாம்.   
ஷீலாவின் உடன் இவனது உடலின் அளவே இருந்தது அவனுக்கு செளகரியமாக இருந்தது. அவளது முகத்திலுள்ள நுட்பமான கோடுகள் பழக்கங்களில் அவளுக்கேற்பட்ட அதிருப்தியையும், அவனது கண்கள் வெறுப்பும் கோபமும் கலந்த தாக்குதலுக்கான நிலையையும் கொண்டு மிளிர்வதாகவும் இருந்தன. கண்களை முத்தமிட்டான். அவள் உடல் மணம் கண்களைக் கூர்மைப்படுத்தி அவனை இலகுவாக்குவதுபோல இருந்தது. இறுக்கமாக அவளைக் கட்டித்தழுவிக் கொண்டிருந்தபோது அவள் உடல் அதிர்வதை நுட்பமாக உணர முடிந்தது. இன்னும் அதிக இறுக்கத்துடன் தழுவிக் கொண்டான். அவளது தழுவலில் ஒரு பொய் கலந்திருக்குமோ என்கிற சந்தேகம் அந்தரங்கமாக இருந்து கொண்டிருந்தது என்றாலும் அப்படியிருக்காது என்றும், வலிந்து தான் கற்பனை செய்வதாகவும் எண்ணிக் கொண்டு சந்தேகத்தையும் கற்பனை உண்டாக்கிய சோர்வையும் விலக்க முடியாமல் இருந்தான். 
இருளான மொட்டை மாடியில் நடுவில் துருத்திக் கொண்டிருந்த ஓட்டுச் சாய்வும் அதை ஒட்டிய சுவர் ஒரு பக்கமும் கைப்பிடிச் சுவர் இன்னொரு பக்கமுமாய் இருந்தன. மூன்று உடல்கள் படுத்துக்கொள்ளப் போதுமான அளவு இடம்கொண்ட முடுக்கு அது. கனத்த உடல்களெனில் இரண்டு உடல்கள் படுத்திருக்கலாம்.வெளியே நாகர்கோவில் / திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த பேருந்துகளின் விளக்குகள் மொட்டைமாடி ஆகாயத்தில் மிதந்து ஓடிய சமயங்களில் அவளது கண்கள் பிரகாசமாகத் தெரிந்தது அவனுக்கு விருப்பமாயிருந்தது. பின் கழுத்துப் பகுதிகளில் முத்தமிட்டான். அவளது முத்தங்களில் ஒரு குரூரத் தன்மையை உணர முடிந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. அதில் யாரையோ பழிவாங்குகிற மூர்க்கம் நிறைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. காமத்தால் முழுக்க சூழப்பட்ட பிறகு அவள் பேசிய வார்த்தைகள், அவளுக்கு விருப்பமான ஆணின் தோற்றத்தை அவனுக்கு வற்புறுத்துவதாக இருந்தது. அத்தகைய மயக்க நிலையில் அழகாக அவனுக்கு தோன்றினாள். அவளது வற்புறுத்தலுக்கு ஏற்படி அவன் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது. அசதியாக இல்லாமல் மன ஆறுதலாகவும் அப்படியே இருக்கலாம் போலவும் இருந்தது.
அடுத்ததாக அவளோடு படுக்க பாலு தயாராக இருப்பது ஞாபகத்துக்குள் சில நிமிடங்கள் கழித்து அவனுக்கு ஏற்பட்டபோது யாரோ தன் அந்தரங்கத்துக்குள் இருப்பது போன்ற உணர்வை அடைந்தான். இவன் வரைந்து உருவாக்கியபின் கேன்வாஸின் வெளியே அவள் நழுவிக் கொண்டிருப்பது போல இருந்தது. அது அவனுக்கு சுயஅனுதாபத்தோடு கூடிய மங்கலான ஒரு மன அருவருப்பை ஏற்படூத்தியது. அருவருப்பைத் தாண்டி சமாதானம் அடையும் பிரக்ஞையின்றி முயன்று கொண்டிருந்தான். அவளது கண்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது 'இதை நிறுத்திவிட்டேன்' என்று அவன் கேட்டது அபத்தமாக இப்போது விரிந்து கொண்டிருந்தது. ஷீலா வேறு யாரோடும் இப்போது படுக்க முடியாது என்று சொன்னாள். இங்கேயே இருக்கலாம் என்றாள். அவள் உணர்வின் இறுக்கம் கலைந்த நினைவு திரும்பும்போது கண்களில் கலைந்த நினைவு திரும்பும்போது கண்களில் படர்ந்திருந்த வெறுமை அழகிய மன வருத்தத்தை அவனுக்கு ஏற்படுத்தியது. இருளுக்குள் அவள் கண்களில் தெரிந்த வெறுமை போதையாகவும் இருந்தது. பாலு படிகளில் மேலே ஏறி வருவது இருளுக்குள் உருளும் சப்தமாய் கேட்டது ஷீலாவின் மேல் கிடந்த கால்களை எடுத்துக்கொண்டு பற்றியிருந்த வியர்வை பிசுபிசுப்போடுள்ள அவளது உள்ளங்கையில் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு மொட்டைமாடியின் ஒரு இரண்டரையடி உயரப் படியில் இறங்கி ஓடுகள் பதித்த தரையில் நீளமாய் படுத்தான். 
 
நட்சத்திரங்கள் ஆழமாய் வன்மத்தோடு ஜொலித்தன. வெளிச்சத்தையும் வெளிறிய வெடித்த சாம்பல் மலையொன்று தலைகீழாய் தொங்குவது போன்று தூரத்தில் ‍தெரிந்த ஒரு மேகத்தையும் பார்க்க வெறுப்பாய் இருந்தது. சுமாராக ஏழு மணிவாக்கில் குடித்த பீரும் 90ml Mc Dow-els பிராந்தியும் தணிந்திருப்பதை உணர்ந்தான். லேசாக சரிந்து படுத்தபோது கைப்பிடிச்சுவரின் ஒரு இடுக்கு வழியே எங்கிருந்தோ வந்த மின் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. மீண்டும் பழைய நிலைக்குத் தன்னைச் சரிசெய்துகொண்டு படுத்தான்.ஷீலாவோடு வந்த பெண்ணை குமரேசன் முடித்துவிட்டு எழும்பிப்போனபோதும் வேறு ஒரு ஆள் அந்த இடத்துக்குப் போவது தெரிந்தது. அது யார் என்று தெரியவில்லை. அந்த இடத்தில் அசெளகரியமிக்க செளகரியங்களை ஏற்படுத்திக் கொடுத்தவனுக்கு நண்பனாக அவன் இருக்கக்கூடும் என்று யூகித்தான். அவன் நடந்துபோனவிதம் அருவருப்பூட்டும் நிமிர்வதோடு இருந்தது. அவன் கைவீசிய ஒரு கணம் போட்டியில் பங்கெடுக்கப் போகிறவனின் உடல் விறைப்பை அவன் அடைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. அந்தக் காட்சி ஏற்படுத்திய அருவருப்பான உணர்வை விலக்க முயன்று வானத்தில் எதையும் பார்க்கப் பிடிக்காமல் மீண்டும் அருவருப்புக்குத் திரும்பினான். அடுத்தும் ஒன்றிரண்டு பேர் காத்திருந்தார்கள். அவர்கள் அவளின் எந்த இடத்தை அடைய குறியாக இருக்கிறார்களோ அந்த இடம் தனக்கு பொருட்டாகவும் பொருட்டில்லாதது போலவும் தோன்றியது. அவர்களது மனம் உருவாக்கும் தட்டையான ஆடுகளத்துக்கு வெளியே தனது ஓவியங்கள் லட்சக்கணக்கில் நிறைந்திருப்பதுபோல அவனுக்கு இருந்தது. ஷீலா லேசாக வெறுப்பாக முனகுவது கேட்டது. பாலு ரகசியமாகத் திட்டிக் கொண்டிருந்தான். அவனுக்குப் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்தான். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து உறிஞ்சிய புகை சுரத்தில்லாமல் இருந்தது. பாலுவுக்கும் ஷீலாவுக்கும் நடந்த தகராறில் காது வலிந்து நின்று கொண்டிருந்தது. எந்த தொந்தரவும் செய்யாமல் அவளோடுப் படுத்திருக்கலாம் என்று அவன் நினைத்தான். சண்டை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது. அவளது வசை கலந்த மலையாளத்தின் ஒலி எழும்பிக் கொண்டிருந்தது. இருளுக்குள் ஒலி படர்ந்து கீழறைகளுக்கும் சாலைகளுக்கும் தாவி நின்றது. மீண்டும் படர்ந்து தாவி நின்றது. அவளது குரல் ஓயும் மெளனத்துக்குள் வெறியும் கோபமும் கலந்த பாலுவின் விம்மல் கேட்டுக் கொண்டிருந்தது. கடைசியாக காதை கூர்மையாக்கிக் கொண்டு கேட்ட குருட்டு மெளனத்தில் அவள் விலாவில் பாலுவிட்ட உதையின் சத்தம் கரைந்தபோது அவள்திருப்பித் தாக்கத் துவங்குவதை உணர்ந்தான். ‍வேகமாக படிகளில் ஏறி அவர்களுக்கு மத்தியில் உட்கார குனியும்போதே 'ஏன்' என்று மிகவும் ரகசியமாகக் கேட்டான். கலவரமாய் ஏதேனும் நடந்து யாரேனும் ஒருத்தி இறந்து போய்விடுவாளோ என்று தோன்றியது. போலீஸ் வந்தால் எப்படி தப்பிப்பது என்பதும் தப்ப இயலாது என்பதும் அவனுக்குள் பதட்டத்தை இப்போது ஏற்படுத்தியிருந்தன. அந்த தேசிய நெடுஞ்சாலையின் அரை கி.மீ தூரத்திலிருந்த போலீஸ் நெடுஞ்சாலையின் அரை கி.மீ தூரத்திலிருந்த போலீஸ் ஸ்டேசன் அடுத்த கட்டமாக இருப்பதுபோலத் தோன்றியது. 
பாலுவின் உதட்டில் இரத்தக்கசிவு இருப்பது ‍இருட்டில் தெரிந்தது. 'கடிச்சிற்றா தேவடியா' என்று சொல்லியபடி பாலு அவனை விலக்கிக்கொண்டு நிர்வாணமாகக் கிடந்த அவளை உதைக்க எகிறினான். மேலே மிதந்து வந்த வெளிச்சத்தில் கால்கள் பளபளத்து மீண்டும் இருண்டது. இரண்டொரு கணங்கள் மெளனமாக கழிந்தபின் இருட்டு மூவரையும் வெறுமையோடு சூழ்வது கண்டு பயந்து இவன் 'ஏன் கடிச்சே' என்று கேட்டான். பாலுவிடம் ஏதேனும் விஷயங்களைக் கேட்கும் போதுள்ள அதே விதமான த்வனியோடு அவன் அவளைக் கேட்டது பாலுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.அவனைத் தாக்குவதற்குரிய முகபாவத்தை பாலு திடீரென அடைவதைப் பார்த்தான். 'இம்மாவருக்கு இங்ஙனதன்னே மனசிலாக்கணும். ஞானும் மனுஷியாணல்லே' என்று அவள் முடுக்கில் நிண்டு படுத்தாள். அவனிடம் எதுவும் பேசாமல் எழுந்து போவதுதான் அவன்மீது தான் தொடுக்கும் உச்சகட்ட தாக்குதல் என்று நினைத்துக்கொண்டு பாலு எழும்பிப் போனான். அவன் எழும்பிப் போன விதத்தையும் பாலுவின் பார்வையையும் தவிர்த்தபோது வன்மமான சாம்பல் இருளை உணர்ந்தான். அந்த சமயத்தில் ஷீலாவின் கரங்கள் ஓட்டுத்தரையில் உட்கார்ந்தபடி ஊணியிருந்த இவனது இடது கரத்தை பற்றியிருந்தன. கரங்களை விலக்கி அவளருகில் மிகவும் நெருக்கமாக ஒட்டிக்கொண்டு படுத்தான். அவளது சூடான மூச்சு ஒருபக்க ஒர நெஞ்சில் தெரிந்தது. சில கணங்களில் மல்லாந்து கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு ஜெயாவின் ஞழபகமாய் இருந்தது. அதே சயமத்தில் அவன் உடனிருந்த நண்பர்கள் அனைவருக்கும் அப்போது தன்மீது வெறுப்பு கவிந்து கொண்டிருப்பதை தன் பார்வையில் படும்படியாய் அவர்கள் நடந்து திரிந்த விதத்தில் உணர்ந்தான். 
குமரேசன் திரண்ட சதைகளின் சிலபகுதிகளில் குருட்டு ஒளி மிளர ஜட்டியோடு மாடியின் இரண்டடி உயர மதில் சுவரில் கால்படாமல் மறுக்க திண்டில் குதித்தான். அவன் மற்ற நண்பர்களைவிட சற்று குதித்தான். அவன் மற்ற நண்பர்களை விட சற்று உற்சாகமாகவும் தன்மீது அதிகமான கோபமில்லாமலும் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அவனது உற்சாகம் லேசான மனக்கசப்பை ஏற்படுத்துவதையும் உணர்ந்தான். ஷீலாவோடு வந்த பெண்ணோடு குறைந்தபட்சம் இரண்டு தடவைகளேனும் போய் வந்திருக்கிறான் என்பதையும் யூகிக்க முடிந்தது. குமரேசனும் நண்பர்களும் இருளுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டது யூகிக்க முடியாதபடி மர்மத் தன்மையோடு இருந்தது. ஷீலாவோடு கண்டிப்பாகப் போய்விடவேண்டும் என்கிற எண்ணம் பிற நண்பர்களுக்கு இருப்பதுபோல குமரேசனுக்கும் இருப்பதை உணர்ந்தான். ஷீலாவோடு போய்விட வேண்டும் என்பது ஒருவித சவாலாக அவர்களுக்கு மாறி இருப்பதாக அவனுக்குப்பட்டது.
 
ஷீலாவோடு வந்த பெண் எந்திரம்போல எல்லோருக்கும் ஈடுகொடுத்தபடி வெறுத்தரையில் கனத்த பிருஷ்டங்களோடும் பெரிய மார்புகளோடும் மல்லாந்து படுத்திருப்பதும், நபர்கள் மாறிமாறி அவளிடம் போய்க் கொண்டிருப்பதும், ஷீராவோடு படுத்திருந்த இடத்திலிருந்து முக்கோண திசையில் பத்தடி தூரத்தில் தெரிந்தும் தெரியாமலுமாய் இருந்தது. ஆட்கள் தொடர்ந்து குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டிருந்தார்கள். உடலசைவுகளிலும் பருமனிலும் சிறிய வேறுபாடுகள் இருந்தும் இருட்டுக்குள் இன்னின்னார் என்று அறிந்து கொள்ள இயலவில்லை. அவன் சரிந்து படுத்தபடி வானத்தைப் பார்க்க முடிந்தபோது ஞாபகங்கள் நகர மறுத்து நின்று கொண்டிருந்தன. ஷீலா இப்போது அவனது உதட்டை உறிஞ்சியபடி இடுப்பைச் சுற்றி வளைத்தாள். அவன் எந்த உணர்வுமற்று வறண்ட நிலையிலிருந்தான். தான் இரண்டாவது முறையாக அவளோடு உறவுகொள்ள முடியாது என்று தோன்றியது. வெட்கமும் கூச்சமும் அடைந்தான். அவள் தன்னை மிதித்துத் தள்ளிவிட்டுப் போய் விடுவாள் என்று நினைத்தான். அவள் அவனது பேன்ட்டைப் பிடித்து மூர்க்கமாக இழுத்தாள். அவளது இடுப்பைச் சுற்றி வளைத்து கண்களில் முத்தமிட்டான். 'சீக்கிரம் முடிச்சிற்று வாடே' என்று அதட்டும் த்வனியுடன் சொல்லிவிட்டு அப்படிச் சொல்ல முடிந்த நிமிர்விலும் பிற நண்பர்களின் மனோபாவத்தைப் பூர்த்திசெய்து விட்ட சாதகமான விறைப்பிலும் குமரேசன் பின்னகர்ந்து செல்வதை உணர்ந்தான்.ஷீலாவின் கண்கள் இப்போது வசீகரமாயிருந்தன. நண்பர்களின் மர்ம ஒலிகள் கேட்காமல் போயிருந்ததை அவன் அறியவில்லை. இருட்டும் ஒளியும் எதுவும் கண்களில் படாமல் அவளது கண்களும் பின்கழுத்தும் அவன் கண்களை மறைந்திருந்தன. சில நிமிடங்களில் எழுந்து விலகினான். கீழே இறங்கியபோது சில நண்பர்கள் அவளுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்துச் சிரிக்க முயற்சித்தார்கள். அவர்கள் சற்று முன்புவரை தன்மீது கொண்டிருந்த மெளனமான வெறுப்பை சரிசெய்து கொள்ள முயற்சிப்பதுபோல இவனுக்குத் தோன்றியது. அவர்களுக்கு தன்மீது வெறுப்பிருந்த சமயத்தில் தனக்கும் அவர்கள் பேரில் வெறுப்பிருந்திருக்கும் என்கிற கூட்டான கற்பனையில் அவர்கள் இருந்தது அவனுக்கு பதிலுக்குச் சிரிக்க முயற்சிக்கவோ சைகை செய்யவோ இயலாத ஒரு நிலையை உருவாக்கியிருந்தது அவமானமாக இருந்தது. இந்த சில மணி நேரங்களுக்குள்ளாக அவர்களுக்கு தன்மீது விரோதமான அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டதும் மிகவும் சாதாரணமான வாக்கியத்தைக்கூட இவனிடம் பேசும்போது அழுத்தமான ஒலியோடுதான் பேசமுடியும் என்கிற நிலையை அவர்கள் அடைந்திருப்பதும் அவனுக்கு மர்மமாக இருந்தது. 
சில யோசனைகளோடு கீழிறங்கி வரும்போது செல்வம் தன்னோடு வருவதை உணர்ந்தான். செல்வத்தோடு சாலையில் இறங்கி நடக்கும்போது பூச்சிகளின் சப்தம் நிரம்பியிருந்தது. கால்மணி நேரத்திற்கும் அதிகமாக சாலையை ஒட்டிய திண்டில் உட்கார்ந்திருந்தான். திண்டின் பின்பகுதியில் இருட்டாய் நிற்கும் செடிகளுக்குள் இருட்டான வெள்ளம் குறைவான ஒலியோடு ஓடிக்கொண்டிருந்தது. அது எதனாலோ வறட்டுத்தனமான சத்தம்போல இவனுக்குக் கேட்டது. பேருந்துகள் சில நிமிஷங்களுக்கு ஒருமுறை சென்று கொண்டிருந்த சத்தம் வெளிச்சத்தோடு மூண்டு வந்து மெதுவாகக் கரைந்தது கொஞ்சம் இலகுவாகவும் இறுக்கமாகவும் இருப்பதுபோல இருந்தது. தூக்க முழிப்பு கண்களின் உறுத்தலில் ‍தெரிந்தது. தலைவலியின் மெல்லிய இழைகள் நெற்றியின் இரண்டு பக்கங்களையும் மெல்லிசாக இழுத்துக் கொண்டிருந்தன. முகம் கழுவிக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் குடிகலோம் போல இருந்தது. எழுந்திருக்கவும் பிடிக்கவில்லை. செல்வத்திடம் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு சொல்லாமலிருந்தான். செல்வத்திடம் வார்ப்பில் கிண்டப்பட்ட உப்புமாபோல பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவனுக்கு மெளனமாக ஈடு கொடுக்க நிறைய உழைக்க ‍வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில் மற்ற ஒலிகளை கேட்க முடியாமலாகி இருளில் வளவளக்கும் செல்வத்தின் குரலை மட்டுமே அவனால் கேட்க முடிந்தது.
 
அந்த சிறிய அறை அந்த குட்டிநகரத்தின் ஒதுக்குப்புறத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளின் நுழைவாயிலுக்கு மிகவும் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்தது. படிக்கட்டுகளில் நிறைய குப்பைகள் சிதறிக்கிடந்தன. படிக்கட்டின் மேலேறி அறையை அடைவது வரையில் கீழே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் புரோட்டாக் கடைகளிலிருந்து வெளியேறி காதைக் கொத்துவது போன்று கேட்கும் இரும்பு ஒலிகளும் கேட்கவில்லை. அறைக்கு வெளியே ஐந்தாறு நபர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஐம்பது வயதுக்கு மேலுள்ள ஒருத்தி இருபத்தி ஐந்து வயதிருக்கும் ஒருத்தியை கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். இருவரும் பரஸ்பரம் இவனுக்கு நெருடலான சற்று உரத்த குரலில் தாங்கள் மிகவும் இலகுவாக இருக்கிறோம் என்பதைப் பிரகடனப்படுத்துகிற த்வனியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது உரையாடலின் அடுக்குகள் உடைந்து கீழே விழுவதும் அதை சரிசெய்ய மிகுதியான சக்தியை அவர்கள் செலவிட்டுக் கொண்டிருப்பதும் அவனுக்குள் வன்முறையைத் தூண்டிக்கொண்டிருந்தது. ஷீலாவிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட காளான் உடலெங்கும் படர்ந்து கண்கள் வழியே வெளியே நீண்டு விழுவதுபோல கண்களில் சதைகளுக்குள் மணல் ஊர்வது போன்ற உறுத்தலெடுத்தது. காலையில் அவன் குறியை சுற்றி படர்ந்த மணல் போன்ற கொப்பளங்கள் கண்களில் பெரிய பெரிய கொப்பளங்களாய் விரிந்து கொண்டிருந்தன. லேசான நீர்க்கடுப்பில் அறை தொங்கிக் கொண்டிருப்பதுபோல உணர்ந்தான். மணல் உறுத்தல் போல ஷீலாவின் மேல் வெறுப்பாய் இருந்தது. அவளைச் சுற்றி படர்ந்து விரியும் காளான் தனக்குள் ஊடுருவி தனது முகம் உருகி கோணி இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அவனுக்கு பதினெட்டாவது சீட்ட கொடுக்கப்பட்டிருந்தது. பத்து வயதுக்குள் உள்ள சிறுவன் பெயரை பதிவு செய்துவிட்டு சிகரெட் அட்டையில் எழுதப்பட்ட எண்ணைக் கொடுத்திருந்தான்.
டாக்டர் அறையின் பக்கத்து அறை மிகவும் சிறியதாக இருந்தது. மூன்று மர பெஞ்சுகள் போடப்பட்டு வரிசையாக ஆண் பெண் நோயாளிகள் உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்திருந்தவர்களுக்கு நடுவில் இரண்டடி நீளத்தில் பெஞ்சின் நீளத்திற்கு ஒரு இடைவெளி இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அறை அது. ஒவ்வொருவரின் கண்களும் எதிரே பக்கத்துச் சுவரில் ஊர்ந்து கீழே தரையில் விழுந்து காளானின் விறைப்போடு அலைந்து கொண்டிருந்தன. அந்த அறைக்குள் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனின் காதுக்கு மேலுள்ள பக்கமாக மண்டையில் காலைத் தூக்கி அடிக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணம் கரைந்தபோது அறையின் சுவர்களைச் சுற்றி ஹெச்.ஐ.வி பலவிதமான பால்வினை நோய்களின் வர்ண புகைப்படப் போஸ்டர்கள் பெரிது பெரிதாய் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான். எதிரே மூலையில் உள்ள தலைக்கு உயரே ஒரு டேபில் பேன், சிறிய ஓசையுடன் மிகவும் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அங்கு வந்திருந்த பெண்களின் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான். அவர்களில் எவருக்குமே ஷீலாவின் கண்கள் இல்லை. கதவு திரைகளுக்குள் ஒளிந்திருந்து மனிதர்களைப் பார்க்கும் கண்களே அவற்றில் பெரும்பாலானவை. ஷீலாவின் கண்களில் தெரிந்த வன்முறைக்கு தலைகீழான ஒரு வளவளா கண்களாய் அவ‍ை இருந்தன. அவன் வயதை ஒத்த ஆண்கள் சிலபேர் பக்கவாசல் வழிய வெளியே போவதும் உள்ள வருவதும் அந்த சிறு பையனிடம் ஏதேனும் கேட்பதுமாய் இருந்தார்கள். அவன் எங்கேயோ அடிக்கடி பார்க்கிற, பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளாத ஒருவன் சுத்தமாக அறியாதது போன்ற முகபாவத்தோடு அவனை மிகவும் நுட்பமாக கண்காணித்துக் கொண்டிருந்தான். அறையை விட்டு வெளியே வந்து கைப்பிடிச் சுவர்களைப் பிடித்தபடி கீழே பார்த்தான். ஆள் அரவங்கள் பலவிதமான இடைவெளிகள் கொண்ட வாகன ஒலிகளோடு சமயம் மஞ்சள் சிவப்பாக மங்கிக் கொண்டிருப்பதைக் கவனமற்ற நிலையில் உணர்ந்தான். கீழே படிக்கட்டுகளில் அவன் பார்த்த இரு பெண்களும் விடாமல் தொடர்ந்து முன்பு போலவே பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கவனிக்கப் பிடிக்காமல் மூன்றடி நீள மாடி வராண்டாவில் நடக்கத் தொடங்கினான். இன்னும் அவனுக்கு முன்னால் குறைந்த பட்சம் பத்துப் பேரேனும் இருப்பார்கள் போலிருந்தது. ஒரு நபரின் பரிசோதனைக்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை ஆகும் போலும். தனக்கு எப்போது வரிசை வரும் என்று நிமிடங்களைக் கணக்கிட முயற்சித்து கணக்கிடாமல் விட்டுவிட்டு நீர் கடுப்பின் மெல்லிய எரிச்சலோடு படிக்கட்டுகளைப் பார்த்தபோது படிக்கட்டுகளில் அவனுக்குத் தெரிந்த நாற்பத்தைந்து வயது நண்பன் ஒருவன் தலை உடல் என்று முளைத்துக் கொண்டிருந்தான். அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவனை நோக்கி விரைவாக வரவேற்கும் முகத்தோடு வேகமாக நடந்து சென்றான். தன் முகம் உருகி ஒரு பென்சில் நீளத்தில் கோணலாக இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.
 
அவனது பாதைகளின் குறுக்கே பல ஷீலாக்கள் போய்க்கொண்டிருப்பது தற்போது அவனுக்கு புதிய அனுபவமாக இருந்தது. பேருந்துகளில், திருவிழாக் கடைகளில், கல்லூரி விட்டு வருகிற பெண்கள் கூட்டத்துக்குள், குடும்பங்களுக்குள், மாடிவீடுகளுக்குள் என்று எல்லா இடங்களிலும் ஷீலாக்கள் குறுக்கே போய்க் கொண்டிருந்தார்கள். துல்லியமாக ஷீலாக்களின் முகங்களை அடையாளங் கண்டு கொண்டான். வீதிகளில்,பேருந்துகளில், ராத்திரி நேரப் பயணங்களில் அதிக நேரம் செலவிட்ட ஷீலாக்க்ளின் முகங்கள் நுட்பமாகச் சிதைவடைந்து போயிருந்தன. அவர்களது முகங்களின் உள்ளே அரூபமாக தெரிந்த அசைவுகளில் சிதைவு வெளிக்கிளம்பி தெரிந்து மறைந்து கொண்டிருப்பதுபோல இருந்தது. மனதின் மர்மமான பகுதிகளை ஊடுருவும் கண்கள் பிசகி வன்மத்தை மட்டுமே கொண்டவைகளாக அவை இருந்தன. புதிய ஷீலாக்கள் மிகவும் வசீகரமாயிருந்தார்கள். வன்மம் சூழலும் கண்களின் ஓரங்களில் நிழல் ஈரம் வசீகரிக்கக் கூடியதாயிருந்தது. புதிய ஷீலாக்களைப் பார்ப்பதில் தகிக்கும் ஹிம்சையான உற்சாகம் இருப்பதை உணர்ந்தான். அவர்களைப் பார்க்கும் உலகத்துக்குள் நுழைவதற்கு வழக்கத்துக்கு மாறான ஒரு வாசலின் வழியே செல்ல வேண்டியிருந்தது. அதில் அவனுக்குப் போதை இருந்தது. குறிப்பிட்ட அந்த வாசல் வழியே நுழைந்தவர்கள் எல்லோருமே ஷீலாக்களை இனம் கண்டுகொண்டார்கள். ஒவ்வொரு முறையும் வாசலைக் கடந்து உள்ளே நுழைவது நிறைய கண்களால் நிறைக்கப்பட்ட குகைக்குள் நுழைவது போன்றிருந்தது. அந்த வாசலைக் கடந்து கண்கள் நிரம்பிய குகைக்குள் சென்று திரும்புவதில் ஏற்பட்ட போதைக்காகவே மீண்டும் அந்த வாசலைத் தாண்டி உள்ளே சென்று திரும்பிக் கொண்டிருந்தான். ஷீலாக்கள் அதிகமும் வந்துபோகிற இடங்களில் ஷீலாக்களைப் பார்க்க இயலாத சமயங்களிலும் நின்றுகொண்டிருப்பது அவனுக்குப் பழக்கமாகி இருந்தது. ஒருமுறை ஒரு ஷீலாவின் பின்னால் அவன் புதிதாய் போய் சேர்ந்த நகரத்தின் நெடுஞ்சாலையில் இரண்டு கி.மீட்டருக்கும் கூடுதலாய்ப் போய்க்கொண்டிருந்தான். மர்மமான நூல்கண்டில் ஷீலா அவனை இழுத்துக் கொண்டு போனாள். சாலையின் மேலே மிதந்து செல்வதுபோல அவனுக்குத் தோன்றியது. சுற்றியுள்ள காட்சிகளெல்லாம் கண்களில் அழுத்தமாய் படாமல் நிறமிழந்துப் போயிருந்ததை அவன் உணரவில்லை. எதிர்ப்படும் மனிதர்களிடம் எதையோத் தேடிக்கொண்டு செல்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றான். ஆனால் அந்தத் தோற்றத்தை மிகக் கடுமையான சந்தேகத்துக்குள்ளாக்குவது போன்று பார்த்துவிட்டு ஷீலாவையும் கூர்ந்து பார்த்துவிட்டு அவர்கள் கடந்து சென்றார்கள். இரண்டு கிலோமீட்டர் கடந்து சென்றபோது ஷீலா நூல்கண்டை வெகுவாக சுருட்டி அவனுக்கும் அவளுக்குமான தூரத்தை அருகாமையாக மாற்றியிருந்தாள். மிகவும் அதிகபட்சமான இடைவெளியில் இருந்ததையும் தற்பொழுது அருகாமையில் இருப்பதையும் அவன் உணரவில்லை. ஷீலா நடக்கும்போதே அவனுக்காக தெரிவித்துக் கொண்டு வந்த மெளனமான செய்கைகள் கடும் வெயிலில் ஒருவித அருவருப்பையும் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தன. கடைசியில் அவள் ஒரு பேருந்தில் ஏறச்சொல்லி சைகை செய்த இடத்தில் ‍பேருந்துகளும் வாகன இரைச்சலுமாய் இருந்தது. அந்த நாற்சந்தியில் குறுக்கே மறுக்கே வாகனங்கள் மெதுவாக நின்று ஒலியுடன் நகர்ந்து கொண்டிருந்தன. அது வெயிலில் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது. அவள் ஏறிச் சென்ற பேருந்தில் ஏறாமல் திரும்பி நடந்தான். முகம் எண்ணை பிசுக்கு வழயே கோரமாய் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது. மிகவும் ஒல்லியான நடைபாதையில் இரண்டடிக்கு நிழல் விழுந்த ஓரமாய் பெரிய கட்டிடங்களைத் தாண்டி நடந்து போய்க் கொண்டிருந்தான். சாலையின் இரண்டு புறங்களிலும் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பெரும் நகருக்கு அவனது வேலை தொடர்பாக சென்றிருந்தான். அதற்கு முன்பு உள்ள தடவைகளில் அந்த நகரத்துக்குப் போனபோது மனம் தொடர்ந்து புகை கிளப்பிக் கொண்டிருந்ததுபோல அல்லாமல் அவனது நண்பன் ஒருவனது அறை மனதை சாதுவாக வைத்துக்கொள்ள உதவியது. அந்த அறையில் அவனது இரண்டு நண்பர்கள் தங்கியிருந்தார்கள். புழங்கிப் பழசான நான்கு அறைகள் இருந்தன. பொருள்கள் திட்டமிடப்பட்ட வரிசைக்கிரமங்கள் குழம்பிக் கிடந்தது அவனுக்கு மனவசதியதக இருந்தது. ஷீலாவின் ஞாபகங்களோடு இருவர்களுக்கிடையிலும் குளித்து புறப்பட்டு தங்கியிருந்து படுத்துறங்கி புழங்கினான். குளிக்கும்போது குளியலறை ஷீலாவாய் நிரம்பி மனம் சாதுவாய் இருந்தது. ஷீலா தனக்குள் முளைத்து தனது உடலைச் சுற்றிப் படர்ந்து பெருத்திருப்பதைப்போலத் தோன்றியது. அந்த அறையின் ஜன்னல் வாயே தலை வாருகையில் ஒரு ஷீலா எதிரில் ஒரு திண்டில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவள் எவனோ ஒருத்தனின் மனைவியாக இருக்கிறாள் என்பதை யூகித்தான். அவள் முகத்திலிருந்த அவளுக்குள் பல இலைகள் அழுகிக் கொண்டிருப்பதும் அவளது முகத்தில் தெரிந்தது. அவளைச்சுற்றி கல்மரம் ஒன்று தன் கிளைகளைப் பரப்பி முளைத்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை அவள் அடைந்திருந்தாள். 
அந்த பெருநகரத்தில் அவனது வேலை சம்பந்தமாக வெயிலில் அலைந்து திரிந்த சமயத்தில் ஒன்றிரண்டு ஷீலாக்களை கண்டும் காணாததுபோல போய்க் கொண்டிருந்தான். ஒரு பேருந்து நிலையத்து வெக்கை நிழலின் கீழே சின்ன ஷீலாவை நான்கைந்து பேர் தனித்தனியே பல கோண நூற்கண்டு பின்னல் வளையத்துக்குள் நிறுத்தியிருந்தார்கள். ஒவ்வொரு கோணப் பகுதியிலும் நின்று அவர்கள் அவளைத் துல்லியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நூல்கண்டு வளையத்தின் ஒரு சாய்ந்த மூலையில் ஷீலா நிறுத்தப்பட்டிருந்தாள். அவள் தொலைபேசி இருக்கும் மூலைக்கு நகர்ந்ததும் நூல்கண்டின் முக்கோணங்கள் அவற்றின் திசைகளைத் திருப்பி சரியச்செய்தபடி தொலைபேசி மூலைக்கு அசைந்து நகர்ந்தது. நூல்கண்டு பின்னலை கண்டுகொள்ள இயலாத சில பயணிகள் நூல்கண்டினூடே புகுந்து குறுக்கே நெடுக்காக சென்று கொண்டிருந்தார்கள். நூல்கண்டு முக்கோணத்தில் நின்று கொண்டிருந்த சிலரைக் கவனித்தான். அவனது உறவினர்களின், நண்பர்களின், மரியாதைக்குரிய சில தெரிந்தவர்களின் முகச் சாயல்கள் அவர்களிடமிருந்தன. அவர்களின் கண்களில் ஷீலா பெரிய பெண்குறியாய் தெரிவதுபோல தோன்றியது. ஒரு மூலையில் ஒதுங்கி நின்று ஷீலாவை கண்காணித்துக் கொண்டிருந்தவன் தனது முகச்சாயலை கொண்டிருப்பதுபோலத் தோன்ற நூல்கண்டின் ஊடே புகுந்து வெளியேறினான். சுய அருவருக்கத்தக்க வெக்கையை உணர்ந்தபடி ஓடிச்சென்று பேருந்தில் ஏறிச்கொண்டான்.

Painting -  N.S.BENDRE(1910-1992

No comments:

Post a Comment

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...