தேங்க்ஸ் மோடி

தேங்க்ஸ் மோடி

காலையில் கந்து வட்டிக்கார நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.மோடியின் திட்டத்தால் இங்குள்ள கம்யூனிஸ்ட் ஆட்கள் கசங்கிப் போயிருக்கும் அளவிற்கு அவரும் கசங்கிப் போயிருக்கிறார்.மோடியை திட்ட அவருக்கு வாய் முழுதும் ஆகாத வார்த்தைகள் நிரம்பியிருக்கின்றன.இதில் சங்கடம் என்னவென்றால் இந்த திட்டம் வருவதுவரையில் மோடியை ஏகதேசம் தெய்வம் என்றே கருதியவர்.அவரது வாய் பல சமயங்களில் மோடியைப் பற்றிய மந்திர உச்சாடனங்களை சேவித்ததையும் கேட்டிருக்கிறேன்.முற்றிலுமாக முடங்கிப் போயிருக்கிறார்.வாடிக்கையாளர்கள் இப்போது பாக்கியை தருவதை மறுக்கிறார்.பொதுவாக நமக்கு கந்து வட்டிக்காரர்கள் பேரில் பொருந்தா கோபம் அதிகம்.அவர்கள் நடத்தையும் அவர்களின் பிம்பத்தை நிரூபிக்கும் விதமாகவே இருக்கும்.ஆனால் சிறு அளவில் கந்து வட்டி தொழில் செய்பவர்களும் விளிம்பு நிலையினர்தான்.வாழ்தலுக்கான வேறு வாய்ப்புகளே அற்றுப் போய் இந்த மரணக் கிணற்றுக்குள் வந்து விழுவார்கள் இவர்கள்.  இதிலேயே உருப்படி கண்டு அரசியல்வாதியாகி ,ஊர் சந்தைகளின் ஏலத்தை தீர்மானிக்கும் உயரத்திற்கு நகர்ந்து மந்திரியானவர்களும் உண்டு என்பது வேறு விஷயம்.

அரசியல்வாதிகள் திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள்.முழுதுமே தங்கள் அவதாரத்தை இனி மாற்றியாக வேண்டியிருக்கிறது.இனி ஒருவேளை தங்களை போன்றோர் அரசியலில் கொடிநாட்ட முடியாதோ என்கிற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.மருத்துவமனைகள்,கல்வி நிலையங்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள்.அவர்கள் கலங்குகிற அளவிற்கு நிலைமை செல்ல போவதில்லை.ஆயிரம் விஷயங்களை புதிதாக கண்டு பிடித்து விடமாட்டார்களா என்ன? சில மல்டி ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனைகளில் பணத்தைப் போட்டு  எரிப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.அது எந்த அளவிற்கு உண்மை என்பது தேவையற்றது.மல்டி ஸ்பெஷாலிட்டி பணம் எரிகிறது என்பதை கேள்விப்படவே சுகமாக இருக்கிறது. பணம் வைத்திருப்பவனிடம் ; தான் ஒரு கள்ளக்கடத்தல் காரன் என்னும் மனநிலையை இது ஏற்படுத்தியிருக்கிறது.உயர் அதிகாரிகள் வீடுகளில் சமையல் நடக்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்கிறார்கள்.

பங்கு போட்டு கல்யாணமண்டபம் போன்றவற்றைக் கட்டி தொழில் செய்தவர்கள்.பங்கு போட்டவர்களை அழைத்து போட்ட பணத்தை திரும்பப்   பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினால் எதிர்திசையில் பங்கு போட்டவர்கள் ஓடுகிறார்கள்.வரதட்சணையின் கொள்முதல் ரூபம் மாறுபட்டு விட்டது.ஊருக்கு  ஊர் வெற்றுத் திமிரால் அம்மன்கோவில்களில் வரிப்பாக்கி வைத்திருந்தவர்கள் பணம் வசூலாகிவிட்டது.ஆதார் கார்டு இருக்கும் ஏழைகள் வீட்டுக்கு உறவுக்காரர்கள் நலம் விசாரிக்க  வந்து கொண்டேயிருக்கிறார்கள்

சில்லறைகள் பெறுமதியாகி விட்டன .நோட்டு அழுகிறது.ஒவ்வொரு ரூபாய்க்கும் உள்ள மதிப்பு இப்போது ஒவ்வொருவராலும் உணரப்படுகிறது.மோடியை டீக்கடை பாய் என்று கிண்டலா செய்தவர்களுக்கு டீக்கடை பாய் அதிகாரமடைந்தால் என்ன செய்வான் என்று காட்டிக் கொடுத்து விட்டார் போலிருக்கிறது ! அடித்தட்டு அரசியல் பேசியவனோ நோட்டுகளின் பக்கம் நின்று மூக்கு சீந்தி அழுகிறான் .கிறுக்கு பிடித்து உளறுபவன் உள்ளூர் கொம்யூனிஸ்டும் வெளியூர் சேட்டும். உங்கள் யாருக்கேனும் என்ன நடக்கிறது இங்கே என்று தெளிவாகப் புரிகிறதா ?

பணத்தை ஒருவன் தருகிறேன் என்கிறான்.கேட்டவனோ வேண்டாம் வேண்டாம் என்று கூறி எதிர்திசையில் ஓடுகிறான் ,சம்பவம் பார்க்கவே அழகாயிருக்கிறது.தேங்க்ஸ் மோடி

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...