தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்

உறுதித்தன்மையற்ற  அதிகாரம்
"தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்".


நிரந்தர அரசியல். அப்படியொரு காலகட்டம் இருந்தது.இப்போது அது பழமையானது. எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்கி கொண்டு ஒரே தரப்பிலிருந்து உயிர் மூச்சு விடுவது அந்த பழைய முறை.பழைய காங்கிரஸ்காரர்கள் ,தி.மு.கவினர் இப்படி.
கம்யூனிஸ்டுகள் தலைமுறை தலைமுறைக்கு இருந்த இடம் விட்டு மாறமாட்டார்கள்.ஆனால் மாற்றம் பற்றி பேசவும் செய்வார்கள்.இன்றைய அரசியலில் அது பழமைவாத முறை .பிரச்சனைகளை அடைப்படையாகக் கொண்டு மட்டுமே நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒருநாள் தி.மு.கவிற்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டி வரலாம்.மறுநாளில் அ.தி.மு.கவை ஆதரிக்க நேரலாம்.கெஜ்ரிவாலை ஆதரித்து அரை நொடிக்குள் பி.ஜெ.பியை ஆதரிக்கும் அவசியம் ஏற்படலாம்.மாயாவதியின் ஒரு விஷயம் கவர்ந்த மறுநிமிடத்தில் மம்தாவை எதிர்க்க வேண்டி வரலாம்.பி.ஜெ.பியின் ஒரு கொள்கையை எதிர்த்துக் கொண்டே மற்றொன்றில் ஆதரிப்பதும் சாத்தியமே .
ஒரு விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எட்டும் கட்சி மற்றொன்றில் தலை கவிழ்ந்து விழலாம்.அதற்கான சாத்தியப்பாடுகள் இன்று எல்லா கட்சிகளிலும் உண்டு.தேசியக் கட்சிகளாயினும் சரி மாநிலக் கட்சிகளாயினும் சரிதான்.எப்போதும் நாங்களே செம்மை என்றோரு போஸ்டரை இப்போது அச்சடித்து வைத்துக் கொள்வது ஒரு கட்சிக்கும் இயலாது.காரணம் ; தத்துவங்கள் கோட்பாடுகள் கொள்கைகள் அனைத்துமே சுவரொட்டிகளாக மாற்றப்பட்டு அபத்த நிலையை எய்தியிருக்கின்றன.இன்று புனிதக்கோட்பாடு என்றோரு கோட்பாடு இல்லை.திருப்புனித கொள்கைகளும் கிடையாது. அன்றாடத்தில் வைத்தல்லாது எதனையுமே இப்போது மதிப்பிட இயலாது.
குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்டவர் என்பதால், குறிப்பிட்ட கொள்கை கொண்டவர் என்பதால் அவர் அநீதியிழைப்பதற்கு அப்பாற்பட்டவர் என்று நம்புவதற்குரிய ஆதாரங்கள் எதுவுமே கைவசமில்லை.சிறந்த கொள்கைகளை அடைப்படையாகக் கொண்டு கேவலமான வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் உலகெங்கும் நடந்திருக்கின்றன.எனவே நிரந்தர பாவிகளும் இங்கே இல்லை,நிரந்தர புனிதர்களும் இங்கு இல்லை.அப்படியான நிரந்தர அரசியலின் காலம் இனியும் இருக்கும் என்று கருத்துவதற்கான முகாந்திரங்களும் இல்லை.
இன்றைய தினத்தை மதிப்பிடும் போது நேற்றையும் நாளையையும் கோருவது என்பது இன்றைய நிலைக்கு உதவாது.பழைய அறிதல் கருவிகள் துருப்பிடித்து விட்டன.இன்றையை தினத்தில் நீங்கள் செய்த நன்மைக்கு நாளையே செய்யும் தீங்கில் எதிர்பார்க்கக் கூடாது.இப்படி ஆகலாமா ? என்றால் ஆகலாம் என்பது மட்டுமல்ல நிரந்தர அரசியல் தன்மையற்ற தற்காலிக பிரச்சனைகள் சார்ந்த அரசியலே சாலவும் சிறந்தது.எதிரி எப்போதும் எதிரியாகவோ ,நண்பன் எப்போதும் நண்பனாகவோ விசுவாசத்தின் பாதையில் செல்ல வேண்டியதில்லை.
எல்லா உரத்த கொள்கைகளுமே மாயாக்கள்தான்.அதிகாரத்திற்காக அது உரக்கப்படுகிறதே அன்றி சாராம்சத்திற்காக அல்ல.எல்லா உரத்த குரல்களும் அதிகாரத்தை எனக்கு அழுத்தமாக தந்து விடு என்பதைத்தான் தாகித்து வேண்டுகின்றன.இதில் அதிகாரத்தை வெறுத்து உறுமும் குரல்கள் அதிகாரம் விரைவாக வந்து சேர வேண்டும் என்கிற வகையைச் சேர்ந்தவை.எதனை அதிகமாக வெறுக்கிறீர்களோ அதன் மீது அதிக கிளர்ச்சி கொண்டிருக்கிறீர்கள் என்பதே அர்த்தம்.அதிகாரம் எதிர்மறையானது என்று பிதற்றுகிற அரசியல் குரல்கள் அனைத்துமே அதிகபட்ச அதிகாரத்தையே விரும்புகின்றன.எனவே அதிகாரத்தை எதிர்ப்பது என்பது வேலையல்ல.அதிகாரம் தரும் விளைவுகளை அன்றாடத்தில் வைத்து பரிசீலிப்பதே இன்று தேவைப்படுகிற அரசியல்.
அதிகாரம் எதிர்மறையானது அல்ல.அதிகாரம் எதிர்மறையானது என்று நமக்கு கற்பிக்கப்பட்ட அதிகாரத்தை மட்டுமே நாம் இதுவரையில் நினைவில் வைத்திருக்கிறோம்.அதிகாரம் எதிர்மறையானது அல்ல என்பது அதிகாரத்தை உங்களுடையதாகவும் சேர்த்து அணைத்து உள்ளிழுப்பது.
அதிகாரம் ; அது எதிர்மறையானதா என்பதை விளைவில் பரிசீலிக்க வேண்டும்.ஆற்றும் காரியத்தில் அதிகாரத்தை வைக்க வேண்டுமே அல்லாது புனைவுக் கருத்தாக்கங்களிலோ , மாயாக்களிலோ அல்ல.அன்றாடத்திற்கு அதிகாரத்தைக் கொண்டு வரும்போது நிரந்தர அதிகாரம் என்பதன் உறுதித்தன்மை சீர்குலைவது மட்டுமல்ல.அதில் மக்களின் பங்கேற்பு தீவிரமடைகிறது. உறுதிமிக்க அதிகாரம் கருத்தாக்கங்களின் , கொள்கைகளின் மாயாக்களை மக்களின் கையில் வைத்துவிட்டு அதிகாரத்தை; தான் மட்டுமே சுவைக்கத் தெரிந்து வைத்திருக்கிறது.இல்லையெனில் அறுபது வருடங்களாக காங்கிரஸ் கேட்பாரும் கேள்வியும் அற்று ஏக அநீதிகளுக்குப் பின்னரும் அரசியல் பவிசில் தப்பித்திருக்க முடியுமா?
அதிகாரத்தில் விளைவுகளின் அடைப்படையில் உறுதியின்மையை ஏற்படுத்த வேண்டியதே இன்றைய தேவை.விளைவு சார்ந்த தேர்வாக இதனைக் கொள்ளலாம்.இந்த பண்பு நமது வாழ்க்கையில் ஏற்கனவே உட்புகுந்து நிரம்பி விட்டது.எனவே அரசியலில் இந்த கண்ணோட்டத்தை அடைவது சிரமமான காரியம் இல்லை.
நமக்கு அதிகபட்ச அரசியல் சாத்தியங்கள் கிடையாது.நமக்கென்று இல்லை உலகம் முழுதுமே இவ்வாறுதான் நிலை.கம்யூனிச நாடுகளில் ,இனவாத மாயாக்களின் நாடுகளில் மேலும் பரிதாபம்.இங்கே இந்திய தேசியத்திலிருக்கும் பன்முக சாத்தியப்பாடுகள் கூட ,தமிழ்தேசியர்களிடம் கிடையாது என்பது நினைவில் இருக்கவேண்டும். .அதிலும் வாழ்க்கைக்குள் அதிகபட்ச நெளிவு சுழிவுகளுக்கான வாய்ப்புகளைக் கொண்டதுதான் இந்திய அரசியலின் வகைமை.முற்றிலும் முடங்கிய நிலை இல்லை இது.ஆசுவாசமளிக்கக் கூடியதுதான்.
இந்தியாவைப்பற்றிய தவறான பிம்பத்தை முன்வைக்கும் அரசியல் குரல்கள் மிகவும் ஆபத்து நிறைந்தவை.அவை நமது அனைத்துவிதமான அதிருப்தியுடனும் இந்தியா பற்றி அவை முன்வைக்க விரும்பும் தவறான பிம்பத்தை இணைக்க முயற்சிக்கின்றன.இணைகின்றன.யோசித்துப் பார்ப்பீர்களேயாயின் நிலை அவ்வாறானதல்ல என்பது விளங்கும் .
சில சதுரங்க விளையாட்டுகள் எல்லாராலும் விருப்பப்பட்டு நடைபெறுகின்றன. நடக்கும் காரியங்கள் நன்மையென்றால் நன்மை.இல்லையென்றால் இல்லை.இவ்வளவுதான் விஷயம் .ஆராயும் தேர்விற்கு இவ்வளவு தெளிவும் போதுமானது. விருப்பம் கொண்டியங்கும் சதுரங்க விளையாட்டுகளை அகற்றவும் தற்காலிக நிரந்தரமற்ற அரசியல்தான் உதவ முடியும்.சதுரங்கத்தில் காய்கள் இங்கே நிரந்தர அரசியலை உருவாக்கிப் பழகியவை.அதிகாரத்தை நீட்டிக்க செய்ய பாடுபடுபவை . அதற்கான சூது அறிந்தவை.நிரந்தர அரசியலின் பிரமுகர்கள்,அவர்கள் கொண்டிருக்கும் அறிவு ஆயுதங்கள் அனைத்துமே தற்காலிக அரசியலில் இப்போது பதற்றம் கொள்வதில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் நிரந்தர அரசியலின் உறுதித்தன்மையை புதிய அரசியல் கதிகலங்கச் செய்கிறது .மக்களின் மனம் நிரந்தர அரசியலில் இருந்து இப்போது மாறுபட்டிருப்பதே முகவர்களின் பதற்றத்திற்கு காரணம்
பின்புறத்தில் நடைபெறும் அனைத்துவிதமான விளையாட்டுக்களும் கட்புலனாகா மாயா என்றான பிறகு ,இதில் யாருமே விதிவிலக்கில்லையென்றான பிறகு சோற்றை ருசியில் வைப்பதும் தள்ளுவதுமே சாத்தியம் .
விஷேமென்றறிந்தால் தள்ளவும் அமுதெனில் உண்ணவும் அறியும் தன்மை மட்டும் போதுமானது.இன்றைய உணவே முக்கியமானது.நடைமுறையே பிரதானம்.நாளைய நிலாச்சோறும் ரசவடையும் நாளைக்குள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.இந்த ஒன்றுதான் இப்போது மக்களிடத்தில் இருக்கும் தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...