மாவோயிஸ்ட்கள் என்பதொன்றே எப்படி கொல்வதற்கு காரணமாகும் ?

மாவோயிஸ்ட்கள் என்பதொன்றே எப்படி கொல்வதற்கு காரணமாகும்
தோழர் பிரணராய் ?

அஜிதா உட்பட மூன்று மாவோயிஸ்ட்கள் மோதல் கொலையில் கேரளாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 [ காலையில் மாத்ருபூமி இதழுக்கு அளித்த தகவலில் மோதல் கொலையில் இறந்தவர்கள் கருப்பு தேவராஜ் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொரு பெண் பெயர் அஜிதா என்றும் நிலம்பூர் தெற்கு DFO  ஷாஜி தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது.தமிழ்நாட்டு இதழ்களில் இறந்தவர் காவேரி அம்பத்தூரைச் சேர்ந்தவர் என்றும் குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன.செய்திகளில் உள்ள இந்த குழப்பம் குத்துமதிப்பாகத் தான் போட்டுத் தள்ளியிருக்கிறார் என்கிற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. காலைச்  செய்தியில் உடனிருந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது மாலையில் பதினேழு என்று ஆகியிருக்கிறது ? உண்மை நிலவரம் கடவுள் அறியக்கூடும். ] 

எனக்கு விளங்கவில்லை.மாவோயிஸ்டுகள் என்பதொன்றே  எப்படி கொலை செய்ய காரணமாக முடியும் ? மாவோயிஸ்ட்கள் என்றால் வினோத சிங்கப்பல் ஏதேனும் கொண்டிருப்பார்களா ? சிங்கப்பல் வைத்திருப்பவர்களையெல்லாம் மோதல் கொலையில் கொல்லலாம் என்று சட்டத்தில் ஏதேனும் உட்பிரிவுகள் இருக்கிறதா ? வழக்கமான மோதல் கொலை நாடகங்களே இந்த அரச படுகொலையிலும் பின்பற்றப்பட்டுள்ளன.தோழர் பிரணராய்  விஜயனின் கேரளா கம்யூனிச  அரசு தமிழ்நாட்டிற்கு ஒப்ப மின்சாரத்தையூட்டி அரசுக் கொலைகளை நிகழ்த்த இன்னும் பழகவில்லை போலிருக்கிறது.வழக்கமான மோதல் கொலைக் காரணங்கள்  அலுப்பை ஏற்படுத்துகின்றன.கொலையில் புதிய தொழில் நுட்பங்களையேனும் கடைபிடிக்க கற்றுக் கொள்ளுங்கள் பிரணராய் விஜயன்.உங்களுக்கு இயலாதா என்ன ? அரசியல் எதிரிகளைக் கொல்ல மோதல் கொலையை ஒரு வழிமுறையாக்க வேண்டுமெனில் மக்கள் நம்பும் விதத்தில் கொலை நடக்க வேண்டாமா?

வடமாநிலங்களில் ஒரு சில இடங்களைத் தவிர மாவோயிஸ்டுகளின் நிலை என்பது அரசியல் ஜோக்கர்களின் நிலைதான்.ஆனால் மாவோயிஸ்டுகள் என்கிற பதம் இந்தியா முழுமைக்கும் பூதங்களைப் போன்று பெரிதுபடுத்தப்படுகின்றன.அரசியல் கொலைகள்  புரிவதற்கு இந்த பூதத்தோற்றம் பயன்படுத்தப்படுகின்றன.பாராசிட்டமால் குழிகைகளை கையில் வைத்திருந்தார்கள் என்கிற காரணம் காட்டப்பட்டு நடந்த மாவோயிஸ்ட் மோதல் கொலைகள் கூட இந்தியாவில் உண்டு.அரசியல் எதிரிகளைக் கொல்ல அவர்களை மாவோயிஸ்ட்கள் என்றோ ,காஷ்மீர் தீவிரவாதிகள் என்றோ அடையாளம் காட்டிவிட்டால் போதும் மக்கள் கேட்க மாட்டார்கள் என்கிற நிலைமை இங்கே உருவாக்கப்பட்டு ,அரசால் பின்பற்றப்படுகிறது. கேட்பாரற்ற எளிய கொலைகளாக அவை  உருமாறிவிடுகின்றன.  உண்மையில் பல இடங்களில் மாவோயிஸ்ட்கள் குறைந்தபட்ச செல்வாக்கோ,மக்கள் அதிகாரமோ அற்ற பழமைவாதிகள் என்பதுதான் நிலவரம்  .அவர்களின் அரசியல் காரியங்களில் எனக்கு ஏற்பில்லை.அது அவர்களை படுகொலை செய்வதற்கு எப்படி காரணமாக முடியும் ? ஏற்பற்ற அரசியல் காரியங்களையெல்லாம் மோதல் கொலையில் முடித்துவிடலாம் என்றால் இங்கு தப்பித் பிழைக்கும் தகுதி கொண்ட ஏதேனும் அரசியல் தரப்பு மிச்சமிருக்குமா ? இடதுசாரிகளை ,ஆர்.எஸ்.எஸ்ஸை என்று எதிரெதிர் தரப்புகள் அனைவரையும் மாற்றி மாற்றி அழித்தொழித்து விட முடியுமே ?

இது இருக்கட்டும் .மாவோயிஸ்ட்கள் என்றாலே கொல்லலாம் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா என்ன ?  அவர்கள் சிங்கவால் குரங்குகளை போன்றவர்கள் அவ்வளவுதான் விஷயம்.அவர்கள் இடையூறுகள் எதையேனும் செய்யாதவரையில் அவர்களை , அவர்கள் சிங்கவால் குரங்குகளாக இருக்கிறார்கள் என்பதனை முன்வைத்து கொல்ல முடியுமா என்ன ? உங்களைப்  போன்ற டாபர்மேன்கள் வாழ தகுதி கொண்டிருக்கிற உலகில் சிங்கவால் குரங்குகள் எதற்காக அழிய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

அஜிதா உட்பட கொல்லப்பட்ட மூன்றுபேருடன் இணைந்து பதினைந்து பேர் இருந்ததாகவும் அவர்கள் கோட்டையைப் பிடிக்க காட்டுக்குள் நகர்ந்து கொண்டிருந்ததாகவும் ,வழக்கமான போலீஸ் விசாரணையில் எதிர்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கொல்லப்பட்டதாகவும் புனையபடுகிற கதைகளை யாரை நம்பச் சொல்கிறார்கள் ? கேரளாவில் எல்லோரும் தான் காட்டில் இருக்கிறார்கள்.காட்டுக்குள் தான் நடமாடுகிறார்கள்.எனது கேள்வி எளிமையானது ."அவர்கள் உங்களுக்கு என்ன இடையூறு செய்தார்கள் ?" .ஒரு குழுவை சுற்றி வளைத்துக் கொல்ல அவர்கள் இன்னார் என்று அடையாளம் சொல்வது மட்டுமே போதாது தோழர்களே ?
அவர்கள் பொதுமக்களுக்கோ .பிறருக்கோ செய்த இடையூறு என்ன ? சொல்லுங்கள் .

சந்திர சேகரனின் ஆவி இன்னும் தன்னைச் சுற்றிக்   கொண்டிப்பதாக ஐயம் கொண்டிருக்கிறாரோ தோழர் பிரணராய் விஜயன் ?

No comments:

Post a Comment

அன்னை ஆண்டாளின் விஷயத்தில்

அன்னை ஆண்டாளின் விஷயத்தில் எல்லா மதங்களிலும் புனித அன்னையர் உள்ளனர். அவதாரங்களும் உள்ளனர். வரலாற்றுத் தரவுகளை மேற்கொண்டோ ,தகவல்களின்...