தீவிரம் வேடிக்கை வேறுபாடு 1

1
உடலிலிருந்து ஆயுதத்தைக் கழற்றுதல்

பத்தாண்டுகளுக்கு முன்புவரையில் கையில் எப்போதும் என்னிடம் கத்தி இருக்கும்.அது உடலின் எந்த பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் கையில் மினுங்கும் விதத்தில் வித்தை சிறுவயதில் களரியாகப் பாடம் பயின்றது.சிறுவயதில் படிக்கும் வித்தைகள் எல்லாம் பின்னர் கைவிட்டு விட்டாலும் கூட, சிறுவயதில் பயிற்சியாக ஒட்டிக் கொள்பவை உடலின் பழக்கமாக நீங்கள் எவ்வளவு உயரிய மயக்க மருந்துகள் உண்டாலும் பொறுக்காது எழும்பவே செய்யும் .எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் எதேச்சையாகக் கூட நாற்பதிற்கும் குறைவான வயது கொண்டவர்களிடம் மோதி பார்க்காத துணியலாம்.அறுபதுக்கும் மேற்பட்டவர்களிடம் துணியவே
கூடாது .அவர்களின் உடல் பழக்கத்தில் களரியும் வர்மமும் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.ஒருமுறை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தாக்க முயன்ற பொடியனை கூடுமானவரையில் வேண்டாம் என்று சொல்லி முடிவில் மென்னியைக் கழற்றிய பெரியவரின் வயது எழுபதுக்கும் மேலிருக்கும்.கண்ணால் கண்டவர்கள் விருதோட்டம் பிடித்தார்கள். பழைய
தலைமுறையினருக்கு இங்கே வித்தைகள்தான் பேஷன்.
கத்தியை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில் அது ஒரு திருக்கோட்டமாகவோ ,பிளேடாகவோ வைத்திருப்பேன். திருக்கோட்டம் என்று ஸ்குருடிரைவரைத்தான் குறிப்பிடுகிறேன்.நண்பர்கள் சிலர் எனது பயணப்பைகளில் தற்செயலாகக் கண்டடைந்த ஆயுதங்கள் குறித்து கேள்விகள் கூட கேட்டிருக்கிறார்கள்.கிறுக்கு சிரசில் நின்றாட்டம் காட்டியபோது , ஊருராய்ச் சுற்றியலைந்த காலங்களில் பிளேடுக்கு மாறினேன்.சில காலம் கத்தியின் பயன்பாட்டில் இருந்தது சிறிய ரைனால்ஸ் பேனா.ரைனால்ஸ் பேனாவை வைத்தே கூட கொலைமுயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.முடியும்.பல்குத்த உதவுவது போல.
ஆயுதங்களை நமது உடலின் பகுதிகளில் பதுக்குவது அல்லது தாக்கும் ஆயுதங்களை உடலின் ஒரு பகுதியாக்குவது ,தனது உடலை ஆயுதத்தின் முன்பாக நிறுத்துவதற்கு ஒப்பானதுதான்.உடலை மட்டுமல்ல நமது அகந்தையையும் கத்தி முனையில் நிப்பாட்டி வைத்திருப்பது.ஆயுதம் வைத்துக் கொள்வது பாதுகாப்பிற்கு என்று நாம் ஜோடித்துக் கொள்வது நமக்கு நாம் செய்தது கொள்ளும் மோசடி.ஒருபோதும் அது பாதுகாக்காது.சிக்கலாக்கிக் கொண்டேயிருக்கும்.புதிய புதிய சிக்கல்களைத் தோன்றத் செய்யும்.ஆயுதத்தை உடலாக்குவதன் மூலமாக முதலில் நாம் இழப்பது பாதுக்காப்பைத்தான்.ஏனெனில் ஆயுதங்களுக்கென்று சுயேட்சையான ஒரு வேலைத் திட்டம் இருக்கிறது.அதன் வேலைத்திட்டத்தில் சென்று மாட்டிக் கொள்ளக் கூடாது .
ஆயுதங்களுக்கென்று விதியின் தனித்த ஒரு காமச் செய்லபாடொன்று இருக்கிறது.மேலாக ஒரு சிறப்பு மோப்ப
சக்தியும் . ஆயுதங்களை எடுத்த பின்னர் அது எப்போதும் உங்கள் அகந்தையின் நுனியில் வந்து தெறிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
உங்களையும் எதிரிகளையும் தொடந்து கண்காணிக்கும்.எதிரியைக் காட்டிலும் தன்னைத் தானே அதிகம் கண்காணிக்கும்.சந்தேகத்தையும் ,பயத்தையும் தொடர்ந்து உருவாக்கி அது தன்னைப் போர்த்திக் கொள்ளும் .கத்தியில் போர்த்தப்படும் பண்புகள் அகத்தின் உள்ளிறைச்சியாக மாறிவிடும்.நான் கொண்டிருந்த கத்தியில் இந்த பண்புகள் படுத்துத் துயில்வதை விழித்துக் கண்டு பத்து வருடங்கள் ஆகின்றன.அதனை எப்போது எனது உடலுக்கப்பால் எடுத்து எறிந்தேனோ அதன் பிறகே காந்தியின் அருமை என்ன என்பது புரியத் தொடங்கியது.உடலிலிருந்து ஆயுதம் எப்போது கழன்று கீழே விழுகிறதோ அப்போதிலிருந்துதான் உடல் துலங்கும்.உடலென்பது இசைக்கோலம்,உடலென்பது அவதானிப்பின் பள்ளியறை என்பது தெளிவுபடும்.உடலென்பது பிரபஞ்சத்தை பார்க்கும் ,உணரும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிற ஏற்பாட்டைச் செய்கிற ஓரிடம்.ஆயுதத்தை விடுவது என்பது உடலிலிருந்தும் உணர்வில் இருந்தும் ஆயுதத்தைக் கைவிடுதலாக இருக்கவேண்டும்.அச்சத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தொடர்புகள் அப்போது விளங்கிவிடும் .
கத்தியென்றால் எல்லா கத்தியையும் அது குறிக்காது.ஒரு பனையேறி வைத்திருக்கும் பாளையரிவாள் எடுத்து ஒருவரின் தலையை சீவவேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை.கழுத்தின் அருகில் கொண்டு சென்றாலே போதும் தலை கழன்று தரையில் விழும் .ஆனால் ஒரு பனையேறிக்கு ஒருபோதும் இந்த எதிர்சிந்தை கிடையாது.மரம்வெட்டி சதா கொண்டலையும் அரிவாளுக்கும் இந்த எதிர் சிந்தை இல்லை.
எனக்கு ஒரு நண்பர் உண்டு .உரையாடல்களில் ஒரு வார்த்தையைத் துவங்கவும் அந்த வார்த்தையை மடக்கி அந்த வார்த்தையிலிருந்தே எதிர்வினையைத் தொடக்கி விடுவார்.அது சுழன்று சுழன்று தானே படியும் புழுதி போலிருக்கும்.வாக்கியம் செல்லத் தொடங்கும் திசைக்கும் அவர் எதிர்வினைக்கும் ஒரு பொருத்தப்பாடுமே இராது.அவரது எதிர்வினைகள் தனக்குத் தானே எப்போதும் துள்ளிக் கொண்டிருப்பவை.நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள்,சொல்ல வரும் செய்தி என்ன ? எதுவும் அவருக்குத் தேவையில்லை.அவரிடம் ஆயுதமிருந்தால் அதனை அவர் எவ்வாறு கையாள்வார் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.உங்கள் முனைப்பிலிருந்தே அவரது எதிர்வினைகள் வலை பின்னத் தொடங்கிவிடும்.அவர் எதிர்வினை புரியாமலிருக்க வேண்டுமெனில் உங்களிடம் முனைப்பேதும் தென்படாத தவநிலை வேண்டும்.சவங்களிடம் மட்டுமே அவரிடம் எதிர் வினையில்லை.
பிளேடு கையில் பதுங்கும் காலங்கள் தீவிரமானவை .விளிம்பு நிலையின் பள்ளத்தாக்கில் சரிந்து விழ வாழ்க்கைக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் அது கையை வந்தடைவது துரதிர்டமானது.தனதுடலை தானே கீறிக் கொண்டலைவதற்கும்,அது கைவசத்தில் இருப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. முதலில் நீங்கள் எடுக்க தொடங்கிய மவுசான ,அழகிய பெண்தன்மை கொண்ட கத்தியிடமிருந்து சரிந்து , சரிந்தும் கடைசியில் இந்த பிளேடுக்கு வந்து சேரலாம்.பிளேட்டில் தொடங்கி அழகிய பெண்தன்மைக்கு வந்து சேரும் பளிங்குப் பாதைகளும் உள்ளன. உடலாயுதத்தை விதி முடிவு செய்வதை பொறுத்தது அது.
இந்த பாதுகாப்பின்மை உள்ளில் ஊற்றூரும் கருமுளை எங்கிருக்கிறது ? பிறரது ஆசையும் காமமும் அக்கறையும் அற்று வளரும் குழந்தைகளே பெரும்பாலும் பாதுகாப்பின்மையின் பெரும்பள்ளத்தில் விழுகிறார்கள்.சிறுவயதில் எப்போதுமே எனக்கு என்னை எல்லோரும் அபாயத்தில் நிற்க வைத்து விட்டுச் சென்று விடுவார்கள் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.நம்மைக் கைவிட்டு விடுவார்கள் என்று தோன்றும் .அம்மா சிறுவயதில் விடைபெற்றுக் கொண்டது மட்டுமே இதற்கு காரணமில்லை.பின்னர் என்னைப் பராமரித்தவர்கள் அத்தனை பேரிடமும் எனது சிறு பிராயம் கண்டுணர்ந்த
அக்கறையின்மையும் ,ஆசையின்மையும் தோல்போல மேனியில் தடித்தது.ஆசையின்றி அக்கறையை செயற்கையாக்குபவர்களை அகமனம் உதைத்து வெளியேற்றியது.தன்னை எப்போதும் தான்தான் காப்பாற்றியாக வேண்டும் என்கிற சுய முனைப்பு . தற்காப்பின் கையில் வந்தடையும் தெய்வங்கள் நியமிக்கும் கத்தி.கத்தியை கையில் கொண்டு தருவது தெய்வங்கள்தான்.தெய்வங்கள் பாதுகாப்பின்மையை கொண்டு சேர்க்கும் குழந்தைகளே தலைமைப் பண்பிற்கும்,கண்டுபிடித்தலுக்கும் தகுதியாகிறார்கள்.ஆனால் கத்தியை கலையாகவோ,வேறு பெறுமதியாகவோ,இசைக் கோலமாகவோ உருமாற்றுவதில்தான் கீர்த்தி அடங்கியிருக்கிறது.புறக்கணிப்பில் மிளிரும் காந்தம் அதுவாக வேண்டும்.உடலாயுதம் இறக்கி வைக்கப்பட வேண்டும்.உடலிலிருந்து ஆயுதத்தை இறக்கி வைத்ததும் எதிரி பலகீனமடைந்து ஒரு கணத்தில் வயோதிகம் அடைவது கண்ணால் காணுமளவிற்குத் தெரியும் தெய்வங்களை விஞ்சும் சவால் கொண்ட வேலை இது.தெய்வத்தால் ஆகாதெனினும்
என்பது போல , எனினும் கூட .

[ 6 ஜூலை 2016 ] 


2

நாரைகள் போலும் மறைதல்...

---------------------------------------------



ஒரு தேநீர் குடிக்கும் பொருட்டோ அல்லது சிறு வணிக 
தேவைகளுக்கோ , சவரத்திற்கோ நம்மைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் என்ன இருக்கிறது என்று பார்ப்பேன்.அதில் சிறந்தது , மனதுக்குச் சௌகரியமானதைத் தேர்வு செய்வேன்.

இதைக் காட்டிலும் சிறந்த கடைகள் பல நகரத்தின்  மத்தியில் மேலும் சிறப்பாக உள்ளதே என பரிந்துரைக்கும் நண்பர்கள் உண்டு.புதிய புதிய கடைகளை அவர்கள் அறிமுகம் செய்யவும்,அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை.இருக்கட்டும் அவற்றை சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்தட்டும்.எனக்கு வாங்கும் பொருளோ ,வேண்டிய தேவையோ மட்டும் விஷயங்களைத் தேர்வு செய்வதில்லை.உறவும் முக்கியம்.

ஒரு சமயம் வழக்கமாக அருந்துகிற கடையில்  தேநீர் கொஞ்சம் அம்சப் பிழையோடு கூட இருக்கலாம்.பரவாயில்லை .உறவும் உரையாடலும் அதனைச் சமன் செய்து விடும்.அருந்தும் தேநீரில்  அமையும்   உள்ளிறைச்சி முக்கியம். உறவற்ற இருப்பு பலனற்றது.உறவென நான் சுட்டுவது சாதி,மத ,ரத்த பந்த பரிவாரங்களையல்ல.ரத்த பந்தங்களும் இருக்கலாம்.ரத்த பந்தத்தை மட்டுமே சுட்டி அவர்கள் இருப்பார்களேயாயின் அவர்கள் உறவுகளல்லர் .ஒரு தொடர்பு உறவாகக் குறைந்த பட்சம் இரண்டு பொது அம்சங்களெனும் அவசியம் .ஒரு பெருங்குடிகாரனோடு பழக்க அவன் கவிஞனாகவும் இருந்து ; உங்களுக்கும் கவிதையில் ஈடுபாடு இருத்தல் நலம்.நீங்களும் குடிக்கிறீர்கள் அவனும் குடிக்கிறான் என்பது மட்டுமே பற்றாது.

ஒரு உறவு ஸ்திரப்பட இரண்டு பொது அம்சங்கள் தேவை .உங்கள் சாதியா ?இருக்கட்டும்,உங்கள் மதமா? நல்லதுதான்,உங்கள் மொழியா? சிறப்பு,உங்கள் ரத்தமா உத்தமம்தான் .ஆனால் உறவென்பதற்கு அர்த்தம் பெற இது மட்டும் போதாது .ஏதேனும் உங்கள் மனதோடு தொடர்பு பெற மற்றொன்று வேண்டும்.இரண்டு காரியங்கள் தொடுக்கப்பட்டால் மட்டும் உறவு.இல்லையெனில் அது விதி.உறவேன்பதை அறிய இயலாததின் விதி.பலர் ஒரு பொது அம்சத்தைத் தான் உறவென்று கங்கணம் கட்டுகிறார்கள்.அவர்களே உறவென்பதை கடைசிவரையில் என்ன என்று கண்டடைய முடியாமல் உயிர் மூச்செறிகிறார்கள் .

#

ஒரு தேநீரைக் குடிக்கும் போது வெறுமனே அதன் தேவைக்காக மட்டும் குடிப்பதில்லை.குடிக்க இயலுவதில்லை .காலையில் அருகாமையில் கடையில் சென்று குடிக்கும் தேநீரில் உறவு மட்டுமல்ல அந்த நாளைக் கடத்துகிற ஒரு கதையும் அதில் அடங்கியிருக்கிறது.தேநீர் இல்லாத ஊரில் வசிப்பது பற்றி எனது கற்பனைக்கே எட்டவில்லை.தேநீர்கடைகள் எல்லா ஊர்களிலும் புதிய உறவுகளை சம்பாதித்துத் தரக் கூடிய கோவில்கள்.

நீங்கள் விட்டுப் போன வேலையை நினைவுபடுத்த அங்கொருவர் நின்று கொண்டிருப்பார்.நெடுநாளாய் அல்லல்படும் தீராத விஷயத்திற்கு தீர்வளிக்கும் ஒற்றைச்சொல் மந்திரத்தை அதுவரையில் நீங்கள் "பக்கி" என கருதிக் கொண்டிருந்த ஒருவன் அருளிவிட்டுச் செல்வான்.ஆபத்தில் கரை சேர்ந்த ஒருவனின் தொழில் நுட்பம் உங்களுக்கு அறிமுகமாகக் கூடும்.

"தானே எல்லாம் ...தனக்கு எல்லாமே தெரியும் " எனக் கருதும் அகந்தையே ,தன்னகங்காரமே பல சமயங்களில் ஆபத்தை விளைவிப்பதும் என்பது விளங்கும்.இப்படி எவ்வளவோ உண்டு.பேராபத்துக்களில் சிக்கி கடைசி கணத்தில் ஆவி பிழைத்தவர்கள் முதலில் உறவென்பது என்ன என்பதை கண்டு கண்பார்த்த பின்னர்தான் உயிர் பிழைத்திருப்பார்கள் .மறுஜென்மம் என்பது உறவின் ரேகையைக் கண்ணில் காட்டுவது .தரிசனமாக்குவது.

அதனால் எல்லோரையும் காலையில் வீட்டை விட்டு தேநீர் கடை தேடி ஓடுங்கள் சொல்லவதாக அர்த்தமில்லை.ஒருமுறை மோசமான நெருக்கடி ஒன்றில் உயிர்பிழைத்து வீட்டிற்குக் கூட தகவல் தெரிவிக்காமல் வெளியூருக்குச் செல்லவேண்டிய நிலை.என் உடல் முழுதும் ரத்த காயங்கள்.கையில் எண்பத்தைந்து ரூபாய் மட்டுமே இருந்தது.என் உடமை என்று சொல்லிக் கொள்ள விலையுயர்ந்த ஒரு பொருள் கையில் கிடையாது .கடிகாரம் உடைந்து கைக்குள் நுழைந்திருந்தது. 

சில  வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.உடலில் உள்ள காயத்திற்குப் பொருள் கூறிக் கேட்டு ஒருவருமே உடன் சேர்க்க மாட்டார்கள் .சேர்க்கவில்லை.எப்படியோ திருநெல்வேலி வரையில் சென்று சேர்ந்து விட்டேன்.தாங்கொணா பசியை தின்று உணவகத்திலிருந்து வெளியேறும்போது ஒரு சிறு நாணயம் கூட மிஞ்சவில்லை.அங்கிருந்து நான் செல்ல வேண்டிய இடத்திற்கு தச்சநல்லூரில் நள்ளிரவில்   லாரிகளை வழிமறித்துக் கொண்டே நின்றேன்.கவனம் கொள்பவர்கள் தோற்றத்தில் மிரண்டு நகர்ந்தார்கள் .

இறுதியில் நின்று நிறுத்திய வாகனம் முருகனின் மயில் வாகனத்திற்கு நிகரானது போல ஆசுவாசமாயிருந்தது  .வாகனம்  அது முன் செய்த தவம்போல வந்து நின்றது.அது எப்போதோ சுவாசித்த உறவின் ஒரு மெல்லிய கீற்று வேறொன்றுமில்லை . எப்போதோ  ஒரு முறை அந்த வாகன ஓட்டியை எனது வண்டியில் ஏற்றிச் சென்றிருக்கிறேன் அதுதான் விஷயம்.ஊர்ப்பக்கம் இருந்து வந்து சேர்ந்தது. இப்படி அந்த சிற்றுதவி  உயிர்பெற்று மீண்டும்  வரும் என்று கருதியிருக்கவே இல்லை. ஆசுவாசப்பட்டு வண்டியில் ஏறியமர்ந்தால் அவர்கள் கவனிக்காமல் வந்த ஒரு ஓசையை உணர்ந்து நிறுத்தினேன்.வண்டியின் சக்கரம் கவிழும் நிலையில் இருந்தது .இன்னும் பத்தடி தூரம் வண்டி பாய்ந்திருக்குமேயானால் முருகன் அழைத்த இடத்திற்கு எல்லோருமே  போய் சேர்ந்திருப்போம் என்று அவர்கள் சொன்னார்கள்.வந்து நின்ற வாகனத்தை நான் மயில்வாகனம் என்று கருத ,அவர்களோ வந்து நின்றவன்தான் முருகன் என்றார்கள்.உறவென்பது இரண்டு பக்கமும் விபத்துக் காப்பு. கவசம்.பிறகு அவர்களே செல்லவேண்டிய இடத்திற்கு எனக்கு தனி வாகனத்தை  ஏற்பாடு செய்து அனுப்பினார்கள்.கடவுள் வந்து முன்வந்துதிப்பது என்பதெல்லாம் இப்படித்தானேயன்றி வேறுமுகமாக அல்ல.

எது உறவாகும் என்பதைத் தீர்மானிக்கவே முடியாது.ஒரு சமயம் பேருந்தில் நீங்கள் கசிந்துருகி ஒரு நோயாளிக்கு விட்டுக் கொடுத்த சிற்றிடமாகக் கூட இருக்கலாம் உங்களை ஆபத்தில் காக்க முன்வந்துதிக்கும் முருகன்.இதையெல்லாம் பலன் கருதி செய்யத் தொடங்கினால் செய்த மறுகணமே சவமாகிவிடும் உறவின் நியதிகள் . தன் போக்கில் அமையவேண்டும்.பண்பாக வேண்டும்.தன்  போக்கில்தான் அமையும்.அவ்வளவுதான்.

சுற்றியிருப்பவற்றைக் கவனியாமல் வெளியேறிச் செல்லுதல் உண்ணும் உணவை எட்டி எறிதலுக்குச் சமமான செயல் . உங்களின் அருகாமையில் தகுதியுடன் பசித்திருக்கும் ஒரு பலகாரக்கடையை தாண்டிச் செல்லுதல் பாதுகாப்பானதும் இல்லை.தர்மமும் இல்லை.

அப்படியானால் ஒரு நெய்தோசையை வாழ்நாளில் ஒரு நல்ல கடையில் பார்த்து விடவே கூடாதா எனக் கேட்காதீர்கள்.தாய் மணம் மாறாமல் அருகிலேயே குட்டை தோசை சுட்டுப் போடும் குணக்குன்றை குறைவுபட்டாலும் வெறுத்து விடாதீர்கள் என்று சொல்கிறேன்.அவனை பட்டினியில் வைத்து விட்டு நீங்கள் மட்டும் பசியாறச் சென்றால் படைத்தவனுக்கு பொறுக்காது.இப்போது ஒன்றுமில்லையே என நீங்கள் கருதலாம்.அதற்கு பதில் சொல்லியாக வேண்டிய காலம் வாழ்க்கையில் வந்தே தீரும். அவனை அலட்சியம் செய்யாமலிருங்கள்.அவன் அழிந்து நொடிக்கும் நாள்தான் நமக்கும் நாளைக் குறிப்பது ! என்பது புரிந்தவர்களுக்கு இவையெல்லாமே புரியும்.இது நெய்தோசை சாப்பிடுகிற பிரச்சனை மட்டுமல்ல என்பதும் விளங்கும்.

குலசாமியைச் சென்று பாருங்கள் என்று இப்போதெல்லாம் பரிகாரம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்களே ! அதன் அர்த்தம் வேறொன்றுமில்லை.இதுதான்.நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.பறந்து சிறகடியுங்கள் தவறில்லை.சுற்றியிருப்பவர்களை கவனியாமல் எங்கு சென்றும்  பயனில்லை என்பதுதான்.நீங்கள் தனித்து கோபுரமமைத்து அதன் மீது ஏறி நிற்பதற்கான வழிமுறையல்ல வாழ்க்கை.நீங்கள் தனித்து ஏறி நின்றால் தடுக்கி விழும்போது தடுக்க ஒரு குருவி கூட இருக்காது.

நானறிய எங்கள் பகுதியில்  பல சிறு உணவகங்கள் ருசியறிய பசி தீர்ப்பவை . இப்படியான கடைகள் கன்னியாகுமரி  மாவட்டம்  முழுதும் நிறைய உண்டு.ஏராளமானவர்களுக்கு குறைந்த விலையில் சேவை புரிந்து வருபவை அவை   .நானறிந்த சில சிறிய உணவகங்கள் ஒவ்வொன்றும் தினமும் ஐம்பது  பேரை ஐம்பது ரூபாயில் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள உதவி செய்து கொண்டிருப்பவை.எந்த சிறு உணவகத்தில் எது சிறப்பு என கண்டறிய ஒரு சிறப்பம்சம் தேவை.ஒவ்வொரு கடையிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கும் .இல்லாதவை காலத்தில் நின்று நிலைக்காது.ஒரு ரசவடையை காரணம் காட்டி இரண்டு மூன்று தலைமுறைகளாக  நிலைத்திருக்கும் கடைகளும் இருக்கின்றன. தேடித் தேடி அவற்றைக் கண்டுபிடித்தால் அவை உயிர் வாழ்வது வெறும் வணிகத்திற்காக மட்டும் இல்லை என்பது புரிபடும்.நாகர்கோயிலில் வேப்பமூடு சந்திப்பில் காலையில் அசைவம் சாப்பிட விரும்பும் நண்பர்களை பாய் கடைக்கு அழைத்துச் செல்வதுண்டு.மாடானாலும் ஆடானாலும் சுவைக்குப் பஞ்சமில்லை .காலையில் பாய்கடை சூடான ஆப்பமும் ஆட்டுக் குழம்பும் சொர்க்கதிலேனும் கிடைக்குமா என்பது சந்தேகமே .

என்னுடைய  அப்பைய்யா   விவசாயியும்.அவர் வயல்வெளியில் நண்டுகள் ,தவளைகள் செத்து ஒதுங்குவதைக் கண்டால் அபசகுனமாய் உணர்ந்து புலம்புவதை சிறுவயதில் கண்டிருக்கிறேன்.

நாரைகள் எண்ணம் குறைவது நல்லதல்ல என்பதை அவர் மனம் உணரும்போது , விவசாய  நிலமெல்லாம் விஷமாகி ;ஊருணிகள் வற்றி ; நிலத்தில் கீழ் கண்ணியில் உப்பு வடியப் போகிறது என்பதனை எங்கள் ஊரில் படித்த வர்க்கம் எவரும் எதிர்பார்க்க வில்லை.நவீன விஞ்ஞானம் அவருக்குத் தெரியாததின் புலப்பம் என்றே நினைத்தார்கள்.ஆனால் பின்னாட்களில் அவரது உணர்வே பலித்தது.நாரைகள் பறந்து சென்றால் நல்லதல்ல என்பது உறைத்தது.ஆனால் அதற்குத் தேவைப்பட்ட காலமோ சுமார் நாற்பதாண்டுகள். 

நாம் வாழுமிடத்தை சேர்ந்த நண்டோ,நத்தையொ,நாரையோ,அழிந்தால் அது அவற்றுக்கன்று.

3

நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால்
-------------------------------------------------------




என்னைப் பற்றிய கதைகள் எத்தனை என்று கணக்குப் பார்த்தால் ஒரு மனிதனாக வாழுவதற்குப் போதுமானவையாகவே அவை உள்ளன. கலைஞனாக வாழ்வதற்கு இவை போதுமானவை என்று சொல்வதற்கில்லை.பெரும்பாலானவை ஸ்வாரஸ்யத் தன்மை குன்றா கதைகள். சக மனிதன் கொள்ளவேண்டிய கற்பனைக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லையெனில் அப்படியொரு வாழ்க்கை வாழ அவசியமா என்ன ?

பரிதாபகரமான எளிய கற்பனைகளை நான் பொருட்படுத்தவில்லை.ஒருவர் என்னை ஐயர் என்று எழுதுகிறார்.ஐயங்கார் என்றேனும் சொல்லக் கூடாதா ? மற்றொருவர் சைவப் பிள்ளைமார் என்கிறார் .நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்றேனும் கணக்கிடக் கூடாதா? இந்து நாடார் என்று கண்டு பிடிப்பதற்கெல்லாம் ஏதேனும் புத்திசாலித்தனம் தேவையா என்ன ? சாதித் சான்றிதழ் மட்டும் போதுமே ! பற நாய் என்று சதா என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு அம்மையாரும் இருக்கிறார்.நல்லது.சாதிக் கற்பனைகள் அலுப்பூட்டுபவை.கற்பனையின் சாத்தியப்பாடுகளே அற்றவை.

என்னுடைய ஆண்குறியின் நீள அகலத்தை சதா கணக்கிட்டுக் கொண்டேயிருக்கும் பழைய நண்பர் ஒருவர் உண்டும்.ஆர்வத்திற்குப் பஞ்சமற்றவர் அவர்.என்னிடம் பழக்கம் கொண்ட எதிர்பால் நண்பர்கள் அனைவருக்கும் என்னோடு தொடுப்பு என்னும் கற்பனைக் கணக்கை திளைப்பூட்டும் ,ஆர்வமூட்டும் சிறப்பு மூளை அவருடையது.அவரது துணைவியார்,காதலிகள் உட்பட பலரும் எனக்கு நண்பர்கள்.சில சமயங்களில் சகபால் மீதும் சந்தேகம் உண்டு அவருக்கு.பிராணிகளை மட்டுமே அவர் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்.அவை என்ன பாவம் அவருக்கு செய்தன என்று தெரியவில்லை.பிராணிகளுக்கு அந்த வல்லமை கிடையாது என்று அவர் நினைக்கிறாரா தெரியவில்லை.
சதிகாரன் ,கிரிமினல் ,கொலையாளி இப்படி நீளும் கற்பனைகளும் உண்டு.அவற்றில் சில ஸ்வாரஸ்யங்கள் உண்டு.புனிதர் என்கிற கற்பனை பிடரியில் ஓங்கியடிப்பது.இப்படி நீளுகிற சகலவிதமான கற்பனைகளையும் ஒரு உருளியில் இட்டு நிரப்பி கலக்கி கூழாக்கி எடுத்தால் அதிலிருந்து நான் கிளம்பி எழுந்து வந்துவிடுவேன் என்பதும் உண்மைதான். உங்களைப் பற்றிய கதைகளையும் இவ்வாறு கூழாக்கினால் நீங்கள் தோன்றிவிடுவீர்கள் என்பதும் உண்மைதானே?

அரசியல்வாதிகள் விநோதமானவர்கள்.உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் என்னை இந்துத்வா என்கிறார்கள்.இந்துத்வாக்களோ மாவோயிஸ்ட் என்கிறார்கள்.புலிகள் பார்வையில் நானொரு செயல்பாடற்ற வெற்றுக் கம்யூனிஸ்ட் .அ.தி.மு.கவினருக்கு நானொரு தி.மு.க.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆம் ஆத்மியா ,அண்ணா தி.மு.கவா என்பதில் குழப்பம் .காங்கிரஸ்காரர்கள் இவ்விஷயத்தில் பரவாயில்லை.இவன் நிச்சயமாக காங்கிரஸ் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.காந்தியவாதிகள் இவன் காந்தியின் பெயரை சொல்லிக் கொண்டலைகிற தேச துரோகி என்கிறார்கள்.

ஒருமுறை பத்திரிக்கைக்கு சந்தா செலுத்த விரும்பி தொலைபேசியில் அழைத்த அன்பர் ஒருவர் "நீங்கள் யாரென்று கேட்டார்".தெரியாது என்று சொன்னேன்.இல்லை பொய் சொல்லாதீர்கள் "நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியாமலிருக்குமா என்ன ?" என தொடர்வினா ? தெரியாததால் தானே தெரியவில்லை என்கிறேன்.

ஆனால் "நீங்கள் ஒரு நோயுற்ற காகம் என்றால் எனக்கு மறுக்க எதுவுமே இருக்காது .அப்படியே ஒத்துக் கொள்வேன்.

நகுலனைச் சந்திக்க ஒருசமயம் ஒரு வறட்டு கம்யூனிஸ்ட் என்னுடன் உடன் வந்திருந்தார்.வந்தவர் போதையில்லாமல் அவரால் எதிர்தரப்பு என அவர் கருதுகிற தரப்புகளுடன் பேசவே இயலாத அளவிற்கு தாழ்வுணர்ச்சி நிரம்பியவர் .அவருக்கென்றும் ஒரு தரப்பும் கிடையாது.இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்.சில விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றாலும் கூட இருப்பது போல நம்பிக் கொண்டிருந்தால் ; அதன் உரிமையாளரே நீங்கள்தான் என்னும் எண்ணத்தை அது கொடுத்துவிடும்.மார்க்சியத்தின் உள்ளூர் உரிமையாளரே அவர்தான் என்னும் எண்ணம் அவருக்கு உண்டு.

நகுலனிடம் உரையாட சம்சாரித்தனத்திற்கு வெளியே சிந்திக்கக் கூடிய ஒரு சிறுமூளை அவசியம்.வந்திருந்த சம்சாரியோ மார்க்சிஸ்ட்.பேசிக் கொண்டிருக்கும் போது ஒருசமயம் குறுக்கிட்டு நகுலனை நோக்கி "நீங்கள் ஒரு அத்வைதி என்பது எனக்குத் தெரியும் "என்றார்.பரவாயில்லையே கண்டுபிடிச்சிட்டேளே ! " என்ற நகுலன் " நேக்கும் இப்பதான் தெரியும் என்று கூறி ஓங்கிச் சிரித்தார்.

நகுலன் ஒத்துக் கொண்டுவிட்டாரென வந்திருந்த தோழருக்கு ஆன்ம சந்தோசம்.



4
எதிர்வேடம்
--------------------


வாழ்க்கையில் பலவிதமான வேடங்கள் இருக்கின்றன.ஒரு வேடமும் மற்றதுக்கு சற்றும் இளைத்ததல்ல.ஒவ்வொன்றுமே நல்ல வேடமும்தான்.கதாபாத்திரங்கள் அனைத்தும் வேடங்கள்தாம்.நல்லது கெட்டது என்பதல்லாம் மாயை.ஒருவர் அணிந்திருக்கும் வேடம் அவருக்கு விருப்பத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது.வெறுக்கும் வேடம் விரும்பி அணியத் துடிக்கிற வேடமாகவும் இருக்கலாம்.

எங்கள் பகுதியிலிருந்து குலசேகர பட்டினம் தசரா வேடமணிதலில் பங்கேற்கும் பல செல்வந்தர்கள் "பிச்சைக்காரர்கள் "வேடமணிந்து செல்கிறார்கள்.எதிர்வேடமணிந்தால் பாவம் கரையும் என்பதொரு நம்பிக்கை.ஆனால் உண்மை இது மட்டுமல்ல,பிச்சைக்காரன் வேடத்தில் நிம்மதியிருப்பதாகவும் கஷ்டங்கள் இல்லையெனவும் செல்வந்தனுக்கு ஒரு நினைப்பு இருக்கிறது.தெருவில் வசிப்பவர்கள் கவலையற்றவர்கள் என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதை போல.

வாழ்வில் அணிய இயலாத வேடங்களை அணிந்து பார்ப்பது மற்றொரு வகை.போலீஸ் வேடம் அதில் ஒன்று.சாமி வேடங்கள் பக்தியின் வேறு வேறு நிலைகள்.தசரா விழா நமது கலாச்சார விழாக்களிலேயே மிகவும் தலைசிறந்தது.ஆகாத வேடங்களையெல்லாம் அணிந்து பார்க்க கிடைக்கிற வாய்ப்பினைக் கொண்ட விழா.இது எவ்வளவு முக்கியமான விழா என்கிற உணர்வு சிறிதுமின்றி ஆண்டாண்டு தோறும் இது அடைப்படை வசதிக் குறைபாடுகளுடன் நடந்தேறி வருகிறது.பிற நாடுகளில் எனில் இந்த விழாவின் அருமை உணர்ந்து பொலிவுப்படுத்தியிருப்பார்கள் .

ஒருமுறை எனக்கொரு வழக்கு காவல் நிலையத்தில்.அப்போது துணை கண்காணிப்பாளராக இருந்தவர் எனது நண்பர்.எதிராளி ஒளித்துக் கொண்டுவிட்டான்.காவல் நிலையத்தில் ஒத்துழைப்பில்லை.நண்பர் இறுதியில் ஒரு வியூகம் வகுத்தார்.அவரது வாகனத்தில் அவருடைய உதவிக் காவலர்களுடன் இணைந்து நானே சென்று எதிராளியைத் தேடித் கண்டுபிடிக்கும் வியூகம் அது.இரண்டு மூன்று நாட்கள் அவர் அமர்ந்து பயணிக்க வேண்டிய இருக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது.முதல் நாள் அவருடைய இருக்கையில் அமரும் போது கூச்சமாக இருந்தது.சரியாக என்னால் அந்த இருக்கையில் அமரமுடியவில்லை.ஒதுங்கி ஓரத்தில் அமைந்திருப்பேன்.காலவலர்களோ அவருக்குத் தர வேண்டிய அத்தனைப் பணிவிடைகளையும் எனக்கு செய்து கொண்டிருந்தார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக நான் இருக்கையில் சரியாக அமர பழகினேன்.இப்படியாக நான்கைந்து முறை சுற்றும்போது என்னை அறியாமலேயே நானே அவராக மாறிப் போயிருந்தேன்.எனது கட்டளைகளுக்கு பிறர் அடிபணிவதைக் காண துப்பாக்கி இல்லாமல்கூட எதிராளியை சுட்டுவிடுவேன் என்று தோன்றியது.இந்த விளையாட்டு போதும் என்று அவரிடம் சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.எதிராளியை பிடிக்கவில்லை.அது தேவையில்லை என்று மனதில் திகட்டிவிட்டது .எதிராளி எனது மனக் கற்பனையில் பெற்றிருந்த இடத்திலும் வலுவிழந்து போய்விட்டான்.இவனெல்லாம் ஒரு எதிராளியா? எனத் தோன்றும் வண்ணம்.வேறுவிதமாகச் சொன்னால் பிடிபடாத அந்த எதிராளியும் நானும் ஒரேசமயத்தில் அந்த வாகனத்திலிருந்து இறங்கி விட்டோம் என்று சொல்லலாம்.வாகனத்திலிருந்து அது எந்த வாகனமாக இருந்தாலும் இறங்கிவிடுவது எவ்வளவு ஆசுவாசத்தைத் தருகிறது?

அந்த நண்பர் ஊருக்கு ஊர் என மாறுதல் பெற்று எங்கெங்கோ சென்றுவிட்டார்.இருந்தாலும் எங்கள் சரகத்திற்குட்பட்டவர்கள் கண்காணிப்பாளரின் நண்பர் என அடையாளம் கொள்வதை நிறுத்தவில்லை.அணியும் வேடங்கள் சிறிதோ பெரிதோ அத்தனை எளிதில் நம்மிடம் கரைந்து போவதில்லை.

சிசேரியன்
---------------
பத்திரகாளி அம்மன் வேடமிட்டார் 
ராஜாமணி நாடார் .
ராஜாமணி நாடார் வேடமிட்டாள்
பத்திரகாளி ,கைகள் பல கொண்ட கருங்காளி .
இரண்டு வேடங்கள்
உடல் ஒன்றே

ராஜாமணி நாடாரும் ஒரு வேடம்தானே அன்றோ ?

இவர் அங்கு செல்ல 
அவளிங்கு புறப்பாடு
முதலில் ராஜாமணி நாடார்தான்
பத்திரகாளியம்மனை தன் வேடத்திற்குள் அழைத்தார் 
விரதம் தொடங்க வேடத்தினுள் நுழையத் தொடங்கினாள் 
அம்மன்.

கஷ்டப்பாடுதான்
அவளுக்கு இடங்கொடுத்துக் கொடுத்து 
வீங்கத் தொடங்கிற்று ராஜாமணி நாடாரின் உடல்
அவள் ஒரேநாள் விரதத்தில் மேல்வந்து சாடிவிடமாட்டாள் 
என்பதை நன்கறிவர் அவர்
ராஜாமணி நாடார்.

ஒவ்வொருபடியாக மெல்ல மேலேறி உடல் கட்டுமானத்தில் அவள் 
ஏறி உட்கார 
பரவெளியில் கைவிரித்தெழுந்தன அம்மனின் 
விஸ்வரூப கைகள் 
விரிந்த கோலம் .

அம்மன் புத்தாடையாக
தனது உடலை எடுத்துக் கொண்டதை அறியாத 
ராஜாமணி நாடார் 
அவசரமாக வேடம் கலைத்து விரதம் முறித்த அன்று 
கடலுள் இறங்கிச் சென்றது வேடம்
மிஞ்சிய உடலெங்கும் பரவெளியில் அலையும் 
காளியின் கைகளின் நமநமச்சல்
வேடம் விட்டகன்ற இடமெங்கும் முளைத்த உடல் 
கருங்காளியின் ஒரு பெரிய வடு

"ஒரு கள்ளக் கோழியடித்து உண்டு 
நல்லச் சாராயம் பருகி 
சொருகியினி மீளுங்கள் நாடாரே ...
அம்மன் விடைபெற்று விலகிச் செல்ல ...
உங்கள் உடலை மீண்டும் ஒருமுறை அவள் ஈனித் தர .."

வேறு வழியேதும் உண்டோ?
உங்கள் வேடத்தை அவள் மீண்டும் உங்களுக்கு 
விட்டுத் தர வேண்டாமா?
நீங்கள் ராஜாமணி நாடாராக இருப்பது தானே 
அவளுக்கும் நல்லது 
உங்களுக்கும் பேறு

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"