தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 8

 காட்சியை வழிப்பறி செய்வது எப்படி ?




11வது நிழல்சாலை

-----------------------------

பாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ 
எதிர்ப்படுகிற மனிதர்களில் 
எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்

முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்
முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும்

வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும் 
வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும்
இந்தக் காலை புறப்படுகிறதே
நேற்றிரவு நிறைவு பெறாத பெண்மையும்
நிறைவு படுத்தாத ஆண்மையும்
இந்தப் பகலில் எந்த மிருகத்தின் உருவத்தில் நடக்கும்

காதலிக்காகத் தசைகளைப் பெருக்குகிறவனின் உலகம்
பிரிவுக்குப் பின் இந்தச் சாலையை
எப்படி எதிர்கொள்ளும்
கொலைகாரனும் கொலைசெய்யப்பட்டவனும்
ஓடிய திசையினை அறிந்தவன் யார்

குடிகாரனின் வார்த்தைகள் சிதறிக்கிடக்கிற இடத்தில்
பவளமல்லிகளும் கிடக்கின்றன
இந்தச் சாலையை கட்டமைத்தவர்கள்
யாரேனும் இதனூடே நடந்து செல்வார்களா
கொடுங்கனவுகள் பற்றி
நண்பர்கள் பேசிச்செல்வார்களா

முதுமையின் வியர்வையும் இளமையின் வியர்வையும்
வேறு வேறான இசையுடன்
என்னைக் கடந்து போகின்றன

பெண்களின் தளிர் உடல்கள்
எல்லாப் பாடலிலும் ஊடுருவுகின்றன

என் விரலிடுக்கு வழிநடத்தும் 
நாய்க்குட்டியின் கண்களில்
உணரப்பட்ட வாசனைகளின் குவியல்
காதுகளில் தொடர்ச்சியற்று விழும் உரையாடல்கள்
வாழ்வின் இறுக்கத்தை சற்று முடிச்சிடுவதும் அவிழ்ப்பதுமாய்

புரியவேயில்லை


11வது நிழச்சாலையில்
என் தனிமையும் பயணிக்கிறது.


இந்த கவிதை தற்செயலாக சமீபத்தில் படித்த தேன்மொழி தாஸின் கவிதை.மிகச் சிறந்த கவிதைகளுக்கு உதாரணமாகத் திகழும் சக்தி கொண்ட கவிதை இது.ஒரு சாலையை கவிதையின் முன்பாக இவ்வளவு துல்லியமாகத் திறப்பது என்பது எளிதான காரியமில்லை.அதற்கு ஒரு சிறப்பு மனம் அவசியம்.அது இந்த கவிதையில் வசப்பட்டிருக்கிறது.நவீன வாழ்வின் முன்பாக அச்சு அசலாக இந்த கவிதை திறக்கிறது.நவீன வாழ்வின் மீதான தனிமை சாலையில் கொட்டப்படுவது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்பட்டது.இதுபோல எண்பதுகளில் நண்பர்களின் அறையையும்,வீட்டையும் இணைக்க இயலாமை பற்றிய சமயவேலின் கவிதை ஒன்று உண்டு.தேன்மொழி தாஸின் இந்த கவிதையில் நவீன வாழ்வின் அபத்தமும்,பனி மூட்டமும் சாலைவழியாகத் திறக்கிறது.அல்லது திறக்க முற்படுகிறது.சரியான உவமானம் போல விரலிடுக்கு நாய் வருகிறது.விரலிடுக்கு என்பது நாய்க்குட்டியின் வழிகாட்டுதலாக மாறிப் போயிருக்கும் போதாமை.கொண்டிருக்கும் பெருவாழ்வு.

சில அபூர்வமான கவிதைகளே சமகாலத்தைத் திறக்கும் சக்தி கொண்டவையாக மாற்றம் கொள்கின்றன.மலைசாமியின் ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு என்னும் கவிதையும் இதனை ஒத்தது.ஓங்கி ஒரு திறப்பைச் செய்து விட்டு மறைபவை.மலைச்சாமி அதன் பிறகு என்னவானார் என்பதே தெரியவில்லை.என்னவானாலும் அதனால் இடர்பாடில்லை.நவீனத்திற்குப் பின்பான தமிழ் கவிதை உருவாக்கத்தில் அரும்பங்கு ஆற்றி விட்டுத்தான் சென்றிருக்கிறார்.அவர் முன்னின்று திறந்த இடத்தை உளியாலும் சுத்தியலும் பின்வந்த கவிகள் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறோம் .அவ்வளவுதான் .காலத்தின் கதவைத் திறப்பவர்கள் பலரை காலம் மறதியில் வைத்துப் பாதுகாக்கும்

இந்த "11வது நிழல்சாலை" என்னும் கவிதை எளிமையாகத்தான் இருக்கிறது ஆனால் இது நவீனத்திற்குப் பிறகான கவிதையாக உருமாறியிருக்கிறது.இதில் வருகிற எல்லா விஷயங்களுமே எளிதாக விளங்கக் கூடியவைதான்.மொத்த கவிதையும் படித்த பின்னர் புதிருக்குள் இடப்படுகிறோம் ! இந்த மாயத்தை அமுதூட்டும் கவிதை இது.நான் தற்செயலாகப் படித்ததனால் மட்டுமல்ல இத்தகைய கவிதைகளே தற்செயல் நிகழ்வுகள்தான்.எங்கிருந்தேனும் பீறிவிட்டழும். அந்த சப்தம் சமகால பிரக்ஞையை நமக்குள் உருவாக்கும்.பலர் நம்மில் இந்த சமகால பிரக்ஞையை நாம் எற்றடுத்த இடத்தை மனம் விட்டுச் சொல்ல தயாராக இருப்பதில்லை.அதனை ரகசியம் காக்க முயல்வோம்.இந்த முயற்சியே நமது மூச்சுக்காற்றை தொடர்ந்து இறுக்கப் போகும் சுருக்குக் கயிறு என்பது பலருக்கும் தெரிவதில்லை.சுவாசம் லெகுவான இடத்தை திறந்து சொல்லிவிட வேண்டும் .விக்கிரமாதித்தன் என்னைத் திறந்தார் ,ஞானக்கூத்தனுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்,தேவதச்சன் என்னை வழிமொழிந்திருக்கிறார் என்பதை எல்லாம் மறைக்கத் தேவையில்லை.திறந்தார்,கடன்பட்டிருக்கிறேன்,வழிமொழிந்தார் என்று சொல்வதல்லாமே அகவுலகைத் திறந்ததைப் பற்றி சொல்லபடுபவை.அன்றி தனிப்பட்டமுறையில் என்னிடம் மட்டும் ஒரு சாவியை அவர்கள் ஒப்படைத்து விட்டுச் செல்லவில்லை. திறந்தவனை அவனோ,அவளோ யாராக இருப்பினும் மறைக்கக்கூடாது.குருதட்சணை என்பது அகத்தைத் திறந்தவனை ஒப்புக்கொள்வதுதான். மறைக்க மறைக்க அகம் மூடுண்டு செல்லும்.கடவுள் வந்தாலும் திறக்க முடியாதபடி...

அப்படியானால் கவிதையை எது நிமிர்த்துகிறது ? செய்யுளிலிருந்து கவிதை தப்பிக்கும் இடம் எது?புலவனுக்கும் கவிஞனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? இவற்றை சரி வர விளங்க முடியவில்லை.ஒருவன் எழுதுகிற சாதாரணமான ஒன்று கவிதையாவதும் இன்னொருவன் இருந்து இருந்து மெனக்கெட்டும் கவிதை தோன்றாமல் போவதும் எங்ஙனம் ? காலந்தோறும் புரிபடாமல் கவிதை என்னும் மாயம் தப்பிக்கும் விந்தை இது.சமகாலத்தில் செய்யுள் இயற்றுபவர்கள் இருபதுக்கும் மேற்பட்டு இருக்கிறார்கள்.அவர்களைப் பெயர்கூறி அறிவித்தால் வாழ்நாள் சண்டையாகி விடும்.

மொழியென்பது வெறும் திறமையைக் குறிப்பது.அது நுட்பம் கொண்டிருக்கும்.சுவாரஸ்யமான ஒன்றினைச் சொட்டிவிடும்.உணர்ச்சியும் ,ஈர்ப்பும் கொண்டிருக்கும்.மெல்லுணர்ச்சியை ஸ்திரமாக்கும் . ஒரு ஒவியன் தூரிகையைச் செம்மைப்படுத்தி வைத்திருப்பது போன்றதுதான் கவிஞன் கையில் மொழி.அது கவிதையின் மீது ஏறி உட்கார வேறு எதோ ஒன்று அவசியப்படுகிறது.மொழியே கவிதையாவதில்லை.மொழியே கவிதை என்று நம்பிக்கை கொள்ளும் இடத்தில்தான் பலருக்கு சீக்கு பிடித்து விடுகிறது.


மொழி ஒருபோதும் உங்களுடையது அல்ல.அது காலம் உங்கள் கையில் கொண்டு தருகிற கொடை.அதனை நிமித்தமாகப் பற்றிக் கொள்ளவேண்டியதும் கவியின் வேலைதான்.அதனை ஒரு இடத்தின் மீது கொண்டு ஏற்றி வைக்கிறீர்களே அதுவே கவியின் இடம்.அது என்ன என்பதும் ,அதில் தொழில்படும் விஞ்ஞானம் என்ன என்பதைக் கண்டறிவதும் புலவர்களுக்கு எளிமையான காரியங்களாக இல்லை.

போலியாக கவிதையை எழுதிவிட இயலும் என நினைத்துப் பணியாற்றுபவர்களையே புலவர்கள் என்கிறேன்.அவர்கள் மேலும் மேலும் செய்யுள் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்.கவிஞர்கள் மீது அளவு கடந்த பொறாமை உணர்ச்சியும்,எதிர்ப்பும் கொள்கிறார்கள் அவர்கள்.எந்திரங்கொண்டும் கவிதைகளை எழுத முடியவில்லை.கவிதை எழுதுகிற எந்திரங்கள் கீழே படுத்து உருளுகின்றன.அவற்றால் எழும்ப முடியவில்லை.இணையமற்ற கணிப்பொறி எவ்வாறு ஒரு சவமோ அது போன்ற கவிஞனற்ற கவிதை முயற்சி என்பது வெறும் செய்யுள்.

ஒருகாலகட்டம் மறைந்து மறுகாலக்கட்டம் உருவாகும் போது அதில் வேலை செய்த கவிதைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும்.ஆனால் அதில் நிலைபேறு அடையும் கவிஞர்கள் ஐந்தாறு பேர்தான் இருப்பார்கள்.நவீனதமிழ் காலத்தைக் கருத்திற்க்கொண்டால் கவியாக நிலை பெற்றிருப்பவர்கள் பத்துபேருக்குள்தான் இருப்பார்கள். மிஞ்சியவர்கள் என்னவானார்கள் ? என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை.அது கவிதையின் பெறுமதி.அப்போது பயன்மதிப்பற்றவர்களாகவும் ,தறுதலைகளாகவும் பார்க்கப்பட்ட சிலரே பின்னாட்களில் அவதாரம் கொள்கிறார்கள்.காரணம் கவிதை தான் ஏற்றேடுக்கும் திசையில் கவிஞனை பிரயாணம் மேற்கொள்ளச் சொல்கிறது.லௌகீகத்தின் செலவாணி என்ன என்பது பற்றி அதற்கு ஒரு கவலையும் இல்லை.கவலை கொள்ளும் செலவாணியையும்,புலவனையும்  அது கசந்து துப்பும்.

தமிழ்க் கவி ஒருவர் என்னிடம் , சமீபகாலங்களில் பெண்கவிஞர்களைப்பற்றி அதிகமாக எழுதிவருகிறேன் என்பதை வைத்துக் குறைகொண்டு ; பெண்கவிஞர்களைப்பற்றி தான் அதிகம் பிரக்ஞை கொள்கிறீர்கள் ! என்று ஆதங்கமாகச் சொன்னார்.அவர் சொல்லியது முக்கால் சதவிகிதம் உண்மை.எனக்கு பெண் பிரக்ஞையே அதிகம்.ஆண்களிடம் எனக்குக் கூறில்லை.ஆணில்லாத பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு சிறிய கவலையும் இல்லை .பெண் இல்லாத பிரபஞ்சத்தை என்னால் கற்பனை செய்யவே இயலாது.கவிதையைப் பொறுத்து அவ்வாறு நான் பிரிவினை கொள்கிறேன் என்றும் சொல்ல முடியாது.ராஜன் ஆத்தியப்பன்,இசை போன்றோர் இந்த காலத்தின் முக்கியமான கவிகள்தான்.அது போலவே ஜீனத் நஜீபா,பெருந்தேவி இருவரும் முக்கியமானவர்கள் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது.எழுதிப் பழகுபவர்களை என்னால் எண்ணத்தில் சேர்க்க முடியவில்லை.அதுபோல என் வாயிலிருந்து முத்து உதிர்பவர்கள் மட்டுமே கவியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்கில்லை.ராஜன் ஆத்தியப்பனின் சமீபத்தில் வந்த "கருவிகளின் ஞாயிறு " தொகுப்பில் பல கவிதைகள் சமகாலச் சூழலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பவை.அத்தொகுப்பிலுள்ள எனக்குப் பிடித்தமான இரண்டு 

கவிதைகள் இவை.




#
ஆண்களும் பெண்களுமாய் 
விழா தீர்ந்த 
முச்சந்தி வெளியில் 
கசங்கிய புத்தாடையோடு 
குழுமி நிற்க 
ஒன்றன் பின் ஒன்றாக 
நா தழைய ஓடிவந்த 
நாய்களிலொன்று மற்றொன்றின் 
பின்புறம் கால்களேற்றிப்
புணரத் தொடங்கியது .

கணத்திகைப்பு மீண்டு 
ச்சூ ச்சூ வென விரட்ட 
எல்லோர் ஆடைகளையும் 
பற்றியிழுத்து அம்மணமாக்கி 
அகன்றன நாய்கள்

#

சில பத்தடிகள் தாண்டி நின்றது
விரைவாக வந்த பேருந்து 
நிறுத்தத்திலிருந்த இளம் பெண்கள் 
பேருந்து நோக்கி ஓடுகின்றனர்
அவர்களின் உடல்களினுடே 
இணைந்தோடத் தொடங்கியது 
நூற்றாண்டுகளின் 
பெண்ணியப் படிமங்கள் 
எதிர் திசையில் விலகியோடியது 
இன்றைய நவீனம் 
உள்நுழைந்து இருக்கையில் அமர்ந்ததும் 
மீண்டுமவர்கள் 
சட்டென நாகரீக மங்கைகளானார்கள் .

#


2


முத்தாரம்மன் கோவில்கள் என்பது இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்



இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் என்னும் மக்கள் அமைப்பு முத்தாரம்மன் கோவில்களை முன்வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றியது .நானூறு.ஐனூறு ஆண்டுகாலப் பழமை கொண்டது இந்த அமைப்பு.பின்னர் தோன்றிய பல சமூக அமைப்புகளிடமும் இந்த அமைப்பின் தாக்கம் உண்டு எனினும் இதைப் போன்று அவற்றிடம் கச்சிதம் குறைவே.இந்து நாடார்கள் சமூகம்,அரசியல் ,பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட இந்த அமைப்பு பெரிதும் உதவிற்று.
முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு தோன்றுவது வரையில் கிராம தெய்வங்கள் ,வாதைகள் வழிபாடு,இசக்கி வழிபாடு போன்றவை தனிக் குடும்பங்களின் செல்வாக்கில் இருந்தவை.பெரும்பாலும் அவை இன்றும் கூட சில விதிவிலக்குகளைத் தவிர்த்து தனிக்குடும்பங்களைச் சார்ந்தே உள்ளன.
முதன்முதலாக நாடார்கள் தங்கள் சமூகத்திற்குள் கண்டடைந்த ஜனநாயக பூர்வமான அமைப்பு இந்த முத்தாரம்மன் கோவில்கள்தான்.தனிக்குடும்பங்களின் அதிகார ஆதிக்கம்,நிலச்சுவான்தார்களின் தான்தோன்றித்தனம் , திருவிதான்கூர் மகாராஜாவின் முகவர்களின் அத்துமீறல்கள் போன்ற தீமைகள் முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு மூலமாகவே நீங்கிற்று.
இந்த அமைப்பு தோன்றுவது வரையில் இந்து நாடார் ஊர்கள் என்னும் அமைப்பு உருவாகவில்லை.மக்கள் பல்வேறு தோட்டங்களில் குடியிருந்தார்கள்.இந்த தோட்டங்கள் விளைகள் என்று அறியப்பட்டன.உதாரணமாக பன விளை,மங்கா விளை , பிலாவிளை இவ்வாறாக . தொழிலின் நிமித்தம் இடம்பெயர்வதும் மீண்டும் திரும்புவதும் இவ்வாறாக .நிலசுவான்தார்கள் மட்டுமே நிரந்தர வீடுகளில் குடியிருந்தார்கள் .
முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகமுறை உருவானதும் இரண்டு முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன .முதலில் அது தனிமனித செல்வாக்கை ,ஆதிக்கத்தை சமூகத்திற்குள் குறைத்தது.நிலசுவான்தார்களின் ,முகவர்களின் நிகரற்ற அதிகாரத்தை பணிய வைத்து ; அதிகாரத்தை மக்களின் பக்கமாகத் திருப்பியது.இரண்டாவதாக இந்த அமைப்பு சமூகத்திற்குள் இருந்த உபசாதிகள் அனைவரையும் ஊரென்னும் அமைப்பிற்குள் திரட்டி இணைத்தது.பல உபசாதிகளாகப் பிரிந்திருந்த நாடார்கள் இந்த அமைப்பின் மூலம் இணைந்தார்கள்.சாணார்களுக்கும் ,புழுக்கைச் சாணார்களுக்கும் மற்றும் நாடார்களுக்கும் இடையில் இருந்த மாயக்கோட்டை இந்த அமைப்பே அகற்றியது.
இந்த அமைப்பின் சிறப்பம்சமே இது யாரோ சிலரால் திட்டமிட்டு உருவாக்கியதல்ல என்பதில் அடங்கியிருக்கிறது,மக்கள் தங்களின் தேவையை முன்னிட்டு இந்த அமைப்பை சாதித்தார்கள்.ஊருக்கு ஊர் மக்களாகவே முன்னின்று உருவாக்கிக் கொண்டார்கள்.இது போல எனது அறிதலுக்கு எட்டியவரையில் ; மக்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவும் ,தங்கள் உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை சமூகம்,அரசியல் , பொருளாதாரம் போன்றவற்றில் உந்திக் கொள்ளவும் தாங்களாகவே கண்டடைந்த பிற அமைப்புகள் எதுவும் தமிழ்நாட்டில் கிடையாது.
தங்களுக்கு உரிமையற்ற உயர் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது தங்களுக்குத் தேவையற்றது என்கிற குணத்தை நாடார்கள் கண்டடைய இந்த அமைப்பே உதவியது.உயர் பொருட்கள் தங்களுக்குத் தேவை என கருதுமிடங்களிலும் கூட நாடார்கள் , அதிகாரத்தை அந்த உயர்பொருளுடன் தொடர்புடைய தனிநபர்களிடமோ,சமூகத்திடமோ விட்டுத் தருவதில்லை.அதனை விலைக்கு பணம் கொடுத்து வாங்கிவிட முடியுமா என்று யோசிப்பார்கள்.அல்லது அதுபோன்ற ஒன்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள்.
அதுபோலவே தங்களைத் தாழ்வானவர்களாகக் கருதும் , கணக்கிடும் மத அமைப்புகளிடம் அதிகார நிறுவனங்களிடம் தொழில் நிமித்தமாக அன்றி பிற விதங்களுக்காக போய் நிற்பதில்லை.தங்களுக்கு உரிமையை,பங்களிப்பை மறுக்கும் ஏதும் தங்களுக்கு அவசியமற்றது என்பதை முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம்தான் கற்றுத் தந்தது.
பிற அதிகாரத் தரப்பிடம் சென்று சரணடைவதில்லை.
பிற அதிகார நிறுவனத்தில் தொழிலின் நிமித்தம் கடைசியாளாக வேலை செய்யும் ஒரு இந்துநாடார் ஊர் நிர்வாகத்தின் தலைவராகக் கூட பல சமயங்களில் இருக்கும் வாய்ப்புண்டு.அவரது அதிகாரத்தை நிறுவனத்தால் சுருக்க முடிவதே இல்லை.
உரிமையற்ற இடங்கள் அவை சொர்க்கத்தையே பரிசளிக்கிறோம் என்னும் உத்திரவாதத்தைத் தருபவையாக இருப்பினும் கூட அவற்றை நாடார்கள் புறக்கணித்து விடுவதைப் போல ,அல்லது அதிலிருந்து விலகிச் சென்று விடுவதைப் போல உரிமையிருக்குமேயானால் விழுந்து கிடந்தது வேலையும் செய்வார்கள்.உதாரணமாக இன்றும் முத்தாரம்மன் கோவில்களில் அய்யர்களை வைத்து பூஜை செய்கிற ஊர்கள் உண்டு.ஆனால் அய்யர்கள் அங்கு ஒரு மேல்நிலையை பிரதிநிதித்துவம் செய்கிறவராகவோ,மக்களிலிருந்து ஒரு படி மேலே எனவோ கணக்கிடப் படுவதில்லை.மக்கள்தான் பெரியவர்கள்.பின்னர்தாம் எல்லாமே.அய்யர்கள் பூஜையில் வேலையாட்கள் என்பதற்கும் மேலே கடுகளவு கூட போற்றப்படுவதில்லை.வேலையை செவ்வனே செய்யாமல் போகும் பட்சத்திலும் சரி,அதிகார ஆசையில் ஊசலாடும் போதும் சரி அவர்கள் உடனடியாக வெளியேற்றப் படுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம் .
முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாக அமைப்பு ; இந்து மத அமைப்பு மட்டுமே என்பது போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் கூட ,இது கிளர்ச்சிகரமான மக்களின் உளவியல் சார்புநிலையைத் தன்னகத்தே கொண்ட மக்கள் அமைப்பு முறை ஆகும்.திருச்செந்தூரை நிராகரித்து விட்டு உவரி சுயம்புலிங்கசாமி கோவில் உருவான திக்கும் திசையும் இதுவே .மக்களைப் புறக்கணிக்கும் தெய்வங்களுக்கோ , சாமிகளுக்கோ வேலையில்லை என்னும் குணத்தை சகல பண்புகளிலும் கண்டடைய உதவிய , மக்கள் உளவியல் பின்புலம் கொண்ட அமைப்பு முறையே முத்தாரம்மன் கோவில் வழிபாடும்,ஊர் நிர்வாகமும்.நிறுவனத்தில் தன்னிடம் கடைநிலை ஊழியனாக வேலை பார்பவனின் வீடு நோக்கி அரசியல் தலைவர்கள் வந்து செல்வதை ;முதலாளி கண்டு திகைக்கும் இடத்தில் இந்த முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆரம்ப காலங்களில் இந்த அமைப்பு நிலச்சுவான்தார்களிடமிருந்தும் , ஆதிக்க சக்திகளிடமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள போராட வேண்டியிருந்தது .இந்த போராட்ட கூறு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது . "எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? அவ்வளவிற்கு பெரியவர்களாகி விட்டீர்களா ? என்பது போன்ற ஆதிக்க சப்தங்களை "கணக்கு வழக்கை யாராக இருப்பினும் பொதுவில் வைத்து விட்டு பேசு " என்கிற எதிர்வினை முலமாக ஸ்திரபடுத்தியது.
கணக்கு கேட்டல் என்பதே இந்த அமைப்பின் ஜனநாயகத்தைக் கட்டிக் காத்தது.
இறப்புச் சடங்குகளில் மக்களின் செல்வாக்கை இந்த அமைப்பு உறுதி செய்தது.இந்த அமைப்பை உதாசீனம் செய்பவர்கள் கூட இறப்புச் சடங்குகளின் போது இந்த அமைப்பின் முன்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என்பது இன்றுவரையில் கடைபிடிக்கப்பட்டு வருவது.
முத்தாரம்மன் கோவில்கள் என்பதும் .இவை கொண்டியியங்கும் நிர்வாகமும் வெளியே தெரிவது போன்ற வெறும் பஜனை மடங்கள் அல்ல.மக்கள் தங்களைக் கண்டடைந்த பாதை

3

காமத்தை எழுதுதல்





நிறையபேர் நேரடி காமத்தை இப்போது எழுதுகிறார்கள்.கவிதையில்,கதைகளில் என்று காமத்திற்கேங்கி அழும் குரலின் சப்தம் ஆண் பெண் பேதமின்றி சதா கேட்டுக் கொண்டே இருக்கிறது.இதில் விடலைகள் எழுத்தை கைவிட்டு விட்டால் எழுதும் பிறரிடம் காமத்தை எழுதுதலே எழுத்து ,கலை என்பது போன்ற எண்ணங்கள் ஓங்கி இருப்பதைக் காண முடிகிறது.வயோதிகர்கள் இவற்றை எழுதும் போது தமிழில் வயது வேறுபாடின்றி காமம் எப்போதும் தட்டுப்பாடு கொண்ட பொருள் என்பது விளங்கினாலும் எழுத்தும் கலையும் இதற்காக என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சகிருதையர்கள் என்பது விளங்கவில்லை.
முன்பெல்லாம் காமத்தைத் திரட்டுவதெற்கென்று தனியாக ரகசிய புத்தகங்கள் கிடைக்கும்.அவை நேரடியான காமத்தைப் பேசும்.அந்த புத்தகங்களில் காணும் காமத்தைக் காட்டிலும் , அது ரகசிய பரிமாற்றத்தில் இருப்பதே உணர்ச்சியைத் தூண்டக் கூடியது.இப்போது அப்படியல்ல .ஒரு சமையல் குறிப்பை படித்து விட்டு அடுத்த tap பில் காமத்தைப் பருகமுடியும்.அடுத்தடுத்து நீங்கள் யோக குருமார்களையோ,ஜெப ரட்சகர்களையோ திறக்கலாம்.ரே திரைப்படம் ஒன்றிற்குள் நகரலாம்.அரசியல் படிக்கலாம்.எல்லாம் திறந்த மேனியில் கிடைக்கிறது.ஒரு திறந்த போர்னோவைப் பார்த்த வண்ணம்தான் நீங்கள் காய்கறி வாங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் விருப்பினாலேயொழிய கடைக்காரனோ,உங்கள் குழந்தையோ அறிய வேண்டியதில்லை.அவ்வளவிற்கு நேரடியாக உள்ளே காம உள்ளடக்கங்கள் வந்து சேருகின்றன.இவை எதுவும் நடைமுறைப் படுத்த இயலாதவை என்பது வேறு விஷயம்.
என்னுடைய நண்பர்களில் சிலர் மனச்சோர்விலிருந்து விலக்கிக் கொள்ளவும் ,ஆற்றலைப் பெறவும் ,வேலைகளில் ஈடுபாட்டைப் பெருக்கவும் இவை உதவுவதாகச் சொல்கிறார்கள்.சிலர் நேர்மாறாகக் கருத்து தெரிவிக்கிறார்கள்.நடைமுறைப்படுத்த இயலாத இத்தகைய உள்ளடக்கங்கள் அனுமதியின்றி கூட உள்ளே வந்து கொண்டிருக்கும் போது முடக்கமும்,மனச்சோர்வும் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.இவையெல்லாம் சமூகவியல் கண்ணோட்டத்துடன் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.இருக்கட்டும் .என்னுடைய பிரச்சனை இதுவல்ல.காமம் திறந்து கிடைக்கும் போது அதனை அவ்வாறே எழுதுதலுக்கு என்ன வேலை இருக்கிறது?
காமம் எல்லாவற்றுக்கும் அடிநாதம் .அதில் ஒரு சந்தேகமும் இல்லை.பிரபஞ்ச பேரியியக்கமே காமம்தான்.பக்தி காமத்தின் பேரின்ப நிலை நோக்கி செல்லக் கூடியது.பக்தி என்பதை சுய தணிக்கை என்று கற்று வைத்திருப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.பணமும் காமமே .விவசாயமும் காமம்தான். ஒன்றைப் பேணி அடைகாத்துக் காப்பாற்றுவதும் காமம்தான். ஆனால் எழுத்திலும் ,கலையிலும் காமம் வேறுரு கொள்ளவேண்டும்.மடைமாற்றமே அதன் விந்தை.அது நேரடியான காமம் அல்ல.நேரடியாக சொல்லும் போதும் அதற்கு ஒரு புதியதளமும் ,மடைமாற்றமும் ஏற்படவேண்டும்.நான் மடைமாற்றம் ஆகாத எனது காமத்தை காமமாக இருக்கிறேன் என்றால் "நீ வேறு எங்கேனும் சென்றுவிட்டு என்று சொல்லிவிடுவார்கள்."அதற்கு பெறுமதி கிடையாது.கத்தியை அவ்வாறே காய்கறி நறுக்குவதற்குப் பயன்படுத்துவதை போன்றது அது.அது கத்தியில் ஒரு உபயோகம் அவ்வளவுதான்.கலை கத்தியை துரிகையாக்கித் தரவேண்டும்.காமம் தூரிகையில் சுடர் விடவேண்டும்.அந்தச் சுடரில் நின்றெரியும் காமப் பெருஞ்சுடர்.




Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"