25 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்

 








1

பிறந்த குழந்தை

மடியில்
கனவு காண்கிறது
தூங்கி விளையாடுகிறது
அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல
சுய நினைவற்று
மெல்ல ஆடுகின்றன தாய் மடியில்
தாயின் தொடைகள்
தாய் மடியாக
எவ்வளவு விரிகிறது
இந்த மடி
பிரபஞ்சம் அளவிற்கு
பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி
ஆணிடம் வரும் போது
சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி
சிறு யோனியின் அளவிற்கு
ஒரு துளையாகிறது
அதை பிரபஞ்சம்
அளவிற்கு
பெரிதாக்குகிறது
பூமியில் பிறந்தவுடன்
குழந்தை

2

டியூஷன் முடிந்து
குழந்தைகள் சென்றபின்
இருக்கைகள் கலைந்திருக்கின்றன
அமர்ந்திருந்த குழந்தைகள்
வளைத்த விதத்தில்
சரிப்படுத்தச் சென்ற கரங்களைப்
பின்வலிக்கிறேன்
அவை அவ்வாறே
இருப்பதுதானே
நன்று?

3

இந்த காலையை உருவாக்க
சில பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன.
ஒருத்தி முற்றத்தில் எழுப்புகிற கோலம்
பாடலுக்கு ஒத்தாசை செய்கிறது.
டிப்பர் லாரி இன்னும் புலரவில்லை
அதன் நெற்றியில் நேற்றைய பூளை
கோவில் மணிச் சத்தம்
இந்த காலையைத் தொடங்கி முடிக்கவும்
தயாரான காலையை
தனது சாக்குப்பைக்குள் சிறுகச் சிறுக சேமித்த வண்ணம்
கடினம் இழுத்துக் கொண்டோடுகிறான்
இன்றைய நாளின்
பைத்தியம்.

5
உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் போது
வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்
இங்கே நீங்கள் பகவான் நான் சம்சாரி .
சட்டையில் கொட்டி நீரருந்த மகாபலி சக்ரவர்த்தி கனவில்
வரவேண்டும்
முருகன் காதில் பேச வேண்டும்
குழந்தை ஏசு கைபிடித்திழுத்து
விண்ணுலகு காட்டவேண்டும்
அதன் பின்னர் உங்களுக்கு ஒரு பூச்சி விளையாட்டை
அறிமுகம் செய்து வைப்பேன்.
ரயிலில் சுற்றியலையும் வண்ணத்துப் பூச்சியை
ரயிலில் இருந்து கீழே தள்ளி விடும் விளையாட்டு
இதனை ரயில் இருந்தால் மட்டும்தான் விளையாடமுடியும்
என்றில்லாதிருப்பதே
இதன் சிறப்பு
நீங்கள் தடுமாறாமல் நடக்குமிடத்தில் அங்கேயே இருந்து தங்கிவிடுங்கள் .
அப்போது நீங்கள் சம்சாரி
நான் பகவான்

6

ஒரு மழைக்கும்
அடுத்த மழைக்கும் இடையில்
சில தூரம் சென்று திரும்பினேன்
இப்போது இடைப்பட்ட தூரத்தை இணைத்து
மறுமழை
பெய்து கொண்டிருக்கிறது
இடைப்பட்ட தூரத்தை மேலுமொருமுறை
மழை விலக்கிப் பார்க்கிறேன்
பெய்யென பெய்கிறது
மாமழை
இது நேற்றும் இருந்த மழைதான்
நாளையும் இருக்கப்போகிற மழைதான்
இரண்டு மழைகளுக்கு
இடைப்பட்ட தூரத்தையும் இணைத்து
பெய்யவிருக்கிற மழையும்தான்
ஆனால் இன்று நான் எனது இன்மையின் மீது
பெய்து கொண்டிருந்த மழையை
நெடுநேரம் நின்று
பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போதும் அது
பெய்து கொண்டுதானிருந்தது

7

கருணைக் குழந்தை
கடந்து போன
காலத்தை நினைவுபடுத்தி
தாத்தா என அழைக்கையில்
உள்ளிருக்கும் சிறுவன்
தடுமாறுகிறான்
"அவ்வளவு விரைவாகச் சென்றுவிட்டதா இந்த காலமென"
குழந்தை அவனை வெளியிலிருந்து கண்டு
தாத்தா என்கிறது
அவனோ உள்ளிலிருந்து அவனைக் கண்டு
தடுமாறுகிறான்
அங்கிள் என அழைக்கும்
பெண் குழந்தைகள்
ஏற்பட்ட காயத்தின்
அருமருந்து
பின்னர் அவனை சற்றே நேரம்
வெளியிலிருந்தே
பார்க்கத் தொடங்குகின்றன
அனைத்து காட்சிகளும்

8

அந்தக் குழந்தைக்கு இதுவரையில்
இரண்டு ஆப்ரேஷன்ஸ் நடந்திருக்கின்றன
ஒன்று மேஜர்
மற்றொன்று மைனர்
பிங்க் கலர் மாத்திரைகள் இப்போது தினமும் இரண்டு சாப்பிடவேண்டும்
வெள்ளை மாத்திரைகள் இரண்டால்
சர்க்கரை சமநிலையில் இருக்கிறது
தூக்கத்திற்கு சன் ரைஸ் கலர் மாத்திரை ஒன்று
பெருநகரின் ரயில் நிலையத்தின் மீதுதான்
எவ்வளவு வளைகின்ற இடுப்புகள் என ஏங்கும் அதற்கு
இப்போது
வயது ஜம்பது

9

புழுத்த நாய் ஒன்று
ஆட்டோவில் ஏறிப் படுத்துக் கொண்டது
அதுவும் பிரம்மம்தான் சந்தேகமில்லை
தேய்த்துத் தேய்த்து கழுவி
வெளியில் ஊற்றிக் கொண்டிருக்கிறான்
அழுகிப்புழுத்த அவனுடைய இன்றைய நாளை
ஆட்டோக்காரன்
பரப்பிரம்மம் ஆனாலும்
எப்படி வருகிறது என்பதைப் பொறுத்துத்தான்
போலும்
உட்கார வைப்பதா
வெளியேற்றுவதா
எழும்பி
வேறுவழி நடப்பதா
ஊற்றி கழுவதா என்பது

10

என்னுடைய தெய்வம்
பசுவின் மேலேறி வருகையில்
கனிவு தருகிறது
என்னுடைய தெய்வம்
பச்சையின் மேலேறி
வருகையில்
பசி தீர்க்கிறது
என்னுடைய தெய்வம் நதியின் வடிவில்
வருகையில்
தணுக்கிறது
வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது
குழந்தையாக
வேடிக்கை காட்டுகிறது
சாரலில் மாயா ஜாலம்
என்னுடைய தெய்வம் பெண்ணாக வருகையில் மட்டும்
முட்டி மோதுகிறது
என் அம்மே

11

கொல்லையில் பசுக்கள்
தெய்வம் போல
நின்று
அசைந்து கொண்டிருக்கின்றன
முன்பக்கக் கொன்றை
தெய்வம் போல நின்று ஆடிக் கொண்டிருக்கிறது
தழுவிய காற்று
உள் வந்து நிறையும்
வீட்டினுள்
தெய்வம் போலே
குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
நடுவில் நானொரு மனுஷ
சொரூபம்
எடுத்து நிற்கிறேன்

12

மேலாளர் வேலை.
ஓட்டுப்புரை ரயில் நிலையத்தின்
மோட்டார் பம்பு அறையின் முன்பாக தெரிந்தோ தெரியாமலோ
மாட்டிக்கொண்டு குதிரையின் மேலேறி அமர்ந்திருக்கிறார்
அந்த சிமென்ட் அய்யனார்.
கீழிருக்க பயந்து மேலொடுங்கி இருப்பது போலே
குதிரையில் அவர் தோற்றம்
அவர் குளித்து பலகாலமிருக்கும்.
உடனிருந்த ஒட்டுண்டி சாமிகள் தாங்கள் அகன்று சென்ற தடயம்
விடாமல்
அகன்று விட்டார்கள்.
அம்மையை மட்டும் பிரிவில் பறித்து இடுப்பில்
வைத்த வண்ணம் குதிரையிலேறி அமர்ந்திருக்கிறார்
பதினெட்டுப்பட்டியை சுற்றி அரசாண்டு காவல் காத்த
அய்யனார்
முதிய வேம்பின் பின்மதியம் துணை.
கழுத்தைத் திருக்கி
மங்களூர் எக்ஸ்பிரஸ் கிழக்கு நோக்கி செல்லும் போது கிழக்கு நோக்கியும்
குருவாயூர் மேற்கில் நகரும் போது மேற்கு நோக்கியும்
கடைசிப் பெட்டி வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்
ஏனென்பதெல்லாம் எனக்குத் தெரியாது
உடல்வலிக்கு பேராசிட்டமால் மாத்திரையும்
இரண்டுநாள் தூக்கத்திற்கு தூக்கக் குளிகையும்
கொடுத்து விட்டு வந்தேன்.
தூக்க குளிகையை வைத்து
நானென்ன செய்ய ? எனக்கேட்டவரை
நீண்டகாலம் நானும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் மனுஷா ...
ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகும் ...
என ஓங்கித் திட்டினேன்.
அப்படியா தெய்வமே ...
என என்னிடம் சன்னமாகச் சொல்லிய
குதிரைவீரன் அய்யனாருக்கு
இப்போது ஆளில்லாக் கழிவறையின்
மேலாளர் வேலை.

13

நான் இல்லாத போது
நான் இருக்க மாட்டேன் தானே
இல்லாத போது இருப்பதைப் போல
வாழ்தல்
எவ்வளவு
சுகம்...

14

பழைய காதலி விட்டுச் சென்ற
சோப்பின் வாசம்
முதல் நாளில்
பேரிரைச்சலோடு
வீசிக் கொண்டிருந்தது
அறையை வெளிக்கிளம்புகையில்
உடன் வரத் தொடங்கியது பின்னர்
ஒருமுறை வனத்துக்குள் நுழைய
அட்டை கடித்திழுத்த இடது தொடையிலிருந்து
எங்கும் பரவி
காட்டுச் சேவலின் பறத்தலில்
ஓடி மறைந்தது
நெடுங்காலத்திற்குப் பின்பு
ஓடும் ரயிலில் சந்தித்த மூதாட்டியிடம்
கொடுத்து விட்டுத் திரும்பினேன்
முகர்ந்து நோக்கிய மூதாட்டி
பழைய காதலன் விட்டு விட்டு போன
சோப்பின் நறுமணம் இது
என்றாள்
இன்றைய குளியலறையில்
அதன் பூஞ்சை அகற்றிப் பார்த்தேன்
பின் பூஞ்சை மூடி வைத்து விட்டேன்
எனதுடலில்
புதைந்து கொண்டது
காதலியின் மூலிகையுடல்

15

துயரத்தை நோண்டிக் கொண்டேயிருக்காதீர்கள்
அதுவொரு ஆதி மிருகம்
ஆமைக்கு ஓட்டை அதுதான் கொடுத்தது
ஏசுவை சிலுவையில் அடித்தது மேரியின் கையில்
குழந்தையும் ஆனது கடையக்கடைய
பாற்கடல் ஆனது
அது எல்லோரும் ஆதி மிருகமாவதையே விரும்புகிறது
அது மிகவும் தொன்மையான ரசம்
தன் கண்ணீரிலேயே பரசவமுண்டாக்கும்
தன் ரசம்
ஒரு துளி பருக ஒரு பல் முளைக்கும்
சிறு துளி செழித்து
உறுமல் கேட்கும்
ரத்தம் கேட்கும்
திருஷ்டிப் பொட்டிட்டு அடக்கமாய் வைக்க
அது கிடந்து சிரிக்கும்

16

சின்ன ரயில் அது
இடமில்லையென
இறக்கி விட்டார்கள்
பல ஊர் பயணம் செய்து
சேர்ந்த இடத்தில்
நின்று கொண்டிருந்தேன்
நீ எப்படி இங்கேயென
கேட்கிறார்கள்
நீங்கள் ரயிலுக்கு உள்ளேயிருந்தபடி
வந்து சேர்ந்தீர்கள்
நான் வெளியே அமர்ந்தபடி
வந்து சேர்ந்தேன்
எனது பயணம்
அருமையோ அருமை
நீங்கள் பார்த்ததை மட்டுமே பார்த்தீர்கள்
நான் பார்க்காததையும் பார்த்தேன்

17

மனம் கீழே கீழே கிடக்கிறது
என்ன செய்வீர்கள் ?
முதலில் ஒரு துண்டு இனிப்பு கொடுத்துப் பார்ப்பேன்
ம் ஹும் என்றால் மடியில் எடுத்தது வைத்து
கொஞ்சுவேன்
முடியவில்லையெனில்
குஞ்சாமணியை எடுத்து முத்துவேன்
வெற்றிடத்தில் பம்ப் பண்ணுவேன்
ஒன்றிலும் முடியவில்லை எனில்
என்ன செய்வீர்கள் ?
எத்தனை பௌடர் பூசினாலும்
அது இருக்குமிடத்தில் சரியாகத்தானே இருக்கிறது என்று
நானெழும்பி
கிளம்பிவிடுவேன்
நீங்களும் கிளம்பிப் பாருங்கள்
ஒருவேளை அது எழும்பி
உங்கள் பின்னால்
வரக் கூடும்

18

அந்தச் சிறுவன்
அப்படி ஏங்கி நிற்கிறான்
எவ்வளவு உயரம் என்று பார்க்கிறான்
நீங்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறீர்கள்
இதுவே உயரமென்றால்
அவன் எவ்வளவு
பள்ளத்திலிருக்கிறான் பார்த்தீர்களா ?
அவன் இரண்டுமாடி போட்டுவிட்டான்
இவன் கார் வாங்கியாச்சு
புனித அன்னை பத்துநாள் திருவிழாவில்
பத்து நாளும் புதுத்துணி
வாங்குகிறார்கள்
இந்தத் தெருவில்
எப்படி
வாழமுடியும் ?
சொல்லுங்கள் அண்ணா
என்று கேட்கிறான்
எந்த வேலை வேண்டுமாயினும்
இருக்கட்டும்
முதலில் இச்சிறுவன் பார்க்கும்
உயரம் குறைத்து
பள்ளம் நிரப்புங்கள்
ஆண்டவரே
அவன் இடம்பெயருவதைப் பற்றிகூட
ஒன்றுமில்லை
என்றாலும்
இந்த எலிக்குகையை
இவ்வளவு உயரமென்று
அவன்
எண்ணக் கூடாது
அவனும்
இதே தெருவில்
வசித்தவன்
பார்த்தீர்களா?


19

தள்ளாடி ஆட்டோவில்
வந்திறங்கும் தந்தையின் கையில்
பால் பாக்கட்
கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல
செல்கிறான்
தள்ளாடுகிறது குழந்தை
அத்தனைத் தள்ளாட்டத்திலும்
அவன் கை
குழந்தையை
கைவிடவில்லை
பால்பாக்கட் முனையை
சுருட்டிப் பிடித்திருக்கிறான்
பால்பாக்கட்டை எடுத்து
கொண்டு தருகிறேன்
என்று சொன்னவனை சீறி கொண்டே
உள்ளே
நுழைகிறது
பால் பாக்கட்
அனாதையில்லை செல்லமே நீ
குழந்தை ஏசு

20

மறந்து போன ஒன்று
1
மறந்து போன ஒன்று
மறந்து போன வேறு ஒன்றுடன்
தொடர்பு கொண்டிருந்தது
வேறு ஒன்றைத் திரட்டத் தொடங்கினேன்
நினைவு திரும்பிற்று
மறந்து போன ஒன்று
2
கருடன்
மனதில் தொடர்பு கொண்ட கணம்
வீட்டிற்கு
வந்ததும்
விடைபெற்றது
ஏன் என்று காண
விட்ட இடத்திற்கு
மீண்டும் சென்று
கொண்டிருக்கிறேன்
விட்டுவந்த கணத்தில்
இருந்தது
பறவை
3
கந்தசாமி அண்ணாச்சியை
பலசரக்குக் கடை
பட்டறையில் இல்லையென்றால்
அடையாளம் காணுவதற்கில்லை
உண்மையில்
கந்தசாமி
கருவறை விட்டு
வெளியே நின்றாரென்றால்
சீந்துவாரில்லை

21

உருவம் ?
1
உன்னை ஏன் தேடுகிறேன்
அச்சமா
காதலா ?
இல்லை
நீ என்னைத் தேடிக் கொண்டிருக்கிறாய்
அதனால் தேடுகிறேன்
2
அம்மன் உருவம்
உருவத்திலிருந்தும் செய்யப்பட்டதுதான்
உருவம் பார்த்தும் செய்யப்பட்டதுதான்
செய்து கொண்டிருக்கையில்
ஒரு கணத்தில்
கையில் விடுபட்டு
சிற்பம்
ஒரு இஞ்ச்
மேலேறி அமர்ந்ததும்
சிற்பி
நிறுத்திக் கொண்டான்
அரூபம்
வந்து இறங்கவில்லையெனில்
அதற்கு எதற்கு
ஒரு உருவம் ?
3
யாரிடமிருந்தேனும்
ஒரு தூண்டுதல் வருகிறது
எதனிடமிருந்தேனும்
ஒரு தூண்டுதல் வருகிறது
சில சமயம்
என்னிடமிருந்துகூட
தூண்டுதல்
வருகிறது

22



உன் இருப்பு
பூரணமாகிறது
1
புதிய இடம்
உனதிருப்பை
அங்குள்ள
சிறுபூச்சிகள் உணர
ஐந்தாறு வருடங்கள் ஆகும்
நாயும் பசுவும் உணர சிலமாதங்கள்
சுற்றும் முற்றும் தாவரங்கள் உணர
ஓராண்டு காலம்
நீ சிடு மூஞ்சி என்பதை அறிவதாயிருந்தால் கூட
நீ அரக்கன் என்பதை அறிவதாயிருந்தால் கூட
சுய நலம் பிடித்தவன்
ஆங்காரி
எதுவென்றாலும் அறிய காலம் பிடிக்கிறது
அது அதற்கென்று
ஒரு காலம் ஆகிறது
அதன் பின்னரே
நீ அமைதியாக நடந்து செல்கிறாய்
நீ யார் என்பது
புல்லுக்கும் தெரிந்த பின்னரே
உன் இருப்பு
பூரணமாகிறது
2
முன்னர் இருந்த
இடம்
உன் வாசனையை
ஒரு பூச்சி மறப்பதுவரையில்
வீசிக் கொண்டிருக்கிறது
3
நீ கிளம்பிச் சென்ற பின்னரும்
நெடுநாட்கள்
இங்குதான்
இருக்கிறாய்
4
நீயெதுவாக இருந்தாலும்
ஏதுமற்றவன்
என்று
யாரும்
எடுத்துக் கொள்வதில்லை
5
தண்ணீர் விடுகிறாயோ இல்லையோ
செடிகளுக்கு
நீ தேவைப்படுகிறாய்
கருணை காட்டுகிறாயோ இல்லையோ
பூச்சிகள்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கின்றன
அன்பற்றவனாயிருந்தால் கூட
நீ எப்போதோ இறைத்த
ஒரு சிறு செம்பு நீரின் நிமித்தம்
மாமரம்
தன் கனியை
உனக்குத்
தந்துவிடவே
விரும்புகிறது

23


என் பேர் மகிழ்ச்சி
1
மகிழ்ச்சியை யார் கொடுத்தாலும்
வாங்கிச் சாப்பிட்டு விடுகிறேன்
எனக்கு எந்த வேறுபாடுகளும் இல்லை
2
மகிழ்ச்சியை தானம் செய்பவர்
எந்த ஊரில் இருந்தாலும் சொல்லுங்கள்
ஏராளம் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
3
மகிழ்ச்சியில் இருப்பவன்
தானாகவே கைநீட்டித் தருகிறான்
4
நீர் மட்டும் ஊற்றினேன்
தானாக வளருகிறது
மரம்
5
என் பேர் மகிழ்ச்சி
ஆதலால் யாதொன்றும் குற்றமில்லை
6
திருவிழாக் கடையில்
எல்லாவற்றையும்
தொலைத்து விட்ட குழந்தை
மகிழ்ச்சியை மட்டும்
எடுத்துக் கொண்டு
ஓடுகிறது
7
துக்கத்தோடு செல்பவனை
கடவுள்
திருப்பி அனுப்பி விடுகிறார்
8
கிளையை வெட்டினாலும்
மரம்
மகிழ்ச்சியுடன்தான்
மீண்டும்
தளிர்க்கிறது
9
மகிழ்ச்சியைத் தவற விட்டவன்
அனைத்தையும்
தவற விடுகிறான்
10
எத்தனையோ தற்செயல்களை
தாண்டித்தாண்டித்தான்
நானும்
மகிழ்ச்சியின் மடியில்
வந்து
விழுந்தது
மகிழ்ச்சியை யார் கொடுத்தாலும்
வாங்கிச் சாப்பிட்டு விடுகிறேன்
எனக்கு எந்த வேறுபாடுகளும் இல்லை


24


மேனி ஊறும் ஊறும்
1
எனக்கொரு மேனி கிடைத்தது
மேனிக்கு நிறைய உறுப்புகள்
ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொன்று தெரிகிறது
என் மேனி என்பதற்கு இதில் என்ன இருக்கிறது ?
மேனியால் பெருஞ்சொரூபம்
கண்டேனே அல்லாமல்
என் மேனி என நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம்
இனி வரும்
மேனியே
2
மேனியால் உண்டேன் உறங்கினேன்
ஆன பிற எல்லாம் சுகித்தேன்
த்தித்தித்தேன்
இவையெல்லாம் போக வேறொன்றும்
அறிந்தேன்
அப்படியாயிற்று இது
வேறொன்று அறிந்த மேனி
3
மேனி வந்த வழி வேறு
வேறொன்றை மேனி கண்ட வழி வேறு
4
மேனி ஒரு கண்
5
மேனி இல்லையானால்
என்ன தெரிந்திருக்கும் ?
6
வேறொன்றுக்குள் இந்த மேனி
நுழைந்து
மேனியில் இல்லாத
வேறொன்றைக் கண்டது
7
மேனியெல்லாம் தேமல்
இந்த கடற் காற்று
கடற்காற்றின் மேனியிலே
கருணா மூர்த்தி
8
மாமழை இந்த மேனியில்
விழுவது
அதிசயம்
அல்லவா
9
மரத்திற்கும் எனக்கும் என்ன வேறுபாடு
அது எப்போதும் அறிந்து கொண்டிருப்பதை
நான்
எப்போதாவது
அறிகிறேன்
அவ்வளவுதான்
10
எனது எண்ணத்திற்குள்
எவ்வளவு
பறவை
சப்தங்கள்
மேனி எரிகையில் பறவை சப்தங்களுக்கு
ஒன்றும் ஆகாது
அவை மீண்டும்
பறவைகளாகும்
11
வேறொன்றைத் தொழுது செல்லவே
இந்த வழி வந்திருக்கிறேன்
அது வேறெங்கோ இல்லை
உன்னிடத்திலும்
உண்டு
உன்னிடத்தில் உண்டென்றால்
என்னிடத்தில் இருக்காதா
12
மேனி ஊறும்
ஊறும்
ஊறிக் கொண்டேயிருக்கும்

25

முற்றத்தில் நிலவு விழும் போது வேறு எங்கும் செல்லாதே

1
தூரத்தில் இருக்கிறேனா
அருகில் இருக்கிறேனா என்பது
தூரத்தில் இருக்கிறாயா அருகில் இருக்கிறாயா
என்பதை பொறுத்தது
2
சன்னிதியின் முன்பு நேருக்கு நேராக நிற்கையில்
அப்பட்டமாக தெரிந்து விடுகிறது
இன்னும் எவ்வளவு தூரம் என்பது
3
ஆளில்லாத சன்னிதியில்
ஏராளம் கூட்டம்
யாரோ வருவதற்காக
நடை திறந்திருக்கிறது
4
விளக்கு வைத்தாயிற்று
அலங்காரம் செய்தாயிற்று
அடியவர் வருகிறாரா என்று பெருமாள்
பார்த்துக் கொண்டிருக்கிறார்
5
எவ்வளவு பேர் வந்தாலும் பின்னர்
யாரோ ஒருவர் வரவேண்டியிருப்பது
பெருமாளுக்கு
மட்டுமில்லை
6
குழந்தைகள் வருவதை பெருமாள்
தூரத்திலிருந்தே
பார்த்து விடுகிறார்
7
நான் என்னுடைய கவிதைகள் மீது
அமர்ந்திருப்பவன்
இத்தனைக்கும் என்னுடைய கவிதைகள் எதுவும்
என்னுடையவையும் அல்ல
8
மனத்தைப் பயிர் செய்
பூமியெல்லாம்
விளையும்
9
தூரம் என்பது
இன்னும் தீராத கரை
கறையென்றும் சொல்லலாம்
10
விஷத்தைக் குடிக்கிறேன்
தொண்டையோடு
நிறுத்தி விடுகிறார்
பெருமாள்
11
கறை தீர்ந்தவன்
கண்டடைந்து விடுகிறான்
12
குழந்தைகள் பொல்லாதவர்கள் என்பதால்
நாம் பெரியவர்களாகிக் கொண்டிருக்கிறோம்
13
எல்லா கதவும் அடைத்திருக்கிறது என்றவனிடம்
பரவாயில்லை
ஒரு கதவு திறக்கும் சென்று விடுவாய்
எனக்கு எல்லா கதவும் திறந்திருக்கிறது
எந்த கதவில் செல்வது என்று தெரியவில்லை
என்கிறான் வேறொருவன்
14
மூடியிருக்கிறது என நினைத்துக் கொண்டிருப்பது
பிரேமை
கையை எடுத்துத் தொடாதவரையில்
எந்த கதவும்
திறப்பதில்லை
15
எந்தக் கதவும் வெளியே இல்லை
உள்ளேயிருக்கிறது
திறந்து பார்
திறக்கும்
16
இசையில் சப்தமிருக்கிறது
இசைக்கு வெளியிலும்
ஒரு சப்தம் இருக்கிறது
நாக்கில் சுவையிருக்கிறது
நாக்கிற்கு வெளியிலும்
அதே சுவையிருக்கிறது
17
யாரிடம் பேசினால் இன்பமோ
அந்த இன்பம்
இருவருக்கும்
உரியது
18
எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு விட வேண்டும்
வேண்டியவன் வந்து சேர்வான்
மணம் பிடித்து

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"