தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 6

1
உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்




எனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப்
பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத்
தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது
என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100
கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன.

தூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில்
அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்சனையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக்
கொண்டே இழுத்து வந்தேன்.கழிந்த ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக
தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான்
மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம்
முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள்
கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு
உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும்
செய்யும்."அப்பாவை புனிதப்படுத்துதல் "கவிதை நூலை வாசித்தவர்களுக்குத்
தெரிந்திருக்கும்.பலர் அப்பாவை தாமதமாக கொலை செய்யத் தொடங்கியிருந்த
காலத்தில் அப்பாவை புனிதப்படுத்த தொடங்கிய கவிதைத் தொகுப்பு அது. அந்த
நூலை ஏராளமான தூக்க குளிகைகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருப்பேன்.

ரமலான் அன்று வழியின்றி தூக்க மாத்திரையின்றி இருபதாண்டுகளுக்குப்
பின்னர் படுத்தேன்.ஆனால் என்ன விஷயம் ! நன்றாகத் தூங்கி விட்டேன்
.காலையில் விழிக்கும் போது தாங்கவே முடியாத ஆச்சரியம்.மறுநாளிலிருந்து
மாத்திரைகளை நான் தேடவில்லை.எல்லாம் சரியாகாத் தான் போய்
கொண்டிருக்கிறது.நமது மனப் பதிவுகள் எல்லாவற்றையும் , எல்லா மாயைகளையும்
உண்மை என்றே நம்பும் இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றன.

மிகவும் முக்கியமான மருந்துகளை நீங்கள் எடுக்கத் தொடங்கிய பின்னர்
படிப்படியாக அதன் அளவை குறைத்து வந்தாலும் கூட ; ஒரு குறிப்பிட்ட
படிக்கும் கீழே குறைக்க முடியாது என்கிற விதமாகவே பெரும்பாலான ஆங்கில
மருந்துகளின் மில்லி கிராம் அமைக்கபட்டிருக்கும் .தேவைப்படாத போதும் கூட
பழக்கத்தை நீங்கள் அந்த மில்லி கிராமிற்கு கீழே இறக்கவே முடியாது.ஆனால்
அந்த சந்தர்ப்பத்திற்கு கீழே விழுந்து தப்பிப்பதை ஒரு இலக்காக வைத்துக்
கொள்வதே நல்லது.

எனக்குத் தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் நிபுணர்.தெரிசனங்கோப்பு
மகாதேவ ஐயர்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அப்பா என்னை அவரிடம்
அழைத்துச் சென்றார்.தொடர்ந்து தீராத தலைவலியில் ஆங்கில மருந்துகள்
பலனளிக்காதது மட்டுமல்ல,எதிர்விளைவுகளை என்னிடம் தொடங்கியிருந்த காலம்
அது.இப்போது இருப்பவரின் தகப்பனார்தான் அப்போது வைத்தியர்.மூன்று
மாதங்களில் எனக்கு குணமாயிற்று .அதன் பின்னர் இதுவரையில் எனக்கு அந்த
இடர்பாடு ஏற்பட்டதே இல்லை.

மகாதேவ ஐயரிடம் ஒரு விஷேசம் என்னவெனில் மனதிற்கும் நோய்க்கும் இடைப்பட்ட
தொடர்பை ஆச்சரியப்படும் விதத்தில் சொல்லிக் கொண்டே போவார்.சமீபத்தில் ஒரு
நண்பரை அழைத்துச் சென்றிருந்தேன். மனைவியோடு முரண்பாடு ,வயிற்றில் ஜீரணக்
கோளாறு ,நரம்பியல் உஷ்ணம் ,மன அழுத்தம் என்று சொல்லிக் கொண்டே
போனார்.எனக்கு இதனைக் காண; சாமி கொண்டாடி துடியில் குறி சொல்வதைப்
போன்றிருந்தது. அதனைத் தொடர்ந்து என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள
வேண்டும் என்கிற குறிப்புகள் வாய்ப்பாடமாக அவரிடமிருந்து வந்து கொண்டே
இருக்கும்.

முரண்பாட்டைப் போக்க வழியில்லையெனில் மருந்தை உணவாக்கிக் கொள்ள
வேண்டியதுதான்.வேறு என்ன செய்ய
முடியும் ?

2


வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை.அது வாடுவதே இல்லை




வினையை ஒரு கட்டத்தில் நிறுத்தக் கற்றுக் கொள்ளவேண்டும்.இது மிகவும்
எளிமையானது.எல்லா வினைகளும் பதிவாகும்.பதிவு ; நாம் கூறுகிற நியாயங்களைக்
காரணங்களை பொருட்படுத்துவதில்லை.அது உள்ளது உள்ளவாறு
பதிவாகும்.இப்படித்தான் பதிவாக வேண்டும் என்று நாம் அதன் மீது எந்த
செல்வாக்கையும் பயன்படுத்தவே முடியாது.அறிவின் செல்வாக்கையோ,அறத்தின்
செல்வாக்கையோ ,செய்த பேருபகாரங்களின் செல்வாக்கையோ,திருப்பணிகளின்
செல்வாக்கையோ,அருங்கொடைகளின் செல்வாக்கையோ எதையுமே அதன் மீது செலுத்த
முடியாது.இவற்றின் மூலம் கொஞ்சம் அதன் ஆங்காரம் தணிக்கலாம்
அவ்வளவுதான்.வினையை நிறுத்திக் கொள்வோமெனில் அதன் வேகம் தணிந்து பதிவுகள்
செல்வாக்கை இழக்கும்.அது புதுத்தன்மை பெறும்.

வினையை நிறுத்திக் கொள்ளுதல் என்பதற்கு செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளுதல்
என்று பொருள் கிடையாது.தேவையற்ற வினைகளின் ஓட்டத்தைக் காரியங்களில்
தடுத்து ,அவற்றில் பொறுப்பை விலக்கிக் கொள்ளுதல் அது.அதன் மூலம் தேவையான
காரியங்களின் செயல் ஓர்மைக்குள் வரும்.தேவையான செயல்கள் துரிதமாகும்.

நாம் பொதுவாகவே தேவையற்ற அனைத்திற்கும் பொறுப்பேற்று எதிர்வினை செய்து
கொண்டேயிருப்பவர்கள்.தன் முனைப்பும் , ஆங்காரமும் தணியும் போது இந்த
குணங்கள் அடங்கும். நான் பெருவாரியான எனது காலங்களை தேவையற்ற
காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதிலேயே விரயம் செய்தவன்.தெருவில்
இருவர் கட்டிப் பிடித்து உருண்டு கொண்டிருந்தால் நின்று விடுவேன்.நமக்கு
இதில் ஏதேனும் பொறுப்பு உண்டா ? என்று கேட்டுக் கொள்வதே இல்லை.பொறுப்பு
உண்டா இல்லையா என்பதை எப்படியறிவது ? நடக்கும் காரியத்தை
மேம்படுத்துவதற்கு அந்த சந்தர்ப்பத்தில் நம்மிடம் ஒரு காரியம் கைவசம்
இருக்கிறது என்றால் நிச்சயமாக கடந்து செல்லக் கூடாது.அப்படியில்லையெனில்
அங்கே நிற்கவே கூடாது.விஷயம் இவ்வளவுதான்.நாம் நிற்பதன் மூலம் நடக்கும்
காரியம் மேலும் சுருள்வதற்கே வாய்ப்பிருக்கிறது என்றால் திரும்பியே
பார்க்கக் கூடாது,போய்விட வேண்டும்.ஒரு விபத்து .நீங்கள் நின்றால்
நிச்சயம் பலனுண்டு என்றால் கடந்து சென்றால் பாவம்.அதே சமயம் அங்கே
ஏற்கனவே இருக்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்னும் நிலை இருக்கும்
போது சென்று மூக்கை நுழைக்கக் கூடாது.எல்லா விஷயங்களிலும் போய் சிக்கிக்
கொள்வதென்பது நமது அகங்காரத்தால் விளைவது.நேடிக் கொள்வது.எந்தெந்த
செயல்களில் நமது மனநிறைவும் மகிழ்ச்சியும் அதிகமாகிறதோ அவையே உரிய
செயல்கள்.மன நிறைவு தருகிற மகிழ்ச்சியே மகிழ்ச்சி.
இந்த உரிய செயல்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.ஏனெனில் மன நிறைவுக்கு
பல்வேறு மாறுவேடங்கள் உண்டு.ஒருவரிடம் இருப்பது போல மற்றொருவரிடம்
இருக்காது.ஒருவருக்கு காய்கறி நறுக்கினாலே மன நிறைவு ஏற்பட்டு
விடும்.மற்றொருவருக்கோ கடலில் இறங்கி முதலைகளுடன் சண்டையிட
வேண்டியிருக்கும் . மன நிறைவு என்பது அகத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும்
பள்ளங்களை பொறுத்த விஷயம்.

எனவே எந்த நீதி போதனைகளுக்கும் இவ்விஷயத்தில் இடமில்லை.மாதிரிகள்
இல்லை.இதனைச் செய்தால் எல்லோரும் மன நிறைவோடு இருப்பார்கள் என்று சொல்லத்
தகுந்த காரியங்கள் எதுவுமே இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.ஒருவர் செய்ய
விரும்பாத காரியத்தை மற்றொருவர் செய்வதால் அவருக்கு மன நிறைவு
உண்டாகலாம்.எனவேதான் பகவான் குற்றங்களை பார்ப்பதில்லை,குணத்தை மட்டுமே
பார்க்கிறான் என்றோர் வாக்கியம் கீதையில் வருகிறது.இந்த வாக்கியம் நான்
சொல்லி வருகிற செய்தியோடு முரண்படுவது போல தோன்றலாம் .நீங்கள் உங்களுக்கு
மன நிறைவு தருகிற விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் முரண்பாடு
இல்லை என்பது விளங்கி விடும்.ஒரு கணத்தில் கொலை செய்து விட்டு வாழ்க்கை
முழுவதும் திருங்கத் திருங்க விழித்துக் கொண்டிருப்பவர்கள்
இருப்பார்கள்.உண்மையில் யோசித்துப் பார்த்தால் அது அவன்
வேலையில்லை,அல்லது அவன் வேலையில் அது இல்லை. ஆனால் எப்படியோ நடந்து
முடிந்திருக்கிறது.

வஞ்சமும் ,பழியுணர்ச்சியும் இருக்கும் வரையில் செல்வம்
தங்குவதில்லை.அனைத்தும் தீரட்டும் என்று அது காத்துக்
கிடக்கும்.அனைத்தையும் அடித்துக் கொண்டுபோய் நிறுத்தும் . செல்வம்
தாராளமாக மூன்று தலைமுறைக்கு இருக்கிறதே ! அதோடு கூடவே வஞ்சமும்
,பழியுணர்ச்சிகளும் இருக்கின்றன,அதனால் என்ன ஆயிற்று ? என்றால்
அனைத்தையும் இழந்து மீண்டும் முதலில் இருந்தே தொடங்க வேண்டிய கடமையில்
உங்கள் வம்சம் இருப்பதாக பொருள்.பழைய வினைப்பதிவில் ஒன்று
மீதமிருந்தாலும் கூட துயர்தான்.அதோடு கூடவே புதிய பதிவுகளும்
பழியுணர்ச்சியும் எல்லைவரைக்கும் கொண்டு போய் துரத்தும்.

கடவுள் நின்று நடத்திய சில கொலை வழக்குகள் உண்டு.அது போல கடவுள்
முன்னின்று உடனடியாக காட்டிக் கொடுக்கும் கொலை வழக்குகளும்
உண்டு.பக்கத்து சுடலைக்கு மாலை அணிவித்து விட்டு அந்த மாலையை எடுத்து
பிணத்தின் மேல் வீசி எரிக்கும் பழக்கம் கொண்ட குழு.ஒரு வெளியூரிலிருந்து
வந்த அப்பாவியைக் கொன்று உறுப்பறுத்து எரித்து விட்டார்கள்.காலையில்
வந்து பார்த்தால் காவல் துறையினரின் கண் முன்னால் அந்த மாலை நறுமணத்துடன்
எரிபடாமல் புத்தம் புதிதாக கிடந்தது.அந்த கொலை வழக்கின் தடயமே அந்த வாடாத
மாலைதான்.ஒரு நாளில் குற்றவாளியைத் தூக்கி விட்டார்கள்.அந்த குழுவினர்
செய்த அத்தனை கொலைகளையும் அந்த மாலை காட்டிக் கொடுத்து
விட்டது.அதுவரையில் அவர்களைக் காப்பாற்றிய மாலை என்று அவர்கள் கருதிய
மலர் மாலை அது.
வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை.அது வாடுவதே இல்லை.
நானொன்றும் புதிதாகச் சொல்வதில்லை

காலம் முழுக்க மோதல் கொலைகள் செய்து புகழ் பெற்ற நேர்மையான
அதிகாரியொருவர்,செய்யாத சாதாரணமான பெற்றிக் கொலை வழக்கில் மீள முடியாமல்
ஓய்விற்கும் முந்தைய தினத்தில் பணியில் இருந்து விலக்கப்பட்டார்.வழக்கில்
கொலையுண்டவனின் மனைவி சொன்ன சாட்சி மிக கடுமையானதாக இருந்தது. அந்த
சாட்சியை யாராலும் விலைக்கு வாங்கவோ ,வளைக்கவோ இயலவில்லை.ராமச்சந்திரன்
நாயரின் "நான் ஏன் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி "என்ற நூலைப் பற்றி
,நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? என்று நான் அவரிடம் ஒருமுறைக் கேட்டபோது
,சிரித்துக் கொண்டே ராமச்சந்திரன் நாயர் ஒரு கோழை என்று பதில் சொன்னவர்
அவர்.

( புகைப்படம் - சுயாந்தன் ,இலங்கை )

3

இணக்கம் நம்பிக்கை அன்பு மாற்றுப்பண்புகள்




மோதுதல்,சந்தேகித்தல் ,வெறுத்தல் ஆகிய பண்புகள் எண்பதுகளின்
பிற்பகுதியில் கருத்தியல் ரீதியில் தமிழ்நாட்டில் அரசியல் தரப்பினரால்
முன்வைக்கப் பட்டன.இந்த மூன்று பண்புகளையும் தங்கள் அரசியல் தன்னிலையில்
கொண்டிருத்தலே தீவிர நிலை என்று நம்பப்பட்டது.அதற்கு முன்பு வரையில் இந்த
பண்புகள் அடிப்படைவாதிகளின் பண்பாகவும் , பழமைவாதிகளின் பண்பாகவும்
இருந்தவை.முற்போக்கு அரசியல் முகாம்களில் இந்த பண்புகள் அரசியல்
குணங்களாக வரையறுக்கப் பட்டபோது ,பெரிய உள்ள கிளர்ச்சி
ஏற்பட்டது.அனைத்தையும் சந்தேகி,அனைத்திலும் வேறுபட்டு வெறு .பின்னர்
சந்தகித்தவற்றை மோது.தன்னிலையில் போர்க்குணம் பெருக இது உதவும் என்பதே
இந்த குணங்களை அரசியல் குணங்களாக முன்வைத்த அரசியல் ஆசான்களின்
உபதேசம்.இன்று அரசியல் அரங்குகள் அத்தனையிலும் கோலோச்சுகிற பண்புகளாக இவை
ஒவ்வொரு அரசியல் தன்னிலையிலும் உறுதிப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று குணங்களையும் அடிப்படையாகக் கொண்டிராத நபர்களை ,நான்
இப்போதெல்லாம் தீவிரமான சூழலுக்குள் சந்திப்பதே இல்லை.இந்த மூன்றில்
இரண்டு மட்டுமே இருக்கும் ஒருவரைப் பார்த்தால் நீங்கள் முகமன் செய்து
சிரிக்கலாம்.ஒன்றுதான் இருக்கிறது என்றால் கொஞ்சம் உரையாட
வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்.மூன்றும் செவ்வனே ஒருவரிடம்
பூர்த்தியாகியிருக்குமெனில் நீங்கள் ஒதுங்கி கொள்வதே நல்லது.

இந்த தீவிரமான சூழலுக்கு வெளியே பிரமாண்டமானதொரு உலகம் இருக்கிறது.அந்த
உலகம் மிகவும் ஆபாசமாகக் கருதுகிற குணங்கள் இவை.தீவிர சுழலுக்குள்
முழுநேரமும் வசிக்கும் பிரதான புரட்சியாளர்கள்,தீவிரத்தின் மோகிகள் கூட
,இந்த பிரமாண்டமான உலகத்திற்குள் பிரவேசிக்க நேர்கையில் ,அந்த நேரம்
குறைவானதாக இருந்தாலும் கூட இந்த மூன்று குணங்களையும் அடக்கியே
வாசிக்கிறார்கள்.பேருந்துகளில் பயணம் செய்யும் போது குழந்தைகளைக்
கொஞ்சுகிற ,மடியில் சக பயணி தலை வைத்து உறங்குவதை அனுமதிக்கிற தீவிர
மோகிகள் பலரை கண்ணால் கண்டிருக்கிறேன்.எனது நண்பர்
ஒருவர்.பெருங்கவி.உட்கார்ந்து பேசினால் மிகவும் நன்றாகக்
பேசிவிடுவார்.அவரை நின்று பேசச் சொன்னால் ரத்தக் கொதிப்பிற்கு
உள்ளாகித்தான் பேசுவார்.நின்று பேசித்தான் அவர் உடல் ஆற்றல் அத்தனையும்
கரைந்தது.ஆரம்பம் முதலே உட்கார்ந்தது பேசுவதை அவருக்குப்
பழக்கியிருந்தால் வாழ்க்கையின் இருபது வருடங்களை சேமித்திருக்கலாம்.

சரி இந்த குணங்கள் உண்மையாகவே அரசியல் குணங்கள் தானா? காலனிய நாடுகளை
ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகள் கைப்பற்ற கையாளுகின்ற போர் குணங்கள்
இவை.அவர்கள் வெளியேறிய பின்னரும் உள்நாட்டு போரில் அவர்கள் தங்களின்
மண்டையை உடைத்துக் கொள்வது இதனால்தான்.அப்படியானால் இந்த அரசியல்
ஆசான்கள் உள்ளபடியே அப்பாவிகளாகக் கொண்டு இவற்றை கொட்டினார்கள் என்று
கொள்ளலாமா ?

நமது தன்னிலையில் அரசியல் குணங்களாக மாற்றம் கொள்ள வேண்டிய
குணங்கள்.முதலில் இணக்கம் ,ஏற்பு ,நம்பிக்கை.அன்பு ஆகியவை.பிறரோடு
இணங்குங்கள் முதலில் .அதனால் இடையூறுகள் ஏற்பட்டால் கூட பரவாயில்லை.பிறரை
ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏற்றுக் கொள்ளுதல் என்பது வாழும் கலை.அது ஒரேயடியாக
விளங்காது ,கொஞ்சம் கொஞ்சமாக விளங்கும்.நம்புங்கள்.நம்பி நீங்கள்
ஏமாற்றம் அடைந்தால் அதில் சிறு இழப்பு கூட கிடையாது.பேரிழப்புகளை பின்னர்
தடுக்கிற படிப்பினையாக அது மாறும்.நம்பால் ஏற்படுத்திக் கொள்வது நோயின்றி
வேறில்லை. நம்ப மறுத்தால் உங்களை நம்புவதற்கு ஒருவரும் இருக்க
மாட்டார்கள்.முடிவில் உங்களையும் சந்தேகிக்கத் தொடங்குவீர்கள்.தற்போது
நமக்குத் தேவை இவைதான் உரையாடவும் மேன்மைப்படுத்திக்
கொள்ளவும்.சந்தேகித்து நோக்கம் கற்பித்துக் கொண்டே வருகிற ஒரு தன்னிலையை
என்ன செய்வது ? என மிகவும் நெருடலாக இருக்கிறது.

தெரசா வங்காள வீதியினுள் ஒரு சமயம் இறங்கி தொழுநோயாளிகளுக்காக
பிச்சையெடுக்கும் போது,அவரது கரங்களில் காறியுமிழ்ந்து கொடுப்பான்
ஒருவன்.தெரசா கைகளை தன்னை நோக்கி இழுத்து "இது எனக்கு
இருக்கட்டும்...அவர்களுக்கு ஏதேனும் கொடு" என்று வஞ்சகம் இல்லாமல் கேட்டு
நிற்பார்.இது ஒரு புனிதரின் செயல் .அவ்வளவிற்கு யாருக்கும் இயலாது.ஆனால்
அதில் ஒரு சிறுபருக்கை நம்மாலும் முடியும்.இன்றைய வாழ்விற்கும்
அரசியலுக்கும் பற்றாக்குறையாக இருப்பதும் , தேவைப்படுவதும் இதுவே.

இணக்கம் நம்பிக்கை அன்பு மாற்றுப்பண்புகள்


 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"