தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 4

 1

பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்




நீ இன்னும் பால்ய காலங்களையே தேடித் கொண்டே இருக்கிறாயா ? எனக்
கேட்டேன்.அவனுக்குள் இருந்த சிறுவனுக்கு நான் என்ன கேட்கிறேன் என்பது
விளங்கவில்லை.பால்ய காலங்களை மீண்டும் தேடித் செல்வது நரக ஒத்திகையில்
நன்றாக ஈடுபடுவது.அந்த காலம் எங்குமே கிடைக்காது.நினைவில் வாழுகிற
மிருகம் அது.பழைய காதலியை தேடித் செல்வதை ஒத்தது இந்த பயணம் .அப்படியே
கண்டு பிடித்து விட்டால் இவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்று
தோன்றும்.எல்லாமே மாறிவிட்டது என்று சொன்னான் ஜவகர்.ஒன்றுமே மாறவில்லை
நாம்தான் மாறியிருக்கிறோம் என்று சொன்னேன் நான்.காலமும் வாழ்வும் சதா
நம்மைப் புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. பால்யம் நினைவில்
நின்றெரிதலே சுகம்.

ஏராளமான வடுக்கள்,முகம் களைத்துப் போயிருக்கிறது.வாழ்க்கை எத்தனை முறை
அவனைப் புரட்டியடித்திருக்கும் ? ஆனாலும் அவனுள் வசிக்கும் சிறுவன்
அப்படியே உளம் வாடாமல் இருக்கிறான்.அந்த சிறுவன் வா... நாம் சென்று பழைய
விளையாட்டுகளை விளையாடுவோம் என்று அழைக்கவில்லை .அழைக்கும் தைரியம்
இப்போது அவனிடம் இல்லை.அந்த கொதிகலன் அவனுள் உடைந்து விட்டது.

ஜவகர் என்னுடைய ஆரம்ப காலக் கதைகள் சிலவற்றில் இடம்
பெற்றிருக்கிறான்.அப்படியே அல்ல.என்னுடைய கதா பாத்திரங்கள் யாருமே
அப்படியே வந்து கதைகளில் உட்கார்வது கிடையாது.உடுப்புகளை
மாற்றிவிடுவேன்.உறுப்புகளையும் மாற்றிவிடுவேன்.கதைகளில் வருகிறவர்கள்
பிறிதொன்றாக மாறி விடக் கூடியவர்கள். அவர்களை நானே கூட அப்படியே
தேடுவதில்லை.அவர்களின் ஒரு சொட்டுக்குப் பெயர் சூட்டியிருப்பேன்
அவ்வளவுதான்.

கடல் நண்டுகள் பிடிப்பதில் பலே கில்லாடி ஜவகர்.கடலுக்குள் இறங்கி
பாறைகளில் கையிட்டுப் பிடித்து கரைக்கு எடுத்து வருவான்.ஒருவகையில்
பார்த்தால் அவன் பிடித்துக் கொண்டுவருகிற நண்டுகள்தான் எங்கள்
பால்யம்.அது அத்தனை சுவையானது ?.கடற்கரைகள் முழுக்க எங்கள் பகுதிகளில்
பெரிய பெரிய தேரிக் காடுகள் .உயரம் உயரமான மணல் தேரிகள்.பெரியவர்கள்
எங்களை வேறு திக்குகளில் தேடித் திரிவார்கள்.நண்டுகள் பிடிக்கக் கூடாது
என்பார்கள் .எங்களுக்குள் பால்யம் தந்த ஊற்று இந்த நண்டுகள் என்பதை
அவர்கள் உணர்ந்தார்கள்.நாங்களோ மீண்டும் மீண்டும் நண்டுகள் பிடித்துக்
கொண்டிருந்தோம்.

ஒருமுறை கிறிஸ்மஸ் அன்று ஜவகர் காணாமல் போய்விட்டான் .காணாமல் போனவனைக்
காட்டிலும் பிற குழந்தைகள்தான் பெரியவர்களிடம் மாட்டிக் கொண்டோம்.ஏன்
நண்டு பிடிக்கப் போகக் கூடாது என்பதற்கு அவர்களுக்குத் தெளிவான காரணம்
அன்று கிடைத்திருந்தது.விடியற்காலை வரையில் கடற்கரையெல்லாம் தேடித்
கொண்டே இருந்தோம்.அவனை அலைகள் இழுத்து சென்று வேறு ஒரு துருவத்தில்
கொண்டு செல்ல மீனவர்கள் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் .அது
போன்ற ஒரு நாளாக இருந்தது அவனோடு இருந்த நாள்.

அவன் விடைபெற்றுச் சென்ற பிறகு என்னுடைய சிறுவன் என்னுடைய மடியில் ஏறி
அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்.அவன் கொண்டு வந்து சேர்த்த பால்யத்திற்கு
நன்றி.

2

கேட்பவரே







ஒரு கவிஞனோடு ,எழுத்தாளனோடு அறிமுகம் கிடைத்த மாத்திரத்திலேயே என்ன
தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்காதீர்கள் .நீங்கள் புதிதாக அறிமுகம் ஆகிற
ஒரு நபரின் பிறந்த சாதியை அறிய எந்த ஊர் ? என கேட்பதைப் போன்ற அநாகரீகம்
இது.நான் ஒரு நடிகன் என வைத்துக் கொள்வோம் ,நீங்கள் எடுத்த
மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்பீர்களா ?
ஓவியன்,இசைக் கலைஞன் ,நடனக் கலைஞன் என்றால் இந்த கேள்வியைக் கேட்பீர்களா
? ஒரு விஞ்ஞானியை இந்த கேள்வியால் எதிர் கொண்டிருக்கிறீர்களா ?
எழுதுகிறவனை என்ன தொழில் செய்கிறீர்கள் ? என கேட்கிற சமூகம் ,இனம் கேடு
தெளிய இன்னும் வெகுகாலம் ஆகும்.இதில் என்ன விளக்கெண்ணெய் தமிழ் தேசியம்
வேண்டிக் கிடக்கிறது ? .கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் தமிழில் என்ன
நடந்திருக்கிறது என்பதை அறியத் தெரியாத ஒருவன் , தான் ராஜராஜ சோழனின்
தந்தை ,கொள்ளு பேரன் என்றெல்லாம் கூவித் திரிதல் மனகுரங்கின் சிரங்கை
சொரிந்து திரிதல் போல.

அறிமுகம் தொடங்கிய மாத்திரத்திலேயே உளவறியத் தொடங்குவது ஆகாத
மனநிலை.கொஞ்சம் பழக்கம் கூடிய பின்னர் உளவறியத் தொடங்குதல் அதனினும் ஆகாத
மனநிலை.தமிழர்கள் பொதுவாக பெரும்பாலும் துப்பு சுல்தான்கள். நான் படித்த
,பின்பற்றிய ,பழகிய தமிழின் எந்த முக்கிய எழுத்தாளனின் சொத்து மதிப்பும்
எனக்குத் தெரியாது.சமூக மதிப்பும் எனக்கு அவசியப்பட்டதில்லை.பிரான்சிஸ்
சாக்கடையில் இருந்து எழுந்து வந்தாலும் முத்தமிடுவேன்.பாலை நிலவன்
மதுக்கடையை பொத்துக் கொண்டு வந்தாலும் முத்தமிடுவேன்.

பொதுவாக தரகர்களிடம்தான் தனிமனிதர்களிடம் உளவறியும் தன்மை அதிகம்.இங்கே
தமிழ் சமூகம் மொத்தமுமே தரகர் மனநிலையில் இந்த கேள்விகளைக் கேட்டுத்
திரிதல் பச்சை ஆபாசம். பெண்தரகர்களுக்கென்று தனித்த மனோபாவம்
உண்டு.உங்களுக்குத் பெண்குழந்தை இருக்கிறதா ? என்கிற கேள்விக்கு அவனிடம்
பதில் சொல்லி விட்டீர்கள் எனில் உடனேயே திருமணமாகி விட்டதா ? என்று
கேட்பான்.அது தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும்
கூட.திருமணமாகி விட்டது இரண்டு நாட்கள் ஆகின்றன , என்றால் எத்தனை
குழந்தைகள் ? என்பான்.அவனுக்கு கேள்விதான் முக்கியம் பதில்
முக்கியமில்லை.இதுபோலத்தான் மொத்த சமூகமும் பலசமயங்களில் உள்ளது.

என்னிடம் ஊர் கேட்பவர்களை உடனேயே புரிந்து கொள்வேன்.பச்சென்று முகத்தில்
அடித்தவாறு எனது சாதியைச் சொல்லிவிடுவேன்.இல்லையில்லை,இதற்காகக்
கேட்கவில்லை என்று நவுசுவார்கள்.இல்லையில்லை இந்த பதிலை நான்
சொல்லவில்லையானால் இன்னும் இதன் தொடர்ச்சியில் நீங்கள் கேட்கும்
நான்கைந்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,என்
இருப்பிடத்தை வைத்து உங்கள் கேள்விக்கு விடையறிதலும் கடினம்.உங்களுக்கு
திருப்தி ஏற்படாது. எதற்கிந்த பொருள் விரயம் ? அதிலும் என்னுடைய சாதியை
பற்றி பலவாறு யூகங்கள் உண்டு.என்னை இன்னார் இன்னார் இன்னார் என்றே
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது நல்லதுதான்.இதையெல்லாம் அறிந்து
எனக்குப் புதிதாக பெண் பார்க்கவா போகிறீர்கள் ? இல்லை எனக்கேதும் நீங்கள்
நினைப்பது போன்ற தொழிலில்லையென்றால் ஏதேனும் நீங்கள் உத்தேசித்தது போன்ற
தொழில் தரப் போகிறீர்களா ? எதற்கு உங்களுக்கு இந்த வீண் வேலை ?

ஏராளமான தொழில்கள் செய்திருக்கிறேன்.வேலைகள் பார்த்திருக்கிறேன்.எந்த
சந்தர்ப்பத்திலும் இந்த கேள்வி எனக்கு இடையூறான கேள்வியாக
இருக்கிறது.சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எழுதிக்
கொண்டிருக்கிறேன்.அறிமுகம் ஆனவுடன் என்ன புத்தகங்கள்
எழுதியிருக்கிறீர்கள் ?என்று கேட்டால் கூட அதில் நியாயம்
இருக்கிறது.துரத்தித் துரத்திக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் தமிழில்
இந்த கேட்பவர்கள்.

என்னுடைய " கேட்பவரே " கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பு இந்த
கேட்பவரே ...

கேட்பவரே
------------------

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
என எப்போதும் என்னை நோக்கிக் கேட்பவரே

ஆடு மேய்கிறேன்
உரியும் வெயிலில்
உங்கள் வீட்டின் புதிய கட்டிடப்பணியில்
கையாளாயிருந்தேன்
சுவர் வலிக்கக் கையுடைத்து
உங்கள் வீட்டு மின்வெளிச்சம்
நான் சரிப்படுத்தியது தான்
 மேலாக

உங்கள் மேல்நாட்டுக் கழிப்பறை
உடைந்து ரத்தம் சிந்திய போது
உங்களுடைய
" ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் "
மல ஓட்டத்தைக்
கையுறையின் மனபாரம் ஏதுமற்று
கையாண்டு
எனது சுதந்திரத்தைப் பிரகடனப்
படுத்தியவனும்
நானே

பிச்சையும் எடுக்கிறேன்
அதில் பாதியை தானமும் செய்கிறேன்
கொள்ளளவு தெரியாமல் குடிக்கிறேன்
இதை ஒப்ப ஒரு செயலாகத் தான்
கவிதைகளையும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

உங்களால் இயலாததையெல்லாம்
சதா செய்து கொண்டேயிருக்கும் எனை நோக்கி
கேட்டுக் கொண்டேயிராதீர்
கேட்பவரே

3

TASMAK with TV SERIAL





ஒரு சமூகத்திற்கு எவ்வளவு தூரத்திற்கு மது அவசியமாகிறது என்பது ,எவ்வளவு
தூரத்திற்கு அது பழைய நினைவுகளில் அல்லல் படுகிறது என்பதையும் , ஒரு
சமூகத்தில் நிகழும் ஏற்ற தாழ்வான காம நுகர்வையும் பொறுத்த விஷயங்கள்.மது
குறைந்தபட்ச நேரமேனும் இந்த ஏற்றத்தாழ்வான காம நுகர்வை பதிலீடு
செய்கிறது.தற்காலிக நிவாரணம் ஏற்படுத்துகிறது.சமூகத்தின் மனநோயின் அளவை
அது கொள்முதல் செய்கிறது.தமிழ் நாட்டில் மதுவிற்கு எதிரான போராட்டம்
நியாயமானது என்பதே எனது எண்ணம் .தற்போது மதுவின் தாக்கம் தணிவதே
அழகு.ஆனால் அதோடு தொடர்பு கொண்ட வேறு பழக்கங்களும் குறைவதே அதனினும்
அழகு.

மனநோய் பல சமயங்களில் தேவையானதும் கூட .மன நோயற்ற சமூகம் வளர்ந்த
நேர்த்தியான புற்றுநோய் போன்றது.களையற்றது.ஆனால் கொள்முதல் அளவு எவ்வளவு
என்பதே ,அந்த சமூகத்தின் தேவையை வரையறை செய்யும்.மனநோய்க்கு
அகற்றுந்தொறும் பெருகும் சக்தி உண்டு.எப்போதும் தெளிவாக மட்டுமே இருத்தல்
சகலவிதமான மன வியாதிகளிலும் தலை சிறந்தது.தெளிவிற்கும் ,மன நோய்க்கும்
இடையில் மனித சமூகம் இருக்கும் வரையில் சுவாரஸ்யங்கள் நிறைந்தே
இருக்கும்.கலையிலக்கியங்கள் ,படைப்புகள் ,கண்டு பிடிப்புகள் எல்லாமே
இவையிரண்டிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து தோன்றுபவைதாம் .

தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக நடக்கும் மக்களின் போர் எதனைக்
குறிக்கிறது ? தேவைக்கும் அதிகமாக தமிழ் சமூகம் மதுவை நுகர மறைமுகமாக
வற்புறுத்துதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனையே அது காட்டுகிறது.பெட்டி
கடைகளை ஒப்ப மதுக்கடைகள்.ஒரு கல்வி நிலையத்தை சுற்றி நான்கு புறமும்
கடைகள்.நான் தினமும் கடந்து செல்கிற சந்திப்பு ஒன்றில்
நெடுஞ்சாலைகளிலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட கடைகளையும் சேர்த்து
இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பிற்குள் பனிரெண்டு கடைகள்
இருக்கின்றன.

நாம் தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கும் அளவிற்கு குடிக்கவும்
செய்கிறோம்.சில வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கிற சீரியல்கள் முடியும்
வரையில் ஆண்கள் குடிக்க வேண்டியிருக்கிறது.இதில் சீரியல்கள் சிறந்ததா
,குடி சிறந்ததா ? ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனநோயின் அளவிற்கு
ஒப்பீடு எதையுமே செய்ய இயலாது.இரண்டுமே சமமான தொடர்புகள் கொண்டவை .

எங்கள் ஊரில்
"அவனா குடிகாரன் ",
அவளா டிவி சீரியல் ",
"அவளா சொல்வதெல்லாம் உண்மை" என்று மக்கள் புழங்குகிற அளவிற்கு இரண்டுமே
சமமாகியிருக்கின்றன.ஒரு சமூகத்தில் புழங்கும் மனோவியாதிகளுக்கெல்லாம்
ஆண்கள்தான் பொறுப்பேற்றோ,பெண்கள்தான் பொறுப்பென்றோ சொல்ல இயலாது
.தொடர்ந்து செய்தி படித்துக் கொண்டே இருக்கும் பெரியோரும் குடிப்பதற்கு
இணையான காரியத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் பத்துவருடம் செய்திகள் படிக்காமல் இருந்து பாருங்கள் ஒன்றுமே
ஆகிவிடாது.பத்து வருடத்திற்கு அடுத்த நாளில் இருந்து படிக்கத்
தொடங்குங்கள் ,விட்ட மறுநாளில் இருந்து படிப்பது போல ஸ்வாரஸ்யமாகத் தான்
இருக்கும்.

எல்லாமே தெரிந்தாக வேண்டும் என்பதும், கடை மூடிய பின்னரும் உட்கார்ந்து
குடிப்பதும் எல்லாம் ஒன்றுதான்.செய்தியையே பொழுது போக்காகவும் கேட்கிறான்
பாருங்கள் அவன் பெரிய சமூக தீமை என்பது உங்களுக்குத் தெரியுமா ?

குடியால் செத்தவர்கள் கோடியென்றால் ,செய்தியால் செத்தவர்கள் பல
கோடி.வெளியில் தெரியாது
விஷயம் !

4

மரணம் பழகுதல் , வாழப்பழகுதல்





மரணம் பற்றிய சித்திப்பு வாழ்வில் எப்போது ஏற்படுகிறோ
,அப்போதிலிருந்துதான் வாழ்வின் ருசியும் பொருளும்
பிடிக்கிடைக்கின்றன.கடல் எவ்வளவு பிரமாண்ட விசித்திர காலம், இந்த ஆகாசம்
காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறதே , நதிக்கு வயது என்ன ? .அது எந்த
காலத்திலிருந்து எந்த காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது ? ஒருவேளை
எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறதோ
என்னவோ ? பசியில் உணவிற்கு இத்தனை ருசியா ? இப்படியெல்லாம் பிடி
கிடைக்கின்றன. வாழ்வின் முனைப்பு ஏற்படுகிறது.அதுவரையில் கடந்து செல்பவை
கணக்கில் கொள்ளப்பட வேண்டியவை அல்ல.

நமது சமூகத்தில் நடு வயது தாண்டிய பிறகு ஆணுக்குள்ளும் ,பெண்ணுக்குள்ளும்
இந்த ஓர்மை பலமாகும் .ஆனால் நமது சமூகம் அதற்குள் அவர்களுக்கான
வாய்ப்புகள் அனைத்தையும் முடக்கி விடுகிறது.பலர் உழைத்துக் களைத்துப்
போய்விடுகிறார்கள்.சக்கையாகி விடுகிறார்கள்.வாழ்வை புதிது புதிதாகப்
பொலிவூட்டுவதற்கு எதிர்திசையில் நமது பொதுப் பயணம் அமைகிறது. இந்த
வாழ்க்கை எவ்வளவு பிரமாண்டமானது என்பதை உணரும் தருவாயில் அவனுக்கு
வாழ்க்கை டாட்டா காட்டி விடுகிறது.மடி சுரக்கத் தொடங்கும் போது பாலை
நிறுத்திவிடச் சொல்வார்களே அப்படி.கண்ணதாசன் கூட இது பற்றி
பேசியிருக்கிறார். எல்லாவற்றையும் இழந்த பின்னர்தான் ,நாம் கற்றுக்
கொள்கிற பாடம் அனுபவம் என்று.தெளிவை எட்டுகிற போது,அறிவின் நுனியை தொட்டு
விடும்போது கையறுநிலையாகி விடுதலைத் தான் அவர் குறிப்பிடுகிறார்.வாழத்
தெரியாத சமூகத்தில் எல்லாவிதமான சந்தடிகளும் ஏற்படுவது இயல்பு. இது நமது
சமூகத்தைப் பொறுத்தவரையில் உண்மை.

மரணம் பற்றிய சித்திப்பு சிறிய வயதிலேயே சிலருக்கு வந்து வாயிற்கதவைத்
தட்டி மோதும் ஏதேனும் ஒரு விதத்தில் ,விதி அந்த இடம் நோக்கி இழுத்துக்
கொண்டு போகும். சாப்ளினின் சுயசரிதை படித்துப் பாருங்கள்.தமிழில் கவிஞர்
யூமா வாசுகி தமிழ் படுத்தியிருக்கிறார். எனக்கு மரணம் கதவை தட்டி வா...
என்றழைத்த அனுபவங்கள் நிறைய .மரணத்தை அருகாமையில் சென்று பார்த்து விட்டு
பலமுறை பின் திரும்பியிருக்கிறேன்.அருகாமைக்குச் செல்லும் போது பின்
திரும்புவோம் என்று தோன்றாது.முடிந்து விட்டது என்பது போலத்தான்
இருக்கும்.வலிப்பில் பலமுறை மரணத்தை நேருக்கு நேராகக்
கண்டிருக்கிறேன்.என் மீது நான்கு முறை கொலை முயற்சிகள்
நடைபெற்றிருக்கின்றன.இந்த நான்கு என்கிற எண்ணிக்கை ,இனி உயிர் பிழைக்க
ஏதும் கிடையாது என்கிற கடும் எண்ணத்தை ஏற்படுத்திய முயற்சிகளை மட்டுமே
குறிப்பிடுவது .

கொலை முயற்சிகளை பொறுத்தவரையில் அது விழிப்பை தந்து விடும் என்று சொல்ல
முடியாது.வைராக்கியம் வந்து குறுக்கிட்டு விடும்.ஆனால் கொலைமுயற்சிகள்
எந்த கண்ணியில் இருந்து உருவாகின்றன என்பதை அது கற்றுத் தரும்.

எனக்கு வலிப்பு தான் மரணத்தின் பிரகாசம் என்ன ? வாழ்வின் ருசியென்ன ?
என்பதையெல்லாம் கற்பித்தது.ஒருமுறை ரயில் வண்டியிலிருந்து குதிக்க
முயன்றிருக்கிறேன்.உடனிருந்த நண்பனும் பிறரும் இணைந்து காலையிடறி ரயில்
பெட்டியிலேயே படுக்க வைத்திருக்கிறார்கள்.நினைவு திரும்பிய பின்னரும்
நெடுநேரம் எனக்கு எதுவுமே தெரியவில்லை.எதுவுமே விளங்கவில்லை.ஏன் என்னைப்
படுக்க வைத்திருக்கிறார்கள் என்பது கூட விளங்கவில்லை.முகமெல்லாம் நீர்
தெளித்திருந்தார்கள்.அது மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தியது.எங்கேயோ
விந்தையான உலகிற்குள் நகர்ந்து விட்டோமோ என்று கூட தோன்றிற்று.மிகவும்
மோசமாக நான் உணர்ந்த அனுபவம் அது.இரண்டு நாட்களுக்கும் மேலாக என்னை
பற்றிய அருவெறுப்புணர்ச்சியை என்னாலேயே தாங்க முடியவில்லை.நான் எவ்வளவு
பெரிய கம்பீரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ? பெருமாள் சுழற்றி
படுக்க வைத்து விடுகிறானே ! என வருந்தினேன்.ஆனால் அதுதான் எனக்கு
வாழ்வின் சுவை தந்தது.ஒவ்வொரு நாளையும் விடாதே எல்லாமே
அற்புதங்கள்.கணங்கள் உனக்குச் சொந்தம் என்றது.எப்போதும் நண்பர்களுக்கு
சொல்வது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.ஆனால் வாழுங்கள்
என்பதுதான் அது.வாழ்தலில் முனைப்பு ஏற்படும் மனிதன் நிச்சயமாக என்ன
வேண்டுமானாலும் செய்யவே மாட்டான் என்பது எனக்குத் தெரியும் .

வாழத் தொடங்குதல் என்பது வேண்டாதவை அத்தனையிலிருந்தும் ஒதுங்கிச்
செல்வது.வேண்டியவற்றுடன் பலமாக இணைவது. யோசித்துப் பாருங்கள்.நாம் இதனைத்
தலைகீழாகச் செய்து கொண்டிருப்போம்.வேண்டாதவை அத்தனையுடனும் உறவு கொண்டுத்
திரிவோம்.வேண்டியவற்றில் ஒதுங்கியிருப்போம்.ஆனந்தத்தைத்
தராதவற்றிலிருந்து ஒதுக்குவதும் ,ஆனந்தம் கிளைபிரிந்து கிளையாக பெருகும்
இடங்களில் ஒன்றிப்பதும் ஞானியர் கண்ட வழிகள்.ஆனந்தத்தின் வழி செல்லத்
தயாராகாதவன் ஞானியாதல் இல்லை.வாழப் பயிலுதலும் இல்லை.

வாழ்க்கை வழங்குவதை எடுத்துக் கொள்ள இயலாத வரையில் வாழவும் தெரிவதில்லை
.வாழ்க்கை வழங்குகிறது என்பதை அறியத் தெரிய வேண்டும் முதலில்.வழங்குவதை
எடுத்துக் கொள்ளும் கருவிகள்தான் நாமெல்லோரும்

5

போராடுவதற்கானது இல்லை வாழ்க்கை





வாழ்வதற்கானது.போராட்டம் வாழ்க்கையில் தவிர்க்க இயலாமல் உள் நுழையும்
போது மட்டும் போராட வேண்டுமே அல்லாது போராடுவதை ஒரு மனோபாவமாகக்
கொள்ளக்கூடாது.போராட வேண்டும் என்பதை மனோபாவமாக நம்மிடம் நிலைநிறுத்திச்
சென்றவர்கள் ஐம்பது வருடத்திற்குப் பழமையான ஆட்கள்.நீங்கள் எதற்காக போராட
வேண்டும் என்பதை இருந்து ஆராய்ந்து பாருங்கள்.அதற்கு பொருத்தமான காரணம்
இருந்தால் மட்டுமே அது போராட்டம்.இல்லையெனில் அது நம்மில் கொண்டு நிலை
நிறுத்தப்பட்ட உளச் சீக்கு.இந்த உடலும் ,இன்பமும் ,வாழ்க்கையும் எல்லாமே
பிரமாதமான அனுபவங்கள்.அதனை கைவிட்டு விட்டு போராடினால் அதில் பொருள்
இல்லை.கைப்பற்றுவதற்காக போராடினால் அதுவே போராட்டம்.

ஏராளமான போராட்டங்களில் உளப்பூர்வமாக கலந்து
கொண்டிருக்கிறேன்.வேடிக்கையாகவும் போயிருக்கிறேன்.எனது வாழ்க்கை அதிகபட்ச
போராட்டங்கள் நிறைந்தது.இயல்பாக ஒரு கைப்பிடி மணல் கூட எனக்கு
கிடைத்ததில்லை.அம்மா கிடையாது அன்பிற்கு இதுநாள் வரையில்
போராட்டம்.உணவிற்குப் போராட்டம்.அன்றாட வாழ்வில் அத்தனையும் எனக்குப்
போராட்டம்தான்.ஆனால் போராட்டம் அல்ல வாழ்க்கையின் பொருள் என்பது எனக்குத்
தெரியும் .உங்களுக்கு கிடைப்பவை ,இயல்பாகப் பெறுபவை அனைத்துமே எனக்கு
போராடினால்தான் உண்டு. வெற்று போராட்டங்களும் செய்திருக்கிறோம்.

ஒரு போராட்டம் உங்கள் வாழ்க்கையில் பழகி விட்டதெனில் இருபது
வருடங்களுக்கு அது உங்களை வெற்றுப் பழக்கமாக பின்தொடரும்.நாங்கள் கல்லூரி
காலத்தில் போராட வேண்டும் என்கிற மன அரிப்பு கொண்டு நடந்தோம்.ஏதேனும்
கிடைக்காதா ? என பள்ளி காலங்களிலேயே மனம் ஏங்கத் தொடங்கி விட்டது.இந்த
மனவுணர்வு எங்களுக்கு கடத்தப்பட முந்தைய தலைமுறை காரணம்.அவர்கள்
போராடியதற்கு காரணங்கள் இருக்கவே செய்தன .ஆனால் அது எங்களிடம் வந்து ,
தன் கசந்த சுவையை பருக சொன்னபோது காரணங்கள் கிடையாது.வெற்றுடம்புடன்
உள்ளீடற்று வந்து சேர்ந்தது.கவிஞர் கைலாஷ் சிவன் தன்னுடைய நேர்காணல்
ஒன்றில் முதலாண்டிலேயே இயற்பியல் ஆய்வுக் கூடத்தை அடித்து நொறுக்கி
,படிப்பை இழந்ததை பற்றி சொல்லியிருப்பார்.கடந்த தலைமுறைப் போராட்டத்தின்
கடைசி வெற்றுக் கண்ணிகள் நாங்கள்.எங்களுக்கு அடுத்து வந்த பேச்
சுதாரித்துக் கொண்டார்கள்.போராட்டத்தில் இருந்த எங்களுடைய காமத்தைக்
கைவிட்டு விட்டார்கள். கல்லூரி கால போராட்டத்தின் போது என் மீது வழிப்பறி
கொள்ளை வழக்கெல்லாம் கூட உண்டு.எல்லாமே பொய்யாகப் போடப்பட்ட
வழக்குகள்தாம்.பொய் வழக்குகள் என்பது பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்து
இன்றுவரையில் இந்தியா கடைப்பிடித்து வருகிற ஒரு தோலுரிந்த முறை.

மாணவர்கள் போராட வேண்டிய தேவையை ,அது சீன அரசாங்கமாக இருந்தாலும்
சரி,மோடி அரசாங்கமாக இருந்தாலும் சரி ஏற்படுத்துவது அரசாங்கத்தின்
இறுக்கத்தை அதிகபட்சமாக வெளிப்படுத்தக் கூடியது.மாணவர்கள் போராட்டத்தில்
நுழையும் போது அதில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,எல்லோரும் சமூகமாகப்
பங்கேற்கிறார்கள் என்பதே பொருள்.ஒரு மாணவனுக்குள் ஒரு போராட்டம்
இறங்கினால் அது அவனுள் இறப்பதற்கு எடுத்துக் கொள்ளும் வயது தோராயமாக
இருபது ஆண்டுகள்.

போராட்டத் தேவையில்லாத ஒரு சமூகத்தை வந்தடைவதுதான் லட்சியமாக இருக்க
வேண்டுமே அல்லாது போராடுவது லட்சியமாகக் கூடாது.போராடித்தான்
ஒவ்வொன்றையும் அடைய வேண்டியிருக்கிறதெனில் அது சுற்றியுள்ள சமூகத்தின்,
அரசின் மாபெரும் குறைபாடு. இங்கே உவர்ந்த பழக்கமாக போராட்டத்தை
மாற்றியமைத்து வைத்திருக்கிறார்கள்.அதனால் உரிய போராட்டங்கள் கூட செயல்
இழந்து விடுகின்றன.நாலு நாட்கள் குடி தண்ணீர் வரவில்லையா ? எவனையும்
விடக் கூடாது.அதற்காக வெறுமனே எங்கு போராட்டம் நடக்கும் ? என்று ஏங்கித்
திரியக் கூடாது.வாழ்க்கையின் இன்பம் அறிந்தவனே உண்மையில் போராட்டத்
தகுதியானவன்.நாம் அதிருப்திகளின் மடியில் போராட்டங்களை
ஒப்படைத்திருக்கிறோம்.அதிருப்திகளோ எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை
அறியமாட்டோம்.

விடுதலை ,சுதந்திரம் எல்லாமே பொருளை இன்று இழந்து நிற்கிற சோபையான
வார்த்தைகள்.விடுதலை இறையியலில் சொல்லித் தரப்படுவதைக் காட்டிலும்
அரசியலில் இந்த வார்த்தைகள் தூசு படிந்தவை. .போராடுவதற்கு அறிவுறுத்திய
ஆசான்கள் பலரிடம் ஆரம்ப காலங்களிலேயே உங்கள் குழந்தைகளிடம் போய் இதனைச்
சொல்லிக் கொடுங்கள்.இதனைக் கற்றுத் தருவதற்கு எங்களைப் போன்ற அனாதைக்
குழந்தைகள்தான் உங்களுக்கு கிடைத்தார்களா ? என்று நேரடியாகவே பலமுறை
கேட்டிருப்பேன்.அவர்கள் இன்றுவரையில் கொண்டு நடக்கும் ஜென்மப்பகை
சும்மாவா என்ன ? நான் கடந்து விட்டேன்.ஆனால் அவர்கள் இன்னும் அனாதைக்
குழந்தைகளுக்கு போராடுவதை அறிவுரையாக சொல்லிக் கொண்டுதான்
நிற்கிறார்கள்.குழந்தைகள்தான் பார்த்து, கவனித்துச்
செல்லவேண்டும்.அதிலும் என்னையொத்த அனாதைக் குழந்தைகள் எப்போதும்
இருக்கத்தான் செய்வார்கள் பலிகடாவாக .

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"