தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 7

இடங்கை இலக்கியம் 




 ஜெயமோகன் அந்திமழை இதழில் எழுதியுள்ள இடதுசாரி இலக்கியம் பற்றிய "இடங்கை
இலக்கியம் " என்னும் கட்டுரை தமிழ்நாட்டில்; இன்னும் ஐம்பது ஆண்டு
காலத்திற்கு இடதுசாரி இலக்கியம் பற்றிய வரையறைக்கு போதுமான கட்டுரை .இந்த
கட்டுரை குறித்து காலையில் பேசிய கோணங்கி "இடதுசாரி இலக்கியம் பற்றியும்
ஜெயமோகன் அளவிற்கு வேறு யாராலும் பேச இயலாதிருப்பது இங்குள்ள சோகம்தான்"
என்றார்.பரந்து விரிந்த அர்த்ததளத்தில் வைத்து ,பெரும்பாலும் யாரையுமே
தவிர்க்காது இந்த கட்டுரையினை ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.இடதுசாரிகள்
பற்றிய இந்த கட்டுரையின் முக்கியத்துவத்தை இந்த கட்டுரை வழியாக அறிவது
ஒரு வழியென்றால், ஒரிஜினல் இடதுசாரிகள் இந்த இதழின் பிற பக்கங்களில்
எழுதியிருப்பவற்றைப் படிப்பது மற்றொரு வழி.பெரும்பாலும் அவர்கள்
உளறியிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமானது.

ஜெயமோகன் அளவில் விரிந்த தளத்தில் ; இடதுசாரி இலக்கியம் என்பதற்கு
சொல்லியிருக்கும் வரையறை மிகவும் முக்கியமானது.மனித மையம்,வரலாற்றுணர்வு
,பொருளியல் அடைப்படை ஆகியவற்றை முதன்மை கொள்ளச் செய்யும் படைப்புகளை
இடதுசாரிப் படைப்புகள் எனலாம் என்கிறார் ஜெயமோகன்.இதில் மனித மையம்
,வரலாற்றுணர்வு இரண்டும் பின் வந்த சிந்தனைகளின் பால் கேள்விகளுக்கு
பகிரங்கமாக உட்படுத்தப்பட்டவை.தங்களை காப்பாற்றிக் கொள்ளும் திறன் இழந்து
இன்று நிற்பவை.இடதுசாரிகளின் மனித மையமும் ,கிறிஸ்தவத்தின் மனித மைய
சிந்தனைகளும் தொடர்புகள் கொண்டவை.

சுந்தர ராமசாமியை இரண்டிற்கும் இடைப்பட்டவராகக் காண்கிறார் ஜெயமோகன்.அது
சரியான கணிப்பென்றே எனக்கும் தோன்றுகிறது.ஜெயகாந்தன் தொடங்கி யவனிகா
ஸ்ரீராம் வரையில் என நீண்ட பட்டியல் இந்த கட்டுரையில்
இடம்பெற்றிருக்கிறது.ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வாக்கியங்களேனும்
அவர்களை புரிந்து கொள்ள வகை செய்யும் வண்ணம் இந்த கட்டுரையில்
அமைந்துள்ளது.

ஜெயமோகனின் கட்டுரை இவ்வாறு முடிவடைகிறது.அது இன்னும் அவருக்கு இடதுசாரி
எழுத்துக்கள் பேரில் நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது.

"இடதுசாரிக் கட்சி அரசியல் அதன் இடத்தை மெல்ல இழந்து வருகிறது.அதன்
பொருளியல் வாதம் இலக்கியத்தில் வெகுவாக மறுக்கப்பட்டு விட்டது .ஆனால்
மானுட மைய நோக்கு ஒரு உயர் லட்சியவாதமாகவே நீடிக்கும் என
நினைக்கிறேன்.அதன் வரலாற்றுவாதம் ஒரு தத்துவக் கருவியாக இன்னும்
நெடுங்காலம் சிந்தனையில் வாழும்.ஆகவே இடதுசாரி எழுத்து உருவாகி வந்து
கொண்டுதான் இருக்கும் "

ஜெயமோகனின் இந்த கட்டுரையைக் காட்டிலும் இடதுசாரிகளுக்கு பெரிய பத்திர
பிரமாணங்கள் இருக்க இயலாது என்றுதான் நினைக்கிறேன்.ஆனால் என்னுடைய
பிரச்சனை அவர்களுடைய பொருளியல் நோக்கு அன்று . வரலாற்று மையவாதமும்,மனித
மைய நோக்கும் சிந்தனைத்தளத்தில் சரிந்து விழுந்து கிடைப்பதைத்தான்
அவர்களுடைய பெரிய பிரச்சனைகளாகக் கருதுகிறேன்.அவற்றிலிருந்து வெளியேறுவது
எப்படி என்று தெரியாமல்தான் அவர்களுடைய கம்பனிக் குதிரைகள் ஓடிய
வளாகத்தையே சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன.பிராங்பர்ட்
மார்க்சியர்களை ஏற்றுக் கொள்ளாதவரையில் இவர்களால் சிக்கலில் இருந்து
ஒருபோதும் வெளியில் வரவே இயலாது.

2

வஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்






உங்களை ஒரு விஷயம் பாதிக்கிறது .பாதித்துக் கொண்டே இருக்கிறது.ஆனால் இதனை
நீங்கள் வெளிப்படுத்தினால் உங்களை சுற்றியிருக்கும் நண்பர்கள்
நவுசுவார்கள்.உங்கள் குழு உங்களை
சந்தேகிக்கும் . சமூகம் கீழிறக்கும் என்பவை கருதி எப்போது மூடிக்
கொள்கிறீர்களோ அப்போதிலிருந்து உங்கள் அகமும் மூடிக் கொள்கிறது.அதன்
வழியாக அத்தனை நச்சுக்களும் சிறுகச்சிறுக உங்களை பற்றிக் கொள்கின்றன .
கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் உங்களையும் அறியாமலேயே கீழிறங்கி
கொண்டிருப்பீர்கள்.பிறகு பல சமயங்களில் அகம் எவ்வாறு தன்னிடம் மூடிக்
கொண்டது என்பது கூட விளங்குவதில்லை.அகம் மூடிக் கொள்கிறவன் ஒருபோதும்
எழுத்துக்கு லாயக்குப் படவே மாட்டான்.அவனிடம் விழிப்புணர்ச்சி தூண்டபட்டு
; கடின உழைப்புடன் அகத்தை மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டுமாயின்
,முதலிலிருந்தே அவனைப் பாதிக்கத் தொடங்கியவர்களிலிருந்தே சொல்லித்
தொடங்கி வர வேண்டும். பாதிப்பு என நான் குறிப்பிடுவது,ஏற்கனவே உங்களிடம்
இருந்த அகம் உடைந்த விதத்தைப் பற்றியே.

இந்த வஞ்சத்தில் மற்றொரு ரகம் உண்டு.பாதிக்கிற எழுத்தாளனை அரைகுறையாக
உள்வாங்கி வாழ்நாள் முழுதும் அவனை எதிர்த்து கொண்டிருத்தல்.அவன்
குறிப்பிடுகிற நூல்கள்,எழுத்தாளர்கள் , கவிகள் எல்லோரையும் எடுத்துக்
கொள்வார்கள்.அவனை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருக்கும் இந்த பண்பு
தமிழில் அதிகமானோருக்கு இருக்கும் நோய்.மதிப்பீடுகளை உருவாக்கும்
எழுத்தாளர்கள் அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதை ஏற்க இயலா
நோய் இது.

முதல் வீச்சில் நம்பிக்கைக்குரிய சில அடிகளை எடுத்து வைத்து விட்டு
உள்ளுக்குள் அடைத்து தாழ்பாள் போட்டுக் கொள்கிற பல கவிஞர்களை
அறிவேன்.அவர்கள் பெயர்களை இப்போது பட்டியலிட்டால் ஆள் வைத்தேனும் அடிக்க
வருவார்கள் என்பதால் சொல்லத் துணிவில்லை.தமிழில் எழுதுகிறவர்கள் பற்றி
நீங்கள் ஆதரவாக ஐநூறு வார்த்தைகள் பேசியிருக்கலாம்.ஆனால் எதிர்மறையாக
ஐந்து வார்த்தைகள் பேசியிருந்தாலும் அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்
போது கூட நினைவில் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.சுய எழுத்துக்களின்
பேரில் இவ்வளவு தூரத்திற்கு உடமை மனோபாவம் கொண்டவர்களை வேறு மொழிகளில்
பார்க்க முடியுமா தெரியவில்லை.ஐந்து வார்த்தைகள் எதிர்மறையாகப்
பேசியிருந்தால் நீங்கள் அவன் பிணம் எரியும் போது கூட அருகில்
செல்லாமலிருப்பதே சிறந்தது.அப்படி நீங்கள் சென்றால் அவன் அவள் பிணம்
எழும்பி உங்களை நாலு வார்த்தைகள் திட்டிய பின்னர்தான் எரியத்
தொடங்கும்.எரியூட்டுவர்களுக்கு
இதுவொரு இடையூறும் கூட.

முதல் வீச்சுக்குப் பின்னர் தங்களை பலரும் அரசியல் , கொள்கை,குழு என்று
மூடிக் கொள்ளுவதே இந்த அவலத்திற்கு காரணம்.ஒவ்வொரு படைப்பாளிக்கும்
இரண்டாவது ஒரு எழுச்சி என்பது உண்டு.அது இல்லாதவர்கள் பெரும்பாலும்
முழுமை பெறுவதில்லை.

 அம்ருதா இதழில்   வெளியான ஷங்கர்ராம்சுப்பிரமணியனின் ஒரு கவிதை பற்றி
நான்கைந்து பேரிடம் பேசி விட்டேன்.அவருடைய மூன்று கவிதைகள்  இதழில்
வெளிவந்துள்ளன.மூன்றில் ஒன்று தலைசிறந்த கவிதை.

ஷங்கர் தன்னை மாற்றி எழுத முற்படும் கவிகளில் ஒருவர்.வேறு ஆடை அலங்காரம்
செய்து கொள்வதை போன்றதுதான் இச்செயல்.ஆனால் முக்கியமானது.ஒரு
சட்டையில் , சுடிதாரில் ,ஜீன்ஸில் அழுகி நாறுவதற்கு பதிலாக இப்படி புதிய
ஆடை அலங்காரத்திற்குள் நுழைய முற்படுத்தலே சிறப்பானது. உத்தமம்.ஷங்கரின்
இந்த மாற்றுறுப்பு அறுவை சிகிச்சை பரிசோதனை பற்றி எனக்கு ஒரு
பாராட்டுணர்வும் அதே வேளையில் அதில் அதிருப்தியும் கூடவே
இருந்தன.விக்ரமாதித்யன் அண்ணாச்சியிடம் கூட "ஷங்கர் உணருவதையெல்லாம்
கவிதை என நம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டார் போலிருக்கிறதே
அண்ணாச்சி ?" என்று கழிந்த சந்திப்பில் கேட்டேன்."அவருடைய ஆனந்தக்
கவிதைகள் பயங்கரமான பாதாளத்தில் இருக்கிறதே ! என்றேன்.அவர்
சிரித்தார்.அம்ருதாவில் வெளியாகியிருக்கும் இந்த கவிதை அந்த எண்ணத்தை
உடைத்து  விட்டது.இதையும் நான் உடனடியாக வெளியில் சொல்ல மறுத்து
உள்ளில் புழுங்குவேன் எனில் என் நெஞ்சமே என்னை காறியுமிழும்.அந்த கவிதை
இது.

"மழை பெய்த தெருவில்
கூழாங்கற்கள்
தவளைகளாக மாறின.
வட்டமாய் அணிவகுத்து
துள்ளித் தொடங்கின
தங்கள் இலக்கில்லாத முற்றுகையை .
தவளைப் போர் வீரர்களே
தவளைப் போர் வீரர்களே
உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை
வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும்
நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்"

கவிதையின் ரசாயனம் கச்சிதம் அமைய பெற்ற கவிதை இது.

3

கிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப்பட வேண்டும்

அனைவரும் அர்ச்சகராவது காலத்தில் எவ்வளவு முக்கியமோ , அதேயளவிற்கு
கிராமத்து பிராமணர்களுக்கு இடஓதுக்கீட்டில் இடம் ; வாய்ப்புகளில்
ஏற்படுத்தித் தர வேண்டியதும் முக்கியம்.இரண்டுமே தவிர்க்கப்படக் கூடாதவை
.இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏற்கிறேன் என்று எவரேனும்
பேசுவார்களேயானால் ,குரல் எழுப்புவார்களேயாயின் அவர்கள் வெறும் அரசியல்
தரப்பினர் மட்டுமே .பண்பாடு தொடர்பான விஷயங்களில் வெறும் அரசியல்
குரல்கள் மட்டுமே போதுமானவை அல்ல.அதுபோல பண்பாடு சார்ந்த விஷயங்களில்
பிறர் உரிமைகள் காக்கப்படுதல் அவசியமானது.இன்றைய நிலையில் கிராமத்து
பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்கள் மட்டும் இல்லை.பாதுகாப்பின்மையை உணர்ந்து
கொண்டிருப்பவர்கள்.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிற பிராமணர்கள்
அனைவரையும் ஒடுக்கப்பட்டோராக கருதுதலே நியாயம். நீதி.யாரையுமே வஞ்சிப்பது
நல்லதல்ல என்னும் போது பிராமணனை மட்டும் வஞ்சிப்பது எப்படி நீதியாக
இருக்க முடியும் ?

அனைவரும் அர்ச்சராக வேண்டும் என்பது சரிதான்.ஆனால் அதற்கு வெறும்
பட்டையப் படிப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல.அர்ப்பணிப்பும் ஆன்மீக
நாட்டமும் சிறுவயது தொடங்கி அவசியம்.ஆனால் இங்கே கிறிஸ்தவர்களுக்கு
உள்ளது போல ,இஸ்லாமியர்களுக்கு உள்ளது போல நிறுவனம் சார்ந்த படிப்புகள்
இன்னும் தொடங்கப்படவே இல்லை.அப்படியிருக்கும் குறைந்தபட்ச படிப்புகளை
தவிர்க்க இயலாமல் சிறுவயது முதற் கொண்டு படிப்பவர்கள் இங்கே பிராமணர்களாக
மட்டுமே இருக்கிறார்கள். வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற ஆச்சாரியார்கள்
அப்பழுக்கற்றவர்கள்.மேதைகள்.அவர்களை போன்றோரைக் கொண்டே அத்தகைய ஆன்மீக
முறை சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்கி விட முடியும்.பிராமணர்கள்
அல்லாதோரிலும் இங்கே இப்படியான நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள்.கேரளாவில்
ஈழவர்கள் அனைத்து ஆன்மீகச் செல்வங்களையும் தங்கள்
வயப்படுத்தியிருக்கிறார்.அது போலவே தமிழ் நாட்டிலும் தலித்துகள் உட்பட
,பிறர் ஆன்மீகச் செல்வங்களை முதலில் அர்ப்பணிப்புடன் தங்கள் வயப்படுத்த
வேண்டும்.

பிராமணர்கள் காலம் காலமாக செய்து வருவதால் ,பயின்று வருவதால் அவர்களுக்கு
கோவிலில் நின்று புழங்குதல் எளிமையாக இருக்கிறது.அதற்குப் பதிலாக அங்கே
ஒருவர் வந்து நிற்கும் போது வெறும் உரிமையுணர்ச்சி மட்டுமே
காணாது.நிபுணத்துவம் இருத்தல் வேண்டும்.பாடமாக ஒன்றிரண்டு ஆண்டுகள்
மட்டுமே கற்றதை வைத்து அங்கே நிற்பது சிறப்பல்ல.சிறுவயது முதலே கற்றுத்
தேர்ந்து கொள்ளுகிற ஆன்மீக அறிவும் ஞானமும் அர்ப்பணிப்புணர்வும்
அவசியம்.இதற்கென தொடக்க காலக் கல்விச் சாலைகள் பிராமணர்களைக் கொண்டே
தமிழ் நாட்டில் தொடங்கப்படுதல் நலம். ஓதுவார்களையும் ,பிற ஆன்மீகச்
சான்றோர்களும் இத்தகைய கல்விச் சாலைகளில் பங்கெடுக்க வேண்டும்.இத்தகைய
கல்விகள் புழக்கத்திற்கு வராத வரையில் வெறுமனே வாய் பேசியோ ,பிராமணர்களை
அவதூறு செய்தோ ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை.அவர்கள் காலம் காலமாக ஆன்மீக
வளங்களைக் காக்கிறார்களோ இல்லையோ கோவிலைக் காத்து வருகிறார்கள்.இந்த
உண்மையை ஏற்காதோருடன் உரையாடல் செய்வதாலும் ஏதும் பலன் இல்லை.

4

இறந்த காலத்தைப் பேசுதல் 

நம்மில் பலருடைய பிரச்சனையே சதா நாம் இறந்தகாலத்தைப் பற்றியே பேசிக்
கொண்டிருக்கிறோம் என்பதுதான்.அப்படியொரு காலம் நாம் கருதுகிற அளவிற்கு
சச்ரூபமாகக் கிடையாது.இறந்த காலத்தை பற்றி பேசுவதில் மிகைக்கு அளவே
கிடையாது.அது ஒரு கற்பனை காலவெளி.புனைவு வெளியும் கூட. அதிலிருந்து நிகழ்
காலத்திற்குள் பிரவேசிக்கும் தரிசனங்களும் ,கண்ணோட்டங்களும்
இருக்குமேயானால் அதுவே படைப்பூக்கம் நிறைந்தது.நான் காணும் மனிதர்களில்
பெரும்பாலோர் கடந்த காலத்தைப் பேசுபவர்கள்.அதனாலேயே புலன்கள் ,அறிவு,உடல்
அவர்களிடம் செயலற்றுப் போகிறது. மன அழுத்தம் மித மிஞ்சுகிறது."முன்பு
சரியாக இருந்தது இப்போது எல்லாமே கெட்டு விட்டது" ,என்கிற வாக்கியம்
இத்தகைய பலர் உபயோகிக்கும் பொது வாக்கியம்.இப்போது தின்ற இனிப்பு
தித்திக்கவில்லையா ? "இல்லை அது முன்னர் இருந்தது போல இல்லை".இந்த
"முன்பு" என்பது ஒருவித மயக்கநிலை.கடந்தகாலம் பயங்கரம் என்போரும் , கடந்த
காலம் சுவர்க்கம் என்போரும் அடிப்படையில் ஒரே நபர்கள்தான் . குரல்கள்தான்
வேறுபடுகின்றன.மயக்கத்தைத் தாண்டி செயலில் முன்னேற இயலாத அனைவருமே
இத்தகைய தரப்புகளையே எடுக்கிறார்கள்.

இன்று உங்களுக்கு என்னவெல்லாம் நடந்தது ? என்பது ஒரு எளிமையான கேள்விதானே
! பலரால் பதில் சொல்லவே இயலாத கேள்வி இது.உங்களிடமே கூட இந்த கேள்வியைக்
கேட்டுப் பாருங்கள்.இன்று ஒரு சூரியோதயம் இருந்தது,இன்று பல்லிடுக்கில்
ஒரு வலி இருந்தது.இன்று மதியம் நல்ல பசி .இப்படியான பதில்கள் உங்களிடம்
இருக்குமேயானால் நீங்கள் இறந்தகாலத்திடம் இருந்து முழுமையாகத்
தப்பித்துக் கொண்டவர் என்று அர்த்தம்.சிலர் கடந்த காலத்தின் வலியை
எல்லாக்காலத்திற்கும் சேர்த்திழுத்துக் கொண்டே வருவார்கள்.வலியிராது
ஆனால் வலியுணர்வு இருந்து கொண்டே இருக்கும் .இது கடந்தகாலத்தில்
வாழ்வது.நீங்கள் அழுகிற போது கவனித்துப் பாருங்கள் .நீங்கள் இப்பொழுதில்
நின்று அழுகிறீர்களா ? கடந்தகாலத்தில் நின்று அழுகிறீர்களா ? என்பது
விளங்கும்.பேய்ம்மையை நம்மிடமிருந்து நாமேயகற்ற வேண்டுமாயின்
இப்பொழுதிற்கு நமதுடலை சமர்ப்பிக்கக் கற்க வேண்டும்.

நண்பர் ஒருவருக்குத் திருமணமாகி சில மாதங்கள் கழிந்திருந்தது.இருவருமே
எல்லாமே உள்ள குடும்பம்.இருவருமே நல்லவர்கள்.ஆனால் கணக்கில் அடங்கா
பிரச்சனைகள்.உளவியல் நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டிய அளவிற்கு.எங்கள்
பகுதியில் மிகச் சிறந்த ஆற்றுப்படுத்துனர்களிடம் அழைத்துச்
சென்றேன்.பல்வேறு விஷயங்களை பேசிப்பேசி கடைசியில் உறவில் வந்து நின்றது
அனைத்து பிரச்சனைகளும்.பொதுவாக திருமண மனச்சோர்வு என்று ஒன்று
உண்டு.அதற்கு ஆலோசனைகள் ஏதும் தேவைப்படாமலேயே பலர் எதிர்கொண்டு
விடுவார்கள்.அப்படி இயலாதவர்களுக்கு வாழ்க்கையில் முதல் முட்டுச்சந்து
தென்படும்.அவர்களுக்கு சில எளிய ஆலோசனைகள் தேவைப்படும்.பாலியல் , உறவு
பற்றியெல்லாம் மித மிஞ்சிய கற்பனைகள் நம்மிடம் உண்டு.சிலருக்கு உறவு
கொள்ளும் போது பனியாறு உருகியோட வேண்டும்.மலர்கள் சுற்றிலும் உதித்து
விழுந்து கொண்டேயிருக்க வேண்டும்.அப்படியெல்லாம் உறவின் போது நீங்கள்
வணங்குகிற தெய்வங்கள் உட்பட யாருக்குமே நடைபெறுவதில்லை என்பதை
சொல்லியுணர்த்துதல்தான் ஆற்றுப்படுத்துனரின் வேலை இவ்விஷயத்தில். நான்
இப்பொது இதனை ஒரு வாக்கியத்தில் சொல்லி முடித்து விட்டேன்.சில
ஆற்றுப்படுத்துனர்கள் இதனை உணர்த்துவதற்கு தங்கள் இன்னுயிரையே விட
வேண்டியிருக்கும்.அவ்வளவு கடினமான பணியிது.

சிலர் எதிர்பாலின் உடல் மணம் இப்படியிருக்கும் கசந்து... என்று
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.உறவில் பல்வேறு நறுமணங்களை
எதிர்பார்த்திருப்பார்கள்.முத்திரக் குழியின் வாசனை இதுதான் என்பதில்
அஞ்சி நடுக்கிப் போயிருப்பார்கள்.அவர்களை நிலைக்கு கொண்டு வரவேண்டும்
.இவையெல்லாம் வழக்கமான பிரச்சனைகள்.

ஆனால் இவர்களின் பிரச்சனை வேறுவிதமானது.நண்பரின் மனைவி உறவே எங்களுக்குள்
இல்லை என்கிறார்.நண்பரோ சராசரியாக மூன்று முறை ,சில நாட்களில் நான்கு
என்கிறார்.அப்படித்தானா ? என்றால் அந்த பெண்ணும் ஒத்துக் கொள்கிறார்.ஆம்
உண்மைதான் என்று .இந்த உறவில் அவருக்கு கிளர்ச்சி இல்லையோ என்று
சந்தேகத்தில் ஆற்றுப்படுத்துனர்கள்,அந்த பெண்ணிடம் கேட்டால் மூன்று
தடவைகளில் இரண்டு முறை அவர் உடல் துவண்டு நேரடியாக தூக்கத்திற்கு சென்று
விடுவதையும் ஒத்துக் கொள்கிறார்.பிரச்சனை அவர் உடல் தற்காலத்தில்
இருப்பதை ஒத்துக்கொள்ள ; அவருடைய மனம் பூரணமாக மறுத்து விடுகிறது
என்பதில் அடங்கியிருந்தது.பின்னர் அவர் குணப்படுவதற்கும் மிக நீண்ட
நாட்கள் தேவைப்பட்டன.

நமது கருத்தியல் தளங்களில் இருக்கும் பலருக்கும் இதேவகையான
நோய்தான்.நீங்கள் எதை வேண்டுமாயினும் சொல்லுங்கள்.அவர்கள் பதிலாக
வரலாற்றுப் பார்வையிலிருந்துதான் தொடங்குவார்கள்.இரண்டு தரப்புகள் என்று
கருதுகிற இருவருமே இரண்டு விதமான வரலாற்றுப் பார்வைகளை
முன்வைப்பார்கள்.இவர்களிடம் நீங்கள் பேசவே இயலாது.இவர்கள் இருவேறு
தரப்புகள் என தோன்றுவதும் ஒரு வித மயக்கமே.இவர்கள் ஒரே
வகையினர்தான்.வரலாற்றின் இடத்தில் அன்றாடத்தை வைத்துப் பேசுகிறவர்கள்
இங்கே மிகமிக சொற்பம்.வரலாற்றுப் பார்வைகளின் கீழ் இயங்குகிற அனைத்து
விதமான அதிகார அமைப்புகளும் மிகவும் ஆபத்து நிறைந்தவை.ஏனென்றால் வரலாறு
என்பது பெரும் புனைவு . அதனை யார் வேண்டுமாயினும் எப்படி வேண்டுமாயினும்
வளைக்க முடியும்.அன்றாடத்திற்கு அந்த வசதி கிடையாது.

நாம் வாழ்க்கை ,அரசியல்,அதிகாரம் அனைத்தையுமே வரலாறு என்கிற தின்
பண்டத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.அது தித்தித்து திரண்டோடுகிறது
மாயநதி போல


5

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயிலவேண்டும்

இல்லையெனில் தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகளை காப்பாற்றவே இயலாது. உங்கள்
மதிப்பீடுகள் ,ஆர்வம் ஒரு திக்கிலும் பணி மறு திக்கிலும் இருந்தால்
நீங்கள் பணியை பாரமாகத் தான் பார்ப்பீர்கள்.ஒரே மருத்துவரை நீங்கள்
சென்று அரசு மருத்துவமனையிலும் அவருடைய தனியார் கிளினிக்கில் போய்
பார்ப்பதற்கும் இடையில் பெருத்த வித்தியாசங்கள் உண்டு.ஒரே
மருத்துவர்தான்.ஒரே நபர்தான்.இரண்டு இடங்களிலும் இரண்டுவிதமாக
சுபாவத்தில் அவர் மாறுபடுகிறார்.நீங்கள் காலையில் அதே நபரை அரசு
மருத்துவமனையில் போய் பார்த்து விட்டு மாலையிலேயே தனியார்
மருத்துவமனையில் சென்று பாருங்கள் புரியும். பள்ளியாசிரியர்கள் மட்டும்
என்றில்லை .அரசுப் பணிபுரிவோர் அரசு சார்ந்த துறைகளில் பள்ளி
,மருத்துவம்,போக்குவரத்து இப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை
உருவாகவேண்டும் .இல்லையெனில் சீர்கேடுகளை நாள் தோறும் புலம்பலாமே ஒழிய
எந்த முடிவையும் எட்ட முடியாது.

காலையில் தனது வாடகைப் பாடசாலையில் ஐந்து முதல் எட்டு மணி வரையில் பாடம்
நடத்துகிற ஒரு ஆசிரியர் பள்ளி வகுப்பை தூங்குவதற்கான இடமாத்தான்
பயன்படுத்துவார் சந்தேகமே வேண்டாம்.இரண்டு சக்திகள் கொண்ட மனிதர்கள்
என்று இங்கு யாரும் இல்லை.நான் ஒரு நபரிடம் கவிதை பற்றி ஒருமணிநேரம்
பேசிவிட்டேன் எனில் அடுத்து வருகிற நபரிடம் அதே உற்சாகத்துடன் பேசுவது
கடினம்.அதிக பணம் கிடைக்கும் இடமாக இருந்தால் ஒருவேளை இந்த சக்தி
ஏற்படலாம்.ஒருவேளை அடுத்து வருபவர் பெண் காதலியாக இருந்தால் இந்த சக்தி
மீண்டும் ஏற்படலாம்.நீ கலைக்டரோ ,மந்திரியோ யாராக வேண்டுமாயினும் இருந்து
விட்டுப் போ.அரசு பள்ளியில் , அரசு மருந்தகத்தில்,அரசு பேருந்தில் உன்
உபயோகம் இருக்க வேண்டும் என்றோரு ஆணை இருக்குமெனில் இவையெல்லாமே ஒரே
நாளில் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பிவிடும் சந்தேகமே வேண்டாம்.அரசு
சம்பளம் எனில் அரசு உபயோகம் என்றிருக்க வேண்டும்.

இரண்டு வருடங்களாக ஒரு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக
இருந்திருக்கிறேன் .துணைத் தலைவராக இருந்த காலங்களையும் சேர்த்து
கணக்கிட்டால் ஐந்து வருடங்கள் .பெண் ஆசிரியர் ஒருவர் பொதுக் கூட்டம்
ஒன்றிலேயே "நாங்கள் விபச்சாரியின் குழந்தைகளுக்கும்,குடிகாரர்களின்
குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி கடினப் படுகிறோம் தெரியுமா ?" என்று
கேட்டார்.அவர் அவ்வாறு கேட்டது கூட ஆச்சரியமில்லை.பல அரசுப்பள்ளி
ஆசிரியர்களுக்கும் தாங்கள் சம்பளம் வாங்குகிற சமூகத் தொண்டில்
இருக்கிறோம் என்கிற எண்ணம்தான் பொதுவாகவே இருக்கிறது .அந்த கூட்டத்தில்
பங்கேற்ற பிற உயர் அதிகாரிகளுக்கும் கூட அந்த அம்மணி பேசியதன் அபத்தத்தை
உணர இயலவில்லை.அந்த அம்மணியை தனியாக அழைத்து இதையே பள்ளி வழக்கத்திற்கும்
வெளியே வைத்து நீங்கள் சொல்லியிருப்பீர்களேயாயின் செருப்பால் அடி
வாங்கியிருப்பீர்கள் என்று தாங்கொணா வருத்தத்துடன் சொல்லிவிட்டுத்
திரும்பினேன்.

பல ஆசிரியர்கள் முழுமையான மடையர்கள்.பணிக்கு வந்ததிற்கு பிறகு அவர்கள்
தகுதியை வளர்த்துக் கொள்வதே இல்லை.அதற்கான அவசியம் அவர்களுக்கு
ஏற்படுவதில்லை.நான் என்னுடைய தகுதியைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள
வில்லையானால் எனக்கு இழப்பு ஏற்படும் என்று கருதினால் மட்டும்தானே எனக்கு
எனது தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் அவசியம் உண்டாகும் ? அரசுப்
பள்ளியாசிரியர்கள் தங்களின் தகுதிக் குறைபாட்டால் தங்களுக்கு சிறிய
இடையூறைக் கூட சந்திப்பதில்லை வாழ்க்கையில்.

ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை
இடம் மாற்றம் செய்யக் கோரி ஒருவருட காலம் அலைந்தோம்.முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கு கொடுக்கும் மனுக்கள் அவர் பார்வைக்கே செல்லாது.காவல்
நிலையங்களில் பழைய காவலர்கள் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பது போலத்தான் ,சங்க பிரதிநிதிகள் கல்வித் துறைகளில் நிரம்பி
வழிகிறார்கள்.கடைசி வரையில் அந்த ஆசிரியரை எங்களால் இடமாற்றம் செய்ய
இயலவில்லை.அவர் சங்கத்தின் ஆள்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த
அதிகாரி போகும் இடம் எங்கும் சங்கத்தின் ஆள் மீது நடவடிக்கை எடுத்த
அதிகாரி அவர் என்கிற கறை இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் நடவடிக்கை
எடுக்கப்படாமைக்கான காரணம்.ஒவ்வொன்றிலும் வெளியிலிருந்து பார்க்கும் போது
அதன் வெண்மையும் உள்ளே சென்று பார்த்தால் சாக்கடையும்
புலப்படும்.பதவியிலிருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

சமீபத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு பள்ளியை கடந்து செல்லும்
போது கண்ணீர் திரண்டது.அந்த பள்ளியொரு கனவு லோகமாக ஒரு காலத்தில்
எனக்கிருந்த பள்ளி.என்.எஸ்.எஸ் முகாம்களில் அந்த பள்ளியில் தங்கி
இருந்திருக்கிறேன்.உருத்தெரியாமல் இடிந்து சரிந்து கிடக்கிறது
இப்போது.சிறிய வனம் வளாகம் முழுதும் படர்ந்து ,பக்கத்தில் உள்ள கல்லறைத்
தோட்டத்தைப் போன்ற கதி நிலை.சென்று சிறிது நேரம்
அமர்ந்திருந்தேன்.இத்தனைக்கும் அந்த பள்ளியிருக்கும் ஊரை எங்கள்
பகுதியில் குட்டி ஜப்பான் என்றழைப்பார்கள்.அந்த இடிவு ஒரு வெளியுருவம்
இல்லை. நமது அகம் இன்று இருக்கும் தோற்றம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"