தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 5

 மடத்தனங்களின் அருமை





எப்போதும் ஒன்றிற்கும் அதிகமான மடத்தனங்களை கையில் வைத்திருப்பவர்கள்
வாழ்வதை லெகுவாக்கி வைத்திருக்கிறார்கள்.காரண காரியங்களைத் தேடாமல்
பிரயாணிக்கிற காரியங்களே மடத்தனங்கள்.எல்லாவற்றிலும் காரண காரியங்களை
தேடித் கொண்டிருப்போருக்கு சிக்கலாகி விடும்.தடுக்கி விழுகிற போது ஓடிச்
சென்று சரணடைய ஏதேனும் மடத்தனம் கையில் இருக்க வேண்டும்.சதா
சந்தோஷங்களில் திளைக்கும் பலரிடம் ஏராளமான மடத்தனங்கள் கைகளில் இருப்பதை
பார்த்திருக்கிறேன் .எல்லாவற்றிலும் காரண காரியங்களை அலசிக் கொண்டே
இருப்பவனுக்கு வாழ்க்கை மளிகை கடை வியாபாரம் போலாகி விடும்

மடத்தனங்களுக்கு பலமடங்கு அழகுண்டு .அதன் ரகசியமே எல்லோருக்கும் பொதுவான
மடத்தனங்கள் என்று ஒன்றுமே கிடையாது என்பதில்
அடங்கியிருக்கிறது.ஒவ்வொருவரும் தங்களுடைய மடத்தனங்களை தங்களேதான்
கண்டடைய வேண்டும்.சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.ஒன்றுக்குமே உதவாது என
பிறர் கருதுகிற ஒரு மரமொன்றை வளர்த்துவது தொடங்கி ,ஒரு களைத் தாவரத்தைக்
கொண்டாடுவது தொடங்கி, காரணிகள் ஏதுமற்ற பயணங்கள் என்று ,பொருந்தா காதலில்
ஈடுபட்டு என எதை வேண்டுமாயினும் ஒருவர் தேர்வு செய்யலாம் .எந்த
மடத்தனத்தில் ஒருவருடைய உள்மனம் குதூகலிக்கிறதோ அதுவே அவருக்குப்
பொருந்துகிற மடத்தனம்.

உளவியல் மருத்துவர்கள் கொடுக்கிற மாத்திரைகளை உண்டு வாழ்கிறவர்களைப் போல
வாழவே கூடாது நேரடியாக.நேரடியாக வாழ்ந்து பெறுபவற்றை அளிக்க மடத்தனங்கள்
வேண்டும்.நீங்கள் செய்வது மடத்தனமாக இருக்கிறதே ! என பிறர் கூறும்
காரியங்களில் உள் ஆனந்தம் பெறுகிறீர்கள் எனில் அது உங்கள் சொத்து
கைவிட்டு விடாதீர்கள்.உங்கள் மடத்தனங்களின் பொருள் பிறருக்கோ உங்களுக்கோ
தெளிவாகக் கூடாது .அதில் நீங்கள் ஆனந்தத்தை மட்டுமே
பெறவேண்டும்.தெளிவிற்கு அங்கு வேலையில்லை.ஒரு மடத்தனம் உங்களில் அர்த்தம்
பெற்றுத் தெளிகிறது என்றால் அந்த மடத்தனம் வெகுவிரைவிலேயே உங்கள் கையை
விட்டு அகலப் போகிறது ,விடைபெறப் போகிறது என்று பொருள்.

காரண காரிய அறிவு என்பது செய்கிற காரியத்திலிருந்து அடைகிற
உருவம்.மடத்தனம் உருவம் வழங்காது.கொடுந்தனிமை நமக்கு மனமுவந்து வழங்குகிற
பரவச வரங்கள் மடத்தனங்கள் .அள்ள அள்ள குறையாத செல்வங்கள்.திகட்டாத
செல்வங்கள்.

எனது வாழ்க்கையில் இருபது வருடங்களுக்கும் மேலாக தீவிரமான மனச் சோர்வில்
இருந்தேன்.தமிழ் நாட்டைச் சார்ந்த முக்கியமான மனநல மருத்துவர்கள் பலரை
எனக்குத் தெரியும்.அவர்களிலும் பலர் மனச் சோர்வில்தான்
இருந்தார்கள்.அறிவை நம்புவோர்க்கு மனச் சோர்வு நிச்சயம்.அறிவை நம்புவது
மறைமுகமாக நமது அகந்தையை நாமே நம்புவதுதான்.அறிவு இல்லாமலும் முடியாது
அதனை கைவிடவும் தெரிந்திருக்க வேண்டும்.பின்னாட்களில் அந்த
மருத்துவர்களில் சிலர் என்னுடைய நண்பர்களாகவும் ஆனார்கள்.என்னுடைய சில
உபதேசங்களைக் கருத்திற் கொண்டு மடத்தனங்களுக்கு பழகவும் செய்தார்கள்.ஆகச்
சிறந்த அறிவு நம்மை அலுப்பின் முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தி
நிலைகுலையச் செய்யும் போது ; ஒரு பேரழகு கொண்ட மடத்தனத்தில் மோதி உயிர்
பெற்று விடவேண்டும்.

ஒருவராலும் என்னை சீர் செய்ய இயலாத போதுதான் நான் மடத்தனங்களுக்கு என்னை
ஒப்புவித்தேன்.உயிர் பிழைத்தேன்.இப்போது என்னைக் காத்துக் கொண்டிருப்பவை
எல்லாமே என்னுடைய ஆகச் சிறந்த மடத்தனங்கள்தாம் .ஏராளமான மடத்தனங்களால்
நிறைந்தது இப்போதைய எனது வாழ்க்கை .ஏன் இதனைச் செய்கிறீர்கள் ? என என்னை
நோக்கி கேள்வி கேட்போர் அத்தனை பேரையும் எதிர்த்து எள்ளி நகைக்கிறது
இப்போதைய எனது வாழ்க்கை. ஒரு மருத்துவர் இந்த துறையிலேயே மிகவும்
மூத்தவர்.பேர் பெற்றவர் .எழுத்தாளர்களுக்கு அவர் அதிகமாக மனச் சோர்விற்கு
எதிரான குழிகைகளைத் தரக் கூடாது என்கிற கொள்கை வைத்திருந்தார்.அதுவொரு
நல்ல கொள்கைதான்.மனச் சோர்வுதான் அவர்களை எழுதத் தூண்டுகிறது என்கிற
எண்ணம் அவருக்குண்டு.அப்படியில்லை என்பதை மடத்தனங்களை ஆராதிக்கத்
தொடங்கிய பின்னரே அறிந்து கொண்டேன்.

மடத்தனங்கள் அதிகம் உள்ளவர்களோடு எளிதில் இணங்கும் குணம் எனக்குண்டு.ஏன்
போகிறோம் ? எங்கு போகிறோம் என்றால் விலகி கொள்வேன் பத்திரமாக .இதைச்
செய்தால் என்ன கிடைக்கும் ? என்றோருவன் கேட்டு விட்டால் அப்புறம் அவனைத்
திரும்பிக் கூட பார்ப்பதில்லை.அவன் செல்லும் திக்கும்,எனது திசையும்
முற்றிலும் வேறு வேறானவை.எனது மடத்தனங்களைக் கண்காணித்து வேவு பார்த்து
நோக்கம் கற்பிப்போர் எனது ஆனந்தத்தை எதிர்த்துப் போரிடுபவர்கள் என்பது
இப்போது எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.

###

அண்ணன்கள் என்று சொல்லிக் கொள்ள இருவர் உண்டெனக்கு


ஒருவர் தமிழ்ச்செல்வன் ,மற்றொருவர் சி.சொக்கலிங்கம். இடப்பக்கமும்
வலப்பக்கமும் என இருவர்.முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஒருவர்,கலையிலக்கிய பெரு மன்றத்தில் ஒருவர் என.தந்தி பாஷையில் சொன்னால் இடது
கம்யூனிஸ்ட்டில் ஒருவர்,வலது கம்யூனிஸ்ட்டில் ஒருவர்.பரஸ்பர சிநேகமும்,சினமும் உள்ளடக்கம் .
இருவரைப்பற்றியும் எழுதுவதற்கு பல உண்டு .சொக்கலிங்கம் லஹரியில் இருக்கையில் ஒரு
தேவபுருஷன் .இல்லாத நேரங்களில் கட்சி அதிகாரி.திருடன்.அப்படியிரு அவதாரங்கள்
சொக்கலிங்கம்.எனக்கு பொருத்தமெல்லாம் அந்த முதல் அவதாரத்தோடுதான்.பின்னதில் நிறைய சங்கடங்கள் .முதல் அவதாரத்தின் நிறைய
மகிமைகள் தற்போது எழுதக் கூடாதவை.முற்றும் முதுமை அதற்குத் தேவை.
தமிழ்ச்செல்வனுக்கு அப்பா சண்முகத்தின் சாயல்.உள்ளும் புறமும்.உள்ளும் புறமும் இரண்டில்லாதவர் தமிழ்ச்செல்வன். மாறுபாடுகள் வேறுபாடுகள் என எவ்வளவோ வந்தாலும் இருவரிடமும் காரியங்களில் விலக உள்ளூர ஒன்றும்
கிடையாது.செயல்படும் பணியிடங்களும் ,பேசும் மொழியும் வேறென்பது உண்மையே
தவிர ஆற்றும் செயல்களில் வேற்றுமைகள் கிடையாது."நம்மப் புள்ளைங்க "என்பது தமிழ்ச்செல்வன் எங்களை போன்றோரைக் குறிக்கும் சொல். "நீங்கள் யாருமே அனாதைகள் இல்லை" என்பதை எனக்கு உணரச் செய்தவரும் அவர்தான்
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பவர் தமிழ்ச்செல்வன் . தொடர்ந்து
செயல்படுபவர்கள் எவ்வளவு நம்பிக்கை இழப்புகளையும் சேர்ந்து சந்தித்திருப்பார்கள் என்பது; அவர்கள் சொல்லாதவரையில் வெளியில் தெரியாது.நூற்றுக்கு ஒன்றுதான் உருப்படியாகும்.ஆனால் இந்த
தொண்ணுறொன்பது வீணுக்கும் சேர்த்து ஒருபோல வேலை செய்தால் மட்டுமே இந்த
ஒரு உருப்படியை கண்டடைய முடியும்.
ஒவ்வொரு சமயமும் இழந்த நம்பிக்கைகளின் துயரச் சாயல் ஏதுமின்றி புதிது புதிதாக போய்க்கொண்டேயிருப்பவர் அவர் .புதிய நம்பிக்கைகள் புதியநம்பிக்கைகள் என.சுயசரிதையை அவர் எழுதுவார் எனில் புனைவுத் தன்மையும்
கொண்ட அரும் பொக்கிஷமாக அமையும்.சுய பகடியும் எள்ளலும்நிரம்பியவர்.அனுபவங்களை விலகி நின்று பார்க்கவும் அவரால்முடியும்.சுயசரிதையை அவர் எழுதினாலும் கூட அவரால் நடந்த வண்ணம்தான் எழுத
முடியும் என நினைக்கிறேன்.இருப்பென்பதை பொதுவில் வைத்து விட்டவர்
தமிழ்ச்செல்வன் .சுந்தர ராமசாமி மிகவும் எதிர்பார்த்தவர்களில்ஒருவர்.அவருடைய சக்தி பெருமளவிற்கு பொது வாழ்வில் செலவாகிக்
கொண்டிருக்கிறது.தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய் ","வாளின் தனிமை "இரண்டு சிறுகதை நூல்களும் முக்கியமானவை.புதியவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்புகள் அவை.
கிடாத்திருக்கையில் வழிவிட்ட அய்யனார் கோயிலில் வைத்து ஒருமுறை தமிழ்ச்செல்வனிடம் இனி நீங்கள் கொஞ்சம் இருந்து எழுதலாமே ? என்று
கேட்டேன்.நேரே அவரைக் கேட்க இயலாத உட்குறும்புகள் என்னை ஏற்றி விட்டு
நான் அவரைக் கேட்ட கேள்விதான் இது."நடமாடிக் கொண்டிருக்கும் வரையில்தான்
இந்த வண்டி ஓடும் என்று பதில் சொன்னார்.எனக்கு வாழ்க்கை தொடர்பான பல புரிதல்களை ஏற்படுத்திய பதில் இது.நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்
கொண்டிருக்கும் வேலைகளை தொடரும் வரையில் தான் உயிர் இந்த உடலில் தங்கியிருக்கும்.பல காரியங்களை அலுப்புடன் செய்யும் போது அவர் அன்று
கூறிய பதிலே ஊக்கமளித்துக் கொண்டிருப்பது.
தமிழ்ச்செல்வன் திருநெல்வேலி அஞ்சல் நிலையத்தில் பணி புரிந்த போது ,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் ,சேவியர் கல்லூரி நாட்டார்
வழக்காற்றியல் துறையும் இணைந்து நடத்திய திட்டம் ஒன்றில் ; எனக்கு குறுகிய காலம் பணியிருந்தது.சாயங்காலங்களில் அவரை போய் பார்ப்பேன்.எந்த புதிய இளைஞனிடமும் பலகாலம் பழகியது போன்று அவர் பழகும் விதம் இடைவெளிகள்
இல்லாதது.ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல் " நாவல் வெளிவந்திருந்த சமயம்.நானும் படித்து விட்டேன் ,அவரும் படித்திருந்தார்.நம்ம தோழர்களே
நல்லா இருக்குன்னு சொல்றாங்களேப்பா ? உள்ளதத் தான சொல்லியிருக்கார்னு "
என்று அவர் குறிப்பிடும் போது ஆழ்ந்த வருத்தம் தொனிக்கும்.இந்த நாவலுக்குப் பதில் சொல்ல கடுமையாக இருக்கிறது என்பது அப்போது அவர் மனதில் இருந்தது.
காடுமலை என சுற்றித் திரிந்த காலங்களில் அவரும் நானும் எங்கேனும் வழிப்பாதைகளில் சந்தித்துக் கொள்வோம்.அந்த ஊருக்குப் போறேன் என ஏதேனும் ஒருஊர் பெயரைக் காட்டி விட்டு கையில் பிடிகிடைக்கும் பொருளை எனது சட்டைப்
பையில் வைத்து , அவசரமாகக் கடந்து செல்வார்.நான் கேட்பதில்லை , ஆனால் அவருக்கு நம் தேவைகள் என்னவாக இருக்கும் என யூகிக்கத் தெரியும்.எங்கேனும்
யாரேனும் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்."என்னடா இப்படியிருக்கே "
என்பது வழக்கமாக அவருக்கு என்னைக் காணும் போது சுட்டக் கிடைக்கிற சொல்.சுட்டும் சொல்.அதில் இப்படியிருக்கீங்களேப்பா என்கிற நிழல் சொல்
ஒளிந்து கொண்டு தலை தூக்கிப் பார்க்கும். ஒருபோதும் முன்பு அவர் பார்த்த நிலையில் மறுமுறையில் நான் இருந்ததில்லை.மதுரையில் அவர் ஒருமுறை காணும்
போது மொட்டை போட்டிருந்தேன்.அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் அப்போது. சமீபத்தில் ராஜபாளையத்தில் சந்தித்துக் கொண்ட போது "என்னடா இது
பத்திரகாளியம்மன் கோவில் பூசாரி போல வந்துருக்க " என்றார்.
தமிழ்ச்செல்வன் ,சொக்கலிங்கம் போலெல்லாம் வரும் தலைமுறைகளில் வேலை செய்ய ஆளுண்டா தெரியவில்லை


###

நான் ஒரு இந்து

பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான
சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம்
அல்ல.ஏற்கத் தெரிந்த மதம் இந்து மதம்.இந்துமதத்தின் எல்லா கிளைகளும்
தனியானவை தனித்தன்மை வாய்ந்தவை.எல்லா கிளைகளும் சம முக்கியத்துவம்
வாய்ந்தவை.இந்து மதத்தின் இந்த பகுதிதான் ஆகச் சிறந்தது,மற்றதெல்லாம்
ஆகக் குறை என்கிற வாதங்கள் போக்கற்றவை.அப்படியேதும் கிடையாது.வேதங்களும்
முக்கியம் ,வேதங்களை எதிர்ப்போரும் இங்கே முக்கியம் .இந்துமதத்தின்
பிரதானமான பிரிவுகளில் இருந்தபடியே வைதீக கழிவுகளை சாடியிருப்பவர்கள்
ஞானிகள் இந்துமதத்தில் ஏராளம்பேர்.கடைசியில் வருபவர் ஸ்வாமி
விவேகானந்தர்.இந்துமதம் பற்றிய கண்ணோட்டங்களை ஒருவர் பரிசீலிக்க
விரும்பினால் விவேகானந்தரை நோக்கி முதலில் செல்வதே சிறப்புடைய செயல்.
எனக்கு ஆழ்வார்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு நாயன்மார்கள்
,சித்தர்கள்,கிளைமரபுக்களை சார்ந்த அனைவருமே முக்கியம்.இதில் அது பெரிது
இது சிறிது என்பதெல்லாம் நோயுற்றோர் கொண்டியங்கும் கொள்கைகள்.நடராஜர்
யார் என்று தெரியாத ஒருவனுக்கு கிருஷ்ணன் யாரெனவும் விளங்காது.எப்போதுமே
நீங்கள் ஆன்மீகத்தில் ஒன்றைத் தொட்டீர்கள் எனில் மற்றதும்
துலங்கும்.அனுபவங்களில் சாதகத்தைப் பொறுத்து சிற்சில மாற்றங்கள்
உண்டு.அவை மாயை உருவாக்கும் உருமாற்றம் அன்றி வேறில்லை.புனைவுகளை ,புராண
பதிவுகளைத் தாண்டி கடந்து செல்லும் இடம் உண்டு.வைஷ்ணவத்திற்கும்
சைவத்திற்கும் இடையிலான ஊதுபத்திகள் அனைத்தையும் இந்துமத ஞானியர் கரை
கண்டு கரைத்திருக்கிறார்கள்.பத்மநாப சாமி ஒரு அனுபவம் எனில் அதைக் கொண்டு
நடராஜரைப் பழிவாங்கக் கூடாது.ஒன்று கடல் மற்றொன்று மலை என்று எளிமையில்
வைத்துப் புரிந்து கொண்டீர்களேயாயினும் கூட இரண்டுமே
முக்கியமானவை.சுடலையும் ,இசக்கியும் இந்துமதத்தின் விஷேச
அலங்காரங்கள்.இதுபெரிது அது பெரிது என்போன் வீடு பேறு அடையமாட்டான்
என்பதை எழுதி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது
உறுநெறி உணர்ச்சிதந்து ஒளிஉறப் புரிந்து...
- வள்ளலார்.
மதம் யாதாயிலும் செரி
மனுஷன் நன்னாயிருந்தால் மதி
-ஸ்ரீ நாராயண குரு
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
- வைகுண்ட சாமிகள்
நாயிற் கடையாய் கிடந்த அடியார்க்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
- மாணிக்க வாசகர்
நட்ட கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை
அறியுமோ ?
- சிவ வாக்கியர்
எல்லோரும் எனக்கு முக்கியம். இவர்கள் எல்லோரும் எனக்குச் சமம்
 
 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"