தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 11

 சாமிகளும் தூக்க மாத்திரையில்தான் துயில்கிறார்கள் ; கவலை வேண்டாம்.









நண்பர் ஒருவர் தூக்கம் சரியாக வருவதில்லை என்ன செய்யலாம் என்று கேட்டார்.தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.இரவில் தூக்கம் நின்றுபோய் ,பகலில் அதை ஈடு செய்யும் வாழ்க்கை இருக்குமேயானால் பகலில் படுத்துத் தூங்கலாம்.பகலிலும் இல்லை .இரவிலும் இல்லையெனில் தூக்கமாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.வேறு வழியில்லை.

"இல்லை ...தூக்கமாத்திரைகள் எடுக்கத் தொடங்கினால் பழக்கமாகி விடும் " இது அவர்

பழக்கமானால் என்ன ? இங்கே பல்வேறு விஷயங்கள் பழக்கம்தான்.சட்டை போடுகிறோம் .பழக்கமின்றி வேறென்ன காரணம் ? அரிசியும் கூட பழக்கம்தான்.வாய்க்கரிசியும் இதற்கு விதிவிலக்கில்லை.கொலை,களவு ,பக்தி ,குடும்பம்,புரட்சி எல்லாமே பழக்கம்தான்.கவனித்துப் பாருங்கள் குறிப்பிட்ட காலங்களில் நடைபெறுகிற கொலைகள் குறிப்பிட்ட விதமாகவேதான் நடக்கும்.கழுத்தறுப்பு எனது ஒரு சீசன்.கல்லைத் தூக்கித் தலையில் போடுவது மறு சீசன்.ஒருபழக்கம் கைவிட்டு மற்றொன்று உருவாகி - பழக்கமாகி கைகூட ,காட்சிகள் மாற நிறைய கால அவகாசம் தேவைப்படும். எனக்கு இந்த ஐநூறு வருடங்கள் வாழப் போகிறவர்களைப் போல பேசுபவர்களைக் கண்டால் தமாஷாக இருக்கும்.பட்டுனு எல்லோருமே போகத்தானே போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை .அவர்கள் பிறர் மட்டும்தான் பட்டுனு போவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நினைப்பு அகலும் வரையில் நோய் குறையாது. வாழ்க்கை என்பதை வருடக்கணக்கில் கூட்டிக் கழித்துப் பார்ப்பதைக் காட்டிலும் நாட்கணக்கில் பாருங்கள் விஷயம் விளங்கும்.பொழுதுபொழுதாய் பார்க்கத் தெரிந்துவிட்டால் ஞானம் கூடிவிட்டது என்று கொள்க ...

இருபது வருடங்களாக தூக்க மாத்திரைகளில்தான் உறங்குகிறேன்.அதனை உறக்கமென்பது தவறு மயக்கம்.சில உறக்கமூட்டிகள் காலையில் கண்ணெரிச்சலை உண்டாக்கும்.ஏகதேசமாக அனைத்துவிதமான தூக்கக் குளிகைகளையும் உண்டிருப்பேன்.இப்போது அப்படியல்லாத,கண்ணெரிச்சலை ஏற்படுத்தாத மேம்பட்ட பொருட்கள் வந்துவிட்டன.

தூக்கக்குளிகைகள் இல்லாத எனது இரவுகளில் பேய்கள் துணைக்கு வந்துவிடும். வரலாற்றின் எந்தெந்த முடுக்குகளிலிருந்தெல்லாம் கிளம்பி வருகின்றன இவை என்று கணிக்கவே முடியாது.பத்துப் பதினைந்து பேய்கள் ஒரேசமயத்தில் வந்து விடுமாயின் எந்த சம்சாரியாலும் தாங்க முடியாது. கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் பேய்கள்தான் அவை.உறக்கமூட்டிகளால் நான் அவற்றை மூடி அழகூட்டி வைத்திருக்கிறேன்.திறந்தால் வெளியே கிளம்பிவிடும். அவ்வளவுதான் விஷயம்.அவற்றையெல்லாம் மடக்கிப் கவிதையாக்கி விடுவதற்கு வேறெந்த விந்தையும் காரணமில்லை.என்னுடைய "அப்பாவைப் புனிதப்படுத்துதல் "கவிதைத் தொகுப்பை படித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.நான் அந்தத் தொகுப்பை தூக்கக்குளிகைகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

சபரிமலைக்கு செல்லும்போதும் கூட உறக்கமூட்டிகளை கையிலேயே எடுத்துச் செல்வதே எனது பழக்கம்.பேய்களை அடக்கி ஆள உறக்கமூட்டிகளும் ஒரு மாந்ரீகமே.நாயைக் கட்டுவது போல நாமவற்றைக் கட்டிவிடலாம். சபரிமலை செல்லும்போது எப்படியேனும் உறக்கம் கெடும்.ஒன்றிரண்டுநாட்கள் உறக்கம் கெடுமாயின் என்னிலிருந்து வலிப்பு வெளிக் கிளம்பும்.வலிப்பென்பது ஒவ்வொருமுறையும் மரணத்தைக் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவமானத்தையும் ஒருசேர வழங்கும் வியாதி.

சாமிகளுக்கே கூட இப்போதெல்லாம் உறக்கமூட்டிகளையே பரிந்துரைக்கிறேன்.இந்த கவிதை அய்யனாருக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்து வந்தது பற்றியதும் கூட . சாமிகளுக்கு இதுதான் நிலமையென்றால்; நமெக்கென்ன ? நன்றாக தூக்கமாத்திரை சாப்பிடலாம். சதாம் ஹுஸைனை தூக்கிலேற்றும் போது புஷ்ஷை காப்பாற்றியது இந்த உறக்கமுட்டிதான் என்பது தெரியுமா ! தூக்கம் வராமல் தவிக்கும் ஆருயிர் நண்பரே ? எடுத்துக் கொண்டு தூங்குங்கள் ஒன்றும் ஆகாது.பேயும் நோயும் அழகு பெறுகிறார்கள் ,கவிதையாகி விடுகிறார்கள் என்றால் உண்ணுவதை உண்ணாமல் தகுமா ?

#

மேலாளர் வேலை

ஓட்டுப்புரை ரயில் நிலையத்தின்
மோட்டார் பம்பு அறையின் முன்பாக தெரிந்தோ
தெரியாமலோ
மாட்டிக் கொண்டு குதிரையின் மேலேறி

அமர்ந்திருக்கிறார்
அந்த சிமெண்ட் அய்யனார்

கீழிருக்க பயந்து மேலொடுங்கி இருப்பது போலே
குதிரையில் அவர் தோற்றம்
அவர் குளித்து பலகாலமிருக்கும்

உடனிருந்த ஒட்டுண்டி சாமிகள் தாங்கள்
அகன்று சென்ற தடயம்
விடாமல்
அகன்று விட்டார்கள்

அம்மையை மட்டும் பிரிவில் பறித்து
இடுப்பில் வைத்த வண்ணம்
குதிரையிலேறி அமர்ந்திருக்கிறார்
பதினெட்டுப்பட்டியை சுற்றி அரசாண்டு
காவல் காத்த அய்யனார்.
முதிய வேம்பின் பின்மதியம் துணை

கழுத்தைத் திருக்கி
மங்களூர் எக்ஸ்பிரஸ் கிழக்கு நோக்கிச் செல்லும் போது
கிழக்கு நோக்கியும்
குருவாயூர் மேற்கில் நகரும் போது
மேற்கு நோக்கியும்
கடைசி பெட்டி வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்
ஏனென்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

உடல்வலிக்கு பாராசிட்டமால் மாத்திரையும்
இரண்டுநாள் தூக்கத்திற்கு தூக்கக் குளிகையும்
கொடுத்து விட்டு வந்தேன் .

தூக்கக் குளிகையை வைத்து
நானென்ன செய்ய ? எனக் கேட்டவரை
நீண்டகாலம் நானும் இதைத்தானே செய்து
கொண்டிருக்கிறேன் மனுஷா -
ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகும் -
என ஓங்கித் திட்டினேன்.

அப்படியா தெய்வமே -
என என்னிடம் சன்னமாகச் சொல்லிய
குதிரைவீரன் அய்யனாருக்கு
இப்போது ஆளில்லாக் கழிவறையின்
மேலாளர் வேலை.


2


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.






மருமக்கள் வழி மான்மியம் ,கவிமணி கவிதைகள் ஆகியவை சிறுவயதில் பள்ளிப்படிப்பு காலங்களில் மீண்டும் மீண்டும் படிப்பது என்பது ஒரு பழக்கமாக இருந்தது.தனக்கு ஏற்பட்ட சிரங்கை பற்றி அவர் எழுதிய சுய பகடிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.எனது பள்ளிக்காலத்தின் போது மறக்கவே இயலாத இரண்டு தமிழாசிரியர்கள் எனக்கு அமைந்தார்கள்.இருவருமே கவிமணி பேரில் பற்று கொண்டிருந்தவர்கள் .
ஒருவர் ஆறு முதல் எட்டு வரையில் எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த ஆறுமுகம் பிள்ளை.பழந்தமிழ் மரபிலக்கியத்தில் வித்தகர் .கற்பிப்பதில் நிபுணர்.அதுபோல தமிழ்ப்பாடங்களை சொல்லித்தர இப்போது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை.அவர் என்மேல் ஒரு சாறு ஏற்றினார் என்று சொல்லலாம்.தமிழ் வகுப்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தமைக்கு அவரே காரணம்.மூல குரு.பின்னர் வேலாயுதம்பிள்ளை தமிழாசிரியர்.வேலாயுதம்பிள்ளை இலக்கணத்தை மணிமணியாக நடத்துவார்.மறக்கவே மறக்காது.எனினும் எனது மரமண்டைக்கு இப்போது மறந்து போனது.ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு அணியிலக்கணத்திற்கு தேர்வுத் தாள்களில் திருக்குறளை உதாரணம் செய்ததில்லை.வெண்பாக்களை கேட்கப்படும் அணியிலக்கணத்திற்கேற்ப இயற்றிக் கொள்வேன்.வேலாயுதம் பிள்ளைதான் அதற்கு காரணம்.வேலாயுதம்பிள்ளை கம்பராமாயணத்தில் , சிலப்பதிகாரத்திலும் கைதேர்ந்தவர்.அவர் மாணவர்களுக்கு கற்பிக்கிறோம் என்கிற எண்ணத்தில் வகுப்புகளை நடத்துவதில்லை.பெருஞ்சபையில் சமமான பலரோடு உரையாடுகிற தொனியில் கம்பனையும் ,இளங்கோவையும் நடத்துவார்.பாடத்திட்டத்தில் உள்ளவை பற்றிய அக்கறைகள் கிடையாது .ஒன்றிரண்டு பாடல்கள்தான் பாடத்திட்டத்தில் இருக்கும் .அதனை முன்னிட்டு மொத்தத்தையும் முழுமையூட்டுவார் .அத்தகைய ஆசிரியர்கள் அமைய பெறுதல் வரம்.அவர்கள்தான் உள்ளிருந்து நமக்கும் மறைமுகமாகத் தொடர்பவர்கள்.கவிமணியை பின்பற்றியோ ,பாரதியைப் பின்பற்றியோ ,ஜீவாவைப் பின்பற்றியோ அந்த வயதில் நான் எழுதிக் காட்டும் பாடல்களை படித்து திருத்தமும் ஊக்கமும் செய்திருக்கிறார்."அவர் ஒரு சமயம் நீ கவிமணி போல வருவாய் " ஆசி கூறியிருக்கிறார்.வகுப்பில் எனது பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார்.பன்னிரண்டாம் வகுப்பில்தான் தமிழாசிரியர் கிருஷ்ணன் அணியிலக்கண உதாரணத்திற்கு திருக்குறளை தேர்வுத்தாள்களில் நான் எழுதுவதில்லை எனக் கண்டுபிடித்து அப்பாவிற்கு பராது முன்வைத்தார்.
ஆறுமுகம் பிள்ளைக்கும் ,வேலாயுதம் பிள்ளைக்கும் வெற்றிலைப் பழக்கம் உண்டு.வெற்றிலைக்கு முன்னர் மது அருந்தியிருப்பார்கள்.அவர்கள் மீது கொண்ட கவர்ச்சியால் பள்ளிக்காலத்திற்குப் பின்னர் சிலகாலம் வெற்றிலைப் பழக்கம் என்னிடம் வந்து தங்கியிருந்தது.எனது குடிப்பழக்கத்தின் ஓட்டத்தின் திசை வேறுவிதமானது.அதற்கும் வேலாயுதம் பிள்ளைக்கும் சம்பந்தமில்லை.ஆனால் குடிக்காத தமிழாசிரியனுக்கு தமிழ் சரியாகத் தெரியாது , வராது என்று எனக்கு ஒரு அபிப்பிராயம் இருந்தமைக்கும் , வலுவேறியமைக்கும் வேலாயுதம் பிள்ளையின் அழகுத் தமிழே காரணம்.சாராயம் அமுது போல அவர் தமிழில் இறங்கி நிற்கும்.மணக்கும். திருக்குற்றாலக் குறவஞ்சி,முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களில் எனக்கு போதத்தைத் திருப்பியவரும் அவரே.ஆனால் இதற்கும் முந்தைய ஒருசில தலைமுறைகள் மிகச் சிறந்த ஒழுக்கவாதிகள்.இந்த கோடு எங்கே பிரிகிறது என்பது சூட்சுமமானது.
ஒரு நூற்றாண்டிற்கும் முன்னர் தமிழ் பேரில் பெருங்காதலோடு செயல்பட்ட இரண்டு மூன்று தலைமுறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறார்கள்.இப்போதுள்ளவை அவற்றின் பழைய நினைவுகளின் எச்சங்கள்தாம் .கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. தெங்கம்புதூர் சாஸ்தாங்குட்டி பிள்ளை , சதாவதானி செய்குதம்பி பாவலர் என பெரும்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
சாஸ்தாங்குட்டி பிள்ளை ஒரு சிந்தனைப்பள்ளி போலவே செயல்பட்டிருக்கிறார்.அவர் கவிமணிக்கு முன்னவரா பின்னவரா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. தமிழில் ஆர்வம் கொண்டிருந்த அடுத்த தலைமுறையினர் பலரும் சாஸ்தாங்குட்டி பிள்ளையிடம் முறைசாரா மாணவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.ஏ.என்.பெருமாள் போன்றோரிடமிருந்து இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.தமிழைக் கற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் எவரும் சாதி பேதம் பார்த்தவர்கள் இல்லை.
யோசித்துப் பார்க்கும் போது எனது மனமொழியை கண்டுபிடித்துக் கொள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ,அய்யா வைகுண்டசாமிகள்,அரிகோபாலன் சீடர் ஆகியோர் சிறுவயதிலேயே துணை புரிந்திருக்கிறார்கள் என்கிற போதம் இப்போது எனக்கிருக்கிறது.அது உண்மையும் கூட .எங்கள் அப்பம்மை வழிக் குடும்பம் அய்யா வைகுண்டசாமியோடு தொடர்பு கொண்டது என்பதாலும் ,குடும்பக்கோவிலே அய்யா வைகுண்டசாமியின் நிழற்தாங்கலாக இருந்ததாலும் குழந்தை பருவத்திலேயே ஏடு படிக்கும் பழக்கம் உருவாகிவிட்டது.அகிலதிரட்டமானையைப் படிப்பது :அர்த்தம் விளங்காது எனினும் ஒரு பழக்கம்.பள்ளியில் தமிழை எடுத்துச் சென்றவர்கள்.பாரதி,கவிமணி,ஜீவா .ஜீவாவின் பாடல்கள் தளர்பாடம்.கண்ணதாசன் வந்து சேர்ந்தது பின்னர்தான்.

3

சபரிநாதன் கவிதைகள்





ஒரு கவிஞன் மொழியின் உருப்படியாக மாறுமிடத்தே வாசகனுக்கு அவனிடத்தில் உரிமையுணர்ச்சி ஏற்படுவது தவிர்க்க இயலாதது.வாசகனின் தன்னிலையில் ஒரு பகுதியாக அவனது கவிதைகளும் அடங்குகின்றன .அதன் பின்னர் கவி அவனொரு வேற்றாள் இல்லை. அவனது பதற்றம்,கூச்சம் இவற்றிற்கிடையிலான அவனுடைய தரிசனங்கள் அனைத்தும் கூடி மனப்பரப்பினுள் நுழைகின்றன.ஒரு வேதிவினையை கவிஞன் நம்மிடம் ஏற்படுத்துகிறான்.சபரிநாதன் தன்னுடைய வேதிவினைகளை நம்மிடம் கூர்மையாகக் கடத்தும் வல்லமை கொண்ட மிக முக்கியமான தமிழ் கவிஞன்.

வால் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே சபரியின் கவிதைகளை கோணங்கி பிரதியாகப் படிக்கக் கொடுத்தார்.பிரதியிலிருந்த மிக முக்கியமான சில கவிதைகளை கல்குதிரை இதழுக்குத் தேர்வு செய்து கொடுத்தேன்.பின்னிரவு விண்மீன்கள் ,இந்திய விளம்பரக் குடும்பம் ,குசக்குடித் தெரு , பலி,நான் ஏன் புகைக்கிறேன் ஆகிய வால் தொகுப்பிலுள்ள சிறந்த கவிதை வெளிப்பாடுகள் அவை.சமீபகாலத்தில் தமிழ் கவிதையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களில் குறிப்பிட்டாக வேண்டிய அரிய ஆபரணங்கள் சபரியின் கவிதைகள்.இந்திய விளம்பரக் குடும்பம் சுயசரிதைத்தன்மை கொண்ட சுயத்தில் நடுங்கும் கவியின் சுயசித்திரப் பாடலாக உள்ளது.சபரி புதிய கவியெழுச்சியின் அடையாளம்.மிகச் சிறந்ததொரு கவிஞனை மிகச் சிறந்த கவிஞன் என்று சொல்வதைத் தவிர ; விளக்க போதுமான வார்த்தைகள் வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது.

#

குசக்குடித் தெரு

வயோதிக மின்விளக்குகள் சாலையில் நடப்பவன் திரும்பிப் பார்க்கிறேன் .
சிறுவன் ஒருவன் வருகிறான் தெருமுக்கில் 
நினைவின் தூண்டிலுக்கும் மறதியின் வலைக்கும்
எட்டாத தூரத்தில் ஓர் ஒற்றைநாடி முகம் 
அவனுக்கு எப்படிக் கிடைத்தன என் பழைய உடைகள் 
கையசைத்து நிற்கச் சொல்கிறேன் :
வராதடா தம்பி அங்கேயே இரு 
அதை விட அழகான தெரு உலகில் இல்லை
அதைவிட அழகான பெண்களைச் சந்திக்கப் போவதில்லை நீ 
பகற்போதுகளில் சுற்றியும் சுழலாத மனச் சக்கர நிழல்களை வெறித்துக் கொண்டு 
லாந்தர் வெளிச்சத்தில் கொதிக்குழம்புகளின் வாசமிடை கதை கேட்டுக் கொண்டு 
அங்கேயே இரு ..அத்தாவர விரல்களை விட்டுவிட்டு வராதே 
ஆயினும் அவன் வருகிறான் அருமை வாசகரே 
ஏழு வயதில் மட்டுமே ஒருவர் அறியக் கூடிய வகைப்படுத்தவியலாக் களிப்புடன் 
அப்போது மட்டுமே வாய்க்கும் ஒருநடை போட்டபடி 
வந்து கொண்டிருக்கிறான் என்னை நோக்கி .

#
வால் 
சபரிநாதன்
வெளியீடு - மணல்வீடு 
ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல் 
மேட்டூர் வட்டம்,சேலம் மாவட்டம் - 636453
தொலைபேசி - 9894605371
பக்கம் - 168
விலை - ரூ 150


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"