அய்யா வைகுண்டர் இதிகாசம் -25

அய்யா வைகுண்டர் இதிகாசம் -25


இயல்பாக உருவாகி வரும் அதிகாரம் அழகு நிரம்பியது.அதற்கு சார்பில்லை,குறுகிய கால திட்டங்கள்இல்லை,நோக்கமில்லை.அது பிரபஞ்ச கருணையின் ஒருபகுதியாக வந்து சேருகிறது.இறை அச்சத்தின் துளிகள் அதில் நிரம்பியிருக்கின்றன.நோக்கமிருப்பின் நோக்கம் நிறைவேறியதும் அழகு குன்றும்.மிகவும் குட்டையான அதிகாரமே திடமாகவும் இறுக்கமாகவும் இருப்பது.இயல்பாக உருக்கொள்ளும் அதிகாரம் காரியங்களை நோக்கமின்றி சிறுகச் சிறுகச் செய்து உருவாவது.தானாக வந்தடைவது.பொன்னு அத்தகைய அதிகாரம் கொண்ட ஒருவராக இருந்தார்.வெயிலாள் அந்த அதிகாரத்தின் நிழல்.அவருடைய தடத்தை அப்படியே பயில்வது.அவர் இல்லாத பொழுதுகளில் தேடி வருபவர்களுக்கு நல்மொழி சொன்னாள்.ஒரு சமூகம் மேலேறி வரும்போது நிறைய நல்மொழிகள் தேவைப்படுகின்றன.கெடுமொழிகளிடமிருந்து தப்பிக்க வேண்டியிருக்கிறது.ஒரு சமூக மாற்றம் என்பது அடிப்படையில் நல்மொழிகளுக்கும் கெடுமொழிகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான யுத்தம்.

பொன்னுவைத் தேடி சுற்றிய தொலைவுகளில் இருந்து வந்தார்கள்.எந்த உதவியும் வேண்டி அல்ல.வார்த்தைகாக வந்தார்கள்.அவரிடமிருந்து வார்த்தை பெற்றுச் செல்வதற்காக வந்தார்கள். சிலருக்கு அச்சம் களையும் வார்த்தைகள் தேவைப்படும்.முன் நோக்கிச் செல்லும் சமுகம் தன்னையே தன் முதுகில் சுமந்து செல்கிறது.தன்னைச் சுமந்து செல்வதற்கு வைராக்கியம் வேண்டும்.ஏற்ற இறக்கத்தைப் பொருட்படுத்தாமல் முன்செல்லும் தைரியம் தேவை. குறையக் குறைய ஆற்றல் தேவை.நெடிய யாத்திரை அது.சமயங்களில் மனம் படுத்துவிடும்.பின்னர் எழும்புவதற்கான வார்த்தைகள் கிடைக்க வேண்டும்.இல்லாமல் தொடர முடியாது.இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சிறுகச் சிறுக சேமித்த வார்த்தைகளால் எழுந்து உருவானதுதான்.வார்த்தை கிடைத்த பிறகுதான் ,மனிதன் பார்க்கத் தொடங்கினான்.கேட்கத் தொடங்கினான்.படைக்கத் தொடங்கினான்.வார்த்தைகளில் இருந்து புறம் உருவாவது கண்டான்.குருடன் எழுந்து ஒடுவதற்கு வார்த்தைகள் தேவை.சிறு வயது முடிசூடும் பெருமாள் அப்பாவின் வார்த்தைகளைக் கூர்ந்து நோக்கி வளர்ந்தவர்.ஏராளமான தோல்விகளைக் கடந்து கடந்து செல்லவிருக்கிற ஒரு யாத்திரைக்கு அப்பா வார்த்தை தருகிறார்,என்பதை கண்கூடாகக் கண்டார்.

இது சாமானியர்களிடம் வருமா ? வரும் வந்த பின்னர் அவன் சாமானியன் இல்லை.பல சாமானியர்களின் வழிகாட்டி.இந்த யாத்திரை அப்படியானால் எங்கு நோக்கி செல்கிறது ? இறைவனை நோக்கிச் செல்கிறது.இறைவன் எப்போது காட்சியளிப்பார் ? காணும் வரையில் யாத்திரை செல்லும் பக்குவம் வந்த பின்னால் காட்சியளிப்பார்.நல்மொழியோடு மட்டும் இருத்தலே அதற்கான முதல் தவம்,பயிற்சி.தவத்தில் முன்னேறிக் கொண்டிருத்தல்.இறைவன் காட்சியளித்த என்ன தருவார் ? எல்லாமே தருவார்.ஏழையாய் இருந்தால் பணம் தருவார்.பட்டினியாய் இருந்தால் சோறூட்டுவார்.சொர்க்கம் இந்த பூமி என்று சொல்லி உன் கையில் அதனை ஒப்படைப்பார்.தீ நரகக்குழியாக எது இருந்ததோ அதுவே வைகுண்டமாகி விடும்.வைகுண்டத்திற்கு செல்லும் யாத்திரை அது.

இந்த யாத்திரை தொடங்கப்படாமல் எந்த சுமூகத்திற்கும் மாற்றமில்லை.ஏன் தொடங்கபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பது வரையில் விடிவில்லை.கடல் காண்பது,மலை காண்பது ,பச்சை அனுபவித்தல் இல்லாமல் உயர்ச்சி இல்லை.மலையருகே இருந்தும் மலைகாணத் தெரியவில்லையா ? இன்னும் யாத்திரை தொடங்கபடவில்லை என்று அர்த்தம்.

சென்று கொண்டேயிருக்கிற பாதை இது,நிறுத்தமே கிடையாது.நீர் மேல் வாத்தின் கால்கள் கொண்டு இங்கே நீஞ்சி கொண்டே இருக்க வேண்டும்.அவ்வளவு சென்றால் களைத்து விட மாட்டேனா ? என்ன அர்த்ததிற்காக இந்த யாத்திரையில் பங்கு கொள்ள வேண்டும்.நீ யார் கண்ட கனவு என்பதைத் தெரிந்து கொள்ளவேனும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் தேவை உண்டு.உன் மித மிஞ்சிய இச்சை,ரத்த வேட்கை ,பசி ,விருப்பம்,பற்று எல்லாமே எங்கிருந்தோ தொடங்கி வந்து கொண்டிருகின்றன.உன் மீது நிகழ்கின்றன.ஒரு தொடர் நிகழ்வில் இடையில் ஒரு கதாப்பாத்திரத்தைச் சுமந்த வண்ணம் நின்று கொண்டிருகிறாய்.அந்த தொடர் நிகழ்வு உன்னை கதாப்பாத்திரமாகத் தெர்வு செய்ய என்ன காரணம்.அது அறியபட்டால் இறைவன் மிகவும் பக்கத்தில் வந்து விடுகிறான்.கண்திறவு படாதவரையில் இறைவன் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கிறான்.எவ்வளவு பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று பார்க்கிறான்.நெருங்க நெருங்க சிவ சிவா தான் ஆகிறோம்.சிவ சிவா நான் ஆகிறோம்.சிவ சிவா தன் ஆகிறோம்.சிவமும் நாமும் வெறில்லை.அப்போது நாம் இங்கிருப்பதில்லை கைலாயத்தில் இருப்போம்.ஒரே வீதியில் ,ஊரில்,நகரில் தான் ஒருவன் கைலாயத்திலும் ,மற்றொருவன் கொடு நரகிலும் இருக்கிறார்கள்.வேறு எங்கும் இல்லை.எல்லாமே இங்கே.கொடு நரகிற்கு பக்கத்துக் காம்பௌண்டில் வைகுண்டமிருக்கிறது.கைலாயம் என்றால் அதன் பேர் கைலாயம்.கோடி பொன்னை வைத்துக் கொண்டும் ஒருவன் கொடு நரகில் துயிலலாம்.அடுத்த வேளைகான உணவை அவன் தருவான் என்று நினைத்தபடி மற்றொருவன் வைகுண்டத்திலும் இருக்கலாம்

பொன்னு வார்த்தைகளைக் கொண்டிருந்தார். நல்மொழிகள்.தேடி வந்து எடுத்துச் சென்றவர்கள்,அவை வளர்வது கண்டார்கள்.மீண்டும் தேடி வந்தார்கள்.தரையில் இருந்து மேலேறுகிறோம் என்பது உணர்ந்தார்கள்.

வெயிலாள் துணையிருந்தாள்.சமீபகாலங்களில் அவள் குழந்தைகள் பராமரிப்பால் சரியாக பொன்னுவை கவனியாம இருக்கோமோ என்னும் எண்ணம் கொண்டிருந்தாள்.அதன் பேரில் சற்றே குற்றபோதமும் தூண்டப் பட்டுக் கொண்டிருந்தாள்.அடிக்கடி சோர்வும் எழுச்சியுமாக வேலை செய்தாள்.மூன்றாவதாக கருவுற்று மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ரண்டும் பயக்க .இனியுள்ளதாவது பொட்டபுள்ளயா பெத்துப் போடு என்று அடிக்கடி கேலியும் பேசினார் பொன்னு நாடார்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"