அய்யா வைகுண்டர் இதிகாசம்-37 மருங்கூர் செல்லல்

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-37


குன்றில் ஏறி அமர்ந்திருந்தார் முருகன்.அது எழிலின் மீது ஏறி அமர்ந்து கொள்வது.குன்றின் உச்சியில் முருகன்.தனித்திருக்கும் முருகன்.சுற்றிலும் பேரெழில்.கிழக்கு வாசல் திறந்தால் பார்வை இரண்டு பக்கம் சுற்றி நிற்கும் மலைகளின் மீது படும்.தாளே குளங்கள்.காலமற்ற காட்சி.எப்போதும் அப்படியே உறந்து நிற்கும் காட்சி.அங்கிருந்து நோக்கும் போது பூமியின் பிரம்மாண்டம் தெரிகிறது.கடலை போல வேறு வகையான பிரம்மாண்டம் .அது காண குன்றின் மீதேறிச் செல்லாமல் முடியாது.

சிறு குன்று .இரண்டு மூன்று பாறைகள் மடிந்து மடிந்து படுத்திருக்கும் குன்று.அந்த பாறைகளைத் தொட்டுணர்ந்தால் அவை உயிருணர்ச்சியுடன் படுத்திருப்பது விளங்கும்.அவற்றின் மீது வெள்ளாடுகள் மேய்கின்றன.எப்போதும் மேய்கின்றன.மேயாத போதும் மேய்கின்றன.அவை இல்லாத போது அவற்றின் மூச்சொலி கேட்கும் குன்று.அந்த வெள்ளாடுகள் ,ஆடுகள் அந்த பாறை மடிப்புகளின் பிள்ளைகள்.முருகன் இவற்றின் நளினம் காண அவை மேய்ந்து கொண்டிருக்கின்றன.மேயாத வேளைகளில் முருகனின் கனவில் அவை மேய்ந்து கொண்டிருக்கின்றன.நின்ற கோலத்தில் முருகன் அந்த கனவை காண்கிறான்.முருகன் காணும் கனவு மேயும் போது வெளியில் தெரிகிறது.நடமாடுகிறது.அனங்குகிறது.

அந்த குன்றுக்குச் செல்லாதவரையில் அங்கே வேறு வகையான ஒரு காலம் நிற்பதை எப்படி காண முடியும் ? இந்த காலம் இந்த குன்றின் அடியில் கூட நிலவவில்லை.பாறை மடிப்பு இரண்டும் தொடங்கும் இடத்தில் நிற்பது வேறு வகையான அசாரணமான காலம்.அதுவும் ஊருக்குள் இல்லை.இங்கு வராதவரையில் வராததால் என்ன இருக்குமோ அதைப் பேசிக் கொண்டிருப்போம்.வந்து திரும்பினால் முருகனின் பேச்சு தொடங்கும்.வாழுங்காலத்திலேயே எவ்வளவு வகை வகையான காலங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன ?

இருவரும் குன்றின் அடிவாரத்தில் வந்து நின்றார்கள்.தீபாராதனை மணியோலி காற்றின் எட்டு திக்கிற்கும் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று சேர்ந்தது.

அவலைத் தின்ற பின்னர் மேலே செல்லலாமா ? எனக் கேட்டான் முத்து

இல்லை மேலே சென்று திரும்பிய பிறகு உண்ணலாம் என்றான் அரி.நம்மை உள்ளே விடுவார்களா என்கிற சந்தேகம் மனம் முழுதும் இருந்தது.முத்துவுக்கு அப்படியான சந்தேகங்கள் இருக்கவில்லை.அல்லது இருந்தது போல தெரியவில்லை.

இரண்டு பேரரசுகள் முதல் பாறையின் மடிப்பு முழுவதும் நிழலாக நின்றன.போற்றியின் பையன் சிறுவன் வெள்ளை முண்டு கட்டி கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.அது முருகனே இறங்கி வருவது போல இருந்தது.

இருவருமே மேற்கு பாகம் வழியே பாறைமடிப்புகளின் படிகளில் மேலே ஏறிச் சென்று உள்ளே நின்றார்கள்.யாருமில்லை.போற்றி மட்டுமே இருந்தார்.முதலில் அனக்கத்தை தன் பிள்ளைதான் வருகிறானோ என்று நினைத்தார்.ஒரு கணம் திரும்பிப் பார்த்து முருகன் வெளியிலிருந்து உள்ளே வாயில் கடந்து வருவது போலும் திகைத்தார்.அவர் ஒவ்வொருவரிடமும் முருகனைப் பார்ப்பவர்.குழந்தைகளிடம் தோன்றிய ஒளி அவருக்கு அப்படியான தோற்றத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகள் மீது எல்லாவிதமான மினுக்கங்களும் ஆசையுடன் மேலே ஒட்டிக்கொள்கின்றன.இலை தளைகளின் கதிர்கள் ஆசையுடன் படிகின்றன.போற்றி அவர்கள் இருவரையும் கையெடுத்து வணங்கினார்.சுற்றிக் காண்பித்தார்.சுற்றிச் சுற்றி காண்பதெல்லாம் முருகனே என்றார்.இசைவானவராக இருந்தார்.

இவர்கள் நால்வருமாக கோயில் முகப்பில் அமர்ந்து பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.போற்றிக்கு தனக்கு இவ்வளவு கதை தெரியும் என்பது அப்போதுதான் தெரிந்தது.அது மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.தனக்குள் இருக்கும் கதைகளை இவர்கள் இழுத்து வெளியில் எடுக்கிறார்களோ என்பது போல இருந்தது.பரவசத்துடன் அவர் நிறைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.நாம் தேடிய ஒருவரை அடைந்திருக்கிறோம் என்று முத்துவுக்குத் தோன்றியது.

ஒருவர் தூரத்திலிருந்தே மேலேறி வருவதை நால்வருமே கண்டார்கள்.பையனிடன் கம்மாளன் முருகந்தானா வாராங் பாரு என்றார் போற்றி.

ம் என்றான் அவன்

நல்லா ஜோதிட ஞானம் உண்டு.ஆன தெய்வபக்தி கிடையாது.நம்பிக்கைக்குப் பதிலா,சந்தேக குணம்.முருகன்னு பேரு வச்சுகிட்டா முருகன பாத்திர முடியுமா என்ன ? குதர்க்கம்,குதர்க்கம்.குதர்க்கத்தைத் தாண்டுவதுதானே அரிச்சுவடி? வச்சிட்டிருந்தா என்னத்துக்கு ஆகும்? எவ்வளவு மேதாவியா இருக்கட்டுமே என்றார் போற்றி.

தனக்கு எல்லாமே தெரியும்னு நினச்சா ,அவன் அவனுக்குதா எல்லாந் தெரியுமே நாம சும்மா இருந்திருவோம்னு இருந்திருவான் பாத்துகிடுங்க,புரியறதா என்றார் போற்றி.

பூணூல் இல்லாத பிள்ளைகளிடம் சமமா என்ன விவாதம் போற்றி என்று கேள்வியுடன் உள்ளே நுழைந்தார் ஜோதிடர் முருகன் .உங்களுக்கு சமானமா இவாளும் இருக்காளோ?

குழந்தைகளுக்கு மந்திரம் சொல்லிக் கொடுத்தா ஒன்னுக்கு நாலு மந்திரமா உள்ளுக்குள் முளச்சி வளந்துடும்.மனுஷாளுக்குச் சொல்றது வளராது.வாடி விழும்.மனுஷாளுக்கு அது புரியுமோனா
என்றார் போற்றி

அப்போ எனக்கு மந்திரம் தெரியாதுங்கேளா போற்றி எனக்கும் தெரியும்.எந்த மந்திரம் வேணும்னு சொல்லுங்கோ சொல்றேன்.

அய்யையோ..
இல்லையில்லா ,அப்படி சொல்லுவாளா...நீங்க சொல்லுவேள் இல்லேங்கல.நீங்க சொல்ற மந்திரம் நாசிலேந்து வருது.குழைந்தகளுக்குச் சொல்லிக் குடுத்தா அவங்க அடிவறிலிருந்துல்லா வரும் ?

நீங்க போய் முருகனைப் பாருங்கோ..சித்த நேரத்ல நடய சாத்தணும் என்றார் போற்றி.

முருகன் நடையைத் திறந்தான்னா அப்புறம் சாத்திக்கிறதே இல்லை.திறந்தது திறந்தது தான்.திறக்கிறதும் சாத்துறதும் மனுஷாளுக்குத்தான்.திறந்து முருகனை கண்டவனுக்கில்லை என்று குழந்தைகளிடம் சொன்னார் போற்றி.

[ தொடரும் ]


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"