அய்யா வைகுண்டர் இதிகாசம் -29 முடிசூடும் பெருமாள் - 4

அய்யா வைகுண்டர் இதிகாசம் -29

முடிசூடும் பெருமாள் - 4


பயலுக்க பேரு கேட்டம்பாத்துகிடுங்க...ராசா குடும்பத்து பேருல்ல சொல்லுதாங்..அவுகல்ல இப்டி வைப்பாக..வெயிலாளை வேடிக்கை செய்யும் தொனியில் கேட்டான் துரைப்பாண்டி.

அதனால என்ன உங்க பேரும் தொரனு போட்டிருக்கு.பாண்டில இருந்து வந்த தொரனு எங்களுவளுக்குத் தெரியும்.வெள்ளகார துர இது தெரியாம உங்கள்வள தொரன்னா பாப்பாங்..

நீங்க கண்டமானி பேசுதிய ...தப்ப தப்புனு சொல்லணுமுல்லா ...சட்டம் உண்டுல்லா தாயி...இப்படி பேருன்னா வரிகாரக கண்டா உடுவாகளா..நாஞ்சொல்ல போறதில்ல ..அக்காவ தம்பி காட்டிக் கொடுத்திருவனா..என்னக்காவ்

பாண்டி ...இத காட்டிக் கொடுத்திருவேன்னு எடுக்கணுமா ,கோள் போயாச்சுனு எடுக்கணுமா ? இங்க யாரு பேரு செல்லி கூப்புடுதாக..கடுவன்னா நாடாங்...பொட்டன்னா நாடாச்சி..அவ்வளவுதான..யாரும் பத்திரபதிவுக்கா போராக எல்லோரும்...ஆடு மாதி மாடு மாதி மனுஷ அடையாளம் அவ்வளவுதானபூ

என்னாலும் சட்டம் உண்டுல்லா எண்ட பொன்னு அக்கா...கருப்பட்டி தந்திருந்தா இதுக்குள்ள மணக்குடி காயலுக்கு மேக்க போயிருப்பேங்...அக்காகிட்ட மல்லுக்கெட்ட நா இங்க வரல பாத்துக்கிடுங்க...ஒரு பொம்பள இந்த ஊருக்குள்ள இப்படி பேச மாட்டா...எடுத்து வச்சிருவா நானும் போயிருவேங்.வாதம் உண்டாகாது.நீங்க வீணா வழக்குல்லா உண்டாகுதிய .ஒவ்வொரு வாட்டியும்..

வழக்கு நீங்க உண்டாக்குதிய ...ஆனா பாருங்க உங்களுக்கு நாங்க வழகுண்டாக்குத மாதி தோணுவு..இப்ப வரி பயலுக்கா,பயலுக்கப் பேருக்கா ...இது நாச்சியார் உட்ட பேரு.உனக்கு ஏக்கியம்மைய விட்டா ஆரத் தெரியும் ? பாத்துக்க அம்ம வச்ச பேர ராசா வந்தாலும் அழிக்க முடியாது.பேர எடுத்துற்றா பேரு போயிருமா என்ன ?

முடிசூடும் பெருமாள் உண்மையாகவே நாச்சியார் வைத்த பெயர்தான்.கர்ப்பம் சுமக்கையில் நாச்சியார் ஏடுதான் வெயிலாள் கையில் இருந்தது,அதைதான் படித்துக் கொண்டிருந்தாள் வெயிலாள்.வெயிலாளின் தகப்பனார் சாது செம்பன் வைத்தியர்.பொத்தையடி மாறச்சன் தாணுமாலயன் நாடாரின் ஆசான்.வைத்தியத்திற்கும் சரி,வர்மம் சிலம்பு ,களரி அனைத்திற்கும் அவரே ஆசான்.பெரும் புலவர் சாது செம்பன்.யோக முத்திரைகளையும் அந்த பகுதியில் பரப்பியவர். தெற்குத் தாமரைக்குளம் சாது செம்பன் என்று அவர் அறியப்பட்டிருந்தார்.அவருக்கு மாயன்,திருவனந்த பெருமாள்,கொழிக்கோட்டு மாடன் என மூன்று ஆண்பிள்ளைகள்.வெயிலாள் ஒரே மகள். இரண்டு தலைமுறையாக அவரிடம் வைணவ ஏடுகள் இருந்தன.அதனைப் படிப்பதும்,பிரதி செய்வதும் அவர் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்தது.வைத்திய
மூல நூல் ஏடுகளும் அவரிடத்தே உண்டு.நாச்சியாரின் திருமொழியும்,திருப்பாவை இரண்டையும் அவர் அவள் வசம் தந்திருந்தார்.

மாறச்சன் தாணுமாலயன் நாடாரிடம் மஹாராஜா மார்த்தாண்ட வர்மா இளமையில்; ஒன்றரை ஆண்டுகாலம் தன்னுடைய தலைமறைவு காலத்தில் அடைக்கலம் பெற்றிருந்தார்.அதன் நிமித்தமாகவே தாணுமாலையன் நாடாருக்கு மாறச்சன் என்ற பெயர் உண்டானது.அவர் அடைக்கலமானது தொடங்கி மார்த்தாண்ட வர்மாவை பொன்னு போல நின்று காத்தார் மாறச்சன்.மாறச்சனின் புத்திமதிபடி மார்த்தாண்ட வர்மா போன்ற இரண்டு மனித பொய்யுருவங்கள் உருவாக்கபட்டன.அதில் ஒரு மனித பொய்யுரு வெள்ளமடத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டது.உடன் நின்ற காப்பாளன் பொத்தையடியிலேயே கொல்லப்பட்டு முண்டன் என்னும் பேரில் மாடனானான்.பொத்தையடியில் முண்டனுக்கு அகல் மேடை உண்டு.தன் தலைமறைவு காலத்தில் ஒரு விரல் நுனி கூட அவரைத் தொட முடியாத அளவிற்கு காத்து திருப்பி அனுப்பியவர் மாறச்சன்.

மாறச்சன் குடும்பத்தில் வந்தவர்கள் அனைவருக்குமே உயர் வகுப்பாரின் பெயர்களே இடப்பட்டிருகின்றன.அது போல வெயிலாள் குடும்பத்தில் முன்னரும் பின்னரும் உயர் வகுப்பு பெயர்களும்,ஓங்கு சாதியினரின் பெயர்களுமே இடப்பட்டிருக்கின்றன.சீதா லெட்சுமி ,லெட்சுமணன் போன்ற பெயர்கள் அவர்களுடைய சம காலத்திலும் பின்னரும் புழக்கத்தில் இருந்திருக்கிறது.ராஜாங்க ஊழியர்கள் மிகவும் வறிய நிலையில் இருந்தவர்களையும்,பிண்ணனி அற்றவர்களையும் ,சமூகமாக திரளாதவர்களிடமும் மட்டுமே அதிக கெடுபிடிகள் செய்திருக்கிறார்கள்.

உண்டான காலம் முதற்கொண்டு நாச்சியாரை அணைத்துப் பிடித்திருந்தாள் வெயிலாள்.பெரும்பாலும் நாச்சியார் வெயிலாளுக்கு மனப்பாடம்.வெயிலாளும் திரு ரங்கனாதரிடமே தன்னுடைய பிராத்தனைகளை வைத்திருந்தாள்,மகன் நாடாள வேண்டும் என்பதே பிரார்த்தனை.உன் மகன் நாடாள்வான்,முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டு என்று கனவில் அவளுக்கு வாக்குரைத்தாள் நாச்சியார்.பிறக்குமுன்பே அந்த பெயர் சூட்டபட்டு விட்டது.

நாராயணன் பெயரை நீ வந்து மாற்றுவையோ என்று துரைப்பாண்டியிடம் வெயிலாள் சீறும் சந்தர்ப்பத்தில் வேகமாக கோனார் விளை தாண்டி வந்து சேர்ந்தார் பொன்னு நாடார்.அவருக்கு வழி நெடுக ஊட்டில் தொரப்பாண்டி தீயா நிக்கான் என்று மக்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்.

அவனுக்கு இதுதான வயித்துப் பொழப்பு ? என்னவே பாண்டி ,நீ சும்மா கிட புள்ள .அவங் போக்கிரி.அவன் அவங் வேலைய காட்டுதான்.இருக்கட்டும்.பேருல என்ன பீடமா கட்டிருக்கு ? நாங்க முத்துக்குட்டினு போட்டுக்கிடுதோம் நீரு போகலாம் என்றார் பொன்னு நாடார்.அவங் இங்க முத்தத்துல கேறி நிக்கியதே தரக் கேடு.

நாச்சியார் கனவில் கண்டபெயர் முடிசூடும் பெருமாள்.அம்மை வெயிலாள் மனதில் அழைத்த பெயர் முடிசூடும் பெருமாள்.அப்பா இட்ட பெயர் முத்துக்குட்டி என்று ஆயிற்றே.



[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"