அய்யா வைகுண்டர் இதிகாசம்-42 மருந்துவாழ் மலை 1

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-42

மருந்துவாழ் மலை 1

மருந்துவாழ் மலையடிவாரப் பொய்கை தணுப்பு உடையது.மலையில் ஆழடிக் கண்களிலிருந்து ஊற்றுக்கள் அந்த பொய்கையில் கூடுகின்றன.அது மருந்தின் சாரம் போல மலையை திரவமாக வடித்து நிற்கும் .எவ்வலவு ஊற்றுக்கள் இங்கே வந்து சேருகின்றன என்று கணக்கில்லை.திரண்ட ஊற்றுக்கள் பொய்கையில் கூடி மறுகால் ஓடும்.கிழக்கே பாசனமாகும் பச்சையெல்லாம் இந்த அடிவார ஊற்றுக்கள் திறந்து காணும் பச்சையே.

கல்லின் தணுப்பு இதன் வெள்ளத்திற்கு.எத்தனையோ கல் பாதைகள் வழியாக ஊறிச் சுரந்து அடிமணல் ஓடி இங்கே வந்து நிறைகிறது.தவசிகளுக்கு இந்த வெள்ளம் மாமருந்து.வீட்டில் குளித்துப் பழகியவனுக்கு இதன் குணத்தை அது அறியத்தருவதில்லை.அவனுக்கு வெறும் வெள்ளம்.தவசிகள் இதன் தணுப்பில் சிவம் அறிகிறார்கள்.சிவம் உடலில் பற்றவைக்கும் சக்தியை அறிகிறார்கள்.இதன் தணுப்பறிந்தவனை அது தன்னகத்தே வைத்துக் கொள்ள விரும்புகிறது.இந்த தணுப்பு ஒருவகையான நெருப்பு .சிவத்தில் பற்றவைத்துக் கொள்ளும் திறப்பு இது.இதனை நாடி அனுபவித்தவன் பின்னர் வேறு இடம் செல்லல் ஆகாது.செல்ல இயலாது.மருந்துவாழ் மலை வளர்ந்து நிற்கும் சிவ லிங்கம்.சிவ யோக ஸ்தலம்.

வரும்போதே கொறிப்பதற்கான பண்டங்களோடு வருபவனை மலப்புழுவின் அளவிற்குக் கூட இந்த மாமலை பொருட்படுத்துவதில்லை.காட்சி தருவதில்லை.தன்னுடைய தணுப்பையும் தீயையும் தெரிவிப்பத்தில்லை.அதில்,அப்படி மறை பொருளை மறைப்பதற்காக ஈவிரக்கம் கொள்வதில்லை.ஏன் என்று விளங்கி கொள்ளவே முடியாது.தவசிகளுக்கு மட்டுமே அது புலனாகிறது.இந்த சுனை என்றில்லை.பிரபஞ்ச கூறுகள் ஒவ்வொன்றுமே சூட்சுமமாகவே காட்சியளிக்கின்றன.தன்னைத் தருகின்றன.யாருக்குத் தன்னைத் தரவேண்டும் என்பது நன்றாக உணரப்பட்டிருகிறது.அடிகலமாக வருபவன் ஒருகுவளை நீரைக் கூட இங்கே எடுத்து வருவதில்லை என்பதை இந்த மலை அதன் வெகுதூரத்தில் இருந்தே அவன் வருகை அறிந்து வரவேற்கிறது.அவனுகுரிய அனைத்தும் இங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருகின்றன.பொங்கிச் சாப்பிட வருபவன் காயத்துடன் களங்கி வெளியேறும் மலை .சுனை நீர் விஷம் என்று எடுப்பவனுக்கு விஷம்.அமுதம் என எடுப்பவனுக்கு அமுது.

இந்த மலையில் இருந்தபடி மழை பார்க்கிறவன் மழை என்பது என்ன அர்த்தம் ? எதன் அர்த்தம் என்பதைப் பார்த்துவிடுகிறான்.இந்த மலையில் இருந்து வெயில் காண்பவன் வெயில் காண்கிறான்.பரந்து விரியும் பச்சை காண்பவன் பச்சையின் மூலம் கண்டுவிடுகிறான்.அதனை அதனை அப்படியே காட்டும் மலை.

மழைகாலங்களில் பொய்கையின் மேலடுக்கு மழை நீராலும் கீழடுக்கு ஊற்று கண் திறப்பாலும் அமைகிறது.இந்த பொய்கையில் இறங்குபவன் மேலடுக்கு நீரில் கால் பதித்து ஆழடுக்கு சுனைக்குள் இறங்குகிறான்.

சுனைகளைப் போல குகைகள்.குகைகளில் யோகியரின் யோகம்.அகம்.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அகம்.என்ன நடைபெறுகிறது என்பதையே அறிய ஓண்ணாத இடம்.சிலர் செய்கை பெற்றுத் திரும்புகிறார்கள்.பலர் செய்கையில்லாத இடத்திற்குள் சென்று மறைகிறார்கள்.

குகைகளிலும் அகந்தை தீரவில்லை பார்த்தாயா என்று முத்துவைக் கேட்டான் அரி.

ஒரு முனிவர் மறுமுனிவனைக் காணாதுங்கள் என்று சொல்கிறார் பார்த்தாயா ? இப்படி ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்.நாம் எல்லோரையும் காண வருகிறோம்.ஒருவர் கண்ணுக்குப் படாமல் மறு கரைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.தலைமறைவாக நாம் பலரையும் காணவேண்டியிருக்கிறது.

அரிக்கும் முத்துவுக்கும் ஏகதேசம் மனம் ஒன்றாகியிருந்தது.இத்தனை காலதிற்குள்ளாகவே அப்படி இணைவுற்றிருந்தார்கள்.முத்துவை ஒருவர் தொட்டால் அந்த தொடுகையின் அனைத்து அர்த்தங்களையும் அரி உணர்ந்தான்.முத்துவிடம் ஒரு கேல்வி முன்வைக்கபட்டால் அதன் பதில் அரிக்குத் தெரிந்தது.அரி உணர்பவை அனைத்துமே முத்துவுக்கு நீர்பளிங்காகத் தெரிந்தன.பறவைகள் திரும்புதலையும் ,சூரிய உதயத்தையும் அவர்கள் இருவரும் நான்கு கண்களால் காண்பவர்களைப் போன்றிருந்தார்கள்.ஆனால் இருவரும் வேறு வேறு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

ஒவ்வொரு முனிவனுக்கும் அவர்கண்டறிந்த வழி இருக்கிறது.அந்த வழியை விட்டு விலகிவிடக் கூடாது என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.அது தீருவதில்லை.அது திரும்பவும் அகந்தைக்கே பின் இழுக்கிறது.இதனை மனிதன் கைவிடுவானா ? என்ன ? அதைக் கொண்டே அவன் முனிவனாக இருந்தாலும் மனிதனாக இருக்கிறான். விட்டால் அதனைக் கொண்டு மறுபடியும் எங்கிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறானோ அந்த வீட்டை கட்டி எழுப்பி விடுவான்.மீண்டும் மலையிலிருந்து கீழிறங்க வேண்டி வரும்.ஒவ்வொரு முனிவனும் கொஞ்சம் மேலேறி பின்னர் கீழிறங்குவான்.மீண்டும் மேலேறுவான்.இது மிகவும் கொந்தளிப்பான பாதையே; ஆனால் ஒவ்வொருவருக்கும் கிட்டிய தரிசனம் ஒன்றிருக்கிறது .அவர்களின் பளுதுக்குள் சென்றால் அது ஈர்த்துக் கீழிறக்கி விடும்.

நான் என்னுடைய தாய் மாமனான கோழிக் கோட்டு மாடனைப் புறந்தள்ளி விட்டே இந்த மலையில் இப்போது நிற்கிறேன்.அவன் என்னுடைய குலசிறுமையின் வடிவம்,ரூபம்.இப்படி இவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னரும் ஏராளம் சிறுமைகளும்,சிறியவர்களும் உண்டு.தாண்டியதால் இங்கு வந்து நிற்கிறார்கள் இல்லையா ? தாண்டியதால் சிலர் இந்த பயணத்தில் காலுடைக்கப் பட்டிருக்கலாம்.இரண்டு கால்களும் இழந்த பின்னர் கூட பயணம் தொடங்கபட்டிருக்கலாம்.யார் கண்டார்கள் ? இவர்கள் தரிசங்களே நமக்கு முக்கியம் அரி.ஒன்றை முன்வைத்து ஒன்றை அலட்சியம் செய்து விடக் கூடாது என்றான் முத்து

இந்த குகையறைகள் ஒவ்வொன்றிலும் நாமறிய வேண்டிய பாடங்கள் உள்ளன.

மலையின் சுனைகளில் இருந்து கீழ் பொய்கை நிறைந்து மறுகால் சென்று பச்சையாகிறது.இந்த மலை முச்சூடும் எவ்வளவு குகையறைகள்.இவையும் சுனையில் கலந்து அந்த பொய்கையையே சென்றடைகிறது.நாம் தூரத்தில் காணும் பச்சையில் இதன் மினுக்கமும் இருக்கிறது.எப்போதும் இரண்டையும் காண வேண்டியிருக்கிறது.இவ்வளவு தூரத்திற்கு வந்தவர்களுடன் மட்டுமே நாம் உரையாட முடியும்.கீழேயிருப்பவர்களோடு இயலாது.அவர்களிடம் கற்க நமக்கு ஏதும் இல்லை.அவை அனைத்தும் தெரிந்தவைதான்.அவை கடந்து தெரியாதவற்றுடன் நாம் கொள்ளவேண்டிய உறவே நம்மை மேலே எழுப்பும்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"