அய்யா வைகுண்டர் இதிகாசம் -31

 அய்யா வைகுண்டர் இதிகாசம் -31


பொன்னு நாடார் வெகு விரைவிலேயே திரு நாமமும் ,முத்துக்குட்டியும் முற்றிலும் வேறு வேறு நபர்கள் என்பதைக் கண்டறிந்து விட்டார்.ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை.ஏனெனில் அதனை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை.எது எதுவெல்லாம் அவருக்கு முக்கியமாக ,பித்தாக இருந்தனவோ அது எதிலும் முத்துக்குட்டி ஆர்வம் காட்டவில்லை.அதன்பேரில் ஈடுபாடு இல்லையே தவிர அதன் மதிப்பு முத்துக்குட்டிக்கு தெரிந்திருந்தது.அப்பாவின் மதிப்பும் தெரிந்திருந்தது.ஆனால் பித்து வேறு திசையில் இருந்தது.பையன் வினோதமாக இருக்கிறான் என்பதை வெயிலாளுக்குச் சொன்னால் அவள் கலங்கக் கூடும் என்பதால் சொல்லாமல் தவிர்த்து வந்தார்.வெயிலாளுக்கும் இதே உணர்ச்சியே.'அது அவியளுக்குத் தெரிய வேண்டியதில்லை' என்று அவள் நினைத்தாள்.

திரு நாமம் எழுத்தும் கணக்கும் படித்த இடத்திலேயே முத்துக்குட்டியையும் எழுத்தும் கணக்கும் படிக்க அனுப்பினார்.திரு நாமம் எழுத்தும் கணக்கும் அரைகுறையாக தெரிய வரும்போதே நின்று கொண்டார்.முத்துக்குட்டியின் ஆர்வம் அதில் தொடர்ந்தது.தெற்குத் தாமரைக் குளத்தில் பண்டிதர் ஒருவரிடம் நான்கைந்து குழந்தைகள் பாடம் கற்றார்கள்.காலையில் பாடம் உச்சைக்கு ஊடு திரும்பி விடலாம்.அரிகோபாலனும் அங்கே படித்தார்.பெற்றோர்கள் எழுத்தும் கணக்கும் படிக்கத்தான் பண்டிதரிடம் அனுப்பி வைப்பார்களே
அல்லாமல் தொடர்ந்து படிப்பேன் என ஒரு குழந்தை அடம் செய்தால் என்ன செய்வதென்றே அவர்களுக்குப் புரியாது.விவசாய வேலைகளுக்குச் செல்ல வேண்டும்,அல்லது வெளியூருக்கேனும் பனையேறச் செல்ல வேண்டும்.அல்லது காடு திருத்தியாக வேண்டும்.எப்படியும் சோறு கிடைக்கும் என்ற நிலை உள்ள பிள்ளைகள்,உள்ளுரில் வேலை செய்யாமல் தட்டழிந்து பின்னர் வெளியூருக்குப் பனையேறச் செல்வார்கள்.ஏதேனும் ஒன்றைச் செய்தே தீர வேண்டும்.அல்லாமல் பெண் கிடைப்பதில்லை.பிறகு பிறகு பெண் என்னும் பெயரில் பேய் வந்து சிக்குவாள்.எத்தகைய ஆணவக்காரனாக இருப்பினும் சரி,சண்டியாக இருப்பினும் சரி பேயிடம் மாட்டிக் கொண்டால் சின்னாபின்னமாகி விடுவான்.

பெண் ஆதிகாலங்களில் ஒருமுகப்படாமல் இருப்பாள்.ஒருங்கே கூட்டிச் சேர்த்து ஆள் ஆக மூன்று தலைமுறைகள் ஆகும்.ஒவ்வொரு பண்பும் ஒவ்வொரு திக்கில் நிற்கும்.எல்லாம் ஒருங்கமைய வேண்டும்.உடன்சேர்ந்து வாழும்போது என்னயேதென்று விளங்காது.புரியாது.ஆண் இரண்டு தலைமுறையில் ஒருங்கமைவான் எனில் பெண் ஒருமுகப்பட கொஞ்சம் கூடுதல் அவகாசம் எடுப்பாள்.ஆனால் தன்னிலும் மேலாக திரண்ட தலைமுறை ஆணையே கவர்ச்சி கொள்கிறாள்.அதன் காரணமாகவே ஆண் காலத்தை விரைந்து கடக்கிறான்.சமூகம் முதல் ஒழுங்கில் பக்தி கொண்டே அடியெடுத்து வைக்கிறது.தன்னிலும் மேலான ஒன்றின் இருப்பை ,அதன் ஒழுங்கை ,அது தன்னிடமும் இருப்பதை ,அதில் மகிழ்ச்சியளிப்பதை எப்பொது உணரத் தலைபடுகிறானோ அப்போது ஒரு படி மேலேறிச் செல்கிறான்.மற்றபடி தொல்மனம் இறுகிய துயர் கொண்டது.துயரே அதன் சுயம்.துயரே அதற்கின்பம்.அதன் துயரச் சாறு பருகி களிக்கவே அது விரும்புகிறது.சதா தனிமையை மட்டுமே அது அசைபோடக் கூடியது.அதன் மூலமாகவே அது நிகழ்காலத்தைத் தவறவிடுகிறது.எதனை முன்னிட்டும் அன்றாடத்தை தவற விடுகிற மனம்.அனைத்தையும் தவற விட்டு விட்டு அதற்காக துயரப்பட்டுக் கொண்டிருக்கும்.நமது ஆதிசாமிகள் அனைத்துமே துயரார்ந்தவை.ஒரேயடியாக அதிலிருந்து விடுதலை எட்ட முடியாது.ஒவ்வொரு அடியாக பல்வேறு பயிற்சிகள் வழியே சடங்குகள் வழியே மேல் நோக்கி முன்னகர்ந்து வரமுடியும்.பெண்ணகம் சிதைந்திருந்தால் பேயென்றறிக .

அப்படியானால் கொஞ்சம் உருப்படியான பெண் கிடைக்க வேண்டுமாயினும் கூட ஏதேனும் செய்து கொண்டிருக்க வேண்டும்.தாழத்தாழ மிகவும் தாழ்வான பெண் வந்தமைவாள்.செய்து கொண்டிருத்தல் என்பது சாராம்சம்.செய்து கொண்டேயிருப்பவனிடம் அவன் அறியமுடியாத பேராற்றல் வந்து அமைகிறது.அது மகிழ்ச்சியைப் பருகத் தருகிறது.விறுதே இருப்பவனிடம் ஆணவம் வந்து சேருகிறது.ஆணவம் அனைத்து தாழ்வையும் ஒவ்வொன்றாகக் கொண்டுவரும்.ஏனென்றால் அது சுயமரியாதை அற்றது.அடிமைகள் வேண்டுமென நினைப்போர் ஆணவக்காரர்கள் வேண்டுமென்றே விரும்புகிறார்கள்.ஆணவக்காரர்களே சிறந்த ,அதேசமயத்தில் மிகவும் மலிவான அடிமைகளாக இருக்கிறார்கள்.

பொன்னு ஒருவன் எதையேனும் செய்யாமல் சும்மா அல்ல,விறுதே இருக்கக் கூடாது என்று நினைப்பதில் இவ்வளவு காரணங்கள் இருக்கின்றன.இந்த காரணங்களின் உண்மைகள் உழைத்து உழைத்து தலைமுறை தலைமுறையாக கண்டறிந்தவை.தன் மகன் இதில் பின்னடைகிறானோ என்பதே அவர் கவலை.

யாருக்கும் தெரியாமல் பண்டிதரைப் பார்த்து விபரம் சொல்லி அவன் பாடம் கற்பதை நிறுத்திவிட வேண்டியதுதான் என்று துணிந்து மதியத்திற்கு மேல் பண்டிதரிடம் சென்றார்.காலையில் எனில் பண்டிதரோடு முத்துக் குட்டி,அரி கோபாலன் உட்பட சில சிறார்கள் அங்கே இருப்பார்கள்.

பொன்னு வந்ததுமே பண்டிதர் புரிந்து கொண்டார்.

அரியும்,முத்தும் வேறு லோகத்துக் குழந்தைகள்.
அவர்கள் கணக்கும் ,எழுத்தும் மட்டும் படிக்க இங்கே வந்தவர்கள் இல்லை.அவர்கள் எதையோ தேடுகிறார்கள்.அவர்கள் தேடுவதில் மிகவும் சொற்பம் மட்டுமே என்னிடமிருக்கிறது.அது நிறைவுற்றதும் வேறு இடங்களுக்கு நகர்ந்து விடுவார்கள்.பிடித்து வைத்தாலும் அவர்களை நிறுத்தி வைக்க முடியாது.அவர்கள் மேலும் மேலும் செல்லவிருக்கிற இடங்கள் நிச்சயமாக நாம் நினைக்கும் எதிர்பார்க்கும் இடங்களாக இருக்காது.

என்னுடைய கற்பித்தல் அனுபவத்தில் இப்படி இரு குழந்தைகளை நான் கண்டதில்லை.அவர்களுடன் உரையாடும் போது எனக்குள் என்ன இருக்கிறதோ அதையெல்லாம் நான் காண்கிறேன்.அது போல இல்லாததையும் காண்கிறேன்.எனக்குள் எது குறைந்திருக்கிறது என்பது எனக்கு அப்பட்டமாகத் தெரிகிறது.என்னுடைய உண்மைகளே அவர்களுக்குத் தேவை.அவர்களுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது மிகவும் நன்றாகத் தெரிகிறது.

கவலைபடாத பொன்னு...கலங்காத..தவமிருந்தாலும் முத்துக்குட்டி போல புள்ள வாய்க்காது.நீ அதிர்ஷ்டசாலி.பூலோகம் உள்ளளவும் நீயும் இங்கே இருக்க வந்தவன்.

உனக்கு என்னுடைய முதல் வணக்கம்.இன்னும் எத்தனை எத்தனையோ வணக்கங்கள் உனக்கு வரும்.இது முதல் வணக்கம் என்றார் பண்டிதர்.

ஒன்றும் பொன்னுவுக்கு விளங்கவில்லை.நான் நினைத்துக் கொண்டிருப்பது போல ஆபாயம் ஏதும் இல்லை போலிருக்கிறது என்று யோசித்தவாறே ஊடு திரும்பினார்.

[ தொடரும் ..]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"